Published:Updated:

“யேய்ய்ய்ய்... கேப்டன் பாட்டு போடு!”

மக்களேள வின் ரியாக்‌ஷன்எஸ்.கலீல்ராஜா, ம.கா.செந்தில்குமார் படங்கள்: கே.ராஜசேகரன்,, ஓவியம்: ரவி

“யேய்ய்ய்ய்... கேப்டன் பாட்டு போடு!”

மக்களேள வின் ரியாக்‌ஷன்எஸ்.கலீல்ராஜா, ம.கா.செந்தில்குமார் படங்கள்: கே.ராஜசேகரன்,, ஓவியம்: ரவி

Published:Updated:

ந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில், 'டாக் ஆஃப் டமில்நாட்’... ஆங் விஜயகாந்த்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் பிரசாரப் பேச்சுக்களை அத்தனை பேரும் ரசிக்கிறார்கள். சிலர் சீரியஸாக... சிலர் செம காமெடியாக! பிரசாரத்துக்கு இடையிடையே தன் தொண்டர்களுடன் மல்லுக்கட்டுவது, கூட்டணிக் கட்சித் தொண்டர்களை அதட்டுவது என, விஜயகாந்த் விளிக்கும் 'மக்களேளளள’வோடு மக்களாக நின்று கவனித்ததில் இருந்து இங்கே...

விழுப்புரம் நகராட்சி பேருந்து நிலைய வாசல்தான் அன்றைய தினத்தின் முதல் பிரசார பாயின்ட். விஜயகாந்த் ஸ்பாட்டுக்கு வருவதற்கு முன்னரே, 'கேப்டன் டி.வி’-யின் ஓ.பி. வேனும், யூனிட் வேனும் வந்துவிடுகின்றன. விஜயகாந்த் எந்த ரூட் வழியாக வருவார், சாலையின் எந்தத் திசையில் அவரது வேன் வந்து நிற்கப்போகிறது என்பது கட்சி நிர்வாகிகளுக்குத் தெரிகிறதோ இல்லையோ, கேப்டன் டி.வி. ஆட்களுக்குத் தெரிந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அண்ணே... கேப்டன் டி.வி-ண்ணே... கேமரா வைக்க இந்த டேபிள் கரெக்ட்டா இருக்குமாண்ணே..? இல்லைனா அதை எடுத்துக்கலாம்ணே...'' என்று அவர்களைக் கேப்டனாகவே பாவித்து ஓடி ஓடி உழைக்கிறார்கள் தே.மு.தி.க. நிர்வாகிகள். விழுப்புரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து குட்டிக் குட்டி முரசுகளைக் கொட்டியபடி வந்து குதிக்கிறது தொண்டர் படை. அதில் மூன்றில் ஒரு பங்கு, மீசையே வளராத இளைஞர்கள். கிராமத்து இளைஞர்கள் மத்தியில் மற்ற யாரையும்விட கேப்டனுக்கு கிரேஸ் இருக்கிறது போல.

“யேய்ய்ய்ய்... கேப்டன் பாட்டு போடு!”

தொண்டர்களை உற்சாகப்படுத்த, கழகத்தின் கலை இலக்கிய அணி சிறிய மேடையில் கலை நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பிக்கிறது. 'தாயின் மணிக்கொடி... தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்...’ பாடலுக்கு அவர்கள் ஆடத் தொடங்க, ''யேய்ய்ய்ய்... கேப்டன் பாட்டு போடு'' எனத் திமிறுகிறார்கள் தொண்டர்கள். உடனே, 'சிங்கத் தமிழா... சிங்கத் தமிழா... சிலிர்த்தெழு...’ பாட்டுக்கு ஆடுகிறார்கள்.

மஞ்சள் டி-ஷர்ட்டில் 'சாதிக்கப் பிறந்த வன்னியக் குல சிங்கங்கள்’ என்ற வாசகங்களோடு பா.ம.க. கொடி பிடித்து வருகிறது ஒரு கூட்டம். அவர்கள் வரும்போது, 'ஏழைக்கு தர்மபுரி... எதிரிக்கு விருத்தகிரி’ என்ற பாடல் ஒலிக்க, என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்று தெரியாமல் அமைதியாக இருக்கிறார்கள் பா.ம.க. தொண்டர்கள். யாரோ ஒரு 'பிரைட்டான’ தே.மு.தி.க. நிர்வாகிக்கு உரைத்திருக்க வேண்டும். அவசர அவசரமாக பாட்டை மாற்றி, 'அய்யா டாக்டர் அய்யா, ஏழை மக்கள் இதயம் போற்றும் எங்கள் அய்யா’ என்ற பாடலை ஒலிக்கவிடுகிறார்கள். இப்போது பா.ம.க. தொண்டர்கள் முகங்களில் பிரகாச சந்தோஷம். அந்த நேரத்தில் அலறுகிறது ஓர் அறிவிப்பு..!

