Published:Updated:

தேர்தல் சுற்றுலா!

ஒரு கலாட்டா பேக்கேஜ்பாரதி தம்பி

தேர்தல் சுற்றுலா!

ஒரு கலாட்டா பேக்கேஜ்பாரதி தம்பி

Published:Updated:

ன்மிகச் சுற்றுலா, மலைச் சுற்றுலா, வனச் சுற்றுலா, கடல் சுற்றுலா... ஏன் 'சேரிச் சுற்றுலா’கூட நமக்குத் தெரியும். 'தேர்தல் சுற்றுலா’ தெரியுமா?

பொங்கலுக்குக் கரும்பும், தீபாவளிக்குப் பட்டாசும் விற்கும் சீஸன் பிசினஸ் போல, இப்போது தேர்தலையும் ஒரு சுற்றுலாவாக மாற்றிவிட்டார்கள். 'உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் தேர்தல் திருவிழாவைக் காண வாருங்கள்!’ என்று உலக சுற்றுலாப் பயணிகளை நோக்கி அழைக்கிறார்கள். தேர்தல் சுற்றுலாவை ஏற்பாடு செய்வதற்கு பல புதிய நிறுவனங்கள் முளைத்துள்ளன.

இந்தியா போன்ற பல கலாசாரங்களைக் கொண்ட நாட்டில், தேர்தல் என்பது ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மாதிரி நடக்கும். தோரணங்கள், போஸ்டர்கள், கொடி, வெடி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... என்று தேர்தல் நெருங்கிவிட்டாலே நமது நகரத்து, கிராமத்து வீதிகளில் உற்சாகம் கரைபுரளும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்தல் சுற்றுலா!

எதற்காகத் தேர்தல், நாம் ஏன் ஓட்டு போடுகிறோம், இதுவரை ஓட்டு போட்டதால் அடைந்த நல்லது-கெட்டது என்ன, இப்போது ஓட்டு போடுவதற்கு முன்பு நாம் செய்ய வேண்டியது என்ன... என்பன போன்றவற்றை மக்கள் சிந்திப்பதும் இல்லை; சிந்திக்கவிடுவதும் இல்லை. மொத்தத்தில் இது அனைவரும் கொண்டாட வேண்டிய ஜனநாயகத் திருவிழா என்று மாற்றிவைத்துள்ளார்கள். திருவிழா என்றாகிவிட்ட பின்னர், வேடிக்கை பார்க்க வெளியூர்காரர்கள் வரத்தானே செய்வார்கள்? அப்படி வருபவர்களை ஒழுங்குபடுத்தி, இதையே பக்காவான ஒரு பேக்கேஜ் சுற்றுலாவாக மாற்றிவிட்டார்கள்.

''இந்தியத் தேர்தல் மிகவும் கலர்ஃபுல்லானது. கொடிகள், தோரணங்கள், பாடல்கள், நடனம்... என ஒரு பார்வையாளரைப் பரவசப்படுத்தும் அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளது. ஒரு பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி முழக்கம் எழுப்புவதும், கொடிகளுடன் ஊர்வலம் வருவதும் மிகவும் உற்சாகம் தரக்கூடியவை. அதனால்தான் இந்தியத் தேர்தல் சுற்றுலாவில் பங்கேற்க உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்'' என்கிறார் குஜராத் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மனீஷ் ஷர்மா.

கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இவர்கள் ஏற்பாடு செய்த தேர்தல் சுற்றுலாவில் எகிப்து, துருக்கி, இலங்கை, ஜெர்மனி, உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனர்.

தற்போது வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால் தேர்தல் சுற்றுலா பேக்கேஜில் வாரணாசி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வாரணாசி, ஏற்கெனவே இந்து கலாசார ஈர்ப்புமிக்க சுற்றுலாத்தலமாகவும் இருப்பதால், அதனுடன் தேர்தலும் சேர்ந்துவிட்டது.

தேர்தல் சுற்றுலா!

''எங்களிடம் இரண்டு வகையான 'பேக்கேஜ்’கள் இருக்கின்றன. ஒன்று, டெல்லி, லக்னோ, வாரணாசி ஆகியவற்றை உள்ளடக்கியது. இன்னொன்று, லக்னோ, அயோத்தி ஆகியவற்றைக்கொண்டது. உத்தரப்பிரதேசத்தை மையமாகக்கொண்ட இந்த இரண்டு பேக்கேஜ்களும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. நிறைய விசாரணைகள் வந்துகொண்டிருக்கின்றன'' என்கிறார் 'மான்யவார் கன்ஷிராம் இன்ஸ்டிட்யூட் ஃபார் டூரிஸம் ஸ்டடீஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த மனோஜ் தீக்ஷித்.

தேர்தல் சுற்றுலாவில் கலந்துகொள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.) அதிகம் ஆர்வம் காட்டுவதாக இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தைச் சேர்ந்த 'அக்ஸார் டூர்ஸ்’ நிறுவனமும், கொச்சியைச் சேர்ந்த 'இன்சைட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்’ நிறுவனமும் இணைந்து இந்த முறை தென்னிந்திய தேர்தல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளன. இன்சைட் நிறுவனத்தைச் சேர்ந்த ஷாஜி ஸ்ரீஜித், ''பெங்களூர், மைசூர், ஊட்டி, கொடைக்கானல், கோயம்புத்தூர் ஆகியவற்றை ஒரு பேக்கேஜ் ஆகவும், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி ஆகியவற்றை இன்னொரு பேக்கேஜ் ஆகவும் பிரித்துள்ளோம்'' என்கிறார்.

மொத்தம் ஏழு நாட்களைக்கொண்ட இந்தத் தேர்தல் சுற்றுலாவுக்கு, ஒரு நபருக்கான கட்டணம் 1,200 டாலரில் தொடங்குகிறது. இந்திய ரூபாயில் சுமார் 70,000 ரூபாய். இதில் சாப்பாடு, தங்கும் இடம் எல்லாமே அடக்கம். தென்னிந்தியத் தேர்தல் சுற்றுலாவில் கலந்துகொள்ள, இதுவரை இந்த நிறுவனத்துக்கு சுமார் 250 விசாரணைகள் வந்துள்ளன.

ராஜஸ்தானை மையமாகக்கொண்டு செயல்படும் 'எலெக்ஷன் டூரிஸம் இந்தியா’ என்ற மற்றொரு நிறுவனம், தனது சுற்றுலா பேக்கேஜ்களுக்கு 'ஜனநாயகத்தின் முக்கோணம்’, 'தங்க முக்கோணம்’ 'பொலிட்டிக்கல் ராஜஸ்தான் ராயல்ஸ்’ என்று ஐ.பி.எல். அணிகளுக்கு பெயர் சூட்டுவதைப் போல விதவிதமாகப் பெயரிட் டுள்ளது.

தேர்தல் சுற்றுலா!

இப்படி நாடு முழுக்கவும் தேர்தல் என்பது பணம் கொழிக்கும் சுற்றுலாவாக மாற்றப்பட்டுள்ள நிலையில், வழக்கமான சுற்றுலாவுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? வழக்கமான சுற்றுலாவில் உள்ள இடங்கள் இதிலும் இருக்கும். அத்துடன் அரசியல் கட்சிகளின் பிரசாரங்களை நேரில் பார்ப்பது, அவர்களின் பேரணிகள், ஊர்வலங்களில் பங்கேற்பது, கிராமங்களின் இரவு நேர சிறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது போன்றவை கூடுதலாக இருக்கும். விதவிதமான பேனர்கள், போஸ்டர்கள், கட்-அவுட்களை சுற்றுலா பயணிகள் வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுத்துக்கொள்கின் றனர். சில இடங்களில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்கின்றனர்.

''இது தேர்தல் நேரம் என்பதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவருமே தேர்தல் குறித்துதான் விசாரிக்கின்றனர். இத்தனை கோடி மக்கள் எப்படி முறையாக வாக்களிப்பாளர்கள்? சரியான நபர்தான் வாக்களிக்கிறார் என்பதை எப்படி உறுதிப்படுத்துவார்கள்? எதன் அடிப்படையில் எம்.பி-க்களைத் தேர்வு செய்கிறீர்கள்? என்று அவர்கள் விதவிதமாகக் கேட்கின்றனர். பேசாமல் அரசாங்கமே தேர்தல் சுற்றுலாவை முறைப்படி அறிவித்தால் இது நன்றாக பிக்-அப் ஆகும்'' என்கிறார் கஜுராகோ சிற்பக் கோயிலில் சுற்றுலா வழிகாட்டியாகப் பணிபுரியும் ஷியாம்லால் ரஜக்.

ஓர் இடத்தை, மற்றவர்களுக்கு நாம் எப்போது காட்டுவோம்? அது மிகச் சிறப்பாக இருந்தால், மிகச் சிறப்பாகச் செயல்பட்டால்தான் காட்டுவோம். அப்படி பெருமைகொள்ளத்தக்க வகையிலா நம் ஜனநாயகம் இருக்கிறது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism