Published:Updated:

‘700 ஆண்டு சட்டத்தின் மூலம் வதைக்கிறார்கள்!’ - சீறும் ‘எல்.ஜி.பி.டி சமூகம்’

ராகினி ஆத்ம வெண்டி மு.
‘700 ஆண்டு சட்டத்தின் மூலம் வதைக்கிறார்கள்!’ - சீறும் ‘எல்.ஜி.பி.டி சமூகம்’
‘700 ஆண்டு சட்டத்தின் மூலம் வதைக்கிறார்கள்!’ - சீறும் ‘எல்.ஜி.பி.டி சமூகம்’

திருநங்கை, திருநம்பி, ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் உணர்வாளர்கள் ஆகியோரது உரிமைகளுக்காக, ஆண்டுதோறும் சர்வதேச அளவிலான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு சென்னையில் நடந்த கொண்டாட்டத்தில், 'எங்களை ஒடுக்கும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377-ஐ நீக்க வேண்டும்' என்று உரத்துக் குரல் எழுப்புகின்றனர் எல்ஜிபிடி சமூகத்தினர்.

உலகம் முழுவதுமுள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் உணர்வில் நாட்டம் உள்ளவர்கள், திருநங்கையர் ஆகியோரை உள்ளடக்கிய சமூகத்தை, எல்.ஜி.பி.டி(Lesbian, Gay, Bisexual, Transgender) சமூகம் என்று அழைக்கின்றனர். இவர்களின் உரிமைகளைக் காக்க, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தைப் 'பெருமைமிகு மாதம்' என அழைக்கின்றனர். இந்த மாதத்தில்தான், தங்கள் உரிமைகளுக்கான விழிப்புஉணர்வு கூட்டங்களை நடத்துகின்றனர். இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகக் கடந்த ஜூன் 25-ம் தேதி எழும்பூர், ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து 'பெருமை பேரணி' என்ற பெயரில், மிகப் பெரும் ஊர்வலத்தை நடத்திக் காட்டிவிட்டனர். 

" சமூகத்தில் ஆண், பெண் என்ற இரு பாலினம் மட்டுமே பெரும்பான்மையினராக வகைப்படுத்தப்படுகின்றனர். இந்த இரண்டு பிரிவுகளையும் தாண்டி, பாலின வேற்றுமைகளைத் தினம்தோறும் பார்த்து வருகிறோம். திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோரை மூன்றாம் பாலினமாக மேலோட்டமாக அடையாளப்படுத்துகின்றனர். இவர்களைத் தவிர, லெஸ்பியன், கே(Gay) என மாற்றுப் பிரிவுகள் உள்ளன. இந்த சிறுபான்மை சமுதாயத்தை ஒருங்கிணைத்துதான், ‘எல்ஜிபிடிஐ சமூகம்' என அழைக்கிறோம். ’இந்தச் சமூகத்தில் எங்களை நேரடியாக அடையாளப்படுத்திக்கொள்ள முடிவதில்லை. மக்களுக்குள் மறைந்து வாழ்ந்து வருகிறோம். நாங்கள் யார் என்பதைக் காட்டிக் கொண்டால், இந்தச் சமூகமும் அரசும் எங்களை வேறு மாதிரியாகப் பார்க்கத் தொடங்குகிறது. இவற்றையெல்லாம் தாண்டி, எங்கள் உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. எங்களை இந்த அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்பதைப் போராட்டத்தின் வடிவமாகவே முன்னெடுத்து வருகிறோம். எழும்பூரில் பேரணி நடத்தியதன் மிக முக்கிய நோக்கம், இந்திய தண்டனைச் சட்டம் 377-ஐ நீக்க வேண்டும் என்பதுதான். இந்தச் சட்டப் பிரிவுதான் எங்களை வெளி உலகுக்கு வரவிடாமல் ஒடுக்கி வைக்கிறது. இந்த சட்டத்தை நீக்கி, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான உரிமையை இந்த அரசு நிலைநிறுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை’ என்கின்றனர் எல்.ஜி.பி.டி சமூகத்தினர். 

எல்.ஜி.பி.டி பேரணியை ஒருங்கிணைத்த பல்வேறு அமைப்புகளுள் ஒன்றான  'சகோதரன்' அமைப்பின் நிர்வாகி ஜெயாவிடம் பேசினோம். " எங்கள் சமூக மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறோம். எங்கள் உணர்வுகளையும் உரிமைகளையும் இந்தச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். பாலுணர்வு என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை . 'இதற்கான உரிமையை எங்களுக்கு வழங்குங்கள்' என்று போராடுவதே வேடிக்கையாக இருக்கிறது. இதுபோன்ற கொண்டாட்டங்களின்போது பல்வேறு விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம்" என்றார். 

'ஐ.பி.சி 377 என்ன சொல்கிறது?' என வழக்கறிஞர் ஒருவரிடம் கேட்டோம். " இந்திய தண்டனைச் சட்டம் 377 என்பது, 'ஓரினச் சேர்க்கை-தண்டனைக்குரிய குற்றம்' என வரையறுத்துள்ளது. 'ஓரினச்சேர்க்கையை, இயற்கைக்கு மாறான பாலுறவு' என இச்சட்டம் சொல்கிறது. உலகிலேயே முதன்முதலாக மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் இங்கிலாந்தில் 1290 ஆம் ஆண்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. 1300 ஆம் ஆண்டில் ஓரினச்சேர்க்கையாளர்களை உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவங்களும் நிகழ்ந்தன. பின்னர், இச்சட்டம்  1860 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் விதியாக்கப்பட்டு, 1861 ஆம் ஆண்டில் இந்தியாவிலும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. 'இம்மாதிரியான காலத்துக்குப் பொருந்தாத சட்ட விதிமுறைகளை நீக்க வேண்டும்' எனச் சுதந்திரம் அடைந்த பின்னரும், உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், எல்.ஜி.பி.டி சமூகத்துக்கான உரிமைகள், அங்கீகாரம் எதுவும் இன்னமும் வழங்கப்படவில்லை" என்றார் வேதனையோடு.