Published:Updated:

இது ‘வலிக்கிலியே’ ஐ.பி.எல்.!

தோட்டா ஜெகன், ஓவியங்கள்: கண்ணா

இது ‘வலிக்கிலியே’ ஐ.பி.எல்.!

தோட்டா ஜெகன், ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:

'இந்தியாவில் ஐ.பி.எல். காய்ச்சல் ஆரம்பம். அந்த ஐ.பி.எல். மைதானங்களிலும் அரசியல் கட்சிகள் காட்டத் துடிக்குது தங்கள் ஜம்பம்!’ - இதுதாங்க ஐடியா!

இது அரசியல் ஐ.பி.எல். அரை இறுதியில் 'கொலை இறுதி’யாக மோதுகிறார்கள் அறிவாலயம் அப்பாடக்கர்களும் கமலாலயம் கத்தரிக்கோல்களும். கத்தரிக்கோல் அணி, டாஸ் ஜெயித்து பௌலிங் எடுக்கிறது.

இது ‘வலிக்கிலியே’ ஐ.பி.எல்.!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலரிங் முடியும் கருஞ்சிவப்பு விழியுமாக அணியின் முதல் ஓவரை வீச வருகிறார் கேப்டன். அம்பயரை இடிச்சுக்கிட்டே கண்ணாடியைத் துடைச்சுக்கிட்டே கீப்பிங் செய்ய ஓடுகிறார் கீப்பர் இல.கணேசன். அம்பயராகத் தாடியாரும், லெக் அம்பயராக ராஜ்கிரணும்.

தாடியார்: ஹலோ மிஸ்டர்... நீங்க ஸ்பின் பௌலிங்கா... ஃபாஸ்ட் பௌலிங்கா?

கேப்டன்: யோவ் அம்பயரு, நீ மக்களை ஏமாத்தலாம். ஆனா, என்னைய ஏமாத்த முடியாது. நாங்க ஸ்பின் பௌலிங்கும் இல்ல, ஃபாஸ்ட் பௌலிங்கும் இல்ல. டாஸ் வின் பண்ணி ஃபர்ஸ்ட் பௌலிங்கு... ஆங்!

தாடியார்: அட மொத ஓவர் வேகமா வீசுவாங்க பொதுவா... ஆனா, நீ என்ன இப்போ வீசப்போறியா மெதுவா?

கேப்டன்: இந்தப் பூபதி மெதுவா வீசினாவே யாராலும் அடிக்க முடியாது. இதுல நான் வேகமாப் பந்து வீசுனா கீப்பர் கணேசனாலகூடக் தடுக்க முடியாது. பவுடர் பூசி சிரிச்சவன் இருக்கான்... இந்தப் பூபதி வீசி அடிச்சவன் இல்லே!

(மூக்கு முதல் முகத்தில் இருக்கும் அனைத்து உறுப்புகளிலும் வெறுப்பு நெருப்பாகப் பரவ... டென்ஷன் ஆகிறார் அம்பயர் தாடியார்.)

தாடியார்: பேன்ட் லூஸா இருந்தா, ஊக்கு மாட்டிக்கணும், பிறந்த நாள் வந்தா, கேக்கு ஊட்டிக்கணும், ராத்திரியானா, கதவை உள்ளே பூட்டிக்கணும், உங்க பேச்சை ஒரு மணி நேரம் கேட்டா, நான் தூக்கு மாட்டிக்கணும். நீ பந்தைக்கூட வெச்சுக்கய்யா வீசாம... ஆனா, கொஞ்சம் நேரம் சும்மா இருக்கியா பேசாம!

கேப்டன்: ஆனா ஒண்ணு... நான் அப்படி இப்படித்தான் பந்து போடுவேன். பந்து குத்துற இடத்துக்கு வந்து பேட்ஸ்மேனை அடிச்சுக்கச் சொல்லுங்க, ம்ம்ம்!

கேப்டன் முதல் பந்தை வீச, எதிர் முனையில் அறிவாலயம் அப்பாடக்கர்ஸுக்காக பேட் பிடிக்கிறார் 'அலைவரிசை’ ராசா. ரன்னர் எண்டில் டன் கணக்கில் ரோஸ் பவுடர் டின் வாங்கி அப்பிக்கொண்டு, ரன் அடிக்கக் காத்திருக்கிறார் அண்ணன் துரைமுருகன். முதல் பந்தையே ராசா பவுண்டரியை நோக்கி விளாச...

ராசா: அண்ணே... முருகண்ணே... ரன்னு ஓடுங்கண்ணே..!

துரை (ஓடிக்கொண்டே): நானும் பல வருஷமா அரசியல் கிரிக்கெட் ஆடுறேன் தம்பி. ஆனா, உன்னைய மாதிரி அலேக்கா அடிக்க முடியலப்பா.

ராசா: எதெண்ணே சொல்றீங்க?

துரை: அட, ரன்னைச் சொன்னேன்யா..!

இது ‘வலிக்கிலியே’ ஐ.பி.எல்.!

(அடுத்து பேட்டிங் எண்டில் துரை. வில்லன் கையைப் பிடிக்கிறதுக்கு முன்னரே கத்துற ஹீரோயின் போல, பந்து வர்றதுக்கு முன்னாடியே பேட்டைச் சுத்துறாரு துரை!)

ராசா: உங்களை யாருண்ணே இறக்கி விட்டது? டீம் ஜெயிக்கணும்னா ஹிட்-அவுட் ஆகி, கிரவுண்டைவிட்டு கெட்-அவுட் ஆகுங்க!

துரை: நான் எங்கேய்யா இறங்குனேன்? டான்ஸ் ஆடுற புள்ளையைப் பார்த்துக்கிட்டு இருந்தேன்... உள்ளாறத் தள்ளிவிட்டுட்டாங்க!

(துரை, கடைசிப் பந்தைத் தூக்கியடிக்க, பந்து விலைவாசியைப் போல வானத்தில் பறக்கிறது. 'அண்ணாந்து மேலே பார், அப் கி பார் மோதி சர்க்கார்’ எனக் கூவிக்கொண்டே தாவி பந்தைப் பிடிக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன். துரைமுருகன் வெளியேற, அம்பயரிடம் வருகிறார் கேப்டன்.)

கேப்டன்: யோவ் அம்பயரு... விக்கெட் போயிடுச்சுல்ல... டிரிங்க்ஸ் பிரேக் எப்போ?

தாடியார்: நீங்க போட்டிருக்கிறது ஆறு பாலு... இன்னமும் போடணும் நூறு பாலு! அடுத்த ஓவர் முடியட்டும் வாட்டர் கேன்ல ஊத்திக் கொடுக்கிறேன் சொன்னாக் கேளு... இப்போதைக்கு டோன்ட் ஃபீலு!

(அடுத்த ஓவர் பந்து வீச வருகிறார் காடு வெட்டி. அடுத்து பேட் பிடிக்க வருகிறார் ஆற்காடு வீராசாமி.)

ஆற்காடு: என்ன அம்பயர்... போன ஓவர் போட்ட அதே ஆளே இப்பவும் ஓவர் போடுறாரு? பிரதமர் ஆபீஸுக்குக் கடிதம் எழுதணுமா... ஜனாதிபதிக்கு ஃபேக்ஸ் அடிக்கணுமா?

ராசா: அண்ணே... அவரு வேற; இவரு வேற! உரல்ல இடிச்சு விரல்ல புடிச்ச எள்ளுருண்டை கணக்காத்தான் ரெண்டு பேருமே இருப்பாங்க. ஆனா, அவரு கடுப்பு எம்.ஜி.ஆரு... இவரு முறைப்பு எம்.ஜி.ஆரு!

ஆற்காடு: அப்ப பின்னால கீப்பிங் நிக்கிற கணேசன் என்ன தடுப்பு எம்.ஜி.ஆரா? ரோட்டுல ஓடுற காருங்களவிட நாட்டுல இந்த எம்.ஜி.ஆருங்க அதிகமாயிட்டாங்கப்பா!

காடுவெட்டி விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என ஓடிவந்து பந்துகளை சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என எறிய, டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என சவுண்ட் விடும் மீன்பாடி வண்டி ஒன்று மைதானத்துக்குள் ஒரு ரவுண்டு வருது. புதிதாக வாங்கிய பேட், பால், பேட்களுடன் இறங்குகிறார்கள் தா.பாண்டியனும், ராமகிருஷ்ணனும்...

தா.பா: அம்பயர் சார்... நாங்களும் மேட்ச் விளையாடுவோம்!

தாடியார்: பச்ச கலரு செவப்பு கலர் ஒயர் இருந்தாதான் அது பாமு... 11 பேரு இருந்தாதான் அது டீமு. உங்ககிட்ட 11 பேரு இருக்காங்களா மாமூ?

தா.பா: அத்தனை பேருக்கு நாங்க எங்க போக? அப்ப எங்களால ஆட முடியாதா?

தாடியார்: ஆடணும்னு ஆசைப்பட்டு அரைபாடி வண்டில வந்துட்டீங்க. சரி... முட்டிக்கு மேல வேட்டியை உருட்டிவிடுங்க. வயித்துக்கு மேல சட்டையைச் சுருட்டிவிடுங்க. அப்படியே அந்த மேடையில போயி சியர்லீடர்ஸா சிக்ஸும் ஃபோரும் அடிச்சா 'கிலிகிலியே’னு ஆடிட்டுப் போயிடுங்க!

தா.பா: என்ன சொல்றீங்க தோழர்? 'கிலிகிலியே’னு ஆடிடலாமா?

ராமகிருஷ்ணன்: 'கிலிகிலியே’னு வேணாம் தோழர். தனித்து விளையாடுறோம்னு வீராப்பா வந்துட்டோம். அதனால, 'வலிக்கிலியே, வலிக்கிலியே’னு ஆடிருவோம்!

இது ‘வலிக்கிலியே’ ஐ.பி.எல்.!

காடுவெட்டி அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்த, அறிவாலயம் அணியின் கேப்டன் ஸ்டாலின் புயலெனப் புகுந்து பவுண்டரிகளாக விரட்ட, அவர் அண்ணன் அழகிரியோ 'அறிவாலயம் டீம் தோற்கும்’ என வெளியே புளியமரத்தடியில் பெட்டிங் பந்தயம் நடத்துகிறார்.

திருமாவளவனும் தமிழருவி மணியனும் அவரவர் டீமுக்குத் தண்ணீர் கொண்டுவரும் கேப்பில், 'ஜிங்குன மணி ஜிங்குன மணி நெஞ்சுல ஆணி...’ எனப் பாடிக்கொண்டே சைக்கிள் மணி கலகலக்க வருகிறார்கள், தமிழக அரசியலின் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர். அவுங்க நேரம், நேரா லெக் அம்பயர் 'மாயாண்டி’ ராஜ்கிரண்கிட்ட மாட்டிக்கிறாங்க.

ராஜ்கிரண்: ஏய், மொத்த கிரவுண்டையே ஒத்த ஆளா காவல் காத்துக்கிட்டு இருக்கேன். என் கண்ணுல மண்ணைத் தூவிட்டு மேட்ச் பார்க்கப் போறீங்களா? குறுக்குல சாத்திடுவேன். மாயாண்டி காவல் இருந்தா, காலையில சேவல்கூடக் கூவாது!

ஞானதேசிகன்: இல்லண்ணே... இங்கே மேட்ச் நடக்குதுனு சொன்னாங்க. அதான் நாங்களும் விளையாடலாம்னு...

ராஜ்கிரண்: ஏ அணப்பாளையம் மாப்ளைங்களா... மொத்தம் எத்தனை டீமு?

தங்கபாலு: நாங்க எல்லோரும் ஒரே டீம்ணே. ஆனா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டீமு!

தாடியார்: எம்.ஜி.ஆருக்கு பல படத்துல

பேரு ராமு, சூப்பராச் சொன்ன மாமு!

இப்படியே ஆத்தங்கரை ஓரமாப் போனாக்கா டோலாக்பூர் வரும். அங்க இருப்பாரு சோட்டா பீமு, அவராண்ட போயி விளையாடு கேமு!

ராஜ்கிரண்: தக்காளி... தாயி சோலையம்மாவோட சேலையைத் துவைக்கிற வேலையை விட்டுட்டு காவல் காத்துக்கிட்டு இருக்கேன். லந்தா விடுற... கொரவளையக் கடிச்சுடுவேன். எதுக்குய்யா கிரிக்கெட் விளையாடுறீங்க?

ப.சிதம்பரம்: இந்தத் தடவை தனித்து கிரிக்கெட் விளையாடி கவாஸ்கர் ஆட்சி அமைப்போம் ராஜ்கிரண் சார்!

ராஜ்கிரண்: அட... இத்தனை நாளா காமராஜர் ஆட்சி அமைப்போம்னு ஏமாத்திட்டு, இப்போ கவாஸ்கர் ஆட்சி, கபில்தேவ் ஆட்சினு கந்தரகோலம் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா? கொன்னேபுடுவேன்..!

ஞானதேசிகன் (மைண்ட் வாய்ஸ்): நல்லவேளை ராஜ்கிரண் அண்ணே சைலன்ட் மூடுல இருக்காரு... அதனால குட் வேர்ட்ஸாப் பேசறாரு. இதுவே சரக்கு மூடுல இருந்தாருன்னா, காதுக்குள்ள தார் பாய்ச்சிருப்பாரு!

ராஜ்கிரண்: ஆமா பங்காளி... கிரிக்கெட் விளையாடுறேன்னு வந்துட்டு, பேட்டு பால் எல்லாம் காணோம்!

இது ‘வலிக்கிலியே’ ஐ.பி.எல்.!

நாராயணசாமி: அது வந்துண்ணே... வழக்கமா தி.மு.க., அ.தி.மு.க. டீம் பேட்டு பாலை ஓசி வாங்கியே நாங்க விளையாடிடுவோமா... பத்தாக்குறைக்கு ரன்னு ஓடக்கூட அவங்களை பை-ரன்னரா வெச்சே ஓடித்தான் பழக்கம். இப்பத்தான் முதன்முறையா தனியா மேட்ச் விளையாட வர்றோம். எப்படியும் டெல்லியில இருந்து 15 நாள்ல பேட்டு, பாலு, கிட்னி கார்டு எல்லாம் வந்திடும்!

ராஜ்கிரண்: டெல்லில இருந்த 15 நாள்ல எல்லாம் வந்திரும் சரி... தக்காளி, அந்த 15-வது நாள் எப்ப வரும்?

வெயில் கிறுகிறுத்தாலும் மேட்ச் விறுவிறுப்பாகச் செல்ல, 'அறிவாலயம் அணியின் கோஹ்லியே, அணியின் கழுத்தில் தாலியே’ என பொன்முடி ஃப்ளெக்ஸ் பேனர் அடிக்க, கே.என்.நேரு கோஷ்டியோ 'அறிவாலயம் அணியின் அணியின் ரெய்னாவே, உனக்கு ஆட சொல்லிக்கொடுத்தது உன் நைனாவே’ என போட்டி பேனர் அடிக்க, பந்துகளை விளாசி, ரன் எண்ணிக்கையை 176-க்கு உயர்த்துகிறார் ஸ்டாலின்.

செகண்ட் பேட்டிங் பிடிக்க, கத்தரிக்கோல் அணிக்காக கேப்டனும் பொன்.ராதாவும் வருகிறார்கள். பொன்.ராதாவுக்கு எடுக்கலே செல்ஃபு... இல.கணேசனுக்கு ஃபர்ஸ்ட் பாலே பல்பு... வைகோ நடந்துபோயி ரன் அவுட்டு... அன்புமணி மொத பாலே டக் அவுட்டு... காலை தூக்கியே அடித்துப் பழக்கப்பட்ட கேப்டன் அந்த அனுபவத்தில் இங்கு பாலைத் தூக்கி அடிக்க, பவுண்டரிகள் பறக்கின்றன.  அறிவாலயம் அணி நெஞ்சங்களோ தவிக்கின்றன. ஒட்டுமொத்த டீமும் 10 ரன் அடிப்பதற்குள் கேப்டன் மட்டும் ஒரே ஆளா 100 ரன்கள் விளாசுகிறார். கடைசி ஆறு பாலுக்கு ஆறு ரன்கள் தேவைப்படும் நேரத்தில் கடைசி விக்கெட்டுக்கு களம் இறங்குகிறார் ராமதாஸ்.

கேப்டன் ரன்னுக்குக் கூப்பிடும்போதெல்லாம் வானத்தை வெறிச்சுப் பார்த்து வெறுப்பேத்துறார் டாக்டரய்யா. ஒரு பாலுக்கு சிக்ஸ் அடிக்க வேண்டிய சூழ்நிலையில் கூடைக்குள் ஒளிஞ்சுக்கிட்டு அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தூஸ்ரா... தூஸ்ரா... எனக் கத்த, கேப்டன் 'ஏய் என்னடா தூஸ்ரா, ஆம்பளையா இருந்தா நேருல வந்து பேசுறா!’ என டென்ஷனாகி கிரீஸைவிட்டு வெளியே வர, எக்குத்தப்பான பந்து போட்டு கேப்டனை ஸ்டம்பிங் செய்கிறார் எ.வ.வேலு. 'அம்மா அடிமைகள்’ டீமுடன் ஃபைனல் விளையாடத் தகுதி பெறுகிறது அறிவாலயம் அப்பாடக்கர்ஸ் அணி!

தே சமயம் அடுத்து நடக்கவிருக்கும் ஃபைனல்ஸுக்காக பிரஸ்மீட்டில் 'மான் கராத்தே’ போஸில் சீன் போட்டுக்கொண்டிருக்கிறது அம்மா அடிமைகள் டீம். அந்த அணியின் வைஸ் கேப்டன் பன்னீர்செல்வத்திடம் கேள்விகளைத் தொடுக்கிறார்கள் நிருபர்கள்.

நிருபர்: சார்... சப்போஸ் நீங்க தோத்துட்டா உங்க டீம்ல மாற்றம் வருமா?

பன்னீர்: நாங்க ஜெயிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாத் தோற்க மாட்டோம். தோற்கிற மாதிரி இருந்தா, நத்தம் அண்ணனுக்கு மிஸ்டுகால் கொடுத்தா, ஸ்டேடியத்துல கரன்டைப் புடுங்கிவிட்ருவாரு. நாங்க இருட்டுல நடந்து பைபாஸ் ரோட்டைப் பிடிச்சு வீட்டுக்குப் போயிருவோம்.

இது ‘வலிக்கிலியே’ ஐ.பி.எல்.!

பெண் நிருபர்: சார்... இந்தத் தடவை நீங்க கேரம் பால் போடுவீங்களா?

பன்னீர்: இல்லம்மா, நான் ஒரு ஓரமாத்தான் பால் போடுவேன்..!

நிருபர்: சார்... தரையோட தரையா டைவ் அடிச்சு ஃபீல்டிங் பண்றதுல உங்க டீமை அசைக்க முடியலை... எப்படி?

பன்னீர்: கால்ல விழுந்து விழுந்து நாங்க செஞ்ச பயிற்சிதான், இப்ப எங்க பால் போனாலும் தாண்டி விழவைக்குது!

நிருபர்: உங்க கேப்டன் அம்மா இந்தத் தடவை ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பாங்களா?

பன்னீர்: அது தெரியலை.. ஆனா, இனி எல்லா மேட்ச்சுமே ஹெலிகாப்டர்ல வந்துதான் ஷாட் அடிப்பாங்க!  

என்று பன்னீர் சொல்ல, மொத்த டீமும் வானத்தை நோக்கி அண்ணாந்து கும்பிட, இடத்தைக் காலி செய்கிறது நிருபர் குழாம்!