''டாக்டர் (?!) கேப்டன் வந்துகொண்டு இருக்கிறார். போக்குவரத்தை போலீஸார் இன்னும் சிறிது நேரத்தில் மாற்றிவிட உள்ளனர். எனவே, தொண்டர்கள் ஒதுங்கி நின்று வாகனங்களுக்கு வழிவிடணும். மக்களைக் காக்கவெச்சா கேப்டனுக்குப் பிடிக்காது'' என்று மைக் அலற, போக்குவரத்து போலீஸாரோடு இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறார்கள் தொண்டர்கள்.

'நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்... ஊருக்கு நீ மகுடம்...’ - பாடல் பின்னணியில் ஒலிக்க, ஃபுல் மேக்கப்பில் மேடையில் திடீரென்று தோன்றுகிறார் விஜயகாந்த். அதிர்ச்சியில் நிமிர்ந்து உட்கார்ந்தால், அது விஜயகாந்தின் டூப்ளிகேட். அதே மருதாணி கலரிங் தலைமுடியோடு விஜயகாந்த் மேனரிஸங்களை அச்சு அசலாகப் பிரதியெடுக்கிறார் மிஸ்டர் டூப். நடுநடுவே நிர்வாகிகளின் அறிவுரைப்படி கூட்டணிக் கட்சிகளின் கொடிகளை வாங்கி ஆட்டுகிறார். பா.ம.க. கொடியை ஆட்டும்போது கூடவே ஆடுகிறது கூட்டம்.

ருவழியாக 5 மணிக்கு மேல் விஜயகாந்த் வந்ததும், ''ஹேய்ய்ய்ய்ய்ய்..!'' எனப் பிரசார வாகனம் முன்பு மொய்க்கிறது கூட்டம். வழக்கமாக, பிரசார வாகனத்தின் முன் இருக்கையில் அமர்ந்துதான் தலைவர்கள் வருவார்கள். ஆனால், விஜயகாந்த் பிரசாரத்தில் அங்கேயும் ஒரு ட்விஸ்ட். முன் இருக்கையில் யாரோ ஒருவர் அமர்ந்திருக்க, செம சஸ்பென்ஸாக, தொண்டர்களின் ஆரவாரங்களுக்கு இடையே வாகனத்தின் கூரையைப் பிளந்துகொண்டு காட்சியளிக்கிறார் விஜயகாந்த். இரண்டு மைக்குகளை கையில் பிடித்துக்கொண்டு, 'கேப்டன் டி.வி.’ கேமரா இருக்கும் திசையைப் பார்த்துப் பேச ஆரம்பிக்கிறார்.

''விழுப்புரம்... மிகவும் பின்தங்கிய பகுதி. இதைத்தான் இங்கிலீஷ்ல மேஸ்ட் பேக்வேர்டுனு... ஸாரி மோஸ்ட் பேக்வேர்டுனு சொல்வாங்க மக்களே. இந்தப் பகுதியில் இருந்து ஹெல்த் மினிஸ்டராவும் கல்வி அமைச்சராவும் இருந்திருக்காங்க. ஆனா, அவங்க வெல்த்தை பாத்துக்கிட்டாங்களே தவிர, யாரும் உங்க ஹெல்த்தைக் கண்டுக்கலை மக்களே...'' என்று முன்னாள் அமைச்சர்களான பொன்முடி, சி.வி.சண்முகம் போன்றோரை பெயர் குறிப்பிடாமல் 'டச்’ பண்ணுகிறார்.

“யேய்ய்ய்ய்... கேப்டன் பாட்டு போடு!”

''அப்புறம் மக்களே...'' என அவர் பேச எத்தனிக்க, கூட்டத்தில் இருந்து வந்த ஒரு குரலின் கோரிக்கைக்கு செவிசாய்க்கிறார். ''என்னது... நான் பேசுறது கேக்கலையா? அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? என்னால இவ்வளவுதான் சத்தமாப் பேச முடியும். நீங்கதான் அமைதியா இருந்து கேட்கணும்'' என்று சிரிக்கிறார். அதையும் காது கொடுத்துக் கேட்காமல், சளசளவெனக் கத்திக்கொண்டே இருக்கிறது கும்பல்.

''இந்தப் பகுதியில கரும்பு சாகுபடி நடக்குது. அந்தக் கரும்பு இனிக்குது. ஆனா, அவங்களோட வாழ்க்கை கசக்குது'' என்று டைமிங் ரைமிங் அடிப்பவர், அங்கே இருந்து லேக் ஜம்ப் அடித்து ப.சிதம்பரத்தை வம்புக்கு இழுக்கிறார். ''ஸ்டார் சொர்ணத்திட்டம்னு ஒரு திட்டம் மக்களே. அதை சிதம்பரம் தொகுதியில மட்டும்தான் செயல்படுத்துறாங்க மக்களே. மத்தவங்களை எல்லாம் ஏமாத்துறாங்க மக்களே'' என்பவர், ''இதெல்லாம் வானத்துல போற அந்தம்மாவுக்குத் தெரியுமா மக்களே! விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாத இவங்க, டாஸ்மாக்குக்கு மட்டும் டார்கெட் போடுறாங்க மக்களே'' என்று ஜெயலலிதாவையும் லேசாகக் குட்டுகிறார்.

அப்படியே ஒரு அந்தர் பல்டி அடித்து லோக்கல் அரசியலுக்கு வருபவர், ''இங்கே உள்ள பொன்முடியும் சி.வி.சண்முகமும் உங்களுக்கு என்ன நல்லது பண்ணாங்க மக்களே? கல்வி அமைச்சர்களா இருந்தவங்க, என்ன பண்ணினாங்க, சொந்தமா காலேஜ் கட்டிக்கிட்டாங்க மக்களே! நல்லா சிந்திச்சுப் பாருங்க'' என்றவர் திடீரென லிஃப்ட்டில் ஏறி தேசிய அரசியலில் குதிக்கிறார்... ''எதுக்கெடுத்தாலும் பிரதமருக்கு, கலைஞர் கடிதம் எழுதுறார்னு குத்தம் சொன்ன நீங்களும், இன்னைக்கு அதைத்தானே பண்றீங்க? கலைஞர் கடிதப் புயல்னா, நீங்க கடிதச் சூறாவளி. இவ்வளவு விஷயம் பேசுற நீங்க ஏன் பிரமதரை நேர்ல பார்த்து தமிழ்நாட்டு பிரச்னையைப் பத்திச் சொல்லலை? ஆனா, நான் நேர்ல போய் பார்த்தேன்ல!'' என்கிறார் தெனாவெட்டாக. நமக்கென்னவோ அவரது கட்சி எம்.எல்.ஏ-க்கள் 'தொகுதி நன்மை’க்காக ஜெயலலிதாவைச் சந்தித்தது நினைவுக்கு வந்தது.

அருகில் உள்ள கூல்டிரிங்ஸ் கடை வாசலில், ''என்னதான் சொல்ல வர்றார்?'' என்று ஒருவர் கேட்க, ''கேப்டன்... மனசுல நினைச்சதெல்லாம் பேசுவார். நாமதான் கரெக்ட்டா பாயின்ட் பாயின்ட்டாப் பிடிச்சுக்கணும்!'' என்கிறார் ஒரு பெண்.

''லஞ்சத்தை ஒழிக்க தமிழ்நாட்டுக்கு நான் இருக்கேன் மக்களே. இந்தியாவுக்கு மோடியைக் கொண்டுவாங்க மக்களே...'' என்று பிரசாரத் தொனியில் பேசும்போது கூட்டம் அமைதியாவதைக் கவனிக்கும் விஜயகாந்த், சட்டென கியர் மாற்றுகிறார். ''நான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்றேனு சொல்றாங்க. நான் அரசியல்ல பிழைக்க வரலை. மக்களுக்கு உழைக்க வந்திருக்கேன்'' என்று பன்ச் அடிக்க அதுவரை குழப்பத்தோடு இருந்த கூட்டம் மலர்ச்சியாகக் கைதட்டுகிறது. ''இந்தம்மாவோட மூலதனமே பொய்தான் மக்களே... பொய்யான வாக்குறுதிகள்தான். நானே ஒருமுறை அவங்க பொய் வாக்குறுதியைக் கேட்டு மாட்டிக்கிட்டு முழிச்சதை நீங்களும்தான் பார்த்தீங்களே மக்களே...'' என்றதும் கூட்டத்தில் இருந்து குபீர் சிரிப்பலை.

இதற்கிடையில், 'டாக்டர் அய்யா ராமதாஸ் பத்திப் பேசுங்க... இன்னும் கொஞ்ச நேரம் பேசுங்க’ என்று ஆளாளுக்கு சவுண்ட்விட, விஜயகாந்தின் கண்கள் இன்னும் சிவக்கின்றன. ''எல்லாரும் பேசினீங்கன்னா, எனக்கு எப்படிக் கேக்கும்? ஒவ்வொருத்தராச் சொல்லுங்க'' என்று சொல்லி டாப்பிக் மாற்றுகிறார்.

