Published:Updated:

மூன்று லட்சம் போட்டு 300 கோடி சம்பாதித்தது எப்படி?

வதேராவை வம்புக்கு இழுக்கும் பி.ஜே.பி.

பிரீமியம் ஸ்டோரி

''தி.மு.க-வுடன் பி.ஜே.பி. கூட்டணி என்பது இனி எப்போதுமே இருக்காது. கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின்போது நாட்டை சூறையாடியதில் தி.மு.க-வுக்கும் பங்கு உண்டு. 2ஜி விவகாரம் இந்தியா அறிந்தது. தயாநிதி மாறன் பிரச்னையை அனைவரும் அறிவார்கள். இப்படிப்பட்டவர்களோடு நாங்கள் எப்படி சேர முடியும்? பல புதிய அரசியல் கட்சிகளுடன் புதிய கூட்டணி அமைத்திருக்கிறோம்'' - பி.ஜே.பி. கூட்டணி ஆட்சியில் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவி வகித்த ரவிசங்கர் பிரசாத்தை டெல்லியில் நாம் சந்தித்தபோது இப்படித்தான் ஆரம்பித்தார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''மோடியை அதிகமாக விமர்சித்தாரே ஜெயலலிதா?''

''குஜராத்தைவிட தமிழகம் முன்னேறிய மாநிலம் என்று அவர் சொல்வது சரியல்ல. குஜராத்தின் முன்னேற்றம் குறித்து உலகமே வியந்து பாராட்டுகிறது. வேளாண்மை வளர்ச்சி, சிறுதொழில்கள் வளர்ச்சி ஆகியவற்றில் அதிக அளவில் முதலீடுகள் வந்துகொண்டிருக்கின்றன. பெண் குழந்தைகள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிடுதல், பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம், தாய்மார்கள் உடல்நலக் குறைவு விகிதம் போன்றவை மிகவும் குறைந்துவிட்டன. அங்கு தொழிற்சாலைகளில் இருந்து உள்கட்டமைப்பு வளர்ச்சி வரை அனைத்தும் வளர்ந்திருக்கிறது. குஜராத் வேளாண்மை வளர்ச்சி 10 சதவிகிதமாகும். சர்வதேசரீதியில் பல்வேறு விருதுகள் நரேந்திர மோடி அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்கின்றன. இதை ஜெயலலிதா உணரட்டும்.'' 

மூன்று லட்சம் போட்டு 300 கோடி சம்பாதித்தது எப்படி?

''குஜராத் வளர்ச்சி தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் இதர கட்சிகளும் வித்தியாசமான முறையில் புள்ளி விவரங்களை அளித்திருக்கின்றனவே... இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் உங்கள் கருத்தோடு மாறுபடுகிறதே?''

''இந்த நாட்டில் இரண்டு விதமான முன்னேற்றங்கள்தான் உண்டு. ஒன்று குஜராத் மாடல் முன்னேற்றம். மற்றொன்று ராபர்ட் வதேரா மாடல் முன்னேற்றம். மூன்று லட்சம் ரூபாய் முதலீடு செய்த சோனியாவின் மருமகன் வதேரா ஒரு வருடத்துக்குள் 300 கோடி ரூபாய் ஈட்டியிருக்கிறார். இது எப்படி என்பதை சோனியாவும் ராகுலும் விளக்க வேண்டும்.''

''தேர்தலுக்குப் பிறகு நீங்கள் தி.மு.க., அ.தி.மு.க. தயவை நாட மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?''

''நடந்துகொண்டு இருக்கும் தேர்தலில், நரேந்திர மோடியின் தலைமையில் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கும். அதுவும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். எனவே, எந்தக் கட்சியையும் ஆதரவு தேட வேண்டிய தேவை எங்களுக்கு இருக்காது.''

''எரிபொருள், உணவு, ரசாயன உரம் ஆகிய மூன்று முக்கியத் துறைகளுக்கும் பெரிய அளவில் மானியங்கள் அளித்திருப்பதைக் குறை கூறியிருக்கிறீர்கள். ஏன் மானியங்களுக்கு எதிராக இருக்கிறீர்கள்?''

''ஏழை மக்களுக்கு மானியங்கள் மிகவும் முக்கியம். எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர்கள் ஏழை மக்கள் பற்றி கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அரசாங்கங்கள் வருவாய் ஈட்டினால்தான் மானியங்களும் கொடுக்க முடியும். இங்கே தொழில் உற்பத்தி வீழ்ச்சி அடைந்திருக்கும்போது பொருளாதார நடவடிக்கைகள் பாதிப்பில் இருக்கும்போது மானியங்கள் வழங்க இயலாது. 

அடுத்து, ஊழல் இல்லாமல் இருக்க​ வேண்டும். நம் நாட்டில் மின் உற்பத்தியில் 68 சதவிகிதம் நிலக்கரி மூலமாகத்தான் மேற்கொள்ளப்​படுகிறது. ஆனால், இங்கே நிலக்கரிச் சுரங்கங்களில் ஊழலில் ஈடுபட்டிருக்கிறார்கள். நாங்கள் பல்வேறு மின் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்தோம் என்கின்றனர். அது முக்கியம் இல்லை. இதில் எத்தனை மின் உற்பத்தித் திட்டங்கள் மின் உற்பத்தியில் ஈடுபட்டது என்பது முக்கியம். இவற்றைத்தான் இந்த ஆட்சி மீதான குற்ற அறிக்கையில் நாங்கள் கொடுத்திருக்கிறோம். மின் உற்பத்தி செய்கிறோம் என்று கூறி வங்கிகளில் கடன் வாங்கி இருக்கிறார்கள். எவரும் திருப்பிக் கட்டவே இல்லை. இதைத்தான் முறைகேடு என்கிறோம்.''

