Published:Updated:

அரசியல்வாதிகள் ஜோக் சொல்கிறார்கள்!

அரசியல்வாதிகள் ஜோக் சொல்கிறார்கள்!

அரசியல்வாதிகள் ஜோக் சொல்கிறார்கள்!

அரசியல்வாதிகள் ஜோக் சொல்கிறார்கள்!

Published:Updated:
அரசியல்வாதிகள் ஜோக் சொல்கிறார்கள்!

அரசியல் வி.ஐ.பி-களிடம் ஜோக்  கேட்டுப் பார்ப்போமா?

அமைச்சர் நாஞ்சில் மனோகரன்:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கல்லூரி ஜோக் ஒண்ணு சொல்லட்டுமா? அப்போ எனக்கு 23 வயசு இருக்கும். பச்சையப்பன் கல்லூரியில் படிச்சுட்டு இருந்தேன். அப்போ முழுக்கை சட்டை, வேஷ்டி கட்டிக்கிட்டு காலேஜுக்கு வர்றது மெட்ராஸ் ஃபேஷன். நான் கத்தையா மீசை வெச்சிருப்பேன். அப்போ காலேஜ் பிரின்ஸிபால் கிருஷ்ணமூர்த்தி!

பொதுவாவே நான் தூங்கியெழுந்து குளிச்சுட்டு, டிரெஸ் பண்ணி காலேஜ் போறத்துக்குள்ளே ஒரு பீரியட் முடிஞ்சிடும். காலேஜுக்குள்ள போறப்போ எதிரே பிரின்ஸிபால் வருவாரு. 'வாங்க, ஐயாவைத்தான் எதிர்பார்த்துட்டிருந்தேன்’ம்பார். என்னைப் பார்த்து. கிளாஸ்ல போரடிச்சா... கேன்டீ னுக்குப் போய் டீ சாப்பிட்டுத் திரும்பினா... பிரின்ஸிபால்னு பல சந்தர்ப்பங்கள்ல என்னை மூடு அவுட் பண்ணிட்டிருந்தார்.

அரசியல்வாதிகள் ஜோக் சொல்கிறார்கள்!

இவரை எப்படியாவது நோஸ் கட் பண்ணணும்னு ஐடியா செஞ்சேன். என் ஃப்ரெண்ட் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த் தியை, பிரின்ஸிபால் ரூம் வாசல்ல நிக்கவெச்சேன். உள்ளே இருந்து பிரின்ஸிபால் வர்ற சமயத்துல... 'டேய் கிருஷ்ணமூர்த்தி... வாடா இங்கே’னு உரக்கக் கத்தினேன். திடுக்கிட்டுப் பார்த்தார் பிரின்ஸிபால். 'அடடே... நான் உங்களைக் கூப்பிடலை சார். என் ஃப்ரெண்ட் கிருஷ்ணமூர்த்தியைக் கூப்பிட்டேன்’னேன். அவர் முகம் போன போக்கைப் பார்க்கணுமே!

அதுக்கப்புறம் பிரின்ஸிபால் என்னை ரூமுக்குக் கூப்பிட்டு, 'ஏம்ப்பா இப்படிக் கலாட்டா பண்ற? சமாதானமாப் போயிடுவோம்’னு சொல்லி டீ வாங்கிக் கொடுத்து தோஸ்த் ஆகிட்டார். அதுக்கப்புறம் எனக்கு ஏதாவது உடம்பு சரியில்லாமப் போனாக்கூட, நேரா ஹாஸ்டல் ரூமுக்கே வந்து பார்த்துட்டுப் போவார்.''

வாழப்பாடி ராமமூர்த்தி (இ.காங்கிரஸ்):

''என்னை வாய்விட்டுச் சிரிக்கவெச்சது திருக்குறள் முனுசாமி அடிச்ச ஒரு கமென்ட் தான். தி.மு.க-காரங்க பட்டிதொட்டிகளில் எல்லாம் அண்ணா சிலை வெச்சுட்டிருந்த காலகட்டம் அது. அதைக்

அரசியல்வாதிகள் ஜோக் சொல்கிறார்கள்!

கிண்டலடிக்கும் வகையில் திருக்குறளார் இப்படிச் சொன்னார்... 'சலவைக்காரர்கிட்டே புது வேஷ்டியைப் போடுறப்போ அதோட ஒரு மூலையில 'குறி’ போடுவாரு. பார்க்கிறதுக்கு அது அழகாவே இருக்கும். அதே குறியை வேஷ்டி பூரா போட்டா அசிங்கமாத் தெரியுமில்லையா? அதுமாதிரிதான் அண்ணா சிலையைப் பிரதான இடங்கள்லே மட்டும் தி.மு.க-காரங்க வெச்சா பார்க்கிறதுக்கு நல்லா இருக்கும். அதை விட்டுட்டு சந்துபொந்துல எல்லாம் அண்ணா சிலையை வெச்சா அது எவ்வளவு அசிங்கமா இருக்குது!''’

அப்துல் லத்தீப் (முஸ்லிம் லீக்):

''சட்டசபையில் அனைவரும் டென்ஷனாக இருக்கும் நேரத்தில் சட்டென்று ஒரு ஜோக் சொல்லி அனைவரையும் கொஞ்சம் 'ரிலாக்ஸ்’ பண்ணுவார் கலைஞர். உதாரணம் சொல்றேன்... அந்த நேரத்தில் கூவம் ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக ஜனங்க மத்தியில் ஒருவித பீதி நிலவியது. இதைச் சட்டசபையில் குறிப்பிட்டு, 'கூவத்துல முதலைகள் இருக்கா?’னு கேட்டேன். கலைஞர் எழுந்து பதில் சொன்னார், 'ஏற்கெனவே ஒரு கோடி 'முதலை’ப் போட்டுத்தான் கூவம் திட்டம்

அரசியல்வாதிகள் ஜோக் சொல்கிறார்கள்!

செயல்படுத்தப்படுகிறது’ என்று. சபையில் பலத்த சிரிப்பொலி!''

எஸ்.முத்துசாமி (அ.தி.மு.க.):

''எம்.ஜி.ஆர், பற்றிய ஜோக்... எம்.ஜி.ஆர் 'மிமிக்ரி’ பண்ணினா ரொம்ப சூப்பரா இருக்கும். தனக்கு வேண்டப்பட்டவங்களைக் கொஞ்சம் உரிமையோட கலாட்டா பண்ணுவார். நாவலர், எஸ்.டி.எஸ். மாதிரியெல்லாம் அடிக்கடி மிமிக்ரி பண்ணுவார்.

அரசியல்வாதிகள் ஜோக் சொல்கிறார்கள்!

இப்படித்தான் ஒருநாள் கோட்டையில் ஜாலி மூடில் இருந்தார். எஸ்.டி.எஸ். மாதிரி ரெண்டு கைகளையும் கட்டிக்கிட்டு, கொஞ்ச தூரம் நடையும், பிறகு ஓட்டமுமாகச் செய்து காட்டினார். அசல் எஸ்.டி.எஸ். நடக்கறாப்ல தத்ரூபமா இருந்தது. ரூம்ல இருந்த எல்லோரையும் வாய்விட்டுச் சிரிக்கவெச்சுட்டு அவர் பாட்டுக்கு அங்கே இருந்து கிளம்பிப் போயிட்டார்''.

ஆர்.எம்.வீரப்பன் :

''ஒருமுறை பெரியாரோட நான் சுற்றுப்பயணம் போயிருந்தப்போ பெரியகுளம் ஜமீன்தார், அழகான ஒரு நாயை பெரியாருக்கு அன்பளிப்பாக் கொடுத்தார். உடனே பெரியார், 'சுற்றுப்பயணம் முடியும் வரை நாயைப் பத்திரமா வெச்சிருந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டியது உன் பொறுப்பு’ என்று என் கையில் ஒப்படைத்தார்.

நிலக்கோட்டைக்குப் போகும் வழியில் இளைப்பாற பிரசார வேனை கொஞ்ச நேரம் நிறுத்தினோம். நான் கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்ததில் நாய் என் பிடியில் இருந்து தப்பி, அருகில் இருந்த காட்டுக்குள் ஓடிடுச்சு. 'ஐயையோ... ஐயா நாயைக் கேட்டால் என்ன சொல்வது?’ என்று கலங்கியபடி நாயைத் துரத்த ஆரம்பிச்சேன். பிரசாரக் குழுவினர் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்த்துட்டு, நான் வரவில்லைன்னதும் அடுத்த ஊருக்குப் போயிட்டாங்க. நான் மட்டும் தனியாகக் காடு, மேடுகளில் தேடி அலைஞ்சேன். நாய் கிடைக்கலை.

அரசியல்வாதிகள் ஜோக் சொல்கிறார்கள்!

பிறகு, மற்றவர்கள் என்னை வலுக்கட்டாயமாகக் கொண்டுபோய் பெரியார் முன்னால் நிறுத்திட்டாங்க. 'எங்கே போயிருந்த?’ என்றார் பெரியார். துக்கம் தொண்டையை அடைக்க, 'ஐயா... அந்த நாய் காணாமப்போச்சு. நான் தேடிக்கிட்டு...’ என்று சொல்லி முடிப்பதற்குள் 'இடிஇடி’யென்று சிரித்தார் பெரியார். 'முட்டாள்... முட்டாள்... அந்த நாய் ஒரு கிராமத்துக்குள் போயிருக்கு. அதை பிடிச்சு என் கையில் அப்பவே கொடுத்துட்டாங்க’ என்று சொன்ன பெரியார், 'பரவாயில்லையே ஒரு பொறுப்பைக் குடுத்தா பயபக்தியோட அதைக் காப்பாத்தற முயற்சி உன்கிட்டே இருக்கு’ என்று பாராட்டினார்.''

பெ.சீனிவாசன் (தி.மு.க):

''காமராஜர் என்கிட்ட அடிச்ச ஜோக் இது. அப்போ எனக்குக் கல்யாணம் நிச்சயமான நேரம். காமராஜரைக் கல்யாணத்துக்குக் கூப்பிடப் போயிருந்தேன். 'உண்மையைச் சொல்லு, உனக்கு இன்னுமா கல்யாணம் ஆகலை. சரி சரி... சீக்கிரமா கல்யாணத்தை முடி. என்னை மாதிரி இருந்துடாதே. நம்ம ஊர் ராசி அப்படிங்கறேன்’னார். (விருதுநகர் தான் என் சொந்த ஊர்.) கூட இருந்தவங்க எல்லாம் சிரிச்சுட்டாங்க.''

அரசியல்வாதிகள் ஜோக் சொல்கிறார்கள்!

பண்ருட்டி ராமச்சந்திரன் :

''அண்ணாமலை யுனிவர்சிட்டியில் படிச்சப்ப ஒரு தமாஷ். புரொஃபசர் மூர்த்தி ரொம்ப சீரியஸா வகுப்பு எடுத்துட்டிருந்தார். ஏதோ சிந்தனையோட உட்கார்ந்திருந்த ஒரு மாணவரைப் பார்த்தார். திடீர்னு அவர்கிட்ட ஒரு கேள்வி கேட்டார். இஞ்சி தின்ன குரங்காட்டம் அவன் விழிக்க, 'உலகத்திலேயே ஒரு முட்டாள் நான்தான்னு நினைச்சேன்... எனக்குத் துணையா இன்னொரு முட்டாள் இருக்கிறதை இப்பத்தான் கவனிச்சேன்’னு வெறுப்போடு சொன்னார். மாணவர்களுக்கு குபீரென்று சிரிப்பு கிளம்பியது!''

அரசியல்வாதிகள் ஜோக் சொல்கிறார்கள்!

மு.க.ஸ்டாலின்:

''அண்மையில் தலைவர் கலைஞர் பாண்டிச்சேரி போயிருந்தபோது, அவருடன் எப்போதும் இருக்கும் பணியாளரும் கூடவே போயிருந்தார். அங்கே இருவரும் ஒரே அறையில் தங்கினார்கள். அந்த அறையின் ஏ.ஸி. குளிர்ச்சி அந்தப் பணியாளருக்கு குளிர் ஜுரம் வர வைத்துவிட்டது. பற்கள் தந்தியடிக்க, கை, கால் எல்லாம் உதற... 'முருகா... முருகா...’ என ஜுர வேகத்தில் அவர் பிதற்ற ஆரம்பித்திருக்கிறார். பக்கத்திலேயே படுத்திருந்த தலைவர் திடுக்கிட்டு எழுந்து, 'நான் முருகா இல்லைப்பா... மு.க..!’ என்றாராம். உடல் நலம் பெற்று ஊர் திரும்பிய பிறகு, மற்றவர்களிடம் இதைச் சொல்லிச் சொல்லிச் சிரித்தார் அந்தப் பணியாளர்!''

பி.வி.ராஜேந்திரன் (இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ):

''மூப்பனாரைப் பத்தி ஒரு சம்பவத்தை நினைச்சா அடிக்கடி சிரிப்பு வரும். நடந்து முடிந்த தேர்தல் சமயத்தில் போடிநாயக்கனூர்ல பிரதமர் ராஜீவுக்கு ஒரு வீட்டில் மதிய விருந்து ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. அந்த வீட்டுக்குள்ளே ராஜீவ் நுழையறப்போ பயங்கர ஜன நெரிசல். கும்பலைத் தனி ஆளா நின்னு மூப்பனார் அப்புறப்படுத்திப் பார்த்தார். முடியலை. கோபத்துல அவர் பாட்டுக்குக் கும்பல்ல இருந்த ஒரு நபரை கன்னத்துல 'பளார்’னு அறைஞ்சிட்டார். அறை வாங்கினவரின் பல் பொளக்கென்று விழுந்துவிட்டது.  ராஜீவ் போன பிறகு உடைந்த பல்லைக் கையில் எடுத்துக்கொண்டு அந்த நபர் மூப்பனாரிடம் வந்தார். அவர் பெரியகுளம் தாலுகா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மகாதேவன். 'என்னை யாருமே அடிச்சது இல்லீங்க... நீங்கதான் முதன்முதல்ல...’ என்று சோகத்தோடு சொல்லி முடிப்பதற்குள், பதிலுக்கு மூப்பனார், 'நானும் யாரையும் கை நீட்டி அடிச்சது இல்லீங்க... உங்களைத்தான் முதன்முதல்ல...’ என்று (நிஜமாகவே) வருத்தத்தோடு சொன்னார். இதைப் பார்த்த எங்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அந்த அறை, மூப்பனாருக்கும் மகாதேவனுக்கும் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்பது வேறு விஷயம்.''

