Published:Updated:

ஸ்டாலின்... சாதிப்பாரா... சறுக்குவாரா?

தி.மு.க. மினிட் புக்ப.திருமாவேலன், படம்: உசேன், ஓவியம்:ஹாசிப்கான்

ஸ்டாலின்... சாதிப்பாரா... சறுக்குவாரா?

தி.மு.க. மினிட் புக்ப.திருமாவேலன், படம்: உசேன், ஓவியம்:ஹாசிப்கான்

Published:Updated:

16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்காக, தான் கலந்துகொண்ட முதல் பிரசாரக் கூட்டத்தில் கருணாநிதி பேசிய பேச்சு இது...

''நான் அரசியலுக்கு வந்து ஏறத்தாழ 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது எனக்கு வயது 90 என்றால், இன்னும் எத்தனை ஆண்டு காலம் வாழப்போகிறேன் என்ற கவலை இல்லை. ஆனால், மிச்சம் இருக்கிற இந்த ஆண்டுகளில் என்ன செய்தேன் என்பதுதான் முக்கியம். அவற்றைச் செய்துவிட்டுத்தான் நான் கண்ணை மூடுவேன்; அதுவரையில் காரியம் ஆற்றுவேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற பெரிய தலைவர்கள் வழிவந்த நான், அவர்களுடைய கொள்கைகளைப் பின்பற்றி உங்களுடைய அன்பைப் பெற்ற நான், மேலும் தொடர்ந்து வாழ நீங்கள் வழிகாட்டுவீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்!'' - கருணாநிதியின் குரலில் தன்னம்பிக்கையும் மனவேதனையும் சரிவிகிதத்தில் வெளிப்பட்டன.

ஏப்ரல் 5 முதல், அவர் ஊர் ஊராக வர இருக்கிறார். வாழும் அரசியல் தலைவர்களில் 16 தேர்தல்களையும் பார்த்தவர் அவர்தான். ஆனால், இதுவரை அவர் சந்தித்த எந்தத் தேர்தலிலும் இல்லாத பதற்றம், அவர் மனத்தில் படர்ந்திருப்பதன் அடையாளம்தான் இந்தப் பேச்சு. அவர் அமைக்க நினைத்த கூட்டணியை அமைக்க முடியவில்லை; அவர் எழுதிய வேட்பாளர் பட்டியலை அறிவிக்க முடியவில்லை; ஆனால், தன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கழக உடன்பிறப்புகளை ஏமாற்ற விரும்பவில்லை. அதற்காக மட்டுமே 'கடமை’க்காகப் பிரசாரம் செய்யப்போகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பிறகு இவ்வளவு நீண்ட பயணத்திட்டத்தை கருணாநிதி இதுவரை வகுக்கவில்லை. கருணாநிதி, 14 நாட்கள் தொடர் சூறாவளியைக் கிளப்பக் காரணம், அவர் காதுக்கு வந்த தகவல், அவ்வளவு நல்லதாக இல்லை. ஏழெட்டுத் தொகுதிகள் தவிர மற்றவற்றில் தி.மு.க. வேட்பாளர்கள் திணறிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தை அவர் உணர்ந்ததால்தான் மெய் வருத்தம் பாராது, கண் துஞ்சாது கிளம்பிவிட்டார். கரகர குரலால் உடன்பிறப்புகளுக்கு காம்ப்ளான் கொடுக்கப்போகிறார்.

ஆனால், நிஜத்தில் தி.மு.க-வின் கள நிலவரம் எப்படி இருக்கிறது?

ஸ்டாலின்... சாதிப்பாரா... சறுக்குவாரா?

1. காங்கிரஸ் பாரம் இல்லை!

மத்திய காங்கிரஸ் அரசு மீது 10 ஆண்டு காலமாக வைக்கப்பட்ட மொத்த விமர்சனங்களையும் தன் நெஞ்சில் தாங்கிக்கொண்டு இருந்தார் கருணாநிதி. ஆனால் காங்கிரஸ்காரர்கள், அவை பற்றி எல்லாம் கவலைப்பட்டதே இல்லை. கருணாநிதிதான் பக்கம் பக்கமாகப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தார். இந்தத் தேர்தலில் அந்தக் கஷ்டம் இல்லை.

ஜெயலலிதாவின் முக்கால் மணிநேரப் பேச்சு முழுமையும் காங்கிரஸை மொத்து மொத்து என்று மொத்துவதாகவே இருக்கிறது. கருணாநிதி மட்டும் காங்கிரஸை தனது கூட்டணியில் சேர்த்திருந்தால், இதற்குப் பதில் சொல்வதிலேயே தாவு தீர்ந்துபோயிருக்கும். ஈழப் பிரச்னை, ஊழல் முறைகேடுகள், மீனவர் தாக்குதல்... அனைத்துக்கும் கருணாநிதியும் பொறுப்பேற்க வேண்டியவர்தான் என்றாலும், 'அதற்காகத்தான் கழன்றுகொண்டோம்’ என்று இப்போது தப்பிக்கவாவது முடிகிறது. கருணாநிதிக்குக் கொஞ்சமாவது  தூக்கம் வர, காங்கிரஸ் தலைபாரம் இல்லாததுதான் காரணம்!

2. ஸ்டாலின் பலம்!

சில நேரங்களில் சிரமங்கள் கொடுத்தாலும் ஸ்டாலினை நினைத்தால் கருணாநிதிக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. 'அந்தக் காலத்தில் நானும் இப்படித்தான் சளைக்காமல் சுற்றுப்பயணத்தில் இருப்பேன்’ என்று கருணாநிதியே கண்வைக்கும் அளவுக்கு அலைகிறார் ஸ்டாலின். வேறு எந்தக் கட்சிக்கும், ஸ்டாலின் போல 'மாற்றுத் தலைவர்’ இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, கடந்த இரண்டரை ஆண்டு காலமாக அநேகமாக எல்லா வாரமும் ஏதாவது ஓர் ஊரில் ஸ்டாலின் தனது இருப்பைப் பதிவுசெய்ததால்தான், இந்த அளவுக்காவது கட்சித் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் தக்கவைக்கப்பட்டது. இதன் மூலமாக எல்லா ஊர்களிலும் பெயர் சொல்லி அழைக்கக்கூடிய அளவுக்கு முகப் பரிச்சயம் பெற்றவர்களை அதிகமாகப் பெற்றுவிட்டார். எந்தப் பதவியிலும் இல்லாத அவர்கள்தான், கடைசி வரைக்கும் அவரோடு இருக்கப் போகிறார்கள்.

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடிந்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட மறுநாளே கிளம்பி, தேர்தலுக்கு இரண்டு நாள் முன்பு வரை தினந்தோறும் செய்வதாக ஸ்டாலின் திட்டமிட்டிருக்கும் பிரசாரம், 'தலைவர் வரவில்லையே’ என்ற ஏக்கத்தைப் போக்குவதாக மட்டும் அல்லாமல், 'நமக்கு தலைவரே கிடைத்துவிட்டார்’ என்ற உற்சாகத்தை ஊட்டுவதாக அமைந்துவிட்டது.

3. அழகிரி அடம்!

மதுரையில் 'முரசொலி’யைப் பார்க்க அனுப்பிவைக்கப்பட்ட அழகிரி, தென் மாவட்ட தி.மு.க-வின் மூச்சை அமுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டதற்கு கருணாநிதியும் ஒரு காரணம். மரம் வைக்கிறோம். அது வீட்டுச் சுவர் விரிசல்விடும் அளவுக்கு வளர்ந்தால், லேசாக வெட்டிவிடுகிறோம். ஆனால், வீட்டையே இடித்தால்தான் மரத்தை அகற்ற முடியும் என்ற அளவுக்குப் போன பிறகு, அழகிரி மீது நடவடிக்கை எடுக்கிறார் கருணாநிதி. 'எனக்குக் குடும்பத்தைவிட கொள்கைதான் முக்கியம்’ என்று இப்போது சொல்லும் கருணாநிதி, இந்த வார்த்தைகளை 2002-ம் ஆண்டு தா.கிருட்டிணன் கொலையின்போது சொல்லியிருக்க வேண்டும்; சொல்லவில்லை. 2007-ம் ஆண்டு தினகரன் சம்பவத்தின்போதாவது கதறியிருக்க வேண்டும்; மனம் இல்லை. எங்கோ மதுரையில்தானே நடக்கிறது என்று மறைக்க நினைத்ததன் விளைவு, இப்போது அறிவாலயத்தின்மீதே இடி!

இந்த மூன்று நிகழ்வுகளும் கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்த சம்பவங்கள். ஒரு மாமங்கம். இந்தச் சம்பவங்கள் நடக்க நடக்கவே, தென்மண்டல அமைப்புச் செயலாளர், எம்.பி., மத்திய அமைச்சர் என்று ஒவ்வொரு மகுடமாக அழகிரிக்குச் சூட்டப்பட்டன. தான் இப்படி இருந்தால்தான் பயப்படுவார்கள் என்று அழகிரியே தனக்கு அதிரடி மாஸ்க் போட்டுக்கொண்டார். அந்த முகமூடி, 'மு.க.’-வை மட்டுமல்ல, தி.மு.க-வையும் அலற வைத்துக்கொண்டிருக்கிறது.

'ஆகப்பெரிய செல்வாக்கு தனக்கு இல்லை’ என்பது அழகிரிக்கும் தெரியும். எல்லாக் கூட்டணி வேட்பாளர்களுக்கும் வெற்றி ஆசீர்வாதம் வழங்கும் அழகிரிக்கு, நாற்பது ஆண்டுகளாகத் தான் வாழும் மதுரையில் போட்டியிட நடுக்கம் இருப்பதில் இருந்தே அதைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், அழகிரியின் தாக்குதல்கள் தி.மு.க-வில் உள்காயங்களை ஏற்படுத்தி வருகின்றன. அதற்கு, உடனடியாக தீவிரச் சிகிச்சை எடுக்கப்படாவிட்டால், பெரும் காயமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. ஏனெனில், சொற்ப வாக்கு வித்தியாசங்கள்கூட இந்தத் தேர்தலில் வெற்றியைத் தட்டிப் பறித்துவிடும்!

ஸ்டாலின்... சாதிப்பாரா... சறுக்குவாரா?

4. தடுமாறும் நிலைப்பாடு!

இந்த இரண்டு மாதங்களில், மத்திய ஆட்சி பற்றி 20 விதமாகப் பேசிவிட்டார் கருணாநிதி.

'காங்கிரஸ் நமக்குத் துரோகம் செய்துவிட்டது; இப்போது இருக்கும் பா.ஜ.க., வாஜ்பாய் காலத்து பா.ஜ.க. அல்ல. இருவருடனும் கூட்டணி இல்லை’ என்று பொதுக்குழுவில் சொன்னார் கருணாநிதி. 'மோடி, திறமையாக ஆட்சி செய்கிறார்’ என்று பேட்டி கொடுத்துவிட்டு, மறுநாள் விளக்கம் சொன்னார். 'சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரிப்பவர்களோடு கூட்டணி’ என்று பா.ஜ.க-வை மட்டும் வெட்டிவிட்டார். 'ராகுல், மோடி பிரதமர் ஆக ஆதரவு இல்லை’ என்று சொல்லி கம்யூனிஸ்ட்களுக்கு வலை விரித்தார். 'இப்போது மதசார்பற்ற ஆட்சியை அமைக்குமானால் காங்கிரஸை மன்னிக்கத் தயார்’ என்கிறார்.

இதை தேதி வாரியாகக் குறித்துவைத்துப் படித்தால், தலை கிறுகிறுத்துப்போகும். வாக்காளனுக்கும் அப்படித்தான். மே 16-ம் தேதிக்குப் பிறகு எத்தனை எம்.பி-கள் தி.மு.க-வில் இருக்கிறார்கள் என்பதை வைத்து கருணாநிதி முடிவெடுப்பதே சரியானது. அதற்கு முன் அவர் எதைப் பேசினாலும் தவறாகத்தான் முடியும்!

5. வேஸ்ட் வேட்பாளர்கள்!

தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ, வெயிட்டான வேட்பாளர்களை கருணாநிதி நிறுத்துவார். அதில் இந்த முறை பெறும் சறுக்கல். சில வேட்பாளர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தார்கள் என்றே தி.மு.க. தொண்டன் குழம்பியும் புலம்பியும் வருகிறான். 'இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்’ என்று தன்னிடம் அதிகாரம் இல்லாதபோதெல்லாம் கோரிக்கை வைத்த ஸ்டாலின், இப்போது அதிகாரம் தரப்பட்டபோது முதியவர்களாகப் பார்த்துப் பார்த்து பட்டியல் தயாரித்ததன் பின்னணியே புரியவில்லை. 'திருவண்ணாமலை வேணுகோபாலை’ எப்போது விடுவிப்பார்கள் என்று பார்த்தால், பல வேணுகோபால்களைப் பட்டியலில் சேர்த்துள்ளார்கள்.

மாவட்டச் செயலாளர்கள், தனக்கு 'ஆமாம் சாமி’ போடுபவர்களைத்தான் வேட்பாளர் களாகப் பரிந்துரைப்பார்கள். ஆனால், ஒரு கட்சி, தன்னுடைய பிரதிநிதியாக டெல்லிக்கு அனுப்பப்பட யார் தகுதி படைத்தவர்கள் எனப் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட தகுதி படைத்த சிலரிடம் ஸ்டாலினே கோரிக்கை வைக்க, அவர்கள், 'எங்களிடம் பணம் இல்லை’ என்றதும் பின்வாங்கியுள்ளது தலைமை. அந்த ஒரு சிலருக்குக்கூட பணம் செலவழிக்க தலைமைக்கு மனம் இல்லை. அதனால்தான் கட்சிக்கே சம்பந்தம் இல்லாத, விருப்ப மனு தாக்கல் செய்யாத, நேர்காணலுக்கே வராதவர்களை பணம் படைத்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக வேட்பாளர்களாக அறிவித்திருப்பது ஸ்டாலின் கால தி.மு.க-வாக இருக்குமானால், அதன் எதிர்காலம் பிரகாசமாக இருக்காது!

6. குறுநில மன்னர்கள்!

அ.தி.மு.க-வில் நான்கு பேர் என்றால், இங்கே 40 செக் போஸ்ட்கள். மாவட்டத்தில் தன்னைத் தவிர வேறு யாரும் வளர்ந்துவிடக் கூடாது, தளபதிக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று நினைத்தே தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் செயல்படுகிறார்கள். ஜெயித்தாலும் தோற்றாலும் கன்னியாகுமரி ராஜரத்னம், திருநெல்வேலி தேவதாச சுந்தரம், திருப்பூர் செந்தில்நாதன், விழுப்புரம் முத்தையன், ராமநாதபுரம் ஜலீல், விருதுநகர் ரத்னவேலு... போன்றவர்களால் இப்போது கோலோச்சும் மாவட்டச் செயலாளர்களுக்கு எந்தச் சேதாரமும் இல்லை என்பதற்காகவே தேடித் தேடிப் பார்த்து தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைத்துள்ளார்கள். இவர்கள் வெற்றி பெற்றாலுமே முழு அரசியலுக்கு வராதவர்கள். ஏனெனில், தங்கள் வர்த்தகத்தைக் கவனிக்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும்!

மாவட்டச் செயலாளர் பரிந்துரையை, ஒரு தலைமை ஏற்பது சரியானதுதான். ஆனால், எல்லாவற்றுக்கும் தலையாட்ட தேவையில்லை. அந்த அடிப்படையில்தான் வேட்பாளர்களை ஸ்டாலின் நியமித்தார் என்றால், மதுரை, தேனி மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரையை ஏற்காதது ஏன்?

வேட்பாளர்களை யார் வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். ஆனால், வெற்றி தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டியது இப்போதைக்கு ஸ்டாலின் ஒருவர் மட்டுமே. தனித்து முடிவெடுப்பது, பெருமை தரும் அளவுக்கு அவஸ்தையையும் தரும். தனிப்பட்ட விருப்பத்தைக்கூட பொதுக்குழுவின் கூட்டு முடிவாக அறிவித்துத் தப்பிப்பார் கருணாநிதி. அதை இந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்டாலின் பின்பற்ற வேண்டும்!

ஸ்டாலின்... சாதிப்பாரா... சறுக்குவாரா?

7. எல்லோரும் வேண்டும்!

மாவட்டச் செயலாளர்களிடம் கருத்து கேட்பார் கருணாநிதி. 'மா.செ’-களாக இல்லாதவர்களிடமும் கேட்பார். அதுதான் அவர் வெற்றிக்குக் காரணம். 'கலைஞர் நடந்தால் அவர் நிழல் அன்பில்’ என்று பலரும் நம்பிக்கொண்டிருந்த நேரத்தில், அவரது பதவியைப் பறித்து அரசினர் பங்களாவில் படுக்க வைத்தார் கருணாநிதி. எல்லா மனிதர்களையும் சேர்த்துக்கொள்வார். ஆனால், எந்தத் தனிமனிதரும் தன்னிடம் 'அட்வான்டேஜ்’ எடுத்துக்கொண்டு தன்னாட்டம் போடுவதை அனுமதிக்க மாட்டார். ஆனால், இன்று மாவட்டச் செயலாளர்கள் சொல்வதை மட்டுமே வேதவாக்காக நினைத்துக்கொண்டு மற்றவர்களை உதாசீனம் செய்யும் போக்கு, ஸ்டாலினிடம் இருப்பதாகப் பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

குறிப்பிட்ட ஆட்கள், மாவட்டச் செயலாளரைப் பிடிக்காதவர்களே தவிர, ஸ்டாலினைப் பிடிக்காதவர்கள் அல்ல. எல்லாக் கோஷ்டியையும் தன் வெற்றிக்குப் பயன்படுத்திக்கொண்டால் மட்டுமே அவரால் வெல்ல முடியும். 'அழகிரி சொல்றதுலயும் நியாயம் இருக்கேப்பா’ என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருப்பது அழகிரி மீதான பாசத்தால் அல்ல; ஸ்டாலின் நடவடிக்கைகள் மீதான அவநம்பிக்கையால்!

8. ஸ்பெக்ட்ரம் பேசாதே!

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சரிவுக்கு மிகப் பெரிய காரணமே ஸ்பெக்ட்ரம் விவகாரம்தான். ஒரு தேர்தல் வெற்றியை மட்டும் அது பறிக்கவில்லை; தி.மு.க-வுக்கு வாழ்நாள் அவமானத்தையும் ஏற்படுத்தி, அகற்ற முடியாத கறையை உருவாக்கிவிட்ட சமாசாரம் அது. ஆ.ராசாவை இந்த நேரத்தில் கைவிடக் கூடாது என்று அவருக்கு நீலகிரி தொகுதியை ஒதுக்கியதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதுவுமே நடக்கவில்லை என்று கருணாநிதி பேச ஆரம்பித்திருப்பது ஒரு பலனையும் தராது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை நியாயப்படுத்தும் முயற்சிகள் தி.மு.க-வுக்கு மீண்டும் மீண்டும் பாதகமான இமேஜையே உண்டாக்கும்!

ஸ்டாலின்... சாதிப்பாரா... சறுக்குவாரா?

9. இளைய ஈர்ப்பு இல்லை!

தி.மு.க-வின் ஆரம்பக்காலத்து வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்களே மாணவர்களும் இளைஞர்களும்தான். ஆனால், இன்று அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. புதிய வாக்காளர்களை ஈர்க்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இல்லை. இணையதளங்களில், அளவுக்கு அதிகமாக தி.மு.க-தான் விமர்சிக்கப்படுகிறது. பொதுக்கூட்டங்கள், மாநில மாநாடுகள், முப்பெரும் விழாக்களுக்கு வெளியே இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் கட்சிக்கு ஈர்ப்பு ஏற்படுத்தும் மந்திரம் வேண்டும். அதேசமயம், இளைஞர்களை ஈர்க்க இளைஞர்களால்தான் முடியும் என்று நினைத்து உதயநிதியையும் சபரீசனையும் கொண்டுவந்துவிடக் கூடாது!

10. இலக்கு 'இரட்டை இலை’ அல்ல!

ஜெயலலிதாவைப் போலவே பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தி.மு.க-வாலும் அறிவிக்க முடியவில்லை. ''ஜெயலலிதாவுக்கு இது 'ஓவர்’ சொல்லும் தேர்தல்'' என்று பிரசாரம் செய்து சட்டமன்றத் தேர்தலாகவே ஸ்டாலின் ஆக்கிவிட்டார். காங்கிரஸையும் திட்டாமல், பா.ஜ.க-வையும் விமர்சிக்காமல் ஜெயலலிதாவையே ஸ்டாலின் குறிவைப்பதைப் பார்த்தால், அவர் பிரதமர் ஆகிவிடுவாரோ என்று இவரே பயப்படுவது போல தெரிகிறது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட அடுத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தல்தான் தனக்கு முக்கியம் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அப்படி நினைப்பது தவறு இல்லை. ஆனால், அவரது 'இமேஜ்’ இந்தத் தேர்தல் வெற்றியில்தான் அடங்கி இருக்கிறது. அவர் சரிய வேண்டும் என்று எதிர்க் கட்சியில் மட்டுமல்ல, சொந்தக் கட்சியிலேயே பலரும் நினைப்பதுதான் சோகம்! ஜாக்கிரதை ஸ்டாலின்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism