Published:Updated:

“நதிகளை இணைக்காதீர்கள்... மக்களை நதிகளுடன் இணையுங்கள்!” - தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங்! #VikatanExclusive

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“நதிகளை இணைக்காதீர்கள்... மக்களை நதிகளுடன் இணையுங்கள்!” - தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங்! #VikatanExclusive
“நதிகளை இணைக்காதீர்கள்... மக்களை நதிகளுடன் இணையுங்கள்!” - தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங்! #VikatanExclusive

“நதிகளை இணைக்காதீர்கள்... மக்களை நதிகளுடன் இணையுங்கள்!” - தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங்! #VikatanExclusive

“ஒரு மருத்துவனுக்கு என்ன பெரிதாகக் கனவு இருந்துவிடப் போகிறது, நோயாளியை நலமாக மீட்க வேண்டும் என்பதைத் தவிர? நான் மருத்துவன். அதனால்தான் பெரிதாக எந்தக் கனவையும் வைத்துக்கொள்ளாமல், செயல்பாட்டில் மட்டும் தீவிரமாக இருக்கிறேன்.'' திடகாத்திரமான குரலில் பேசுகிறார், ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங். கனவுகளற்ற இந்த மனிதர்தான், பாலை நிலமான ராஜஸ்தானில், மரணித்த ‘ஆர்வாரி ஆற்று’- க்கு உயிர் கொடுத்திருக்கிறார். அதன் மூலம் 6,500 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தின் வளத்தை மீட்டிருக்கிறார். ஒரு நிகழ்வுக்காக சென்னைக்கு வந்தவரிடம் அதிகாலைப்பொழுதில் உரையாடினோம்.

“இப்போது நாம் சந்திக்கும் தண்ணீர்த் தட்டுப்பாடு - வறட்சியை எதிர்கொள்ள, 'நதிநீர் இணைப்புத் திட்டம்  மட்டும்தான் ஒரே தீர்வு' என ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?"

“அதை நான் பேரழிவைக் கொண்டுவரப் போகும் திட்டமாகப் பார்க்கிறேன். ஆம், நதிநீர் இணைப்பு என்பது நிச்சயம் நம் தேசத்துக்கு ஒரு பேரழிவாக அமையும். இது நதிகளுக்கு மட்டுமல்ல... நதிகளைச் சுற்றி இருக்கும் பல்லுயிர் தன்மை, சுற்றுச்சூழல், மக்கள் என அனைத்து தரப்புக்குமே பேராபத்தாக முடியக்கூடிய திட்டம்தான். மக்களிடையே இது மேலும் சிக்கல்களை உருவாக்கும். கார்ப்பொரேட் நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாகவே இந்தத் திட்டம் அமையும். மக்களிடம் இருக்கும் நதிகள் கார்ப்பொரேட்கள் வசம் செல்லும். தண்ணீர் தனியார் மயமாகும். இறுதியாக தண்ணீர் யுத்தத்துக்கே இந்தத் திட்டம் வழிவகை செய்யும். எனவே நதிகளை இணைக்காதீர்கள்; பதிலாக மனித மனங்களை, அவர்களின் சிந்தனையை நதிகளுடன் இணையுங்கள்; ஏரிகளை நதிகளுடன் இணையுங்கள். ஏற்கெனவே, நதிகள் சம்பந்தமான தீர்க்கப்படாத பிரச்னைகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ளன. அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு இடையேயான சட்லெஜ் - யமுனா இணைப்புத் திட்டம் பல வருடங்களாக இப்படித்தான் பிரச்னையில் இருக்கிறது. பஞ்சாப் மாநிலம், தங்கள் நீரை வழங்கமாட்டோம் என அடம்பிடிக்கிறது. நதிநீர் இணைப்புத் திட்டம் நாடுமுழுக்க செயல்படுத்தப்பட்டால், இதுபோன்ற சண்டைகள் இன்னும் அதிகரிக்கவே செய்யும்."

“சரி... குடிநீர் தட்டுப்பாட்டுக்கு வேறு என்னதான் தீர்வு...?”

“நாம் சந்திக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு, நீர்நிலைகளை மக்களிடம், பஞ்சாயத்திடம் ஒப்படைப்பதுதான். மையப்படுத்தப்பட்ட எந்த பெரும் திட்டங்களையும் யோசிக்காமல், திட்டங்களைப் பரவலாக்குவதுதான்; ஒவ்வொரு கிராமத்திலும் ஏரி, குளம், கிணறுகளை வெட்டுவதுதான். இது கேட்பதற்கு சாதாரணமான ஒன்றாக, சுலபமான ஒன்றாக இருக்கிறதுதானே...? அதனால்தான் நாம் இதை உதாசீனப்படுத்திவிடுகிறோம். ஆனால், இதுதான் தீர்வு... இதுமட்டும்தான் தீர்வு. 'பெரிய அணைகள் கட்டுவது தீர்வு' என்று பேசப்பட்டது. நீங்களே பாருங்கள்... அந்த அணைகள் என்ன செய்திருக்கின்றன என.... அவை பெரிய எண்ணிக்கையில் மக்களைப் புலம்பெயர வைத்திருக்கிறது. கிராம மக்களை அகதிகளாக நகரங்களில் அலைய வைத்திருக்கிறது. பெரிய பெரிய திட்டங்கள் எந்த நன்மையும் செய்யவில்லை; எந்த நன்மையும் செய்யாது.  மீண்டும் சொல்கிறேன், பிரச்னை எங்கு இருக்கிறதோ... அங்கேயே தீர்வையும் தேடுங்கள். நம் கிராமத்துக்குத் தண்ணீர் வேண்டுமென்றால், அதைப் பெற என்ன செய்யலாம் என்று யோசித்து, உங்கள் கிராம அளவிலேயே திட்டங்களைத் தீட்டுங்கள். அதுதான், நீண்டகால நோக்கில் தீர்வாக இருக்கும்''.

“தமிழ்நாடு வறட்சியில் இருந்து தப்பிக்க முடியுமா?"

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தம் 3 முக்கியப் பிரச்னைகள் இருக்கின்றன. முதலாவது, நீர்நிலைகள் மீதான ஆக்கிரமிப்பு. இரண்டாவது, நீர்நிலைகள் அசுத்தம் அடைந்திருப்பது. மூன்றாவது, அதிகப்படியான நிலத்தடி நீரை உறிஞ்சுவது. இந்த மூன்றும்தான் தமிழக நீர்நிலைகளின் நிலையை அதிக சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கிறது. அரசை விடவும் மக்கள் நினைத்தால், இதனை மாற்ற முடியும். இழந்த நீர்நிலைகளை மீட்டெடுக்கவும், இருக்கும் நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தவும் மக்கள், இயக்கமாக ஒன்றுகூட வேண்டும். நல்ல எதிர்காலம் வேண்டும் என்றால், மக்கள்தான் தங்களுக்காக முன்வந்து போராட வேண்டும். இவையெல்லாம் நடந்தால்தான் தமிழகத்தின் நீர்வளத்தை மீட்டெடுக்க முடியும்".

“நமக்கு வளர்ச்சி தேவை. அந்த வளர்ச்சிக்குத் தொழிற்சாலைகள் தேவை. அந்த தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் தேவை. நாம் வளர்ச்சி குறித்து ஒரு பெருங்கனவு கண்டுகொண்டே, 'நிறுவனங்கள் நம் தண்ணீர் வளத்தை சுரண்டுகின்றன; மாசுபடுத்துகின்றன' என்று சொல்வது எப்படிச் சரியாகும்? முரண்பாடாக அல்லவா இருக்கிறது?".

“ஆம், முரண்பாடாகத்தான் இருக்கிறது. அதற்குக் காரணம் வளர்ச்சி குறித்த நம் புரிதல். நாம் நிறுவனங்களின் வளர்ச்சியை மட்டுமே தேசத்தின் வளர்ச்சியாகப் பார்க்கிறோம். அதனால், அவர்கள் கட்டுக்கடங்காமல், வளர்ச்சியின் பெயரால், லாபத்துக்காக இயற்கையைச் சுரண்டும்போது நம்மை நாமே சமாதானம் செய்துகொண்டு வேடிக்கைப் பார்க்கிறோம். உண்மையில், இது நீடித்த வளர்ச்சி இல்லை. இந்த வளர்ச்சி எங்காவது ஒரு சந்தில் முட்டி நிற்கும். உண்மையான வளர்ச்சி என்பது, காந்தி வழிமொழிந்து சென்ற வளர்ச்சியாக இருக்க வேண்டும். அது வேரிலிருந்து வளர வேண்டும். சுயசார்பானதாக மக்களுக்கானதாக இருக்க வேண்டும். 

தேவைக்காகத் தொழிற்சாலைகள் தண்ணீர் எடுப்பதில் சிக்கல்கள் இல்லை. ஆனால், அதிக லாபத்தை மட்டுமே ஒரே குறிக்கோளாகக் கொண்டு, அந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும், இயற்கைக்கும் எதிராகச் செயல்படும் போதுதான் சிக்கல்கள் எழுகின்றன. இயற்கையைப் பற்றி நினைத்துப் பார்க்காமல், லாபத்தை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டு, நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதும், மக்களுக்குச் சொந்தமான தண்ணீர், காடு, நிலம் என அனைத்து வளங்களையும் கொள்ளையடிப்பதும்தான் தவறு. இப்போது, அரசு நம்முடைய வளங்களைக் கார்ப்பொரேட் நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டது. நிறுவனங்களும் மக்களின் வளங்களைக் கொள்ளையடித்துவிட்டு அதனை மக்களிடமே விற்கிறார்கள். இப்படித் தங்கள் வளமும், பணமும் ஒருசேர பறிபோவது தெரியாமல் இருக்கிறார்கள் மக்கள்".