அரசியல்வாதிகள் ஜோக் சொல்கிறார்கள்!

அமைச்சர் பொன்முடி :

''புகழ்பெற்ற ஆங்கிலோ இந்தியன் ஜோக். ஒரு ஆங்கிலோ இந்தியன்கிட்ட ஒரு கிராமவாசி கோழி விக்கப்போனான். ஆங்கிலோ இந்தியன் பேரம் பேசினான். கிராமவாசி 'எவ்வளவுதான் கொடுப்பே?’னு கேட்டான். ஆங்கிலோ இந்திய சொன்னான் - 'Twenty’. கிராமத்தானுக்குப் பயங்கர கோபம் வந்திடுச்சு. 'யாரு கோழியைப் பார்த்து நொண்டிங்கறே..?’னு கேட்டான். 'Where are you living?’ என்று ஆங்கிலோ இந்தியன் கேட்க, 'வேற யாரோட கோழியும் இல்லை. என் கோழிதான்’னான். ஆங்கிலோ இந்தியன் 'get out’  அப்படின்னான். கிராமவாசி விழுந்து விழுந்து சிரிச்சுட்டு, 'பார்த்தா படிச்சவனாட்டம் இருக்கே... 'கட்’டை அவிழ்த்துவிட்டா கோழி ஓடிடும்யா’னு போயிட்டான்!''

இரா.செழியன் (ஜனதா தளம்) :

''ஒரு மத்திய மந்திரி இப்படிப் பேசினால் எப்படி இருக்கும்..?

'இந்தத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையைக் கண்டிக்கிறேன். ஒரு தவறு நடந்துவிட்டது உண்மையே! 10 லட்ச ரூபாயில் 100 வீடுகள் கட்டத் திட்டமிட்டு, 100 லட்ச ரூபாயில் 10 வீடுகளை அரசாங்கம் கட்டியது. அந்த வீடுகளும் மழையில் விழுந்துவிட்டன. மழை செய்த தவறுக்கு மந்திரிசபை பொறுப்பேற்க வேண்டுமா? தனக்கென்று ஒரு வீடுகூடக் கட்டிக்கொள்ளத் தெரியாத இந்தத் தணிக்கை அதிகாரி எங்கள் மீது குறை சொல்வதா?''’

ஜோக்கையும் சொல்லிவிட்டு செழியன் ஒரு கவிதையும் சொன்னார்:

''ஆனந்த விகடன் ஆசிரியரே...
பொதுமக்களின் ஏளனத்துக்கும்
பத்திரிகைகளின் நகைச்சுவைக்கும்
ஆளாகிவிட்டவன் அரசியல்வாதி!
அவனைப் பார்த்து 'நகைச்சுவை
தா’ என்று கேட்கலாமா?
சிரிப்புக்கு அவன் ஓர் ஓவியம்,
அவனே ஓர் ஓவியன் அல்ல!
சோக நாடகத்தில் ஒரு கதாநாயகன்,
நாடகக் கதையின் நாயகன் அல்ல!
ஆடும் பாவை, ஆட்டும் கரமல்ல!
மக்கள் செய்த தவறுகளுக்கு
அரசியல்வாதி ஒரு பிரதிநிதி!
ஏழையின் வாழ்வில்,
எழிலார் வையகத்தில்,
சிரிப்பைத் தர முடியாத
எங்களைப் பார்த்து
'வார ஏட்டில் நகைச்சுவை மூலமாவது
சிரிப்பைத் தா’ என்கிறீர்களா?
ஓரளவு முடியும்!
மற்றவர்களைச் சிரிக்கவைக்க
முடியாவிட்டாலும்,
எங்களைப் பார்த்து
நாங்களே சிரித்துக்கொள்வோம்!
'இடுக்கண் வருங்கால் நகுக’ என்றார்
அரசியல்வாதிக்கு இடுக்கண்
வருவதில்லை...
இடையறாது இருந்துகொண்டே இருக்கும்...
எனவே தடைபடாத நகைச்சுவை
எங்களுக்கு உண்டு!''

-ஆர்.பாலகிருஷ்ணன்