Published:Updated:

'அ.தி.மு.க என்றாலே ஊழல் ஆட்சிதான்!'  - திருநாவுக்கரசர் பளீச்

'அ.தி.மு.க என்றாலே ஊழல் ஆட்சிதான்!'  -  திருநாவுக்கரசர் பளீச்
'அ.தி.மு.க என்றாலே ஊழல் ஆட்சிதான்!'  - திருநாவுக்கரசர் பளீச்

’தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி என்றாலே ஊழல் ஆட்சி என்ற அழிக்க முடியாத களங்கத்தைப் பெற்றிருக்கிறது’ என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி, விவசாயிகளின் பொருளாதார நிலை குறித்து திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

`வரலாறு காணாத வறட்சியின் காரணமாகவும், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததாலும், காவிரி டெல்டாவில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களைத் தமிழகம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 29.55 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடியானது. ஆனால், இந்த ஆண்டு அது 17.95 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது. நெல் உள்ளிட்ட பருப்பு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துகளின் சாகுபடி பரப்பு கணிசமாக குறைந்திருக்கிறது. அடுத்தடுத்து பருவமழை பொய்த்ததால் சாகுபடி பொய்த்து விவசாய வருமானம் வீழ்ச்சியடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்கொலை சாவுகள் இருநூறுக்கும் மேல் சென்றுகொண்டிருக்கின்றன. இதுகுறித்து மத்திய - மாநில அரசுகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 2011-12-ல் 12.5 சதவீதமாக இருந்தது, 2016-17-ல் 1.64 சதவீதமாகக் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதே ஆண்டில் அண்டை மாநிலங்களான ஆந்திர மாநிலத்தின் தொழில் வளர்ச்சி 10.36 சதவீதமாகவும், தெலுங்கானா மாநிலத்தின் வளர்ச்சி
7.1 சதவீதமாகவும் உயர்ந்து வருகிறது. ஆந்திர மாநில பிரிவினையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து தங்களை மீட்டுக்கொண்டு, தங்கள் மாநிலத்தை அந்தந்த மாநில முதலமைச்சர்கள் வளர்ச்சிப் பாதையில் அழைப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள். இதனால் தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டியவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுக்கொண்டிருக்கிறார்கள். 

கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 9, 10 நாள்களில் உலகம் முழுவதிலுமுள்ள தொழிலதிபர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ ரூபாய் 100 கோடி செலவில் மிகமிக ஆடம்பரமாக ஜெயலலிதா தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீடு உறுதி செய்யப்பட்டதாக ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், 20 மாதங்கள் கழித்து தற்போது தொழில் அமைச்சர் சட்டசபையில் ரூபாய்
26 ஆயிரத்து 615 கோடி முதலீடுதான் வந்துள்ளதாகக் கூறியிருக்கிறார். ஆக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு வாணவேடிக்கையாக நடத்தப்பட்டு, இன்றைக்கு புஸ்வாணமாக மாறியிருக்கிறது. இதற்கான பொறுப்பை இன்றைய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள்தான் ஏற்க வேண்டும். 

தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி என்றாலே ஊழல் ஆட்சி என்ற அழிக்க முடியாதக் களங்கத்தை பெற்றிருக்கிறது. அக்கட்சிக்கு யார் தலைவர், ஆட்சிக்கு யார் முதல்வர் ? என்கிற நாற்காலி யுத்தம் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. மோதல்கள் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கின்றன. ஆனால், ஊழல் நடவடிக்கைகள் நின்றதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்பனையைக் கள்ளத்தனமாக அனுமதிக்க அமைச்சர்கள், காவல் துறையினர் கைகோத்து செயல்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த 2016 ஜூலை 8-ம் தேதி ஒரு தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தியதில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்ய ரூபாய் 40 கோடி லஞ்சம் அமைச்சர்களுக்கும் காவல்துறையினருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக ஆதாரத்தோடு செய்தி வெளிவந்துள்ளன. இதுகுறித்து வருமான வரித்துறை தலைமை இயக்குநர் பி.ஆர்.பாலகிருஷ்ணன் ஒரு வருடத்துக்கு முன்பு தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்துக்கு இதுவரை எந்தப் பதிலும் இல்லை, எந்த நடவடிக்கையும் இல்லை. ஏனெனில், இதில் கூட்டு சதி செய்த அன்றைய தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டிலேயே வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை செய்து சிக்கிக்கொண்டதை அனைவரும் அறிவார்கள். 

ஊழலின் உறைவிடமாக இருக்கிற அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக குட்கா, பான் மசாலா ஊழல் இன்றைக்கு ஆதாரத்தோடு வெளிவந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் யார், காவல் துறை அதிகாரிகள் யார் ? இவற்றையெல்லாம் உடனடியாக வெளியே கொண்டு வருகிற பொறுப்பு மத்திய வருமான வரித்துறைக்கு இருக்கிறது. வருமான வரித்துறை பா.ஜ.க.வின் இசைவுக்கு ஏற்றாற்போல் செயல்படாமல் சுதந்திரமாகச் செயல்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அப்படி இல்லையெனில், குற்றத்துக்கு துணை போகிற கொடிய குற்றத்துக்கு மத்திய பா.ஜ.க. அரசு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன். தமிழக நலனில் கொஞ்சமும் அக்கறை காட்டாத பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடு சுற்றுப் பயணங்களில் மரபுக்கு மாறாக, கண்ணியமற்ற முறையில் இந்தியாவின் உள்நாட்டு பிரச்னைகள் குறித்து பேசியிருக்கிறார். தம்மை ஒரு சர்வாதிகாரிபோல் நினைத்துக்கொண்டு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆட்சியை நடத்தி வரும் மோடி இத்தகைய விமர்சனத்தை வெளிநாட்டில் பேசியிருப்பது நமது நாட்டுக்குப் புகழையும் கௌரவத்தையும் சேர்க்கக்கூடிய பேச்சல்ல. இந்தியாவின் பாரம்பரிய நற்பெயருக்கு மாறாக வெளிநாடுகளில் உள்நாட்டு பிரச்னை குறித்து நரேந்திர மோடி நிகழ்த்திய விமர்சனங்களைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.