பிரீமியம் ஸ்டோரி

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

'அதிகாரம் மக்கள் கையில் இருக்க வேண்டும்’ என்கிறாரே ராகுல்?

மக்கள் கையில் என்கிறாரா... மகன் கையில் என்கிறாரா?

 மு.வரதராஜன், ராஜபாளையம்.

கழுகார் பதில்கள்!

'மத்தியில் காங்கிரஸ், பி.ஜே.பி. ஆட்சி அமைக்க ஆதரவு தர மாட்டோம்’ என்று திடீரெனச் சொல்ல ஆரம்பித்து உள்ளாரே ஜெயலலிதா?

மூன்றாவது அணிக்கு மூலவராக இருக்கும் பிரகாஷ் காரத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்காமல் போனதால், அந்த அணியோடும் நட்பு இல்லை. இப்போது காங்கிரஸ், பி.ஜே.பி. அரசுக்கும் ஆதரவு இல்லை என்கிறார். யாரோடும் நட்பு பாராட்டாத இவருக்கு எம்.பி-க்கள் எதற்கு என்று மக்கள் முடிவெடுத்துவிடப் போகிறார்கள்!

 சி.முத்துக்கிருஷ்ணன், பொள்ளாச்சி.

கழுகார் பதில்கள்!

பி.ஜே.பி-யை கருணாநிதியும் ஜெயலலிதாவும் திடீரென்று விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்களே?

நடப்பது நாடாளுமன்றத் தேர்தலாகத் தெரிந்துவிடக் கூடாது என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் நினைத்தார்கள். நாடாளுமன்றத் தேர்தலாக மக்கள் நினைக்க ஆரம்பித்தால், பிரதமர் வேட்பாளர் யார் என்று தேடுவார்கள் அல்லவா? அதனால்தான் லாகவமாக தங்கள் பிரசாரத்தை சட்டமன்றத் தேர்தல் மாதிரி ஆக்கினார்கள்.

இவர்கள் இருவருமே பி.ஜே.பி-யை ஆதரிக்கத் தயங்க மாட்டார்கள் என்று கிளம்பிய செய்தி, இருவரையுமே வாயைத் திறக்கவைத்துவிட்டது. அப்போதும் பி.ஜே.பி-யின் மையக் கொள்கையாக அறிவிக்கப்பட்ட பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகிய விஷயங்களைப் பற்றிப் பேசாமல், பொதுவாக விமர்சிப்பதைத்தான் இவர்கள் இருவரும் வழக்கமாக வைத்துள்ளார்கள். 'பார்த்தீர்களா... பி.ஜே.பி-யை விமர்சிக்கிறோம்’ என்று சிறுபான்மையினருக்குக் காட்டுவதும், 'நாங்கள் பி.ஜே.பி-யின் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லையே!’ என்று பெரும்பான்மை மக்களுக்கு காட்டுவதும்தான் இவர்களது நடிப்பாக இருக்கிறது.

காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகிய இரண்டு கட்சிகளையும் ஆதரிக்க ஜெயலலிதாவும் கருணாநிதியும் தயங்க மாட்டார்கள் என்பதே உண்மை!

 லா.ரா.கணபதி, மடிப்பாக்கம்.

கழுகார் பதில்கள்!

தி.மு.க. கணிசமான இடங்களைப் பெற்றால், முழு வெற்றியும் ஸ்டாலினுக்குத்தானே?

ஆம். வென்றாலும் தோற்றாலும் அவருக்குத்தான் முழுப் பொறுப்பும். அதனால்தான் தனி மனிதராக அனைத்துத் தொகுதிகளுக்கும் ஸ்டாலின் அலைகிறார். மன சஞ்சலத்துடன் காணப்படுகிறார். அழகிரியும் அதனால்தான் இவரைக் குறிவைக்கிறார்!

 நா.பொன்னாச்சியார், சாத்தூர்.

கழுகார் பதில்கள்!

தந்தை மகனுக்கு ஆற்றும் உதவியை அழகிரிக்குச் செய்தாரா கருணாநிதி? மகன் தந்தைக்குக் காட்ட வேண்டிய நன்றியை கருணாநிதிக்குக் காட்டினாரா அழகிரி?

தென் மண்டல அமைப்புச் செயலாளர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் ஆகிய மூன்று மகுடங்களை மகனுக்கு தந்தை சூட்டினார். ஆனால், 'சிறைக் கைதியாக இருக்கிறார், அவரால் முடிவுகள் எடுக்க முடியவில்லை, தலையாட்டிக்கொண்டு இருக்கிறார்’ என்ற சுடு சொற்கள்தான் அழகிரியிடம் இருந்து கருணாநிதிக்குக் கிடைத்தன.

'நாவினால் சுட்ட வடு’ மாறவே மாறாது, மனம் மாறி கருணாநிதியுடன் அழகிரி கைகோத்தாலும்!

 செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

கழுகார் பதில்கள்!

அரசியல்வாதியைப்போல ஜெயலலிதாவைப் புகழ்ந்து தள்ளுகிறாரே மதுரை ஆதீனம்?

மதுரை ஆதீனம் எப்போதும் அரசியல்வாதிதான். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது திடீரென ஒரு பொதுக்கூட்டத்தில் துப்பாக்கியை எடுத்துக்காட்டி பரபரப்பு கிளப்பினார். உத்ராட்சையைக் கழற்றிப் போட்டார். அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனை எதிர்த்தார். அண்ணா அறிவாலயம் திறப்புவிழாவில் தன் கையில் இருந்த மோதிரங்களை எல்லாம் கழற்றி கருணாநிதியிடம் கொடுத்தார். வீரமணியுடன் மேடைகளில் வலம் வந்தார். எம்.நடராசனுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். இப்போது ஜெயலலிதாவை பிரதமர் ஆக்கத் துடிக்கிறார். ஆதீனமாக இருந்தாலும் அரசியல் வாழ்க்கைதான் அவருடையது. இந்தக் காரியங்களை காவியைக் கழற்றி வைத்துவிட்டு அவர் பார்க்கலாம்!

 இல.நவீன், ஊரப்பாக்கம்.

கழுகார் பதில்கள்!

நாடு முழுவதும் இருக்கும் மோடி அலை, கேரளாவில் மட்டும் இல்லாமல் போனது ஏன்?

கேரளாவைப் பொறுத்தவரை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய மூன்றும்தான் வலிமையான கட்சிகள். இந்தத் தேர்தலில் திருவனந்தபுரம், காசர்கோடு ஆகிய இரண்டு தொகுதிகளை பி.ஜே.பி. கைப்பற்றும் என்று கணிப்புகள் சொல்கின்றன.

இ.பா.ஹரிராமகிருஷ்ணன், இசையனூர்.

கழுகார் பதில்கள்!

'எங்களுக்கு சீட் முக்கியம் இல்லை. கொள்கை, மக்கள், தொண்டர்கள்தான் முக்கியம்’ என்று தா.பாண்டியன் சொல்வது உண்மையா?

அது உண்மையாக இருந்தால், தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்னதாக அல்லவா ஒன்பது தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருக்க வேண்டும். போயஸ்கார்டனில் தாழ்ப்பாள் போடும் வரை ஏன் காத்திருந்தாராம் தா.பா.?

 கே.ஏ.என்.சிவம், பெங்களூரு.

கழுகார் பதில்கள்!

பி.ஜே.பி-யுடன்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி பிடிவாதம் பிடித்ததன் பின்னணி என்ன?

தர்மபுரியில் ஜெயிக்க வேண்டாமா... அமைச்சர் ஆக வேண்டாமா... உலகப் பயணங்கள் போக வேண்டாமா? இவை எல்லாம் பின்னணிகள் அல்ல. வெளிப்படையாகவே தெரிகின்றவைதானே!

 ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

கழுகார் பதில்கள்!

ஜெயலலிதா இப்போதெல்லாம் கதை சொல்வது இல்லையே... ஏன்?

வேகாத வெயிலில் உட்கார வைத்துக்கொண்டு கதை சொன்னால், மக்கள் கொதிநிலை இன்னும் கூடுதல் ஆகிவிடும் என்று பயந்திருப்பார்.

 எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.

கழுகார் பதில்கள்!

தன்னம்பிக்கையின் சின்னமாக யாரை அடையாளம் காட்டுவீர்கள்?

கம்யூனிஸ்ட்களைத்தான். அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும்போதுகூட இப்படி உழைத்தது இல்லை. இந்தத் தன்னம்பிக்கை அனைத்துக் கட்சிகளும் பின்பற்ற வேண்டியது!

 மூ.கணேசன், தர்மபுரி.

கழுகார் பதில்கள்!

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்தும் ஏதாவது மாறியிருக்கிறதா?

இந்தியாவின் நாடாளுமன்ற அரசியல் நெறிமுறைகளின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பைச் செய்தவர்கள் என்று மோதிலால் நேரு, புலாபாய் தேசாய், கோவிந்தவல்ல பந்த், ஆஸஃப் அலி ஆகிய நான்கு பேரைச் சொல்வார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்துக்குள் சென்று நெறிமுறைகளை வகுத்தவர்கள் இவர்கள். இவர்களது பேச்சுக்களின் மூலமாக சட்டமன்ற, நாடாளுமன்ற நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.

சுதந்திரத்துக்கு முன்பு புலாபாய் தேசாய் பேசும்போது, ''நாட்டிலே பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கொள்ளை நோய் பரவிக்கிடக்கிறது. தரித்திரக் கோலம் தலைவிரித்து ஆடுகிறது. கடன் சுமை ஏறிக்கொண்டே போகிறது. அரசாங்கத்தின் நடவடிக்கை ஒவ்வொன்றும் நாட்டை உறிஞ்சுவதை நோக்கமாகக்கொண்டிருப்பதால் நாட்டின் உற்பத்தி ஊற்றே வறண்டுகிடக்கிறது. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவார் யாரும் இல்லை'' என்று வருத்தப்பட்டுச் சொன்னார். 70 ஆண்டுகள் ஆன பிறகும் இதில் எந்த வார்த்தையும் மாறவில்லை. இப்படிச் சொன்ன புலாபாய் தேசாய், ''இத்தனை இருட்டுக்கு நடுவிலேயேயும் நான் நம்பிக்கை தளர்ந்து போய்விடவில்லை. 'எந்தாய், கிழக்கை இனிதே தொடு நீ! இனிதே தொடு நீ! எழுந்தோர் புதிய நம்பிக்கை பரவ, ஏற்றிடு விளக்கை, ஏற்றிடு நீயே!’ என்ற கவிஞனின் நம்பிக்கையுடன் நானும் சேர்ந்து வேண்டுகிறேன்'' என்று முடித்தார்.

அந்த நம்பிக்கையுடன் வாக்குச்சாவடியின் வரிசையில் நிற்போம்!    

கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு