Published:Updated:

கூவுறாங்க!

”மிழகத்தில் அ.தி.மு.க-வுக்கு ஓட்டு கேட்டு ராமராஜன், ஆனந்தராஜ், விந்தியா, சி.ஆர்.சரஸ்வதி, தியாகு, வையாபுரி, பொன்னம்பலம், செந்தில், சிங்கமுத்து, பாத்திமாபாபு என (அப்பாடா மூச்சு வாங்குது!) பல சினிமா பிரபலங்கள் தமிழகமெங்கும் சுற்றிவருகிறார்கள். இதில் பல பேச்சாளர்கள் மொக்கையாகவும் சிலர் சக்கையாகவும் பேசி ஏற்கெனவே வெக்கையில் வாடும் மக்களை வாட்டி வதைக்கிறார்கள்(என்னா ரைமிங்கு!). இதில் பாத்திமாபாபு, சிங்கமுத்து, ராமராஜன் ஆகியோரின் பேச்சுகள்தான் சுவாரஸ்யம். அப்படி சில சுவாரஸ்யங்களைப் பார்ப்போம் மக்கழே!

கூவுறாங்க!

சமீபத்தில் மதுரை வந்திருந்த சிங்கமுத்து, ''என்ன வேணும்? எண்ணெய் வேணும்'' என்று ஆரம்பிக்கும்போதே கூட்டம் கலகலப்பாகிவிடுகிறது. ''காங்கிரசுக்காரன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான், தி.மு.க.காரன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான், இந்த நாக்கைக் கடிச்சுக்கிட்டு அலையிறானே... அவனும் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்னுதான் மக்கள் எல்லோரும் நம்ம அம்மாவை பிரதமர் பதவிக்கு சரியா வருவாங்கனு முடிவெடுத்துருக்காங்க.

அம்மாவுக்கு நாமதான் குடும்பம். அவங்களுக்குனு தனிப்பட்ட குடும்பம் இல்லை. அதனால மக்களுக்கு நல்லது செய்றாங்க. போன ஆட்சியில் கருணாநிதி டி.வி கொடுத்தார், ஆனா, கேபிள் கனெக்ஷன் கொடுத்து சம்பாதிச்சாங்க... அதே நேரம் அவங்க மிக்சி, கிரைண்டர் கொடுத்திருந்தா என்ன ஆகிருக்கும்? கிரைண்டர்ல மாவு நாம அரைப்போம். அந்த மாவை கனிமொழி வழிச்சு எடுத்துடும். மிக்சியை நாம ஓட்டுவோம், சட்னியை ராசாத்தியம்மா எடுத்துக்கும். ஃபேனை நாம போட்டா கருணாநிதி காத்து வாங்குவார். இப்படி எல்லாத்தையும் அவங்கேதான் அனுபவிப்பாங்க.

எங்க ஊர் கிழவிகளெல்லாம் இப்போ ரொம்ப மினுமினுப்பா இந்தி நடிகை மாதிரி இருக்கு. எப்படினு எங்க பாட்டி கிட்டே கேட்டேன். 'அம்மா மாடு கொடுத்தாங்க. தினமும் பத்து லிட்டர் கறக்குது, அதுல அஞ்சு லிட்டரை டீக்கடைக்காரன் கிட்டே வித்துட்டு, மீதி அஞ்சு லிட்டர் பாலை சுண்டக் காய்ச்சி நானே குடிச்சுடுறேன்’னு சொல்லுது.  அம்மா இவ்வளவு நல்லது செஞ்சாலும் அந்த கருணாநிதி உங்களை ஏமாத்தி ஓட்டு கேட்பார். நீங்க ஏமாந்துடாதீங்க'' என்று அதிரடியாகப் பேசுகிறார்.

கூவுறாங்க!

