Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்

ழைய கதைகள்தான். பள்ளி காலத்தில் படித்த கதைகள்தான். பாராளுமன்றத் தேர்தலுக்கும் பொருந்தும். வேடன் விரித்த வலையில் இருந்து பறந்த பறவைகளும், மிரட்டிய சிங்கத்தைத் துரத்திய எருதுகளும் நமக்கு உணர்த்துவது என்ன? 'ஒற்றுமையே வலிமை’!

ஊழல் எனும் மாபெரும் விஷ விருட்சம் ஒன்று மக்களுக்கு இடையூறாக இருக்கிறது. அதை வீழ்த்த வேண்டும் என்றால், ஆளுக்கொரு திசையில் கயிற்றைக் கட்டி இழுத்தால் அது விருட்சத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. ஒருமித்த உணர்வுடன் அனைவரும் ஓர் அணியில் இணைந்து போராடினால் மட்டுமே, விருட்சத்தின் வீழ்ச்சி சாத்தியம். நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் சூழலும் அதே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாம் எல்லோரும் நல்லாட்சியை விரும்புகிறோம்; நமது அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்; சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் அனைத்தும் தரமானதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இவை, மக்களாட்சியின் ஆளுகையின் கீழ் வாழும் குடிமக்களின் இயல்பான ஆசைகள். ஆனால், எதுவும் நமக்கு அத்தனை எளிதாகக் கிடைப்பதே இல்லை. இந்தியத் துணைக்கண்டத்தில், குடிதண்ணீர் கேட்டு போராட்டம் நடக்காத ஒரே ஒரு நாளேனும் உண்டா? விவசாயிகளின் தற்கொலைச் செய்திகள் வெளிவராத நாள் ஏதேனும் உண்டா? இந்த அவலங்களை அன்றாட இயல்பு போல ஏற்றுக்கொள்ள நாம் பழகிவிட்டோம்.

தலையங்கம்

வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கவே வழியின்றி பரிதவிக்கிறோம். உள்ளூர் வளங்களை வகைதொகையின்றி பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பறிகொடுக்கிறோம். ஒரு நிறுவனம், 25 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக அண்மையில் செய்தி வெளியானது. இதுபோலவே இன்னொரு காப்பீட்டு நிறுவனம் 45 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாகச் செய்திகள். ஆனால், இந்தத் தொகைகள் நம்மைத் துணுக்குறச் செய்யவில்லை. 'இவ்வளவுதானா?’ என்று எளிதாகக் கடந்து செல்லும் மனநிலைக்கு வந்துவிட்டோம். இப்படி எண்ணி மாளாத தொகைகளில் ஊழல் செய்யும் இவர்கள்தான், கிராமத்தில் நாள் ஒன்றுக்கு 26 ரூபாய் சம்பாதிப்பவனும், நகரத்தில் நாள் ஒன்றுக்கு 32 ரூபாய் சம்பாதிப்பவனும் ஏழை இல்லை என்கிறார்கள். எத்தனை மோசடியான முரண்பாடு இது?

மிக சோர்வான ஒரு தருணத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். ஆனால், நீண்ட நேரமாகப் பேருந்துக்குக் காத்திருந்துவிட்டு கால்கள் தளர்ந்து அமரும்போது தூரத்தில் ஒரு வெளிச்சப்புள்ளி தெரிந்தால், நம்மை உற்சாகம் தொற்றிக்கொள்ளுமே... அப்படி வெளிச்சப்புள்ளியாக வருகிறது தேர்தல். இந்தப் புதிய பயணத்தில் நாம் ஏறி அமரவிருக்கும் வண்டியின் ஓட்டுநர் யார், நடத்துநர் யார் என்பதை நாமே முடிவு செய்யப்போகிறோம். ஆகவே, மிகவும் கவனமாக, சரியான நபர்களாக, அனுபவம் மிக்கவர்களாக, புதிய சவாலை ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாக அவர்கள் இருக்க வேண்டியது அவசியம்.

பேருந்து வந்துவிட்டது... வாருங்கள் புதிய பயணத்தைத் தொடங்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism