செய்வீர்களா...ஜெயலலிதா செய்வீர்களா?
பேப்பரைப் பார்த்துப் படித்து ''செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?'' என நம்மைப் பார்த்துக் கேள்விகளாகக் கேட்டுத்தள்ளும் தங்கத் தாரகை அம்மாவிடம் நான் கேட்க நினைத்த கேள்விகள் இவை. படிப்பீர்களா? நீங்கள் படிப்பீர்களா?

எப்போதும் ஜென் நிலையில் லயித்துக்கிடக்கும் ஓ.பன்னீர் செல்வத்தை நார்மல் மனிதனாக மாற்றிக் காட்டுவீர்களா? நீங்கள் மாற்றிக் காட்டுவீர்களா?

நீங்கள் காரில் போகும்போது டயரைப் பார்த்து சம்மணக்கால் போட்டு வணக்கம் வைக்கிறார்கள் உங்கள் தொண்டர்கள். எல்லாம் சரி. 'ஹெலிகாப்டரில் நான் பறக்கும்போதும் அப்படிச் செய்யாதீர்கள்’ எனச் சொல்வீர்களா? நீங்கள் சொல்வீர்களா?


'தலைவா’ படத்துக்கு மிரட்டல் கடிதம் எழுதிப் பிரச்னை கிளப்பிய அந்த யாரோ சில தீய சக்திகளை இப்போதேனும் தமிழ்நாட்டிற்கு அடையாளம் காட்டுவீர்களா? நீங்கள் அடையாளம் காட்டுவீர்களா?

ஆதீனம், சரத்குமார் மற்றும் சீமான் போன்றோரின் 'தன்னலமில்லா’ தியாகத்தையும் அவர்களுக்கு நீங்கள் காட்டிவரும் 'பரிவு’ பற்றியும் என்றைக்கேனும் சிந்தித்திருக்கிறீர்களா? நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா?

நித்திய கண்டம் பூரண ஆயுசாய் ஒவ்வொருநாளும் அனலில் இட்ட புழுவாய் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அமைச்சர் பெருமக்களின் வலியை உணர்கிறீர்களா? நீங்கள் உணர்கிறீர்களா?

மின்வெட்டைக் காரணம் காட்டியே போன தி.மு.க ஆட்சிக்கு வேட்டு வைத்தீர்கள். மின்மிகை மாநிலம் என்ற அழகான சொல்லை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தோடு எங்களை இருட்டில் வைத்திருக்கிறீர்கள். தொட்டுத் தொடரும் மின்வெட்டுப் பாரம்பரியத்தைப் போக்கி எங்கள் வாழ்வில் விளக்கேற்றுவீர்களா? நீங்கள் விளக்கேற்றுவீர்களா?

'வெயிலில் குடை இல்லாமல் 50 நொடிகள் நின்றார் அம்மையார்’ என்று சொன்ன வைகோவைப் பார்த்து கொஞ்சமாவது இரக்கப்பட்டீர்களா? நீங்கள் இரக்கப்பட்டீர்களா?

சொத்துக்குவிப்பு வழக்கு நடக்கும் பெங்களூர் விசேஷ கோர்ட்டுக்கு இனியும் லீவு லெட்டர் எதுவும் கொடுக்காமல் ஆஜர் ஆவீர்களா? நீங்கள் ஆவீர்களா?

கட்டக் கடைசியாய் உங்களுக்கு இவ்வளவு அழகாய் ஸ்பீச் தயாரித்துக் கொடுக்கும் அந்த புண்ணிய ஆத்மாவை மேடையில் அறிமுகம் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
- ஆர்.சரண்