Published:Updated:

அரசு அச்சகத்திற்கு புதிய கட்டிடம்; ஜெ. உத்தரவு!

Vikatan Correspondent
அரசு  அச்சகத்திற்கு புதிய கட்டிடம்; ஜெ.  உத்தரவு!
அரசு அச்சகத்திற்கு புதிய கட்டிடம்; ஜெ. உத்தரவு!

சென்னை: தமிழரசு காலாண்டு இதழை மாத இதழாக வெளியிடவும், 5 கோடியே 83 லட்சம்  ரூபாய் செலவில் தமிழரசு அலுவலகம் மற்றும் அச்சகத்திற்கு போதுமான இடவசதி  மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டவும்  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"அரசின் சாதனைகள்,  மக்கள் நலத்திட்டங்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உரைகள், அரசின்  திட்டங்களால் பயன் அடைந்தோரின் விளக்கங்கள், அரசால் செயல்படுத்தப்படும்  திட்டங்கள் பற்றிய விவரங்கள், அரசின் அன்றாடப் பணிகள் குறித்த விவரங்கள் மக்களை சென்றடையச் செய்யும் செயலை ‘தமிழரசு’ மாத இதழ் செவ்வனே  செய்து வருகிறது.

மேலும், தமிழரசு அச்சகத்தின் மூலம் மேதகு ஆளுநர் அவர்களின் உரைத் தொகுப்புகள்,  கையேடுகள், மடிப்பேடுகள்,அரசு விழாக்களின் அழைப்பிதழ்கள் மற்றும் சுவரொட்டிகள்  ஆகியவையும் தயார் செய்யப்படுகின்றன.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தமிழரசு அலுவலகம் மற்றும் அச்சகம், தற்பொழுது  எழுது பொருள்துறை வளாகத்தில் ஒரு சிறிய இடத்தில் இயங்குவதன் காரணமாக தமிழரசு  இதழ் வெளியிடுவதிலும், அச்சுப்பணிகளை மேற்கொள்வதில் ஏற்படும் மிகுந்த  இடர்பாடுகளையும் கருத்தில் கொண்டு, சென்னை தரமணியில் 5 கோடியே 83 லட்சம்  ரூபாய் செலவில் தமிழரசு அலுவலகம் மற்றும் அச்சகத்திற்கு போதுமான இடவசதி  மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டவும்,

தமிழரசுஅச்சகத்தில் தற்போது கைகளால் அச்சுத் தகடுகள் செய்யப்படும் நடைமுறையை  முற்றிலுமாக நீக்கி, தற்போதைய நிலையைவிட 200 விழுக்காடு அதிக அளவு  அச்சழுத்தங்கள் பெற இயலும் வகையில் 90 லட்சம் ரூபாய் செலவில் சிடிபி இயந்திரம் வாங்கவும்,தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் தமிழக அரசின் சாதனைகளை  அறிந்து கொள்ளும் வகையில்,ஆங்கிலத்தில் வெளிவரும் தமிழரசு காலாண்டு இதழை  மாத இதழாக வெளியிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழரசு ஆங்கில இதழை மாத இதழாக மாற்றுவதால் ஏற்படும் கூடுதல் பணிசுமையைக்  கருத்தில் கொண்டு, சிறப்பு வெளியீடுகள் மேற்கொள்வதற்கு ஏதுவாகவும்,  பெரும்பாலான செய்தி வெளியீடுகள் தமிழில் வருவதால் அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க ஏதுவாகவும், தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைப் பெற்ற ஒருவரை  நியமிக்கும் வகையில் 20,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் சிறப்பாசிரியர் பணியிடம், 

தமிழ், ஆங்கில மொழி பெயர்ப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில்
20, 000 ரூபாய் தொகுப்பூதியத்தில் ஒரு மொழிப் பெயர்ப்பாளர் பணியிடம்,  பிழைத்திருத்தும் பணிகளை கவனிப்பதற்காக 15,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் ஒரு  பிழைத்திருத்துபவர் பணியிடம் மற்றும் கணினியில் பணி மேற்கொள்ளும் வகையில் 10,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் ஒரு கணினி இயக்குபவர் பணியிடம் என  4 பணியிடங்களை தோற்றுவிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு மைய அச்சகத்தின் பணிகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு,  கணினியிலிருந்து அச்சுத்தகடு தயாரிக்கும் இயந்திரம் இரு கணினிகள்,மென்பொருள்,  பிளேட் பிராசஸர் மற்றும் குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றை 1 கோடியே 10 லட்சம்  ரூபாய் மதிப்பீட்டில் வாங்க சென்ற ஆண்டு முதலமைச்சர் ஆணையிட்டார்.

தற்போது, சென்னை அரசு மைய அச்சகத்தினை மேலும் நவீனப்படுத்தும் வகையில்,  தனித்தாள் வண்ண அச்சு இயந்திரம் ஒன்றினை 6 கோடியே 50 லட்சம் ரூபாய்  செலவில் கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளார்கள்.

அரசு  அச்சகத்திற்கு புதிய கட்டிடம்; ஜெ.  உத்தரவு!

இதன் மூலம் மனித ஆற்றலும், நேரமும் வீணாவது தவிர்க்கப்படும்”என்று கூறப்பட்டுள்ளது.