Published:Updated:

கூகுள் முதல் ட்விட்டர் வரை... அமேசான் நிறுவனரின் ஸ்டார்ட்அப் காதல்! #StartUpBasics அத்தியாயம் 15

கூகுள் முதல் ட்விட்டர் வரை... அமேசான் நிறுவனரின் ஸ்டார்ட்அப் காதல்! #StartUpBasics அத்தியாயம் 15
கூகுள் முதல் ட்விட்டர் வரை... அமேசான் நிறுவனரின் ஸ்டார்ட்அப் காதல்! #StartUpBasics அத்தியாயம் 15

ஜெப் பெசாஸ் துறுதுறுவென்று இருக்கும் குழந்தை. 4 வயதாக இருக்கும்போது அவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிகிறார்கள். பின்னர் ஜெப்பின் தாயார் ஜாக்லின் கியூபாவில் இருந்து பிழைக்க வந்த மிக்கேல் பெசாஸ் என்ற எஞ்சினியரை மணக்கிறார். வளர்ப்புத் தந்தையின் பெயரே இவரது துணைப்பெயராக சேர்கிறது. சிறுவயதில் நிறைய புத்தகங்களை படிக்கிறார் ஜெப். வளர்ந்து இளைஞரான பிறகு கல்லூரியில் படித்து முடித்தபின் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல வேலைகளை செய்கிறார். ஆனால் எந்த வேலை செய்தாலும் அதில் அவரது தடம் தனியே இருக்கும். அந்தளவிற்கு அந்த வேலையில் சின்சியராக உழைக்கிறார். மிகச் சிறியவயதில் நல்ல சம்பளம் என்றாலும் ஏதோ ஒன்று திருப்தியாக இல்லை வேலையை விடுகிறார். 

உச்சபட்ச வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கையில் யார் அவர்களுக்கு ஊக்கத்தை கொடுத்தது என்று பார்த்தால் பெரும்பாலும் எந்த தனிமனிதரும் இருக்க மாட்டார்கள். ஒரு பயணம் அல்லது புத்தகங்கள் தான் அவர்களுக்கு அந்த அசாத்திய ஊக்கத்தை கொடுத்திருக்கிறது. வேலையை விட்ட பின் ஒரு தரைவழிப் பயணத்தை நியுயார்க்கில் இருந்து சியாட்டில்க்கு மேற்கொள்கிறார்.அந்தப் பயணம் பல அனுபவங்களை கொடுக்கிறது. புதிய யோசனைகளை அதை செயல்படுத்தும் வழிமுறைகளை கொடுக்கிறது. அந்தப் பயணத்தில் உதித்த யோசனை தான் அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம். 

சியாட்டிலில் கால் பதித்தவுடன் அவரது யோசனையை செயல்படுத்த தொடங்குகிறார். 1994இல் இணையம் தனது ஆக்டோபஸ் கரங்களை கொஞ்சம் கொஞ்சமாக விரித்த நேரம். இது தான் இந்த உலகத்தின் எதிர்காலம் என்பதை கணிக்கிறார். கடாப்ரா என்ற பெயரில் ஸ்டார்ட்அப்பை துவக்குகிறார். ஆனால் அந்த பெயர் மக்கள் வாயில் பலவிதமாக உச்சரிக்கப்பட, எளிமையான பெயராக வைப்போம் என அமேசான் என்று பெயர் வைக்கிறார். ஆரம்பத்தில் எல்லா பொருட்களையும் இணையத்தில் விற்கத் தடை இருந்தது. இருபது பொருட்களுக்கு மட்டுமே விலக்கு இருந்தது. அதில் இவர் புத்தகத்தை தேர்ந்தெடுத்தார். 

ஒரு சின்ன கேரேஜில் அவரது மனைவி, இரண்டு ப்ரோக்ராமர்ஸ் மற்றும் 10000 டாலர் பணத்துடன் அமேசான் உருவாகிறது. இப்போது பெற்றோர்களுக்கு இவர் மீது கொஞ்சம் நம்பிக்கை பிறக்கவே 100,000 டாலர்கள் முதலீடு செய்கிறார்கள். சிறிய முதலீடு என்பதால் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார்கள். புத்தகங்களை ஸ்டாக் வைத்துக்கொண்டு விற்பதில்லை. ஆர்டர் கிடைத்த பின்பே வாங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆர்டர்கள் குவிந்தபோதும் ஊழியர்கள் பேக்கிங் கைகளால் தான் செய்தார்கள். இயந்திரங்கள் மூலம் பார்சல் பேக் பண்ண பெரிய முதலீடு தேவைப்பட்டது. மீண்டும் முதலீட்டை தேடுகிறார்

Angel Investors மற்றும் (மீண்டும்) பெற்றோர்களும் உதவிசெய்ய 1 மில்லியன் டாலர் முதலீடு கிடைக்கிறது. சில தொழில்முனைவோர்கள் கோடு போட்டால் ரோடே போட்டுவிடுவார்கள். ஜெப் பெசாஸ் ஒரு படி மேலே யோசிப்பவர். புள்ளி வைத்தாலே ரோடு போட்டுவிடுவார். அவரிடம் மில்லியன் டாலர் முதலீடு கிடைத்தால் சும்மா விடுவாரா? அமேசானை வேகமாக வளர்த்தெடுக்கிறார். கைகளால் பேக்கிங் செய்தவர்கள் மிஷின்களால் பேக்கிங் செய்யவேண்டிய அளவிற்கு ஆர்டர்கள் குவிந்தன.

எப்போதும் ஒரு துறையில் நடக்கும் புரட்சிகர மாற்றம் முற்றிலும் அனுபவமில்லாதவர்களினால் தான் தொடங்கும். அது அந்தத் துறையில் பலகாலம் அனுபவமிக்கவர்களின் கண்களை உறுத்தும். கடுப்பாவார்கள். மிரட்டுவார்கள். அப்படித்தான் இவருக்கும் புதிய எதிரிகள் பிறக்கிறார்கள். Barnes & Nobles என்ற அமெரிக்காவின் மிகப்பெரிய புத்தக விநியோக நிறுவனத்தின் CEO ஒரு டின்னருக்கு அழைக்கிறார். அமேசானை என்னிடம் விற்றுவிட்டு ஓடிவிடு என்று கிட்டத்தட்ட மிரட்டல் விடுக்கிறார்.

ஜெப்புக்கு குழப்பம். விற்றுவிடலாமா.. அல்லது மோதிப்பார்க்கலாமா.. என்று Harward Business School  பேராசிரியர்களிடம் யோசனை கேட்கிறார். என்ன சொல்லியிருப்பார்கள் அந்தப் பேராசிரியர்கள்? விற்றுவிடு என்று தான் சொன்னார்கள். ஜெப்புக்கு இப்போதான் இன்னும் அதிகமாக நம்பிக்கை சுரக்கிறது. Barnes&Nobles  அமேசான் மீது வழக்கு தொடுக்கிறது. அதுவே அமேசானை பற்றி பரவலாக எல்லா பத்திரிகைகளிலும் செய்திவருகிறது. அமேசான் இன்னும் அதிகமான மக்களுக்கு சென்று சேர காரணமாகிறது. அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அமேசான்  நேரடியாக மக்களிடம் முதலீட்டை கோரி பங்குசந்தையில் களம் இறங்குகிறது. 

மக்களுக்கு ஒன்று பிடித்துவிட்டால் அதை எந்தக் கொம்பனாலும் அசைக்கமுடியாது. அமேசான் மக்கள் ஆதரவை பெற்றுப் பங்குசந்தையில் மளமளவென்று உயர்ந்தது. எதிரிகள் காணாமல் போனார்கள். பின்னாளில் ஜெப் அவரது எதிரிகளுக்கு நன்றி தெரிவித்தார். அந்த முட்டுக்கட்டை போடாமல் போனால் பத்துவருடம் பின்தங்கி இருக்க வாய்ப்புண்டு. அமேசானை வேகமெடுக்க வைத்த புண்ணியம் அந்த எதிரிகளுக்கே சேரும்.

1998இல் இரு ஸ்டான்ட்போர்ட் பல்கலைகழக பட்டதாரி மாணவர்கள் ஒரு அருமையான இணையதளத்தை அமைத்துவிட்டு முதலீடு தேடி ஜெப்பிடம் வருகிறார்கள். இவரின் அனுபவமும் உள்ளுணர்வும் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல, முதலீடு செய்கிறார். அங்கே இன்னுமொரு பிரமாண்டமான வெற்றிக்கதை பிறக்கிறது. அவர்கள் இணைய உலகத்தையே ஆள்வார்கள் என்று ஜெப் நினைத்திருப்பாரா என்று தெரியவில்லை. அவர்கள் தான் Google-ஐ படைத்த செர்ஜிப்ரின், லாரிபேஜ்.

பல புதிய முயற்சிகளை மேற்கொள்கிறார். 2000ஆம் வருடம் ப்ளூ ஆரிஜின் என்ற பெயரில் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்லும் ஒரு ஸ்டார்ட்அப்பை தொடங்குகிறார். அது பலவிதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜெப் பெசாஸ் அதன்பிறகு வெற்றியும் தோல்வியும் மாறி மாறி பார்க்கிறார். தோல்வி என்பது அங்கே இன்னொரு வெற்றியே. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மிகப்பெரும் வெற்றியைக் கொடுக்கிறார். எண்ணற்ற ஸ்டார்ட்அப்புகளுக்கு முதலீடும் செய்கிறார். அவரிடம் பணமாக இருக்கும் சொத்துக்களை விட முதலீடாக நிறைய இருக்கிறது. அவரது வங்கிகணக்கில் சிறிய அளவில் கூட பணத்தை வைத்துக் கொள்ளமாட்டார்.

அதீத செல்வம் என்பது ஒரு பொறுப்பு. அது ஓரிடத்தில் பணமாக, தங்கமாக குவிந்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை. அது பலரை சென்று சேர வேண்டும். அதன் மூலம் பல நல்ல மாற்றங்கள் நிகழ வேண்டும். இவரது முதலீட்டில் விளைந்த சில குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் பெயரைக் கேட்டாலே இவரைப் பற்றி நன்கு புரிந்துகொள்ளலாம். Google, Airbnb, basecamp, Twitter, Uber, The Wasington Post போன்றவை குறிப்பிடத்தக்க சில நிறுவனங்கள் 

இன்றைய தேதியில் பில்கேட்ஸ்க்கு அடுத்து மிகப்பெரிய பணக்காரர் ஜெப் பெசாஸ் தான். பார்ப்பதற்கு கொம்பில்லாத விகடன் தாத்தா போல இருக்கும் ஜெப்-பெசாஸ் ஐந்து லட்சத்து நாற்பத்திநாலாயிரம் கோடிகள் சொத்துக்கள் கொண்ட மிக வலிமையான மனிதர். 

ஸ்டார்ட்அப் (StartUp) பாடங்கள்:-
மகாத்மா காந்தி சொல்வார் “ நீங்கள் போராடத் துவங்கும்போது முதலில் அவர்கள் உங்களை புறக்கணிப்பார்கள், கண்டுகொள்ள மாட்டார்கள், உங்களைப் பார்த்து சிரிப்பார்கள், பிறகு உங்களுடன் மோதுவார்கள், இறுதியில் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள்”. சமூக போராட்டத்தில் மட்டுமல்ல ஸ்டார்ட்அப் போராட்டத்திலும் இது தான் பெரும்பாலும் நடக்கும். ஆகவே புதிய முயற்சிகளுக்கான போராட்டம் என்பது போராட்டமே அல்ல; அது கொண்டாட்டம்.