Published:Updated:

தாய்மார்களே... பெரியோர்களே..!

எஸ்.கோபாலகிருஷ்ணன், ச.ஜெ.ரவி, ஏ.ராம்படங்கள்: கே.குணசீலன், ரமேஷ் கந்தசாமி, ர.சதானந்த்

தாய்மார்களே... பெரியோர்களே..!

எஸ்.கோபாலகிருஷ்ணன், ச.ஜெ.ரவி, ஏ.ராம்படங்கள்: கே.குணசீலன், ரமேஷ் கந்தசாமி, ர.சதானந்த்

Published:Updated:
தாய்மார்களே... பெரியோர்களே..!

'மாதமோ சித்திரை...
மணியோ பத்தரை...
உங்கள் கண்களைத் தழுவுவதோ நித்திரை...
மறக்காமல் இடுவீர்

    உதயசூரியனில் முத்திரை!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- பத்தரை மணிக்கு, கட்டுக்கடங்காமல் காத்திருந்த கூட்டத்தை இந்த ஒரே எதுகை மோனையில் சமாளித்தார் பேரறிஞர் அண்ணா. அப்படி நேரம் காலம் பார்க்காமல் கட்டுமீறிய கூட்டங்கள் இப்போதைய தேர்தல் பிரசாரங் களில் அபூர்வமாகிவிட்டன. ஆனாலும், சளைக்காமல் களமாடி வருகிறார்கள் கட்சிகளின் பிரசாரப் பீரங்கிகள். அப்படியான சில பீரங்கிப் பாய்ச்சல்கள் இங்கே..!

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன..!?

'போட்டியிடுவாரா... மாட்டாரா?’, 'பிரசாரத் துக்கு வருவாரா... வர மாட்டாரா?’ என ஏகப்பட்ட ஹேஷ்யங்களுக்குப் பிறகு களம் இறங்கிய குஷ்பு, தினம் ஒரு தொகுதி வீதம் தமிழகத்தின் மத்திய மண்டலங்களில் பிரசாரத்தைத் தொடங்கி, மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பிரசாரம் செய்கிறார். தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் ஏனோ குஷ்புவின் பிரசாரம் திட்டமிடப் படவில்லை!

தாய்மார்களே... பெரியோர்களே..!

நீலகிரி தொகுதிப் பிரசாரத்தில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம்தான் பிரசார பாயின்ட். 'இரு இரு... குஷ்பு வர்றாங்களாம். பார்த்துட்டுப் போயிடலாம்!' என பேருந்து நிலையத்தில் கூட்டம் திமிறத் தொடங்க, போக்குவரத்து ஸ்தம்பித்தது.

டெம்போ டிராவலரின் மேற்கூரைத் திறப்பில் குஷ்புவைக் கண்டதும் உற்சாகத்தில் கட்டுமீறியது தொண்டர் படை. வேன் மீது ஏறி அவருக்குக் கை கொடுக்கப் பலர் முயல, பாதுகாப்புப் படையினர் பெரும் பிரயத்தனத்துடன் சமாளித்தனர். ''உங்க எல்லார்கிட்டயும் ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புறேன். தலைவர் முதலமைச்சரா இருந்தப்போ குடும்பத்தோட சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தோம். பொருளாதார ரீதியாவும் சரியா இருந்தது. மின்சாரம் ரெண்டு மணி நேரம் மட்டும்தான் கட் இருந்தது. எந்த நேரத்துக்குப் போகும்... எந்த நேரத்துக்கு வரும்னு தெரிஞ்சது. ஆனா, இப்போ அப்படியா இருக்கு!?'' என்று கலைஞர் புகழ் பாடியவர், ''நோக்கியா, ஹூண்டாய் மாதிரியான மல்ட்டிநேஷனல் கம்பெனிகள் தமிழ்நாட்டுல ஃபங்ஷன் பண்ணுதுன்னா, அதுக்குக் காரணம் தலைவரும் தளபதியும்தான்!'' என்று வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் 'தளபதி துதி’யும் சேர்த்துக்கொண்டார். குஷ்புவின் திக்கித்திணறும் தமிழ்ப் பேச்சுக்கு தொண்டர்களிடம் அத்தனை ஆரவாரம்!

தாய்மார்களே... பெரியோர்களே..!

''செல்போன் சேவையில் புரட்சி செஞ்ச ராசாவுக்கு மீண்டும் ஓட் போட்டு ஜெயிக்க வெக்கணும்!'' என்று பேசி முடித்து குஷ்பு கிளம்ப, 'அதுக்குள்ள முடிச்சுட்டீங்களே... இன்னும் கொஞ்ச நேரம் பேசுங்க. ரெண்டு மணி நேரமாக் காத்துட்டு இருக்கோம்ல' என கூச்சலிட்டு வாகனத்துக்கு வழிவிடாமல் தடுத்தனர். ''வெற்றி விழா கொண்டாட திரும்ப வருவேன். அப்போ நிறையப் பேசுறேன்!'' எனச் சொல்லி ஜகா வாங்கிவிட்டு ஈரோடு நோக்கி பறந்தார் குஷ்பு.

'கைச்சின்னமாம் கைச்சின்னமாம்!’

'தமிழக மக்கள், காங்கிரஸ் கட்சியை மறந்தாலும், மயிலாடுதுறை வாக்காளர்கள் தன்னை மறக்க மாட்டார்கள்’ என்ற நம்பிக்கையோடு, ஏழாவது முறையாகக் களத்தில் இருக்கிறார் மணிசங்கர் அய்யர். காலை 6 மணிக்கே பிரசாரத்துக்குத் தயாராகிவிடுகிறார். ஆனால், கட்சியினர் வாரிச் சுருட்டி எழுந்து வருவதற்குள் பொழுது பொலபொலவெனப் புலர்ந்து, வெயில் வாட்டத் தொடங்கிவிடுகிறது.

''நாலு மணி நேரம் லேட். வெயில் வேற வெளுக்குது. கட்சி ஆபீஸர்ஸ் யாரையும் காணோம். எதுக்கு வெட்டியாச் சுத்திட்டு இருக்கோம்னு தெரியலை!'' என்று விரக்தியில் புலம்பிக்கொண்டே பிரசார வாகனத்தில் ஏறுகிறார் மணிசங்கர். சந்து பொந்து, காடு மேடுகளில்கூட வாகனம் குலுங்கிக் குலுங்கி நகர, பின்னால் திரும்பிப் பார்க்கிறார் மணி சங்கர்.

''ஏன் டூவீலர்லாம் வரலை. இவ்வளவு பெரிய வண்டியே போகுது. இதுல பைக் வர முடியாதா? சாக்குபோக்குச் சொல்லாம டூவீலர்லயும் ஆளுங்களை வரச் சொல்லுங்க!'' என்று கட்சிக்காரர்களிடம் கடுகடுக்கிறார். திருக்காரச்சேரியில் ஒரே ஒரு பெண் தொண்டர் மட்டும் மணி சங்கர் அய்யரை வரவேற்க, ''வேற யாரும் வரலையாம்மா?'' என்று விசாரிக்கிறார். ''எல்லோரும் வேலைக்குப் போயிட்டாங்க ஐயா!'' என்று அந்தப் பெண் வெள்ளந்தியாகப் பதில் சொல்ல, ரியாக்ஷன் காட்டாமல் வண்டியில் ஏறிக்கொள்கிறார் மணி. வாகனம் சீறுகிறது!

தாய்மார்களே... பெரியோர்களே..!

'அங்கே ஏன் கூட்டமே இல்லை... இங்கே ஏன் ஒரு போஸ்டர்கூட இல்லை’ என்று வழிநெடுகக் கடுகடுத்துக்கொண்டே இருக்கும் மணி, ஒரு கட்டத்தில் நம்மைப் பார்த்து, ''இவங்களை வேற எதுக்கு நம்மளோட அழைச்சிட்டு வர்றீங்க. நம்ம மானத்தை வாங்கப்போறாங்க!'' என்று சத்தம் போடுகிறார்.

'கைச்சின்னமாம் கைச்சின்னமாம்... காந்தியடிகள் கண்ட கைச்சின்னமாம்... கர்மவீரர் காமராஜர் கண்ட சின்னமாம்!’ என்று கானா ஸ்டைலில் பாடல் ஒலிக்க தெருத்தெருவாக, வீதிவீதியாகச் சுற்றி வரும் மணிசங்கரின் பிரசார வாகனத்தை வேடிக்கை பார்க்கும் மயிலாடுதுறை மக்கள், தவறாமல் 'டாட்டா’ காண்பிக்கிறார்கள்!

'குஷ்புவைவிட கொஞ்சம் கலர் கம்மிதேங்!’

தி.மு.க-வுக்கு குஷ்பு என்றால், அ.தி.மு.க-வுக்கு விந்தியா. குஷ்பு எந்தத் தொகுதியில், எந்த இடத்தில் பேசிச் சென்றாரோ, மறுநாள் அதே தொகுதியில், அதே இடத்தில் மைக் பிடிக்கிறார் விந்தியா!

'தலைமைக் கழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் நடிகை விந்தியா, உங்களிடம் வாக்குகளைக் கேட்டு இப்போது பேசு வார்!’ என்ற பல மணி நேர பில்ட்- அப்களுக்குப் பிறகு பிரசார வாகனத்தில் ஏறுகிறார் விந்தியா. அவருடன் பிரசார வாகனத்தில் ஏற அ.தி.மு.க-வினரிடையே போட்டாப் போட்டி. 'சீனியர்களுக்கு முன்னுரிமை’ என்று வரிசை வைத்து அந்தப் பொன்னான வாய்ப்பு தரப்படுகிறது.

''நேத்துகூட இங்கே குஷ்பு வந்து ஆ.ராசாவுக்கு ஆதரவா பிரசாரம் பண்ணாங்களாமே! ஆ.ராசா யாரு..? ஜாமீன்ல வெளியே வந்திருக்கிறவரு. திகார் ஜெயில்ல இருந்தவரு. ஒரு கைதியை விட்டா தி.மு.க-வுக்கு வேற வேட்பாளரே கிடைக் கலையா? அப்படி ஒருத்தருக்கு ஓட்டுப் போடுங்கனு குஷ்பு சொல்றாங்க. நாட்டுல என்னங்க நடக்குது?

தாய்மார்களே... பெரியோர்களே..!

எங்க அம்மா, 'நாட்டு மக்களைக் காப்பாத்தணும்; ஓட்டுப் போடுங்க’னு கேட்கிறாங்க. ஆனா தி.மு.க-வோ, கனிமொழியைக் காப்பாத்தணும்; ராசாவைக் காப்பாத்தணும்னு ஓட்டுக் கேட்கிறாங்க. 'அம்மா வர்ற ஹெலிகாப்டரைப் பார்த்துக்கூட மக்கள் கும்பிடுறாங்களே’னு ஸ்டாலின் கேட்கிறாரு. அம்மா வர்ற ஹெலிகாப்டருக்குக்கூட மரியாதை பண்ற தொண்டர்கள் இருக்கும் கட்சி அ.தி.மு.க. அண்ணன் எப்ப போவான்... திண்ணை எப்ப காலியாகும்?னு காத்துட்டிருக்கிற கட்சி இல்லை!'' என, சகட்டுமேனிக்கு சகலரையும் காலி பண்ணுகிறார்.

விந்தியா பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், கலையும்போது 'குஷ்புவைவிட விந்தியா கொஞ்சம் கலர் கம்மிதேங்’ என்று கமென்ட் அடிக்கிறது கூட்டம்!

தாய்மார்களே... பெரியோர்களே..!

''பழனி, காங்கேயம்லாம் ஏறிக்க..!''

ஈரோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபி, தங்கபாலுவின் சீடர். தனது சீடருக்கு வாக்குச் சேகரிக்க தொகுதி எல்லையான நத்தக்காடையூர் கிராமத்துக்கு வந்தார் கே.வி.தங்கபாலு. மாலை 4 மணிக்குப் பிரசாரப் பயணம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட, 6 மணிக்கு சம்பவ ஸ்தலத்தில் சேர்ந்திருந்தது 35 பேர். அவர்கள் டீக்கடை முனையில் நின்றுகொண்டு 'அரசியல்’ பேசிக்கொண்டிருக்க, நிதானமாக வந்து சேர்ந்தார் தங்கபாலு. கூட்டத்தில் ஏழு பேர் அவருக்கு கதர்துண்டு சால்வை போர்த்த, பூரிப்புடன் பிரசார வாகனத்தில் ஏறி மைக் பிடித்தார். ஏரியாவில் சுமார் 100 பேர் ஆங்காங்கே சிதறி நின்றிருக்க, 'கூட்டத்தை’ப் பார்த்து அசந்தேவிட்டார். 'மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது’ என்ற ஜெயலலிதாவின் குற்றச் சாட்டை தங்கபாலு சீரியஸாக மறுத்து விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க, பழநிக்குச் செல்லும் ஒரு பேருந்தும், காங்கேயம் செல்லும் ஒரு பேருந்தும் வந்து நின்றன. அந்த இரண்டு பேருந்துகளும் கடந்து சென்ற பின், மாய மந்திரம் போல எதிரே இருந்த கூட்டத்தைக் காணோம்!

தொலைவில் சென்றுகொண்டிருந்த அந்த இரண்டு பேருந்துகளையும் தங்கபாலு பார்த்தாரே ஒரு பார்வை... அதுதான் 'கொலவெறி’!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism