Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்

10 ஆண்டுகால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, உண்டாக்கிய கசப்பு, இன்னும் 100 ஆண்டுகளுக்கும் தொடரும் போல! கடந்த 10 ஆண்டுகால அதிகார அனுபவத்தில், காங்கிரஸ் பாடம் கற்றுக்கொண்டதா எனத் தெரியவில்லை. ஆனால், மக்கள் ஏராளமான படிப்பினைகளைப் பெற்றுள்ளனர்!

'இது ஊழல்களின் பத்தாண்டு’ என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு அலைக்கற்றை, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல்... என்று ஏராளமான ஊழல் மகுடங்கள் இந்த ஆட்சிக்கு. ஊழல், வெளிச்சத்துக்கு வரும்போது அதைப் பற்றி கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் நியாயப்படுத்தி வாக்குமூலம் கொடுப்பவர்களாக அமைச்சர் பெருமக்கள் இருந்தது, இந்த அமைச்சரவையின் மிகமோசமான வெளிப்பாடு. 'முறைகேடானவை என்று சொல்லி ஏதாவது ஓர் ஒப்பந்தத்தை ரத்து செய்தால், இனிமேல் நம் நாட்டுக்கு வெளிநாட்டவர் யாரும் முதலீடு செய்ய வரமாட்டார்கள்’ என்று உச்ச நீதிமன்றத்துக்கு ஆலோசனை சொன்ன அமைச்சரை இந்த ஆட்சியில்தான் கண்டோம். 'எத்தனையோ ஊழல்களை மறந்தது போல இதையும் மறந்துவிடுவார்கள்’ என்று மக்களை ஏளனமாகப் பேசிய அமைச்சரையும் சகித்துக்கொண்டோம். நாட்டின் வரவு-செலவு திட்டத் தொகையைவிட 10 ஆண்டுகளின் ஊழல் தொகை அதிகமோ என்று சந்தேகம் எழும் அளவுக்கு, பெருந்தொகையிலான ஊழல்கள் அன்றாட தலைப்புச் செய்திகள் ஆனதையும் கண்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலையங்கம்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்... என்று பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களைச் சிதைக்கும் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துகிறது மத்திய அரசு. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதில் இவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. விலைவாசி பிரச்னையை, அந்நிய தேசப் பிரச்னையாக எண்ணி கண்மூடிக்கிடந்தார்கள். தமிழகத்தைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், நம்முடைய கடல் பரப்பில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டும் சிறைபிடிக்கப்பட்டும் அல்லல்பட்டு வருகிறார்கள். ஒரே ஒரு மீனவரின் மரணத்துக்குக்கூட இதுவரை நீதி கிடைக்கவில்லை.

பன்னாட்டு நிறுவனங்களிடம் நிலத்தை விற்றுவிட்டு 'உணவுக்கு வேலை’ திட்டத்தில் மண் சுமக்கின்றனர் நமது விவசாயிகள். தொடர்ந்து குறைந்துவரும் விவசாயப் பரப்பும், அதிகரித்துவரும் விவசாயத்துக்கான செலவும், குறைந்துவரும் நீர்வளமும் உழவர்களை ஊரைவிட்டே துரத்துகின்றன. கொடும் வறுமை தாளாமல், கடந்த 16 ஆண்டுகளாக நாள் ஒன்றுக்கு 47 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்த மரண ஓசையைக் கேட்க ஆட்சியாளர்களுக்கு நேரமும் இல்லை.

'கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா?’ என்ற நிதர்சனம் உணர்ந்தோ என்னவோ, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களே இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி நிற்கிறார்கள். வெற்றியோ, தோல்வியோ கட்சியின் அடிமட்டத் தொண்டனை உற்சாகப்படுத்தி, களத்துக்கு அனுப்பும் தளபதிகூட இல்லாமல் திண்டாடுகிறது அந்தக் கட்சி!  

தேர்தல் முடிவுகளைத் தீர்க்கதரிசனமாகக் கணிக்கத் தெரிந்த காங்கிரஸ் தலைவர்கள், அந்தத் தொலைநோக்குப் பார்வையை தேச நலனில் செலுத்தாமல்போன விந்தையை என்ன சொல்லி நோவது!?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism