Published:Updated:

ஸ்டாலின் முதல் ராகுல் வரை... இவங்களையும் விட்டு வைக்கல ஜி.எஸ்.டி !

ஸ்டாலின் முதல் ராகுல் வரை... இவங்களையும் விட்டு வைக்கல ஜி.எஸ்.டி !
ஸ்டாலின் முதல் ராகுல் வரை... இவங்களையும் விட்டு வைக்கல ஜி.எஸ்.டி !

ஸ்டாலின் முதல் ராகுல் வரை... இவங்களையும் விட்டு வைக்கல ஜி.எஸ்.டி !

ந்தமுறை `ஜி.எஸ்.டி' என்ற பெயரில் மறுபடியும் ஒரு புதிய இந்தியா பிறந்து, நம்மில் பலரை `பேனிக்' ஆக்கியுள்ளது. அதுக்கு 5%, இதுக்கு 12%, அதுக்கும் இதுக்கும் சேர்த்து 18% என விலைவாசி ஏற, பலரும் `நான் கொஞ்சம் அழுதுக்கலாமா, அதுக்கு வரி ஏதும் இல்லையே?' என அனுமதி வாங்கி அழுதுகொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு சூழலில்,`பாவம் நம் அரசியல்வாதிகள் `ஜி.எஸ்.டி 'யால் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள்...' என விட்டத்தைப் பார்த்துச் சிந்திக்கத் தொடங்கியதில்...

ராகுல் காந்தி :

இந்த ஜி.எஸ்.டி-யால் அதிகம் பாதிக்கப்படுவது ராகுல் காந்தி (எ) பப்புவாகத்தான் இருக்கும். எலக்ட்ரானிக்ஸ் பொம்மைகளுக்கு 18% ஜி.எஸ்.டி விதித்திருக்கிறார்கள். கலர்கலராய் பெயின்ட் அடித்த சொப்புச் சாமான்களுக்கும் 12%. இவ்வளவு ஏன், சில்ட்ரன்ஸ் டிராயிங் புத்தகத்துக்கும் 12% ஜிஎஸ்டி-யாம். ஒரே ஒரு சந்தோஷம், பப்புவுக்குப் பப்பு புவா பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் எந்த வரியும் கிடையாது.

டி.டி.வி. தினகரன் :

`எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்டா. நான் ரொம்ப நல்லவன்டா' என்பதைக் காட்ட எப்போதும் சிரிச்ச முகத்தோடே இருப்பார் தினகரன். முகத்தில் தம்மாத்துண்டு தாடி எட்டிப் பார்த்தாலும் மொத்த கலவரமுமே முகத்தில் தெரியும் என்பதால், தினமும் ஷேவிங் செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கெரகத்த... ஷேவிங் அயிட்டங்களுக்கு 28%.

வைகோ :

என்னதான் ஆஃபீஸ் செப்பலாக இருந்தாலும் வைகோ நடக்கும் நடைக்கு நாலே வாரத்தில் தேய்ஞ்சுடும். நடைப்பயணம் அதிகம் சென்ற காலத்தில் வாரத்துக்கு 4 செப்பல் வாங்குவார். இப்போது, நாலு வாரத்துக்கு ஒரு செப்பல் மட்டும் வாங்குவார் என நினைக்கிறேன். 500 ரூபாய்க்குள் இருக்கும் செப்பல்களுக்கு 5%. அதற்கு மேல் என்றால் 18%. இதைவிட கொடுமை, அவரால் இனி யாரிடமும் விசிட்டிங் கார்டே வாங்கமுடியாது. பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களின் விலையும் ஜி.எஸ்.டி-யால் உயர்ந்துவிட்டது. ச்சே...

செல்லூர் ராஜூ :

வைகை அணையிலிருந்து நீர் ஆவியாதைத் தடுக்க, தெர்மாகோல்களைக் கொண்டுபோய் ஆற்றின் மேல் அடுக்கி, உலக மகா பேமஸ் ஆனார் செல்லூர் ராஜூ. இதனாலேயே தெர்மாகோல்களின் மகத்துவம் அறிந்து மத்திய அரசு 18% ஜி.எஸ்.டி போட்டுள்ளது. இப்போது மீண்டும் லைம் லைட்டில் இடம்பெற, மேட்டூர் அணைக்குத் தெர்மாகோல் போட வேண்டிய நிலை வந்தால்... சயின்டிஸ்ட் செல்லூர் ராஜூ ரொம்பவே கஷ்டப்படுவாப்டி.

அன்புமணி :

இறகுப்பந்து விளையாடுவது அன்புமணிக்குப் பிடித்தமான ஒன்று. அதிலாவது அடிக்கடி அவர் ஜெயிப்பார் என்பது கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அந்த சந்தோஷ ஆட்டையிலும் ஓட்டையைப் போட்டுவிட்டது இந்த ஜி.எஸ்.டி இறகுப்பந்துக்கு 18% டோய். 

விஜயகாந்த் :

சும்மாவே மேடையில் பேசும்போது, கையை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் மைக்கின் ஒயரைப் பிடித்து இழுத்துவிட்டு `என்ன என் கையில வந்து ஏதோ மாட்டுது' எனச் சின்னப்புள்ளத்தனமாய்  அதிர்ச்சியாவார். ஆனால், இனிமேல் விஜயகாந்த் பிடித்து இழுக்கும் ஒயர்களுக்கு எக்ஸ்ட்ரா துட்டு கட்டவேண்டியிருக்கும். காப்பர் ஒயர்களுக்கு 18%. பாவம்யா...

ஸ்டாலின் :

பேச வேண்டிய விஷயத்தைப் பேப்பரில் எழுதி கொடுத்தால், வழக்கத்தைவிட நன்றாகவே வாசித்து மாஸ் காட்டுவார் ஸ்டாலின். வாக்கியத்திற்கு இடையே காற்புள்ளி, அரைக்காற்புள்ளி போட்டு, மாத்திரை அளவு கூட மாறாமால் வாசித்துப் பின்னிப் பெடலெடுப்பார். இனி பேப்பர் மற்றும் பேனாக்களுக்கு 12% ஜி.எஸ்.டி. அதேபோல, அன்று சட்டசபையில் சட்டையைக் கிழித்தபோது `பாட்ஷா' ரஜினி போல் போஸ் கொடுத்து நின்றாரே, இன்று சட்டைக்கும் ஜி.எஸ்.டி போட்டு விலை ஏத்திட்டாங்க. ப்ச்..! 

ஹெச்.ராஜா, தமிழிசை போன்றோர், வலித்தாலும் வலிக்கவில்லை என்றுதான் அடம்பிடிப்பார்கள் என்பதால் அவர்களை விட்டுவிடுவோம் எனத் தீவிரமாகச் சிந்தித்து கொண்டிருந்த என்னை, சிரிப்புச் சத்தம் ஒன்று திசைத்திருப்பியது. பார்த்தால், கொசுமருந்தில் பால்டாயிலைக் கலந்து அடித்ததும் ஊரே மயக்கம் போட்டு விழும். ஆனால், அரசியல்வாதி வடிவேலுவுக்கு ஒன்றுமே ஆகாதே... அந்த காமெடி டி.வி-யில் ஓடிக்கொண்டிருந்தது.

அடுத்த கட்டுரைக்கு