''''2004 மார்ச் மாதத்தில் காங்கிரஸ் கட்சி, பி.ஜே.பி. அரசாங்கத்துக்கு எதிராக 58 பக்க குற்றபத்திரிகை அறிக்கையை வெளியிட்டது. அதில் உங்கள் அரசாங்கம் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறியிருந்தது. எனினும், காங்கிரஸ் அரசாங்கம் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது நீங்கள் 10 ஆண்டு கால காங்கிரஸ் அரசாங்கத்துக்கு எதிராக 2 லட்சம் கோடி ரூபாய் வரை குற்றம் சுமத்தி இருக்கிறீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் குற்றம்புரிந்த காங்கிரஸ் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?  காங்கிரஸ் கட்சி உங்கள் மீது நடவடிக்கை எடுக்காததுபோலவே, அவர்கள் மீதும் நீங்கள் நடவடிக்கை எடுக்காது இருந்துவிடுவீர்களா?''

''எங்கள் தலைவர் நரேந்திர மோடி கூறியிருப்பதைப்போல எவர் மீதும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க மாட்டோம். ஆயினும், தவறு இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் அமைச்சர்கள் எந்த ஊழலிலும் சம்பந்தப்படவில்லை என்று கபில்சிபல் கூறுகிறார். நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் நான் உறுப்பினராக இருந்திருக்கிறேன். ப.சிதம்பரம் மீது வழக்குத் தொடரக்கூடிய அளவுக்குச் சாட்சியங்கள் 2ஜி பிரச்னையில் இருந்தன. அவர் பாதுகாக்கப்படவில்லையா? அதேபோன்று பவன் குமார் பன்சால் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஊழலில் ஈடுபட்டதற்குப் போதுமான அளவு சாட்சியம் இருந்தது. சி.பி.ஐ. அவரைப் பாதுகாக்கவில்லையா? நிலக்கரிச் சுரங்க ஊழலில் பிரதமரே பல கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் அவரே நிலக்கரித் துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழிவாங்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்க மாட்டோம். ஆனால் பொதுப் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தால். சட்டம் அதன் கடமையைச் செய்யும்.'

''உங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு உங்கள் கட்சிக்குள் கொஞ்சம் குழப்பம் இருந்தது. பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டபின் தொகுதியைத் தேர்ந்தெடுப்பதில் தலைவர்கள் மத்தியில் சில குழப்பங்கள் இருந்தன. இப்போது மூன்று நான்கு தலைவர்கள் தாங்கள்தான் துணைப் பிரதமர் அல்லது நிதி அமைச்சர் என்று சொல்லிக்கொண்டிருகின்றனர். தேர்தலுக்குப் பின்னரும் இந்தக் குழப்பம் நீடிக்குமா?''

''நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர். இதில் மாற்றுத் திட்டம் எதுவும் கிடையாது. இதுதான் நாட்டு மக்களின் மனநிலையும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

நாங்கள் ஒன்றும் ஒரு குடும்ப சார்புக் கட்சி அல்ல. பி.ஜே.பி. போன்ற ஒரு கட்சியில்தான் டீ விற்ற அப்பாவுக்கும், வீடு வீடாகப் போய் வேலை பார்த்து ஜீவனம் செய்த அம்மாவுக்குமாக மிகவும் வறிய நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த நரேந்திர மோடி போன்ற ஒருவர் தன் கடின உழைப்பால் தலைவராக வர முடியும். அவர் முதல்வராக இருந்து ஆற்றிய சேவை அவரை பிரதமர் வேட்பாளராக உயர்த்தி இருக்கிறது. மக்கள் அவருக்கு ஆதரவை அளித்துக்கொண்டிருக்கிறார்கள். அத்வானி மற்றும் இதர மூத்த தலைவர்கள் மத்தியில் எந்தக் குழப்பமும் இல்லை.'

''உங்கள் கட்சியிலும் காங்கிரஸிலும் ஒருவகையான பிராந்தியவாதம் கட்சிக்குள் இருக்கிறது. கடந்த உங்கள் ஆட்சியின்போதுகூட தமிழகத்தைச் சேர்ந்த உங்கள் சீனியர் சட்ட அமைச்சர் ஜனா கிருஷ்ணமூர்த்தி மனக் கசப்புடன் பதவியை ராஜினாமா செய்யவைக்கப்பட்டாரே? இந்த வடக்கு, தெற்கு வேறுபட்டில் உங்கள் கட்சியில் என்ன மாற்றம்?'

''நாங்கள் எந்த மொழியையும் பாகுபடுத்திப் பார்ப்பது இல்லை. ஜனா கிருஷ்ணமூர்த்தி எல்லாருடைய மதிப்பையும் பெற்றவர். உங்கள் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். நாங்கள் தமிழகத்துக்கு உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுத்திருக்கிறோம். எங்கள் கட்சிக்குள் தமிழ்நாட்டில் இருந்து பல தலைவர்கள் வந்திருக்கிறார்கள். 1998-99-ல் எங்கள் ஆட்சியில்தான் அதிக அமைச்சர்கள் தமிழ்நாட்டில் இருந்துதான் அங்கம் வகித்தார்கள் என்பதை மறக்காதீர்கள்.''

- சரோஜ் கண்பத் 

படம்: அனுக்கிருதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு