பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தேர்தல் முடிவு பரபரப்புகளில், நாம் தவறவிடக் கூடாத இரண்டு தேர்வுகள் குறித்த கவன ஈர்ப்பு இது. சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் எழுதியிருக்கும் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளும், சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதியிருக்கும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளுமே அவை. பொதுத் தேர்தல் முடிவுகள் போல அல்ல இவை. இந்தத் தேர்வுகளில் பங்கெடுத்தவர்கள், வென்றாலும் தோற்றாலும், அவர்களை எதிர்கொள்ளக் காத்திருக்கிறது ஒரு சோதனைக் காலம்!

ப்ளஸ் டூ தேர்வில் தேறிவிட்டால்... மகிழ்ச்சிதான். ஆனால், அதற்குப் பின்..?! 'எம்.பி.பி.எஸ். என்றால், 50 லட்சம், பொறியியலுக்கு 10 லட்சம்...’ என்று பெரும்பாலான கல்லூரிகள் வசூல்வேட்டையில் உச்சம் தொடும் காலகட்டம் இது. 100-க்கு 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்றவர்களாக இருந்தாலும், 'கரன்சி கவுன்ட்டிங்’ பரீட்சையில் தேர்வு பெற்றாலே, அவர்களுக்கான எதிர்காலம் உறுதி செய்யப்படும்!

இந்த நிலையில், 'தேர்வு முடிவுகள் வெளியான பிறகே மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட வேண்டும்’ என்று அரசின் வழிகாட்டுதல்கள் நெறிமுறைகளைத் துச்சமாக்கி, இப்போதே 'சேர்க்கை மேளா’வை அறிவித்து 'பணப் பண்டல் பார்சல்’களைக் குவித்துக்கொண்டிருக்கின்றன பல கல்லூரிகள். தேவையான மதிப்பெண்கள், உதவித்தொகைக்கான தகுதிகள் நிரம்பப் பெற்றிருந்தாலும், 'சீட்டுக்கு நோட்டு’ என்று பேரம் பேசும் பல கல்வி நிறுவனங்கள் முன் கூனிக்குறுகி, விம்மி வெடிக்கும் நெஞ்சத்துடன் காத்துக்கிடக்கின்றனர் பெற்றோர்.

நர்சரி பள்ளியின் தொடக்க வகுப்புகளுக்கே லட்சங்களில் நன்கொடை வழங்கப்படும் உதாரணங்களைச் சுட்டிக்காட்டி, வசூல்வேட்டையில் ஈடுபடும் 'கல்வித்தந்தை’கள் 'குற்ற உணர்ச்சி’ என்ற உணர்வை அறவே தொலைத்துவிட்டார்களா? தனியார் கல்விக்கூடங்களாக இருந்தாலும் அந்தப் பள்ளி அமைந்திருக்கும் பகுதியில் இருக்கும் ஏழை மாணவ-மாணவியருக்குக் கட்டாயம் இடம் அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் 'கல்வி உரிமைச் சட்டம்’ இருப்பதை அரசு இயந்திரமே கண்டுகொள்வது இல்லை என்பது கொடுமையிலும் கொடுமை. 'குறைந்தபட்சக் கல்விக் கட்டணம்’ என்பது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் 'கானல்நீர்’தானா?

ஏழை, எளிய நடுத்தரவர்க்கப் பெற்றோர் முதுகில், குழந்தைகளின் கல்விச் செலவு பெரும் பாறையாக அழுத்துகிறது. அந்தச் சுமையே அவர்களின் ஆயுளுக்குமான உழைப்பைக் காவு வாங்குகிறது. 'அனைவருக்கும் சீரிய கல்வி’ என்பதைச் செயலிலும் புகுத்த, அதிஅவசரத்துடன் களம் இறங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை; அது பெற்றோர்களின் உரிமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு