Published:Updated:

மகாத்மா முதல் மன்மோகன் வரை!

மகாத்மா முதல் மன்மோகன் வரை!

பிரீமியம் ஸ்டோரி
மகாத்மா முதல் மன்மோகன் வரை!

எதைப் பற்றியுமே கவலைப்படாமல் நாட்டை, யாருக்கும் அடமானம் வைக்க ஆட்சியாளர்கள் தயங்க மாட்டார்கள் என்பதற்குப் பெரிய உதாரணம் இந்திய - அமெரிக்க 123 அணு ஒப்பந்தம். ராணுவ ஒத்துழைப்பு என்ற பெயரால் அமெரிக்காவுக்கு அடிமைப் பத்திரம் எழுதிக் கொடுக்கும் சமாசாரம் அது. இன்னும் மூன்று ஆண்டுகள் கடந்தால் இந்தியா விடுதலைக் கொடியைப் பறக்கவிட்டு 70 ஆண்டுகள் கடந்துவிடுவோம். நமக்கு யாரும் அடிமையும் இல்லை; நமது நாடும் யாருக்கும் அடிமை இல்லை என்ற கம்பீரமான நிலைப்பாட்டில் இந்தியா கடந்த காலத்தை உருட்டி வந்துவிட்டது. ஆனால், அமெரிக்கா தன்னுடைய ராணுவ நோக்கங்களுக்கு இந்தியாவைப் பயன்படுத்தத் தொடங்கியது. அதற்கு காங்கிரஸ் அரசாங்கம் கண்ணை மூடிக்கொண்டு தலை ஆட்டியது.

''இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்படுகிற இந்த அணு ஆயுத ஒப்பந்தம், இத்தோடு நிற்பது அல்ல. இந்தியா அமெரிக்காவுக்கு இடையே பாதுகாப்பு, ராணுவப் பயிற்சி, அமெரிக்க ராணுவக் கருவிகள் விற்பனை என்ற மிக நெருக்கமான உறவு ஏற்படுவதற்குப் பாதை தயாராகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா இந்தியா உறவின் எதிர்காலம் என்பது அனைத்துத் துறைகளிலும் கட்டப்படும்'' என்று அமெரிக்கத் தரப்பில் இருந்து இந்த ஒப்பந்தத்தைத் தயாரித்த நிக்கோலஸ் பர்ன்ஸ் சொன்னார். ஏற்கெனவே உலகமயமாக்கல், கொள்கை மூலமாக பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியவர்கள், இந்த அணு ஒப்பந்தத்தின் மூலமாக அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ராணுவக் கூட்டாளியாக மாறத் தொடங்கிய ஆண்டு 2007.

ஜப்பான் தொடங்கி வியட்நாம், கியூபா, ஈரான் வரைக்கும் அமெரிக்காவின் அணு ஆட்டம், உலகத்தின்

மகாத்மா முதல் மன்மோகன் வரை!

நிம்மதியை கடந்த 70 ஆண்டு காலமாகக் குலைத்துக்கொண்டு வருகிறது. இந்துமகா சமுத்திரத்தில் டிகோகார்சியாவை குறிவைத்து 1970-களில் அமெரிக்கா நுழைந்ததும் அதற்கு சரியான வாய்ப்பு இல்லாமல் பின்நோக்கி ஓடியதும் அந்த இடத்தை சீனா பிடித்துக்கொண்டதும்தான் 2009 முள்ளிவாய்க்கால் படுகொலைகள் வரைக்கும் பாய்ந்தது.

அன்று டிகோகார்சியாவில் அமெரிக்கா கால் பதித்திருக்குமானால் 2009-ல் நடந்தது, 20 ஆண்டுகளுக்கு முன்பே  நடந்திருக்கும். இந்த கடந்த காலம் உணராதவர்கள்தான் இலங்கைக்கு எதிரான இன்றைய அமெரிக்கத் தீர்மானங்களைக் கண்ணை மூடி ஆதரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அணு ஒப்பந்தம், ராணுவ ஒப்பந்தம் என்றால் நேரடியாகக் கைகோக்க வர மாட்டார்கள் என்பதால், மின் உற்பத்தி என்று மீன் தூண்டில் போடுகிறார்கள். இந்தியாவின் மின் தேவைக்கு அணு மின் தயாரிப்பு மிகமிகச் சொற்பமே. யானைப் பசிக்கு சோளப் பொறியைப் போலத்தான் மின்சாரம் என்று ஆக்க சக்தியாகக் காட்டி அழிவு சக்தியை உற்பத்தி செய்பவையே இவை.

இதை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுகொண்டார்கள் இடதுசாரிகள். 2004-ம் ஆண்டு அமைந்த காங்கிரஸ் அரசை வெளியில் இருந்து இடதுசாரிகள் ஆதரித்தார்கள். எனவே, இந்திய அணுசக்தி உடன்பாடு தொடர்பாக ஆளும் முற்போக்குக் கூட் டணியும் இடதுசாரிகளும் சேர்ந்த ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இதனுடைய கூட்டம் டெல்லியில் நடந்தபோது, 'மின் உற்பத்திக்காகத்தான் அணுசக்தி ஒப்பந்தம் என்று சொல்வது ஏற்புடையது அல்ல. இரண்டு மடங்கு செலவுசெய்து இதில் ஈடுபடத் தேவையில்லை’ என்று பிரகாஷ் காரத் கூறினார்.

இந்தியாவின் மூத்த விஞ்ஞானிகளான டாக்டர் ஹெச்.என்.சேத்னா, டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன், டாக்டர் பி.ஜே.ஐயங்கார், டாக்டர் ஏ.கே.பாலகிருஷ்ணன், டாக்டர் ஏ.என்.பிரசாத், அணு ஆற்றல் கார்ப்பரேஷன் முன்னாள் தலைவர் டாக்டர் ஒய்.எஸ்.ஆர்.பிரசாத், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி முன்னாள் தலைவர் டாக்டர் பிளாசிட் ரோட்ரிகுஸ் ஆகியோர் இதை எதிர்த்தார்கள். 'பிரதமர் என்ன வாக்குறுதிகளைத் தருகிறாரோ அதற்கு நேர் எதிரான சட்டவிதிகள் இந்த சட்டத்தில் இருக்கின்றன’ என்று இந்த விஞ்ஞானிகள் சொன்னார்கள்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்க அதிபர் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா செய்யும் நடவடிக்கைகள் அனைத்தையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் மறைமுகமாக வலியுறுத்தியது.

எனவே உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.பி.சாவந்த், மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹெச்.சுரேஷ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தார்கள். இப்படி ஒரு சட்டத்தைப் போடுவதற்கு காங்கிரஸ் அரசுக்கு உரிமை இல்லை என்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்ட பின்தான் எந்த ஒப்பந்தமும் செல்லும் என்றும் கண்டித்தார்கள்.

அணுசக்தி உடன்பாட்டை அமல் செய்வதை நிறுத்திவிட்டு, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த இடதுசாரிகள் கோரிக்கை வைத்தார்கள். அதற்குள் 2007-ம் ஆண்டுக்குள் இந்தியா இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது.

'அனைத்து தடைகளையும் மீறி ஒப்பந்தம் நிறைவேறும்’ என்று அமெரிக்கா அதிகாரி அறிவித்தார். 2007 ஆகஸ்ட் 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தார் மன்மோகன் சிங். வாக்கெடுப்புடன் விவாதம் வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியது. ஆனால் அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. அயல்நாடுகளுடன் ஒப்பந்தம் போடுவதற்கு எக்ஸிக்யூடிவ் பவர் மத்திய அரசுக்கு உண்டு என்று அரசு பதில் சொன்னது.

1. இந்தியாவில் உள்ள அணு உலைகள் மின்சார தேவைக்கு எனவும் ராணுவத் தேவைக்கு எனவும் இரண்டாகப் பிரிக்கப்படும்.

2. எதிர் காலத்தில் யுரேனியம் பெறுவதில் தடை ஏற்பட்டால், இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து யுரேனியம் சப்ளை பெற முயற்சிக்கும்.

3. சப்ளை செய்யப்பட்ட யுரேனியம் மற்றும் தொழில்நுட்பத்தைத் திரும்பப்பெற அமெரிக்காவுக்கு உரிமை உண்டு.

- என்பதுதான் மேலோட் டமான ஷரத்துகள். ஆனால், அதில் இருந்த மிக மோசமான விஷயங்கள் மெல்ல அம்பலம் ஆனது.

இந்தியா அணு ஆயுதச் சோதனை நடத்தினால், சிவில் அணுசக்தி கூட்டுறவை அமெரிக்கா துண்டிக்க உரிமை உண்டு என்றது இந்த ஒப்பந்தம். அமெரிக்கா அதுவரை வழங்கி வந்த தொழில்நுட்ப உதவி, அணுச் சாதனங்கள் மற்றும் எரிபொருள்கள் திரும்பப் பெறப்படும். இதனை அமெரிக்க அமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் வெளிப்படையாகவே கூறினார்.

அதாவது ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை விளக்கி அமெரிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் அளிக்கும் பேட்டிகள் மூலமாகத்தான் இதனுடைய மோசமான சாராம்சம் வெளியில் வந்தது.

அமெரிக்கப் பார்வையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவின் அணு உலைகளைப் பார்க்க அனுமதி வழங்குவதும், எதிர்காலத்தில் அணு ஆயுதச் சோதனையை இந்தியா செய்யக் கூடாது என்பதும் அணு ஆயுதங்களுக்கு தேவைப்படும் பொருள்களைத் தயாரிக்கும் பணியை இந்தியா நிறுத்த வேண்டும் என்பதும், அணு ஆயுதப் பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்தது இந்த ஒப்பந்தம்.

அணுமின் நிலையங்கள் அவசியமா, கூடாதா என்பது இருக்கட்டும். ஆனால், அணுமின் நிலையங்களை மொத்தமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுபோய்ச் சேர்ப்பது எந்த வகையில் நியாயம்?

1998 மே 11, 13 ஆகிய தேதிகளில் சக்தி 98 என்று அணுகுண்டுச் சோதனையை பிரதமர் வாஜ்பாய் செய்தார். அப்போது அமெரிக்கா இந்தியாவுக்குப் பொருளாதாரத் தடை விதித்தது. அணுகுண்டு உற்பத்தி செய்யாத நாடு இதனைச் செய்தால் ஏற்கலாம். ஆனால், அணுகுண்டை உணவுப் பொருளைப் போல உற்பத்தி செய்யும் அமெரிக்காவுக்கு இதைச் சொல்ல என்ன உரிமை இருக்கிறது?

நீர், நிலக்கரி மூலமாகத் தயாரிக்கப்படும் மின் உற்பத்தியைவிட, அணு உலை மூலம் தயாரிக்கப்படும் மின் உற்பத்திக்குப் பல்லாயிரம் கோடி செலவு, தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவும் குறைவு. ஆனாலும், அணு உலை மீது தீராக் காதல் ஏற்படுவது மின்சாரத்தைத் தாண்டிய ஆயுத நோக்கங்கள்தான். அதில் இந்தியாவை சிக்கவைக்கும் தந்திரத்துக்கு மன்மோகன் சிங் தலையாட்டியது மாபெரும் அவமானம்.

''நீங்கள் ஏன் முதலாளித்துவத்தை வெறுக்கிறீர்கள்?'' என்று கேட்டபோது, பிடல் காஸ்ட்ரோ சொன்னார்: ''அதை அருவருக்கத்தக்கதாக உணர்கிறேன். அது அசிங்கமானது. மனிதர்களை அன்னியப்படுத்துகிறது. போர்களையும் மாய்மாலங்களையும் போட்டியினையும் உருவாக்குகிறது'' என்று சொன்னார். அந்தச் சூழலுக்குள் இந்தியாவைக் கொண்டுபோய்த் தள்ளியது காங்கிரஸ் அரசு.

அமெரிக்கா சொல்வதை எல்லாம் செய்தால் நாம் அமெரிக்காவைப் போலவே ஆகிவிடலாம் என்று நினைப்பில் செய்யப்படுபவை இவை. 14 முதல் 15 டிரில்லியன் டாலர் வரை கடன் சுமையுடன், உலகின் முதலாவது கடனாளி நாடாக இருந்துவருவது அமெரிக்கா என்பது ஆட்சியாளர்களுக்கும் தெரியாது. அவர்களது நடவடிக்கைகளுக்குத் தலையாட்டும் அப்பாவிகளுக்கும் தெரியாது. இந்தியாவும் அப்படிப்பட்ட மலையளவு கடன்கொண்ட நாடாக மாறிவிட்டது.

