Published:Updated:

பால் கலப்படம்: என்ன சொல்கிறார்கள் வல்லுனர்கள்?

பால் கலப்படம்: என்ன சொல்கிறார்கள் வல்லுனர்கள்?
பால் கலப்படம்: என்ன சொல்கிறார்கள் வல்லுனர்கள்?

பால் கலப்படம்: என்ன சொல்கிறார்கள் வல்லுனர்கள்?

மிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உலாவும் பால் கலப்படம் குறித்த செய்திகள் மக்கள் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கின்றன. எனவே பாக்கெட் பாலைப் பயன்படுத்தலாமா என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. உண்மையில் மாட்டில் இருந்து கறந்த பாலை அருந்துவதுதான் சிறந்தது என்கிறார்கள். பாக்கெட் பாலை வாங்கிய உடன் பயன்படுத்துவது நல்லது. நீண்ட நாள்கள் ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது.

வணிகத்துக்காகப் புகுத்தப்பட்டது...

பாக்கெட் பால் நல்லதா? அதை எப்படிப் பயன்படுத்துவது என்ற கேள்விக்கு இரண்டு சித்த மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டோம்.
முதலில் மருத்துவர் கு.சிவராமனிடம் பேசினோம். "அந்தந்தப் பாலூட்டிகளின் பால் அதன் குழந்தைகளுக்குத்தான். மாட்டின் பால் கன்றுக்குட்டிக்குத்தான். என்றைக்கு தொழில்நுட்பம், அறிவியலைப் பயன்படுத்தி பாலைப் பதப்படுத்தும் முறைகள் தோன்ற ஆரம்பித்ததோ, அன்றிலிருந்தே வணிகம் உள்ளே புகுந்து விட்டது. 1930-ல் இந்தியாவில் உணவியல் கொள்கைகள் வகுக்கப்பட்டபோது, பால் உற்பத்தியை அதிகரிக்க, அதன் நல்ல கூறுகளைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தினார்கள். பால் ஆரோக்கியமான உணவு என்ற மனநிலையை விதைத்து விட்டனர். இது வணிகத்துக்காகப் புகுத்தப்பட்ட விஷயம்தான். இதற்கு உணவியல் வல்லுனர்கள் அப்போதே எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மூன்று மணி நேரத்தில் கெட்டு விடும்

மாட்டில் இருந்து கறக்கப்பட்ட பால் 3 அல்லது 4 மணிநேரத்தில் கெட்டு விடும். மூன்று மணிநேரம் வரை பால் கெடாமல் இருப்பதற்கான பொருளும் இயற்கையிலேயே பாலில் கலந்து இருக்கிறது. ஆனால், இப்போது செயற்கை முறையில் பாலை அல்லது பால் பொருள்களின் இயல்பைப் பாதுகாக்கிறார்கள்.

பால் கலப்படம் என்பதை முதன் முதலில் பாலில் தண்ணீர் கலப்பதைத்தான் சொல்வார்கள். வணிகத்துக்காகப் பாலில் தண்ணீர் கலக்கின்றனர். இது காலச்சூழலில் வெயில் காலத்தில் பால் சீக்கிரம் கெட்டுப் போகிறது என்பதற்காக, பாலின் அமிலத் தன்மை நீக்க காரத் தன்மை உள்ள நியூட்ரலைசர்களைப் பயன்படுத்துகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் சார்பில் Codex Alimentarius என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உணவு மற்றும் விவசாயப் பொருள்களில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உணவு தர நிர்ணயத்தை வகுத்துள்ளது. அதன் படிதான் பால், பால் பொருள்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களில் தரத்தைப் பாதுகாக்க வேண்டும்.  

மிகப் பெரிய கலப்படம்

அந்தத் தர நிர்ணயத்தைத்தான் அனைத்து உலக நாடுகளும் பின்பற்றுகின்றன. ஆனால், அந்தத் தர நிர்ணயத்தைப் பின்பற்றாமல், பாலில் யூரியா கலப்பது, காஸ்டிக் சோடா கலப்பது என்று கலப்படம் செய்கிறார்கள். மிகப்பெரிய அளவில் பாலில் கலப்படம் நடக்கிறது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு விசாரணை நடந்த போது, ஒட்டு மொத்த இந்தியாவில் 68 சதவிகிதப் பால் கலப்படம் என்று தெரியவந்தது. இப்போது பால்வளத்துறை அமைச்சரே பாலில் கலப்படம் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

இந்த மாதிரி செய்தி வரும்போது, பால் எல்லோருக்கும் அவசியமான உணவுப் பொருள்தானா என்ற கேள்வி வருகிறது. இதில் சர்ச்சையும் இருக்கிறது. பால், தீர்மானமாக வேண்டும், வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. கலப்படம் இல்லாமல் பாலைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. மூன்று வயது வரை கூடுதல் சத்து உணவாக பாலை ஏற்றுக்கொள்ளலாம்.

நோயாளிகள், அறுவை சிகிச்சை முடிந்து திட உணவுகள் சேர்க்கக்கூடாது என்று சொல்லப்படுபவர்கள், கால்சியம் குறைவாக உள்ளவர்கள் கூடுதல் சத்து உணவாக பால் அருந்தலாம். மற்ற சமயத்தில் மோர் குடிக்கலாம். இதில், பாலை விட அதிக கால்சியம் இருக்கிறது. நல்லது செய்யும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. ஆரோக்கியமாக இருப்பவர்கள் பால் அருந்த வேண்டியதில்லை. மற்ற காய்கறிகள், கீரைகளில் இருக்கும் சத்துகளை விட பாலில் அதிகச் சத்துகள் இல்லை. பாக்கெட் பாலை, மூன்று நாள் வரை ப்ரிட்ஜில் வைத்திருந்து காய்ச்சி உபயோகிக்கின்றனர். இது உடலுக்கு நல்லதல்ல. பால் பாக்கெட்களை வாங்கிய 15 நிமிடங்களில் காய்ச்சிப் பயன்படுத்துவதுதான் நல்லது" என்றார் தெளிவாக.

பால் காய்ச்சும் முறை

இதுகுறித்து சித்தமருத்துவர் தெ. வேலாயுதத்திடம் கேட்டோம். "பசும்பால் எல்லோருக்கும் சிறந்தது இல்லை. குழந்தைகளுக்கும், நோயுற்றவர்களுக்கும்தான் பசும்பால் ஏற்ற உணவு. பசுமாட்டில் இருந்து அன்றன்றைக்குப் பால் கறந்து விற்பனை செய்யப்படுவதை மட்டுமே வாங்க வேண்டும். வாங்கிய உடனேயே பாலைக் காய்ச்ச வேண்டும். அரை லிட்டர் பால் என்றால், ஒன்றரை லிட்டர் அளவுக்குத் தண்ணீர் விட வேண்டும். மூன்று முறை அந்தப் பால்  பொங்க வைக்கப்பட வேண்டும். காலையில் வாங்கிய பாலை உடனே பயன்படுத்தி விடவேண்டும். மீதம் இருக்கும் பாலை மோர், தயிர் என்று மாற்றலாம். காலையில் வாங்கிய பாலை மீண்டும் மாலையில் பயன்படுத்தக் கூடாது. மாலையில் புதிதாகப் பால் வாங்க வேண்டும். குக்கரில் பால் காயக் கூடாது. குக்கர் அழுத்தமானது பாலில் உள்ள புரோட்டின், கொழுப்பு சத்துகளைச் சிதைத்து விடும். ஒரு பாத்திரத்தில் ஆவி போக பொங்க வைக்க வேண்டும். இந்த முறைப்படிதான் பாலைப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்குத்தான் பாலை செரிவிக்கக் கூடிய செரிமான நொதிகள் சுரப்பு அதிகளவு இருக்கின்றன. வயது, ஏற, ஏற இந்தச் சுரப்பு குறைந்து விடும். பெரியவர்கள் பால் குடிப்பது நல்லதல்ல.

பாதிக்கும் மேல் கெமிக்கல்

பாக்கெட் பாலில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே பால் இருக்கிறது. பாக்கெட் பாலில் பாதிக்கும் மேல் கெமிக்கல் இருக்கிறது. ஓர் உயிரினத்தில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் பாக்கெட் பாலில் புரோட்டின், கொழுப்பு போதுமான அளவுக்கு இருப்பதில்லை. பாக்கெட் பாலில் செயற்கையாக புரோட்டின், கொழுப்பு சேர்க்கின்றனர். பாலில் அதிகளவு இருக்கும் சத்துகளைச் செயற்கையாகக் குறைக்கவும் கூடாது. ஆனால், தொழிற்சாலையில் பாலில் அதிகமாக இருக்கும் சத்துகளைக் குறைக்கின்றனர். பதப்படுத்துகிறோம் என்ற பெயரில் செய்யப்படுபவை எல்லாமே இயற்கைக்கு விரோதமானதுதான். அப்படிச் செய்வதால் பாலின் இயல்புத் தன்மை குறைந்து விடும். கேடு விளைவிக்கக் கூடிய நஞ்சாக பால் மாறி விடும்.

பாக்கெட் பாலைத் தவிர்க்க முடியாது என்றபோதிலும், நாம் வாழ்க்கைச் சூழலை மாற்றிக்கொள்ள வேண்டும். பசுமாடுகளை வளர்க்கும் கோ சாலைகளை உருவாக்கவேண்டும். பால் பண்ணைகள் தொடங்குவதை ஊக்குவிக்க வேண்டும். பால் கூட்டுறவு சங்கங்களை உருவாக்க வேண்டும். கார்ப்பரேட் லெவலுக்குப் பால் விற்பனையைக் கொண்டு போகக்கூடாது. கோயில்களில் தலா பத்து பசுமாடுகள் வளர்க்கப்பட வேண்டும். பாக்கெட் பால் மக்களின் நலம், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தாது" என்றார் உறுதியுடன்.

அடுத்த கட்டுரைக்கு