Published:Updated:

கணிப்புக் கில்லாடிகள் சொல்லும் ரிசல்ட்!

ஜோ.ஸ்டாலின், ச.ஜெ.ரவி, எஸ்.மகேஷ் படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ், ரமேஷ் கந்தசமி, ப.சரவணக்குமார்

கணிப்புக் கில்லாடிகள் சொல்லும் ரிசல்ட்!

ஜோ.ஸ்டாலின், ச.ஜெ.ரவி, எஸ்.மகேஷ் படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ், ரமேஷ் கந்தசமி, ப.சரவணக்குமார்

Published:Updated:
கணிப்புக் கில்லாடிகள் சொல்லும் ரிசல்ட்!

தேர்தல் வெற்றி - தோல்விகளைக் கணிப்பதில் விகடன் வாசகர்கள் கில்லாடிகள்! ஒவ்வொரு தேர்தல் முடிவுகளையும் வாக்குப்பதிவுக்கு முன்னரே கச்சிதமாகக் கணித்துவிடுவார்கள். நாட்டில் எந்த அலையடித்தாலும், அனுதாப மழை பொழிந்தாலும் 'கள நிலவரம்’ கணிப்பதில் விகடன் வாசகர்கள் எப்பவுமே கிங். அப்படி, கடந்த தேர்தல்களில் 'க.க.க.போ’-வாகக் கலக்கிய வாசகர்கள் சிலரின், எதிர்வரும் தேர்தலுக்கான கணிப்புகள் என்ன?

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் போட்டியில் முதல் பரிசு வென்றவர் திருவள்ளூர் மாவட்டம் புங்காத்தூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி. அப்போது ப்ளஸ் ஒன் மாணவியான இவர், இப்போது நர்சிங் படிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் அப்பா விகடன் குழுமத்தின் அத்தனை இதழ்களுக்கும் 22 ஆண்டு கால வாசகர். சாப்பிடாமக்கூட இருந்துடுவார். ஆனா, விகடன் படிக்காமல் அவரால் இருக்க முடியாது. அந்தப் பழக்கம் அப்படியே எனக்கும் தொத்திக்கிச்சு. நான் தினமும் அரசியல் டிரெண்டை அப்டேட் பண்ணிக்கிட்டே இருப்பேன்'' என்றவர் தேர்தல் முடிவுகளைக் கணிக்கச் சொல்லிக் கேட்டதும் மனதில் கணக்குகளைப் போட்டுக்கொண்டே பேசத் தொடங்கினார்.

''இந்தத் தடவை தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. - 8, தி.மு.க. - 8, தே.மு.தி.க. - 8, பா.ஜ.க. - 6, ம.தி.மு.க. - 3, பா.ம.க. - 3 தொகுதிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் புதிய நீதிக் கட்சியும் தலா ஒரு தொகுதியும் ஜெயிக்கலாம். மீதம் இருக்கிற ரெண்டு இடங்கள் மத்தக் கட்சிகளுக்கு.

கணிப்புக் கில்லாடிகள் சொல்லும் ரிசல்ட்!

தனித்துப் போட்டி போடுறதால், அ.தி.மு.க. 10 தொகுதிகளைத் தாண்டுறதைப் பத்தி நினைச்சுப் பார்க்க முடியாது. தி.மு.க-வுக்கும் கிட்டத்தட்ட அதே பிரச்னைதான். கூடுதலா உள்கட்சிப் பூசல் வேற. மோடி அலை வீசுவதால் பா.ஜ.க. கூட்டணி, தமிழ்நாட்டில் குறைஞ்சது 20 இடங்களையாவது பிடிக்கும். இந்தியா முழுக்கப் பார்த்தாலும் மோடிக்கு ஓட்டுகள் குவியும். அதனால் அடுத்த பிரதமர் மோடிதான்!'' என்று அடித்துச் சொல்கிறார் ஜெயலட்சுமி.

''எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டோம்.

''தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டால், மாணவர்கள் சரியாகப் படிக்க முடியலை. வீட்ல சமையல் வேலைகூட பண்ண முடியலை. எல்லாப் பொருள்களின் விலையும் ஏறிடுச்சு. நடுத்தர மக்களின் இந்த மனநிலை நிச்சயம் வாக்குச்சாவடியில் பிரதிபலிக்கும். அது நிச்சயம் அ.தி.மு.க-வுக்கு மைனஸ்தான். ஓட்டுப் போட பணம் வாங்குறவங்ககூட கடைசி நிமிஷம் யோசிச்சா, மின்வெட்டுப் பிரச்னைதான் மனசுல நிழலாடும். இந்த வெயில்ல ஃபேன்கூட இல்லாமக் கஷ்டப்படுறது கொடுமையான விஷயம். ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் மின்சாரம் இருந்தாலே பெரிய விஷயமா இருக்கு!'' என்று படபடவென ஜெயலட்சுமி பேசிக்கொண்டிருக்கும்போதே... கரன்ட் கட்!

2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் கணிப்பில் மூன்றாவது இடம் பிடித்த ஏ.எல்.நாகப்பன், ''இந்தத் தேர்தலில் கட்சிகளின் வெற்றி- தோல்விகளை நிர்ணயிக்கப்போவது மோடி அலையோ, மின்வெட்டுப் பிரச்னையோ அல்ல; புதிய வாக்காளர்களாக இணைந்துள்ள ஒன்றரைக் கோடி பேர்தான்'' என்கிறார்.

''விஜயகாந்த் வாக்குகளைப் பிரிச்ச மாதிரி அந்த ஒன்றரைக் கோடி வாக்குகள் நிச்சயம் வெற்றியாளரைத் தீர்மானிக்கும். தமிழ்நாட்டில் எந்தக் கூட்டணியும் அதிகபட்சம் 20 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்க வாய்ப்பு இல்லை.

அ.தி.மு.க-வுக்கு அவங்க வாக்கு வங்கி மட்டும்தான் ஒரே பலம். அதை வெச்சு அதிகபட்சமா 10 முதல் 15 தொகுதிகளைப் பிடிக்கலாம். 'ஆளுங்கட்சி வெறுப்பு’ வாக்குகள் அ.தி.மு.க-கிட்ட இருந்து பிரிந்துதான் எதிர் அணிக்குப் போகுமே தவிர, எதிர் அணி வெறுப்பு வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு வரவே வராது. மின்வெட்டுப் பிரச்னை, நிச்சயம் நகர்ப்புறங்களில் அ.தி.மு.க. வெற்றியைக் கணிசமாப் பாதிக்கும். ஆனா, கிராமப்புறங்கள்ல பெரிய பாதிப்பு இருக்காது. ஏன்னா, அதுக்குப் பழகியிருப்பாங்க!

கணிப்புக் கில்லாடிகள் சொல்லும் ரிசல்ட்!

தி.மு.க. எப்படியும் 10 முதல் 15 தொகுதிகள் ஜெயிச்சுடுவாங்க. ஃபீல்டு வொர்க்ல அவங்கதான் கெட்டி. வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன், அன்புமணி எப்படியும் ஜெயிச்சுடுவாங்க. அதனால் பா.ஜ.க. கூட்டணி குறைஞ்சது 10 தொகுதிகள்ல ஜெயிச்சிரும். அதுவும் கூட்டணிக் கட்சிகளின் பலம் காரணமாத்தான். ஏன்னா, 'மோடி அலை’ எல்லாம் சென்னை, கோவை, மதுரை போன்ற நகர்ப்புறங்களில் ஒரு செய்தியாத் தெரியுமே தவிர, வாக்காளர் மனநிலையைப் பாதிச்சதா தெரியலை. கிராமப்புறங்களில் அந்தச் செய்தியும்கூட பெருசாப் பரவலை!

ஸ்டார் வேட்பாளர்களில் வைகோ, அன்புமணி, பொன்.ராதாகிருஷ்ணன், தயாநிதி மாறன்... எல்லாம் ஜெயிச்சிருவாங்க. சுதீஷ§க்கு வெற்றி வாய்ப்பு குறைவு. கடைசி நிமிஷத்துலதான் சொல்ல முடியும். அப்புறம் யார் ஜெயிச்சாலும் தோத்தாலும் ஜெகத்ரட்சகன் நிச்சயம் ஜெயிப்பார். ஏன்னா, கட்சி, அரசியல் பிரிவினைகள் தாண்டி அவர் அந்தத் தொகுதி மக்களோடு நெருக்கமா இருக்கார். 'ஆம் ஆத்மி’-க்கு கன்னியாகுமரியில் சுப.உதயகுமாரன் கொஞ்சம் மதிப்பான வாக்கு வாங்கிக் கொடுப்பார். காங்கிரஸுக்கு இந்தத் தடவை தமிழகத்தில் ஸீரோதான். டெபாசிட்டே பல இடங்களில் கஷ்டம்தான். ஆக, கூட்டிக் கழிச்சுப் பார்த்தா என் கணக்கு இதுதான்... அ.தி.மு.க. - 13, தி.மு.க. - 13, பி.ஜே.பி. - 13, ஆம் ஆத்மி, காங்கிரஸ், இடதுசாரிகள் இதுல யாராச்சு ஒருத்தர் மிச்ச ஒரு தொகுதியை ஜெயிப்பாங்க!''

டந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் போட்டியில், ''மத்தியில் எந்தக் கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் ஜெயிக்கும். வைகோ, தா.பாண்டியன் வெற்றி பெற வாய்ப்பு இல்லை'' என மிகச் சரியாகக் கணித்து இரண்டாம் பரிசு பெற்றவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த நாகராஜ். அப்போது தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி - 27, அ.தி.மு.க. கூட்டணி - 13 இடங்களைக் கைப்பற்றும் எனக் கிட்டத்தட்ட நிஜ நிலவரத்தைக் கணித்தவர் நாகராஜ். (கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி - 28, அ.தி.மு.க. கூட்டணி  - 12 இடங்களிலும் வென்றன!)

2014-ம் வருடத் தேர்தலுக்கான நாகராஜின் கணிப்பு என்ன?

''போன தடவை மாதிரி இப்பவும் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. ஒட்டுமொத்தமா பா.ஜ.க-வுக்கு 200, காங்கிரஸுக்கு 100 சீட் கிடைக்கும். மத்தபடி தமிழ்நாட்டுல எந்த அலையும் அடிக்காது. ஆளுங்கட்சி பலத்தோட அ.தி.மு.க-தான் ஸ்வீப் அடிக்கும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. - 30, தி.மு.க. - 9 தொகுதிகள்ல ஜெயிக்கும். பா.ஜ.க. கூட்டணிக்கு ஒண்ணுதான். அது கன்னியாகுமரி!'' எனத் தீர்க்கமாகச் சொல்கிறார்.

வி.ஐ.பி. வேட்பாளர்கள் பற்றிக் கேட்டதும், ''தொல்.திருமாவளவன், பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும்தான் ஜெயிப்பாங்க. ஆ.ராசா, தயாநிதி மாறன், வைகோ, தம்பிதுரை, சுப.உதயகுமாரன், அன்புமணி, இல.கணேசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்... இவங்கள்லாம் ஜெயிக்க வாய்ப்பே இல்லை!'' என்றார்.

''எப்படி இவ்வளவு உறுதியாச் சொல்றீங்க?'' என்று கேட்டால், ''பப்ளிக் பல்ஸ் பப்ளிக்குக்குத் தெரியாம இருக்குமா?'' என்று சிரிக்கிறார் நாகராஜ்.

கணிப்புக் கில்லாடிகள் சொல்லும் ரிசல்ட்!

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கணிப்பில் மூன்றாவது பரிசு வென்றவர் தாராபுரம் அருகே பெரியாத்து கள்ளிவலசு பகுதியைச் சேர்ந்த கௌசல்யா. அவரிடம் கணிப்புக் குறித்து கேட்டதும், ''என் கணவர் டெய்லி பேப்பர், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன்னு எல்லாமே படிப்பார். படிச்சுட்டு அது பத்தி அவர் பேசுறதைக் கேட்டாலே, நமக்கு எல்லாத் தொகுதி நிலவரமும் தெரிஞ்சுடும். எங்க குடும்பத்துல அரட்டை அடிக்கிறப்பகூட அரசியல் பத்திதான் பேசுவோம்!'' என்றவர் தனது கணவர் தங்கவேலுவிடம் சின்ன ஆலோசனை மேற்கொண்டு கணிப்புகள் பற்றி நம்மிடம் பேசினார்.

''இந்தத் தேர்தல்ல நிச்சயம் மெஜாரிட்டி கிடைக்கும். மத்தியில் பா.ஜ.க. - 250, காங்கிரஸுக்கு - 100 இடங்கள். ஆனா, தமிழ்நாட்டில் யாருக்கும் பெரிய வெற்றி கிடைக்காது. அ.தி.மு.க-வும் பா.ஜ.க. கூட்டணியும் தலா 12 தொகுதிகள் ஜெயிக்கும். தி.மு.க. கூட்டணி - 10, மற்ற கட்சிகள் - 6 தொகுதிகள் ஜெயிக்கும்!'' என்றவரிடம் 'மற்ற கட்சிகள் எவை எவை?’ எனக் கேட்டோம்.

''ஆம் ஆத்மி மூணு தொகுதிகள் ஜெயிக்கலாம். ஆனா, சொல்ல முடியாது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ்கூட ஜெயிக்கலாம் இல்லையா!'' என்கிறார் உஷாராக.

'மே 16’ என்ன தீர்ப்பை எழுதி வைத்துக் காத்திருக்கிறதோ!?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism