Published:Updated:

தண்ணீர் இல்லையாம்... மூன்றாம் உலகப்போரின் காரணம் மாறிவிட்டது!

தண்ணீர் இல்லையாம்... மூன்றாம் உலகப்போரின் காரணம் மாறிவிட்டது!
தண்ணீர் இல்லையாம்... மூன்றாம் உலகப்போரின் காரணம் மாறிவிட்டது!

தண்ணீர் இல்லையாம்... மூன்றாம் உலகப்போரின் காரணம் மாறிவிட்டது!

'மூன்றாவது உலகப்போர் வரக்கூடாது' என்பதுதான் அமைதியை விரும்பும் பல நாடுகளின் விருப்பம். ஆனால் அமெரிக்கா-ரஷ்யா இடையேயான பனிப்போர் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப்போராக வெடிக்கலாம் என்றும், வடகொரியாவின் அணு ஆயுதச்சோதனைகளால் அதன் ஆதரவு மற்றும் எதிர்ப்பு நாடுகளுக்கிடையே உலகப்போர் ஏற்படலாம் என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. தண்ணீருக்காகத்தான் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் எனச் சொல்லப்பட்டுவந்தது. ஆனால் உலகில் தற்போது நடக்கும் விஷயங்களை வைத்துப்பார்த்தால், சைபர் அட்டாக்தான் மூன்றாம் உலகப்போர் ஏற்பட முக்கியமான காரணமாக இருக்கும் என டெக் வல்லுநர்கள் கருதுகின்றனர். இதை மெய்ப்பிப்பது போல் நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சமீபத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

உலகின் ஏதோவொரு மூலையிலிருந்து மற்றொரு பகுதியில் செயல்படும் கணினிகளை, இணையம் உள்ளிட்ட பல வழிகளில் தாக்கிச் செயலிழக்க வைப்பதன் பெயர்தான் சைபர் அட்டாக். தனிநபர் அல்லது குழு மூலம் நடைபெற்றுவந்த இத்தகைய தாக்குதல்கள், தற்போது அடுத்தகட்ட வடிவத்தைப் பெற்றிருக்கின்றன. எதிரி நாடுகளின் மீது பிற நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சைபர் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

கையடக்க மொபைலில் இருந்து ராணுவக் கட்டுப்பாட்டு மையங்கள் வரை அனைத்துமே இணையத்தில் பிணைக்கப்பட்டிருக்கின்றன. சைபர் அட்டாக் மூலம் எதிரிநாட்டின் ராணுவக் கட்டுப்பாட்டு மையத்தை மற்றொரு நாடு, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக வைத்துக்கொள்வோம். இந்த முடக்கத்தால், தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டு எதிரிநாட்டின் ராணுவத்துக்கு உரிய நேரத்தில் தகவல் கிடைக்காமல் போகலாம். எதிரிநாடானது கட்டுப்பாட்டை இழந்து நிலைகுலைந்திருக்கும் நேரத்தில், அதன்மீது ராணுவத் தாக்குதல் தொடுப்பது மிக எளிது. இதனால் ஒரு நாடு இன்னொரு நாட்டை மிக எளிதில் தோற்கடிக்க முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள். இதேபோல் சைபர் அட்டாக் செய்து எதிரிநாட்டுக்குப் பெருமளவில் பொருளாதாரச் சேதாரத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. கடந்த மாதம் நடந்த வான்னாக்ரை ரான்சம்வேர் தாக்குதல்தான் வரலாற்றியே மிகப்பெரிய சைபர் தாக்குதல். வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள்தான் இத்தாக்குதலுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டது நினைவிருக்கலாம்.

இதேபோலத் தற்போது உலகம் முழுவதும் பரவிவரும் பெட்யா ரான்சம்வேர் தாக்குதல் ரஷ்யாவில் இருந்து பரவியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலின்போதும் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. உக்ரைன் நாட்டில் சில தினங்களுக்கு முன் நடந்த சைபர் தாக்குதலிலும் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக நம்பப்படுகிறது. 'சைபர் அட்டாக் செய்யமுடியாதபடி கணினி நெட்வொர்க் பாதுகாப்பாக இருக்கிறது' எனச் சில நாடுகள் அவ்வப்போது தெரிவித்தாலும், சின்னதொரு பாதுகாப்புக் குறைபாடு வழியாக உள்நுழைந்து, ஆட்டம் காண வைக்கின்றனர் ஹேக்கர்கள்.

ஆஸ்திரேலியாவில் உலகின் முதல் ராணுவ சைபர் யூனிட் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்துவது தற்போதைய டாஸ்க் என்றாலும், எதிர்காலத்தில் எதிரிநாடுகளின் மீதும் இந்த யூனிட் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம். போரில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியமானவை. ஒன்று தாக்குதல்... மற்றொன்று எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்தல். எதிரிநாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதோடு, அவை தங்கள் நாட்டின் மீது சைபர் தாக்குதல் நடத்தாவண்ணம் தற்காப்பதும் இந்த யூனிட்டின் முக்கிய வேலையாக இருக்கப்போகிறது.

போரை நிறுத்துவதற்காக இரு நாடுகளுக்கிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதைப் பார்த்திருப்போம். சமீபத்தில் கனடா மற்றும் சீனா இடையே வேறு வகையான ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. தங்கள் இரு நாடுகளுக்கு இடையே சைபர் தாக்குதல் நடத்தமாட்டோம். வணிக நிறுவனங்களின் தகவல்களை ஹேக் செய்து திருடவோ அல்லது போட்டி நிறுவனங்களுக்குக் கசியவோ விடமாட்டோம் என்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்.  எதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும் என யோசித்தால், இதற்கு முன்னதாக இந்த இரு நாடுகளுக்கிடையே இப்படிப்பட்ட சைபர் தாக்குதல்கள் நடந்திருப்பதுதான் இந்த ஒப்பந்தத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

சைபர் அட்டாக் மூலம் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால், கீபோர்டுதான் முக்கிய ஆயுதமாக இருக்கப்போகிறது பாஸ்!

அடுத்த கட்டுரைக்கு