Published:Updated:

"கெஸ்டஃபாவும்... ஓவ்ராவும்... தமிழகப் போலீஸும்...!" யாரைக் கொண்டு ஆட்சி நடத்த விரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி? #SaveKathiramangalam #KathiramangalamCalls

"கெஸ்டஃபாவும்... ஓவ்ராவும்... தமிழகப் போலீஸும்...!"  யாரைக் கொண்டு ஆட்சி நடத்த விரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி? #SaveKathiramangalam #KathiramangalamCalls
"கெஸ்டஃபாவும்... ஓவ்ராவும்... தமிழகப் போலீஸும்...!" யாரைக் கொண்டு ஆட்சி நடத்த விரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி? #SaveKathiramangalam #KathiramangalamCalls

குளிர்ச்சியான கூடத்தில் நின்றுகொண்டு பாட்டில் தண்ணீரை அருந்தியபடி, “கதிராமங்கலம் மக்கள்தான் காவலர்களைத் தாக்கினார்கள். அதனால்தான் குறைந்த அளவு பலப்பிரயோகம் செய்து அவர்களைக் கலைந்துபோகச் செய்தோம்” என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதை, ''பச்சைப் பொய்'' என்கிறார் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ள கதிராமங்கலத்து குணசுந்தரி. அவர், “இது திட்டமிட்டத் தாக்குதல். எங்கள் ஊர் மரக்கிளைகளை உடைத்து அதில் தடிகள் செய்து எங்களைத் தாக்கினார்கள். குழந்தைகளைக்கூட விடவில்லை. இப்போது நாங்கள் யோசிக்கக்கூட அஞ்சுகிறோம் ” என்கிறார். ‘யோசிக்க அஞ்சுதல்’...  இந்த வார்த்தையைக் குணசுந்தரி சொன்னதும்... கெஸ்டஃபாவ் மற்றும் ஓவ்ரா குறித்த நினைவுகள்தான் வந்தன. 

"அச்சத்தை விதை!” 

நாசிஸமும், ஃபாசிசமும் உச்சத்தில் இருந்தபோது ஜெர்மனியிலும் இத்தாலியிலும் கெஸ்டஃபாவ் மற்றும் ஓவ்ரா குழுக்கள் அமைக்கப்பட்டன. இவர்கள் ரகசிய போலீஸ். இவர்களின் பணி மக்களை அரசுகளுக்கு எதிராகச் சிந்திக்கவிடாமல் செய்வது. இன்னொரு முறை இந்த வாக்கியத்தைப் படியுங்கள். ‘மக்களை அரசுகளுக்கு எதிராகச் செயல்படாமல் தடுப்பது இல்லை; மக்களுக்குத் தொடர்ந்து உளவியல் அழுத்தம்கொடுத்து அவர்களைச் சிந்திக்கவிடாமலேயே தடுப்பது. மனித மூளைகளில் அச்சத்தை விதைப்பது.’ 

இந்த இரண்டு அமைப்புகளும், நேரடியாக ஹிட்லர் மற்றும் முசோலினியின் கட்டுப்பாட்டில் இருந்தன. இவர்கள், மக்களைக் கூர்மையாகக் கண்காணிப்பார்கள். அரசுகள்... வளர்ச்சி... குறித்தெல்லாம் புரட்டுகளைக் கட்டவிழ்த்துவிடுவார்கள். மக்களில் யாராவது அரசுகளுக்கு எதிராக, அவர்களின் திட்டங்களுக்கு எதிராகச் சிந்தித்தால், முதலில் உளவியல் தாக்குதல் தொடுப்பார்கள். தொடந்து சுயமாகச் சிந்தித்துச் செயல்படவும் செய்தார்கள் என்றால், எந்தக் கேள்வியும் இல்லாமல் வதைமுகாம்களில்வைத்து துன்புறுத்திக் கொலை செய்வார்கள். கெஸ்டஃபாவ் குறித்த ஒரு யூதரின் குறிப்பு இவ்வாறாகச் சொல்கிறது: “முதலில், அவர்கள் 'நாங்கள் செயல்பட்டோம்' என்று தாக்கினார்கள்; பின், 'சிந்தித்தோம்' என்று தாக்கினார்கள்; பின்னர், 'நாங்கள் சிந்தித்துவிடுவோமோ' என்று தாக்கினார்கள். நாங்கள் சிந்திப்பதைக்கூட இவர்கள் விரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இதே வார்த்தைகளை... இதே வலிகளைத்தான் கதிராமங்கலத்து குணசுந்தரியும் சொல்கிறார். 

“கெஸ்டஃபாவும்... ஓவ்ராவும்... தமிழகப் போலீஸும்...!”

திருமுருகன் காந்தி தொடங்கி கதிராமங்கலத்துக் காட்சிகள்வரை தமிழக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் கெஸ்டஃபாவையும், ஓவ்ராவையும்தான் நினைவூட்டுகின்றன. அரசுக்கு எதிராக, அதன் மக்கள்விரோதத் திட்டங்களுக்கு எதிராக மக்கள் சிந்திக்கக்கூடாது, செயல்படக்கூடாது என்று இந்த அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அரசின் மக்கள்விரோதப் போக்குக்கு எதிராக யாரேனும் அமைப்புக் கட்டினால், 'குண்டாஸ்' எனப் போலீஸை ஏவுகிறது. கைதைக் கண்டித்து போஸ்டர் ஒட்டினால், அதைக்கூட ஆளைவைத்துக் கிழிக்கிறது. அரசு, மேலும்மேலும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

மக்களிடமிருந்து விலகி, தொடர்ந்து போலீஸ் அரசாகச் செயல்படும் எந்த அரசும் வெகுநாள்கள் வரலாற்றில் நீடித்ததில்லை. சென்ற நூற்றாண்டில் ஹிட்லர், முசோலினியைவிட அதிகமாக அதிகாரத்தைக் குவித்துவைத்திருந்தவர்கள் யாரும் இல்லை. ஆனால், அவர்கள் மக்களை நம்பவில்லை; மக்கள்நலன் குறித்து கவலைகொள்ளவில்லை; அரசை நடத்த யாரும் தேவையில்லை. கெஸ்டஃபாவும், ஓவ்ராவும் மட்டும் போதும், மக்களின் மூளைகளில் ஊடுருவி அச்சத்தைச் செலுத்தி அவர்களை ஆளலாம்... மலைபோலத் தவறுகள் செய்யலாம் என்று நம்பினார்கள்; ஆண்டார்கள்; கொன்றார்கள்; ஒருநாள் மிக மோசமாக வீழ்ந்தார்கள். 

மெரினா, கதிராமங்கலம் என நம் முதல்வர்களும்... மக்களை நம்பாமல், அவர்களுடன் உரையாடாமல், அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள், விரும்புகிறார்கள் எனப் புரிந்துகொள்ளாமல் போலீஸைவைத்து ஆட்சியை நடத்துகிறார்கள். 

வரலாறு நெடுகிலும், அடக்குமுறைகளிலிருந்து மக்கள் வெற்றிகரமாக மீண்டு எழுந்து வந்திருக்கிறார்கள். அரசுகளும், அவற்றின் தலைவர்களும்தான் பரிதாபமாக வீழ்ந்திருக்கிறார்கள். இதை நம் முதல்வர் புரிந்துகொள்வது யாவருக்கும் நலம்!