“யேய்ய்ய்ய்... கேப்டன் பாட்டு போடு!”

திருவண்ணாமலை அண்ணா சிலை ஜங்ஷன் அடுத்த பிரசார பாயின்ட். அங்கே கூட்டணிக் கட்சியான பா.ம.க-வின் வேட்பாளர் எதிரொலி மணியன். அண்ணா சிலை அருகே கேப்டனை எதிர்கொள்ள அனல் கனல் ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்தன. கேப்டனைப் புகழ்ந்து பேசிக்கொண்டு இருந்த ஒரு தே.மு.தி.க. பிரசாரப் பீரங்கி திடீரென உணர்ச்சிவசப்பட்டு, ''உலகின் 10-வது அதிசயமே...'' என்று சொல்ல, ''மொத்தமே ஏழு அதியசம்தானப்பா!'' என்று குபீர் சிரிப்பு கிளம்பியது.

''தொண்டர்களை வேண்டி விரும்பிக் கேட்கிறோம்... கேப்டன் வந்து பேசத் தொடங்கியதும் கூட்டணிக் கட்சியினர் தங்களின் கொடிகளை இறக்கிப் பிடிங்க. கேப்டன் முகத்தை மறைக்காதீங்க. இல்லைனா கேப்டன் டென்ஷன் ஆகிடுவாங்க'' என்று 'தட் கேப்டன் ஆங்ரி மொமென்ட்’ தருணத்துக்கு தொண்டர்களைத் தயார்படுத்திக்கொண்டே இருந்தார் அறிவிப்பாளர்.

அந்தச் சாலை சந்திப்பில் இருந்த விளக்குகள் திடீரென அணைந்துவிட ஆவேசமாகி விட்டார் அறிவிப்பாளர். ''கேப்டன் வரும்போது வேண்டுமென்றே லைட் ஆஃப் பண்ணியிருக்காங்க. எங்களோட கேப்டனை எப்படி தகதகன்னு பிரகாசமாக் காட்டணும்னு எங்களுக்குத் தெரியும். ஃபோகஸ் லைட்டை ஆஃப் பண்ணின போயஸ் கார்டனே ஒழிக'' என்று கலவர மோடில் கத்த, ''ஜெயலலிதா ஒழிக.. ஒழிக!'' என்று திமுறுகிறது கூட்டம். சில நிமிடங்களில் மீண்டும் விளக்கு எரியத் தொடங்க, ''எதுக்கும் அஞ்சாத கேப்டன்கிட்டயே மோதிப் பாக்குறீங்களா..? அந்தப் பயம் இருக்கட்டும்!'' என்று சொல்ல, ''கேப்டனுக்கு வெற்றி'' என்று அலறுகிறார்கள் சில தொண்டர்கள்.

டுத்த கால் மணி நேரத்தில் விஜயகாந்த் ஆஜர். வாணவேடிக்கை வெடிச் சத்தம் அடங்கும் வரை அமைதியாக இருந்த விஜயகாந்த், பிறகு பேச ஆரம்பித்தார். விழுப்புரத்தில் பேசியதை கொஞ்சம் புரட்டிப்«பாட்டு பேசினார். '''அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்’னு சொல்வாங்க'' என்று தொடங்கியவர், 100 நாள் வேலைத் திட்டம், சாத்தனூர் டேம், திருவண்ணாமலை அரசு ஆராய்ச்சிப் பண்ணை... என சில விஷயங்களை லேசுபாசாகத் தொட்டுச் சென்றார். ''செங்கம் கால்வாயை விரிவாக்கம் பண்றோம்னு சொன்னவங்க விரிவாக்கம் பண்ணவே இல்லை!'' என்று லோக்கல் டச் கொடுத்தார்.

''கிரிவலம் வர்ற பாதையில சுகாதாரமான குடிநீர் இல்லை. கேட்டா நீரோட்டம் இல்லைனு சொல்றாங்க. இவங்களுக்குத் தேவை காசுதான் மக்களே... 'எதுலடா கமிஷன் அடிக்கலாம்’னு அலையிறாங்க மக்களே. பேருதான் பெரிய பேரு, இந்த ஆட்சியில குடிக்கத் தண்ணி இல்லை'' என்று பொங்கி அடங்கினார். பிறகு வேட்பாளர் எதிரொலி மணியனை அறிமுகம் செய்தவர், ''கும்புட்டுக்கங்கண்ணே...'' என்று அவருக்கு ஆலோசனையும் தருகிறார். மிகச் சில நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு படாரென மறைந்துவிட்டார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism