Published:Updated:

தொடர்ந்து 2 வருடங்கள் 100% தேர்ச்சி... அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊரே திரண்டு பாராட்டு!

தொடர்ந்து 2 வருடங்கள் 100% தேர்ச்சி... அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊரே திரண்டு பாராட்டு!
தொடர்ந்து 2 வருடங்கள் 100% தேர்ச்சி... அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊரே திரண்டு பாராட்டு!

வலிய வந்து,  'அரசுப் பள்ளி நல்லது' என்று ஆசிரியர்கள் கூப்பிட்டாலும், 'அரசுப் பள்ளி வேண்டாம்' என தனியார் பள்ளிகளில் பணத்தைக் கொட்டி பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர்கள்; கிராம மக்கள் மலிந்துவிட்ட காலம் இது. ஆனால், பஸ் வசதி இல்லாத, ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத ஓர் அரசுப் பள்ளியில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை 100 சதவிகிதம் தேர்ச்சி பெற வைத்துள்ளனர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். ‘ஆசிரியப் பணி அறப்பணி, அதற்கு உனை அர்ப்பணி’ என்ற நெறியில் பயணிக்கும் அந்த போற்றுதலுக்குரிய ஆசான்களை மொத்த ஊரும் திரண்டு நின்று கெளரவித்திருக்கிறது. 

தகவல் அறிந்து, ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள பசுவப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பயணித்தோம். 

சுற்றியும் பொட்டல்காடு. வறட்சிதான் அந்த கிராமத்தின் அடையாளம். பஸ் போக்குவரத்து இருக்கும் சாலை ஓரமாக இல்லாமல், உள்ளடங்கி இருக்கிறது அந்தப் பள்ளி. அந்தப் பள்ளியின் கட்டடக் குழுத் தலைவர் கந்தசாமியிடம் பேசினோம்.

"1940-ல இருந்தே இந்தப் பள்ளி இங்க இருக்கு. அப்போ கிறிஸ்தவ மிஷன் பள்ளியா இருந்துச்சு. 1964-ல ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியா மாறிச்சு. எனக்கு சொந்த ஊர் இதே பசுவப்பட்டிதான். இந்தப் பள்ளியிலேயே ஆசிரியரா இருந்து, தலைமை ஆசிரியராாகி 2005-ல ஓய்வு பெற்றேன். ஓய்வுக்குப் பிறகு பள்ளியை மேம்படுத்துவதற்காக இந்த கட்டடக் குழுவை அமைச்சோம். 16 லட்சம் ரூபாய் நிதி திரட்டினோம். 2006-ல உயர்நிலைப் பள்ளியாக இருந்த இந்த பள்ளிக்கு போதிய இட வசதி இல்லாம இருந்துச்சு. அந்தப் பணத்தில் நாலு ஏக்கர் நிலம் வாங்கி பள்ளிக்கு கொடுத்தோம். நபார்டு வங்கி மூலமாக கட்டடம் கட்டிக் கொடுக்க ஏற்பாடு செஞ்சோம். ரொம்ப போராடி 2012-ல இந்தப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியா தரம் உயர்த்தினோம். இன்னொரு பக்கம் பெற்றோர்- ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் சங்கமும் இந்தப் பள்ளியை மேம்படுத்த ரொம்ப உதவியா இருந்தாங்க.

ஆனால், நடுநிலைப்பள்ளியா இருந்தப்ப 400 மாணவர்களுக்கு மேல் இங்கே படிச்சாங்க. ஆனால், இப்போ 250 பிள்ளைங்கதான் படிக்கிறாங்க. அதுக்கு காரணம் இங்கு சரியான பஸ் வசதி இல்லை. நாலு மணிக்கு பசுவப்பட்டிக்கு ஒரு அரசு பஸ் வந்து போவுது. அதை, 'நாலே முக்காலுக்கு வர்ற மாதிரி டைம் மாத்தி கொடுத்தா, பக்கத்து ஊர் பிள்ளைங்களுக்கு வசதியா இருக்கும். இன்னும் பல கிராமங்களைச் சேர்ந்த பிள்ளைகள் இங்கே படிக்க வருவாங்க'ன்னு அதிகாரிகள், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரை போய் பார்த்து பல தடவை மனு கொடுத்துட்டோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கலை. அதேபோல, இந்தப் பள்ளியில் ஆய்வக வசதியும் இல்லை. அதை பற்றியும் அரசு அதிகாரிகள் கவனத்துக்கு பலமுறை கோரிக்கை வச்சுட்டோம். அதுவும் நடக்கலை.

இந்தக் குறைகளை எல்லாம் துச்சமா மதிச்சு, தங்களோட அர்ப்பணிப்பு உணர்வால இந்தப் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது படித்த மாணவர்களை 100 சதவிகிதம் தேர்ச்சிபெற வைத்து அசத்தி இருக்காங்க. அத்தனை ஆசிரியர்களும் இரவு, பகல்னு பாக்காம பள்ளிகூடத்துலேயே பழியா கிடந்து, இந்த சாதனையை நிகழ்த்தி இருக்காங்க. இப்போ எல்லோரும் தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை இங்க கொண்டு வந்து சேர்க்கிறாங்க. இந்த மாற்றத்தை ஏற்படுத்திய தலைமை ஆசிரியை மற்றும் அத்தனை ஆசிரியர்களையும் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து பாராட்டி, கேடயம் கொடுத்து, பொன்னாடை போர்த்தி, கௌரவப்படுத்தி இருக்கிறோம்.

அதோடு, ஆண்டுதோறும் பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு தலா 5,000 ரூபாயை என் மனைவி அங்கம்மாள் பெயரில் வழங்குவதாக அறிவித்து, இந்த வருடம் முதல்கட்டமா வழங்கி இருக்கிறேன். அதேபோல், ப்ளஸ் 2-வில் நல்ல மார்க் எடுத்தும் படிக்க வசதி இல்லாமல் இருக்கும் பத்து மாணவ, மாணவிகளின் படிப்பு செலவைக் கடந்த நான்கு வருடங்களாக ஸ்பான்சர் பிடித்தும், எங்க குழு சார்பிலும் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறோம். கல்வியைக் கொடுத்தால், அந்தக் குடும்பமே தலைக்கும். அதற்காகத்தான் இந்தப் பாடு. பஸ் வசதியை சரி செய்ய நாங்களே மினி பஸ் வாங்கி விடலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கோம்" என்றார்.

பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியை பொன்மணியிடம் பேசினோம். "நான் இந்த பள்ளிக்கு இப்போதான் வந்தேன். இதற்கு முன் உள்ள தலைமை ஆசிரியை அமுதாவும், 22 ஆசிரியர்களும் சேர்ந்துதான் இந்த வெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் படிப்பில் சுமாராக இருக்கும் மாணவர்களை  அடையாளம் கண்டு, அவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு பிறகு, பள்ளி நேரம் போக கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி, சிறப்பு வகுப்பு மூலம் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதோடு, சிறப்பு வகுப்பில் அந்த மாணவர்கள் எப்படி விடையளிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, மதிப்பெண் குறைவாக எடுக்கும் மாணவர்களுக்கு மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். ஆனால், பல மாணவர்கள் ஆசிரியர்களை ஏமாற்றிவிட்டு வீட்டுக்கு போய்விடுவார்களாம்.

ஆசிரியர்கள் நேராக அவர்கள் வீடுகளுக்குச் சென்று, பெற்றோர்களிடம் பேசி,மீண்டும் மாணவர்களை அழைத்து வந்து பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். இங்கு படிக்கும் 90 சதவிகித மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள். அதனால்தான், எல்லா மாணவர்களையும் தேர்ச்சி பெற வைக்க சபதம் எடுத்து, இந்த வெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள்.

கடந்த 2015-16 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் 16 மாணவர்களும், ப்ளஸ் -2வில் 33 மாணவர்களும், 2016-17 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் படித்த 22 மாணவர்களும், ப்ளஸ் -2 படித்த 42 மாணவர்களும் பாஸாகி, 100 சதவிகித ரிசல்ட்டை கொடுத்திருக்கிறார்கள். அதற்காகத்தான் ஊர் மக்கள் அனைவரும் அனைத்து ஆசியர்களையும் ஊர்வலமாக அழைத்துச் சென்று, பாராட்டு விழா நடத்தி கௌரவப்படுத்தி இருக்கிறார்கள். இந்த நூறு சதவிகித தேர்ச்சி சாதனையை ஒவ்வொரு வருடமும் நிகழ்த்த வேண்டும். அடுத்த வருடமே பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 500-க்கும் மேல் உயர்த்த வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்படத் தொடங்கி இருக்கிறோம். நிச்சயம் சாதிப்போம்" என்றார் உறுதியாக!