அடுத்து ராமராஜன், ''தி.மு.க-வில் ஸ்டாலினும் அழகிரியுமே ஒத்துமையா இருக்க முடியலை, இதில் இவங்க எப்படி மக்களைக் காப்பாத்துவாங்க. 28 எம்.பி-க்களை வெச்சுக்கிட்டு தேவகவுடா பிரதமாராகும்போது, 40 எம்.பி-க்களோட நம்ம அம்மா ஏன் பிரதமரா வர முடியாது. அந்த தேவகவுடாவே ஆதரவு தரேன்னு சொல்றார்.

கருணாநிதி ஆட்சியில் டி.வி கொடுத்தாங்க, அம்மா ஆட்சிக்கு வந்ததும்  மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தாங்க. இப்போ ஸ்டாலின் சொல்றார். மறுபடியும் அவங்க ஆட்சிக்கு வந்தா, எல்லோருக்கும் லேப்டாப் கொடுப்பாராம். அம்மாவோட திட்டத்தையே மறுபடியும் நீ ஏன் கொண்டுவர்றே, அப்போ டி.வி கொடுத்தீல்லே, இப்ப டெக்கு கொடுக்கிறேனு சொல்லு. (இப்போ ஏது பாஸ் டெக்? இதுதானா உங்க டக்?) அதை விட்டுட்டு... அம்மாவோட திட்டங்களைக் காப்பியடிக்காதே. வட நாட்டுத் தலைவர்களெல்லாம் அம்மா பிரதமரா வரணும்னு சொல்றாங்க. அத்வானியும் சொல்றார் (இது எப்போ?). தூங்கி வழிஞ்ச தேவகவுடா பிரதமரா இருந்துட்டுப் போனதுக்கு, எப்பவும் தூங்காம 24 மணி நேரமும் மக்களுக்காக உழைச்சுட்டு இருக்கும் நம்ம அம்மா பிரதமரா வரக் கூடாதா?'' என்று பட்டையைக் கிளப்புகிறார்.

பாத்திமாபாபுவோ, ''நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐம்பூதங்களிலும் கொள்ளையடித்தவர்கள் தி.மு.க.காரர்கள். அம்மா கொண்டுவந்த ஒவ்வொரு திட்டங்களும் ஏழை மக்களுக்குப் பயனளிக்கக் கூடியது. தன் குடும்ப நலனுக்காக ஆட்சி செய்தவர் கருணாநிதி.'' என்று பொளந்து கட்டுகிறார். (ஒரு இடத்தில் இவரை அறிமுகப்படுத்துகிறேன் என்று லோக்கல் அமைச்சர் செல்லூர் ராஜு, குறிப்பிட்ட டி.வி ஒன்றின் பெயரைச் சொல்லி அதில் செய்தி வாசித்தவர் பாத்திமா பாபு என்று சொல்ல, கடுப்பாகிவிட்டார் பாத்திமா, ''இவர் சொல்கிற டி.வி-யில் நான் என்றும் வேலை செய்தது கிடையாது. அந்த நிறுவனம் எனக்குப் பிடிக்காது'' என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார்).

நடிகர் செந்திலோ, ''அம்மா அடுத்து பிரதமராக வருவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த கருணாநிதி என்னைக்குமே மக்களுக்கு நன்மை செஞ்சது கிடையாது. குடுமபத்துக்கு சொத்து சேர்க்கிறதில்தான் குறியா இருக்காங்க. மதுரையில ஒருத்தர் இருக்கார் அழகிரின்னு, அவரு அழகிரியில்லை, கொலைகிரி. அண்ணன், தம்பிக்குள்ளேயே அடிச்சுக்கிறாங்க. அவங்க எப்படியும் போகட்டும். அதைப்பத்தி நான் ஒண்ணும் சொல்லலை. ஆனா, அம்மா பிரதமரா வருவதற்கு மோடியே நாளைக்கு ஆதரிப்பார்'' என்று தனி  ஸ்டைலில் பேசுகிறார்.

எப்படியோ நல்லா என்டர்டெயின்மென்ட் ஆனா சரிதான் என்று மக்கள் கூட்டம் கூடுகிறது!

- செ.சல்மான், படங்கள்: பா.காளிமுத்து

பின் செல்ல