“இந்த முரண்பாட்டை அரசுதானே களைய வேண்டும்? அவர்கள்தானே மக்களுக்கான பொருளாதாரக் கொள்கையை வடிவமைக்க வேண்டும்”.

"அரசாங்கம் என்பது அரசியல்வாதிகளால் ஆனதே! அவர்கள் எப்படி மக்களைப் பற்றி சிந்திப்பார்கள்? அவர்களுடைய நோக்கம் அனைத்தும், எந்தெந்த கம்பெனிகளுக்கு இந்தத் திட்டங்களை வழங்கலாம் என்பதும், அதன்மூலம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதும்தான். 'தண்ணீர் வளங்களை மக்களுக்கு எப்படி வழங்கலாம்' என அரசு சிந்திப்பதில்லை. 'எப்படித் தனியாரிடம் அவற்றை ஒப்படைப்பது' என்றுதான் சிந்திக்கின்றன. எனவே மக்கள்தான் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்க வேண்டும். களத்தில் இறங்கிப் போராட வேண்டும்”.

“ஹூம்... நீங்கள் பேசுவதைப் பார்த்தால், பழைமைவாதி போல் அல்லவா இருக்கிறது...? நவீன விஞ்ஞானத்தின், அறிவியல்மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா...?''.

''அறிவியலை நம்புகிறேன். அது, மக்களுக்கானதாக இருக்கும்வரை. ஆர்வாரி நதி மீட்பில், நாங்கள் கையாண்டதெல்லாம் அறிவியல்பூர்வமான யுக்திகளைத்தான். ஆனால், நீங்கள் நவீன அறிவியல் என்று குறிப்பிடும் பெரிய அணைகளும், பெரும்பெரும் கட்டமைப்புகளும்... நிறுவனங்களுக்கான அறிவியலாக, லாபத்துக்கான அறிவியலாக, அழிவுக்கான அறிவியலாக இருக்கிறது. அதைத்தான் வேண்டாம் என்கிறேன். ஓர் உதாரணம் சொல்கிறேன்... முன்பெல்லாம் எங்கள் பகுதியில், கால்நடைகள் ஆற்றில், ஏரியில் இறங்கித் தண்ணீர் குடிக்கும் விதத்தைவைத்து, இன்னும் எத்தனை நாள்களுக்குத் தண்ணீர் இருக்கும் என்று துல்லியமாக மதிப்பிடுவார்கள். இது, அறிவியல் இல்லையா...? இதில், அறிவியலைக் கடந்து, தண்ணீர் அனைவருக்கும் பொதுவானது என்ற நேயமும் இருந்திருக்கிறது''.

“கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் ‘நமாமி கங்கா திட்ட’த்துக்கான குழுவில், நீங்கள்  இருந்தீர்கள்தானே...?”.

''ஆம்... தொடக்கக் காலத்தில் இருந்தேன். ஆனால், அது அரசியலுக்கான திட்டமாகவே மட்டும் இருக்கிறது. அது, சரியான திசையில் செல்வதாகத் தெரியவில்லை. அதனால், அதிலிருந்து விலகிவிட்டேன்''. 

“உண்மையில், கங்கையை மீட்டெடுக்க முடியுமா...?”

“இப்போது செல்லும் திசையில் இல்லாமல், மக்களை இந்தத் திட்டத்துடன் இணைக்கும்போது நிச்சயமாக முடியும். அதன் படுகையில் உள்ள நிறுவனங்களின் பெரும் ஆக்கிரமிப்புகளை அகற்றினால், இந்தத் திட்டத்தை அரசியலாகப் பார்க்காமல், உண்மையான கரிசனத்துடன் அணுகினால், கங்கையை அதன்போக்கில் செல்ல அனுமதித்தால், நிச்சயம் மீட்டெடுக்க முடியும். ஆனால், அரசு இந்தத் திசையில் செல்வதாகத் தெரியவில்லை''. 

“ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராக மோடியின் 3 ஆண்டு கால ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“மோடி இளைஞர்களின் கனவு நாயகனாக இருந்தார். ஆனால், அவர் சொன்ன எந்த ஒரு கனவையும் நிறைவேற்றியதே இல்லை. 'பிரதமர் பேசுவதால் மட்டுமே பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்காது; அதற்கு அவர் செயலாற்றவும் வேண்டும்' என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் முதல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரை அனைத்திலுமே வெறும் வாய்ச்சொல் வீரராக மட்டுமே மோடி இருக்கிறார். அவர் பிரதமரான பின்பு செய்த பணிகள் அனைத்துமே இயற்கைக்கு எதிராகவும், கார்ப்பொரேட்களுக்கு சாதகமாகவும்தான் இருக்கின்றன. அவரின் திட்டங்கள் எதுவுமே பூமிக்கோ, மக்களுக்கோ, இயற்கைக்கோ நன்மை அளிக்கக்கூடியதாக இல்லை. மாறாக அம்பானி, அதானி போன்ற முதலாளிகளுக்கே நன்மை அளிக்கும் வண்ணம் இருக்கின்றன. நம் நாட்டை அழிப்பதில், அவர் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறார்".

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு