Published:Updated:

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!

தேர்தல் காய்ச்சல் 110 டிகிரியைத் தாண்டிவிட்டது. அதிலும் தேர்தல் கமிஷன் கொடுக்கிற அட்ரா சிட்டியும் அலப்பரையும் எப்பவும் விட இந்தத் தேர்தலில் அதிகம். தெருவுக்கு தெரு செக் கிங், ஹைவேயில்கூட திடீர் ரெய்டுனு பட்டை யைக் கௌப்புறாங்க

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!

நண்பர் ஒருவர் திருப்பூரில் இருந்து 10 கிலோமீட்டரில் இருக்கும் அவினாசிக்குத் தனது நானோ காரில் போயிருக்கிறார். திருப்பூரில் கிளம்பிய இடத்திலேயே தேர்தல் அதிகாரிகள் பணம் இருக்கிறதா என்று செக்கப் செய்து அனுப்பி வைத்தனர். இரண்டு கிலோ மீட்டரில் மறுபடி செக்கப், ஐந்து கிலோமீட்டரில் வேற ஒரு குரூப் செக்கிங் என்று அமளிதுமளிப்படுத்த, பேசாமல் பஸ்ஸிலேயே போயிருக்கலாம் என்று நொந்து நூடுல்ஸ் ஆகி அவினாசிக்குள் நுழைய, அங்கும் வழி மறித்து சோதனை.  ரெய்டை விடுங்கள்... அவர்கள்  எல்லா இடத்திலும் வண்டியின் டிக்கியைத் திற என்றதுதான் அவரால் பொறுக்க முடியவில்லை. நானோ காரில் டிக்கி இல்லை என்று புரியவைத்து வருவதற்குள் தாவூ தீர்ந்துவிட்டதாம். ஆனால் இந்தத் தேர்தல் கமிஷன் கெடுபிடிகள் இல்லாத காலத்தில் தேர்தல் எப்படி நடந்தது? போன தலைமுறையைச் சேர்ந்த ஒருவரின் மலரும் நினைவுகள் இதோ...

முதலில் தேர்தல் அறிவிப்பு வந்தவுடனே, கிராமப் பகுதின்னா ஒவ்வொரு கிளைக்கும் ஒன்றியச் செயலாளர் காரில் வந்து சின்னம் போடுறதுக்குனு ஒரு சின்னத் தொகையை கொடுத்துட்டுப் போவார். இப்போ மாதிரி அப்போவெல்லாம் பெயின்ட், ஃப்ளோரசென்ட் பவுடர்லாம் இல்லை. கோயில் சுவருக்கு அடிக்கும் காவிப்பொடியும் கரித்தூளும்தான் என்பதால் கிளைக்கு 100 ரூபா கொடுத்தாலே அதிகம். சில தீவிர கட்சிக்காரகள் ரோடு போட வைத்திருக்கும் தாரை ஆட்டையைப் போட்டுவந்து அதில் சின்னம் வரைந்துவிடு வார்கள். அது அஞ்சாறு தலைமுறைக்கும் ஒண்ணுமே செய்ய முடியாத அளவுக்கு சுவரோடு ஒட்டிக்கொண்டு வராது. அந்த 100 ரூபாயையும் மிச்சப்படுத்த பனை மட்டையும் சுண்ணாம்பையும் எடுத்துக்கிட்டு யாருக்கும் தெரியாம சின்னம் வரையப்போன கிளைச் செயலாளர்களும் உண்டு. அரசு சுவர் தனியார் சுவர் என்றெல்லாம் கணக்கே இல்லை. எது ஃபிரீயா இருக்கோ... அது நம்ம சுவர்.

அடுத்த ரவுண்டு ஒவ்வொரு கிளைக்கும் பூத் கமிட்டி அமைப்பது. ரொம்ப நாளா எதிர்க்கட்சியாகவே இருக்கிற கட்சிக்காரங்களுக்கு ஏதோ பாலைவனத்தில் பன்னீர் சோடா கிடைச்ச மாதிரிதான் இந்த பூத் கமிட்டி வாய்ப்பு. நான், நீனு ஒரே ரகளையா இருக்கும். பின்னே... அப்போதானே பிரியாணி சாப்பிட முடியும்!

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!

பூத் கமிட்டி அமைத்த பிறகு அடுத்த கட்ட விநியோகம் நடக்கும். ரொம்ப முக்கியமான கட்டம் இதுதான். முதல் ரவுண்ட் பூத் காசு எவ்வளவு கொடுக்கிறாருங்கிறதை வெச்சு அந்த வேட்பாளர் வெற்றி பெறுவாரா அல்லது தலையில் துண்டைப் போட்டுகிட்டு போவாராங்கிறது முடிவாகும். 1,000 ரூபாய் கொடுத்துட்டார்னா, அவர்தான் வெற்றி வேட்பாளர். 300, 400-னு காசை இறுக்கிப் பிடிச்சுக் கொடுத்தா, அவர் தலை அந்தப் பக்கம் மறையும் முன்னமே சாபம் விட ஆரம்பிச்சுடுவாங்க.

அப்புறம் பிரசாரம் ஆரம்பிக்கும். அது என்னா கணக்குல வெச்சாங்களோ, பொதுத்தேர்தல் எல்லாமே கொளுத்துற வெயில் காலத்துலதான் வரும். விடியற் காலையிலேயே ஏரியா பெரிய மனுசன் களை டைரக்ட்டா வீட்டுல போய்ப் பார்த்து கேன்வாஸிங் நடக்கும். ஜெயிக்கலைனா இதுவாச்சும் மிச்சம்னு நோட்டீஸைக்கூட பாதி கொடுத்துப் பாதியை எலெக்ஷன் முடிஞ்சதும் எடைக்குப் போட்ட ஆளுங்கலாம் இருந்தாய்ங்க.

பிரசாரத்துக்கு வரும் நடிகர்களைப் பார்க்கிறதுக்கு கூட்டம் அள்ளும். இப்போவெல்லாம் ராமராஜனுக்கே 50 பேர்தான் நிக்கிறாங்க. குமரிமுத்துக்கே அப்போ 1,000, 2,000 பேர் கூடுவார்கள். ஏப்ரல், மேயில் தேர்தல் என்பதால், விடுமுறையில் இருக்கும் பள்ளிப் பிள்ளைகளை குழந்தைத் தொழிலாளிகளாகக் கட்சி பேதமின்றி பயன்படுத்துவார்கள். கொடி பிடிக்க, நோட்டீஸ் கொடுக்க என்று அப்பவே எதிர்காலத்துக்கு டிரெய்னிங்கும் தொடங்கிவிடும்.

அனல் பறக்கும் பிரசாரம் முடிந்து தேர்தல் நெருங்கும் நாள் அன்று, வாக்குப்பதிவின்போது வேட்பாளரின் ஏஜென்டாக பூத்துக்குள் உட்கார பயங்கர பாலிட்டிக்ஸ் நடக்கும். அடிப்படைக் கட்சிக்காரர்கள், விலை போகாதவர்கள் என்று கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி மிலிட்டரி செலக்ஷன் மாதிரி நடக்கும். ஏன் என்றால், ஒரு மாதப் பிரசார உழைப்பின் பயனை அன்றுதான் அறுவடை செய்ய வேண்டும். இப்போ மாதிரி எந்தத் தொந்தரவும் இல்லாமல், ஓட்டுப்பதிவு நடக்கும் பள்ளி வாசலிலேயே பூத் ஸிலிப் கொடுக்க கொட்டகை போட்டு அமர்ந்து இருக்கலாம்.  

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!

வாக்குப் பதிவில் செத்தவங்க உயிரோட வந்து ஓட்டை மட்டும் போட்டுட்டுக் காணாமப் போயிடுவாங்க. 'நீ முருகேசனே இல்லை’னு ஒரு தரப்பு சொல்லுச்சுனா, கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழைக் காட்டி ஒரிஜினல் முருகேசன் ஓட்டை டூப்ளிகேட் போட்டுட்டுப் போவார். ரிக்‌ஷாவில் ட்ரிப் அடித்து பெண்களை ஓட்டுப்போட அழைத்துவருவது, கிழவிகளை தூக்கிக்கொண்டுவந்து வாக்குப் பதியவைப்பது என்று கட்சிக்காரர்கள் உயிரைக் கொடுத்து உழைப்பார்கள். விசுவாசத்தைக் காட்டி அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை கிடைக்கும் ஓசி பிரியாணிக்கு உயிரைக்கூட தர வெளியே ஒரு குரூப் இருக்கும். ஆனால் உள்ளே இருக்கும் ஏஜென்ட் வாக்குப்பதிவை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருப்பார்.

'வாக்குச் சீட்டில் நம்ம கட்சி சின்னம் மேல இருக்கு. குத்துறதெல்லாம் கீழேயே குத்துறாய்ங்களே’னு முகம் வாடத் துவங்குவார். டக்கென்று ஆளுங்கட்சி ஏஜென்ட் டீலிங் பேசிவிடுவார். அரை மணி நேரம் மட்டும் கம்முனு இரு என்று 1,000 ரூபாய்களில் டீலிங் முடியும். சரசரவென இவர்களே கைநாட்டையும் வைத்துவிட்டு வாக்கும் குத்திப் பெட்டியை நிரப்பிவிடுவார்கள். டீலிங்கை ஏற்றுக்கொள்ளாத கொள்கைக்காரராக இருந்தால், சரி ஆளுக்கு 50 ஓட்டு என்றும் பேசப்படும். இதுவும் இல்லை, ரொம்ப நேர்மையான கொம்பனாக எதிர்கட்சி ஆள் இருக்கிறாரா, டேபிளைத் தூக்கிவிட்டு கலகம் செய்து ஓட்டுப்பதிவை ரெண்டு மணி நேரம் நிறுத்திவெச்சா போதும். ஓட்டுப்போடுகிற இடத்தில் கலவரமாம்ல என்று ஒரு பொம்பளையும் ஓட்டுப் போட வர மாட்டாங்க. அப்புறமென்ன... அந்த ஓட்டுகளும் இவங்களுக்குத்தான்.

ஹூம்... அது ஒரு காலம்!

- செந்தில்குமார்

அடுத்த கட்டுரைக்கு