வரி செலுத்துவதில் மிகப் பெரிய பணக்காரர்களான 400 பேரிடம் மட்டும் அமெரிக்காவின் வருமானத்தில் ஒரு சதவிகிதத்துக்கும் மேலான செல்வம் இருக்கிறது என்கிறது ஒரு புள்ளி விவரம் இந்தியாவிலும் அப்படித்தான்.

பொருளாதார தாராளமயமாக்கல் 1980-ல் அமெரிக்காவில் வந்தது. அதுவரை இருந்த கட்டுப்பாடுகளை நீக்கினார்கள். அதே வழியில் 10 ஆண்டுகள் தாமதமாக நாம் வந்து சேர்ந்துகொண்டோம். 'எல்லோரும் வாருங்கள்; எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்; கொண்டு செல்லுங்கள்’ என்பதாக மாறியது. 1991-ல் தெற்கு - தெற்கு கமிஷனின் உறுப்பினர் செயலாளராக டாக்டர் மன்மோகன் சிங் இருந்தபோது வெளியிடப்பட்ட ஆவணத்தில், 'பொருளாதாரக் கேடுகளுக்கு எல்லாம் தனியார் மயம் ஒரு மாமருந்தல்ல’ என்று எழுதினார். ஆனால், அவரே நிதியமைச்சராக வந்த பிறகு தனியார் மயத்தின் ஆதரவாளராக மாறினார். எல்லாவற்றையும் அமெரிக்கா பாணிக்கு மாற்றினார்.

இந்தியாவின் காப்பீடு மற்றும் வங்கித் துறையைத் திறந்துவிடுமாறு டாவோஸில் நடந்த ஜி20 மாநாட்டில் மன்மோகன் சிங் நிர்பந்தம் செய்யப்பட்டார். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவரத் துடிப்பதை வெளிப்படையாகவே பார்த்தோம். 'இந்திய மக்கள் ஜார்ஜ் புஷ்ஷை அதிகம் நேசிக்கிறார்கள்’ என்று மன்மோகன் சிங் ஒருமுறை சொன்னார். ஆனால், அமெரிக்க மக்கள் அவரைத் தோற்கடித்தார்கள். அமெரிக்க மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஜார்ஜ் புஷ்ஷை, மன்மோகன் சிங் விரும்பினார் என்பதே உண்மை. பொருளாதாரம், தொழில், வர்த்தகம், நிதி, பாதுகாப்பு, அரசியல் என அனைத்தையுமே அமெரிக்க பாணிக்கு மாற்றியதுதான் மன்மோகன் சிங் பாணி.

'1960-70களில் உலகப் பொருளாதாரம் ஆண்டுக்கு ஐந்து சதவிகிதம் என்று வளர்ந்தபோது இந்தியாவின் வளர்ச்சி 3.5 சதவிகிதமாக இருந்தது. 1980-களில் இருந்து 5-6 சதவிகிதமாக வளர்ந்தது. இப்போது 7-8 ஆக இருக்கிறது.

பொதுத் துறையை விட தனியார் துறை சிறந்தது. இந்திய நிறுவனங்களைவிட அந்நிய நிறுவனங்கள் சிறந்தது. உள்ளூர் உற்பத்தி பொருட்களைவிட வெளிநாட்டு பொருட்கள் உயர்ந்தவை. தேசிய சந்தையைவிட சர்வதேச சந்தை லாபகரமானது’ என்ற பிரசாரம் காங்கிரஸால் முன்வைக்கப்பட்டது.

தேசியம் என்றும் தேசப்பற்று என்றும் நம் நாடு என்றும் நாட்டுப்பற்று என்றும் ஆகஸ்ட் 15, ஜனவரி 26 ஆகிய இரண்டு நாட்களில் மட்டுமே பேசிவிட்டு மற்ற நாட்கள் அனைத்திலும் அந்நியச் சிந்தனையோடு உருமாறிப்போன நிலையே இந்தியாவை தரையில் தள்ளி இருக்கிறது. ஊழல் செய்ய பணம் இல்லாமல் இருந்தது. உலகமயம், ஊழலுக்குப் பணத்தைத் தாராளமாக வழங்கியது!

மகாத்மா முதல் மன்மோகன் வரை!
மகாத்மா முதல் மன்மோகன் வரை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு