என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

ஜெ.சபை!

one woman showஇரா.தமிழ்க்கனல்படங்கள் : சு.குமரேசன், என்.விவேக்

##~##

பெல் அடிப்பதற்கு முன்னால் ஓடும் பள்ளிப் பிள்ளைகள் போல... அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் அம்மா வருவதற்கு முன்னால் ஓடி வந்து உட்கார்ந்துகொள்கிறார்கள். 'ஒரே இடத்தில் இடம் கொடுக்கும் வரை, நாங்கள் சபைக்கு வர மாட்டோம்’ என்று தி.மு.க. கோபித்துக்கொண்டு வெளியில் இருப்பதும் இவர்களுக்கு நல்லதாகப் போய்விட்டது. அதனால் இன்றைய சட்டசபை உண்மையில்  ஜெ.சபையாகவே இருக்கிறது. தனது நவரச குணங்களால் களைகட்ட வைக்கிறார் முதல்வர். அதிலிருந்து  சில நிமிடங்கள்...

திட்டு குட்டு!

ஆளும் கட்சியின் புதுக்கோட்டை உறுப்பினர் விஜயபாஸ்கர், தான் சபைக்கு வரும்போது கையில் 'முரசொலி’ கட்டிங் கொண்டுவந்திருந்தார். 'திட்டங்கள் இல்லை, காகிதப் பக்கங்கள்தான் இந்த நிதிநிலை அறிக்கை என்று ஒரு தலைவர் தன் குடும்பப் பத்திரிகையில் அறிக்கைவிட்டுக்கொண்டு இருக்கிறார்!’ என முரசொலி செய்தியைப்பற்றிக் கூறினார். கருணாநிதியின் அறிக்கையை வாசிக்கவும் ஆரம்பித்தார். இது முதல்வரை அதிகமாகக் கோபப்படுத்தியது. உடனே எழுந்த ஜெயலலிதா, 'விஜயபாஸ்கர் அடிக்கடி முன்னாள் முதல்வரின் குடும்பப் பத்திரிகையைப்பற்றி குறிப்பிடுகிறார். அதை யாருமே படிப்பது இல்லை. அவர் என்ன சொல்கிறார் என்றும் யாரும் கவலைப்படவும் இல்லை. ஆனால், உறுப்பினர் மட்டும் தவறாமல் அதைப் படித்து, அவரின் நேரத்தையும் வீணாக்கி, சபையின் நேரத்தையும் வீணாக்குவது ஏன் என்று தெரியவில்லை. அந்தப் பத்திரிகையைப் படிக்கும் நேரத்தைவிட, வேறு ஏதாவது நல்ல புத்தகத்தை அவர் படிக்கலாம்’ என்றதும், விஜயபாஸ்கருக்கு ஷாக்! இதில் கொஞ்சம் கேலி இருந்தாலும் முதல்வரின் கோபமே அதிகம் வெளிப்பட்டது!

ஜெ.சபை!

உஷார் ஜெ!

ஜெயலலிதாவை வாழ்த்தி அ.தி.மு.க-வினர் விளம்பரம் கொடுக்கும்போது எல்லாம் 'எங்களின் நிரந்தரப் பொதுச் செயலாளர்’ என்று அடைமொழி கொடுப்பார்கள். அதற்கு வேட்டு வைப்பதுபோல மார்க் சிஸ்ட் உறுப்பினர் பேச, ஜெயலலிதா அதை உஷாராகச் சமாளித்தார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியகுளம் லாசர், கன்னிப் பேச்சு நிகழ்த்தினார். அப்போது, 'அ.தி.மு.க-வின் அப்போதைய பொதுச் செயலாளரும் முதல்வருமான...’ என்றபடி ஒரு விஷயத்தைச் சொன்னார். சட்டென எழுந்த ஜெயலலிதா, 'முதலில் நான் அ.தி.மு.க-வுக்குப் பொதுச் செயலாளர். பிறகுதான் முதலமைச்சர். நான் இருக்கும் வரை நான்தான் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர்!’ என்று சொன்னது அதிரடி. 'அம்மா திடீரென இப்படிப் பதில் சொன்னது எதுக்குன்னே தெரியலை’ என்று லாபியில் சில உறுப்பினர்கள் பேசிக்கொண்டு இருந்ததையும் கேட்க முடிந்தது!

உடனடி தடாலடி!

ஜெயலலிதா முதல்வர் ஆன இந்த மூன்று மாதங்களில் அவருக்கு ஏற்பட்ட மிகப் பெரிய நெருக்கடி, சமச்சீர்க் கல்வி விவகாரம். டெல்லிக்கும் சென்னைக்குமாக அந்த வழக்கை எடுத்துக்கொண்டு எத்தனை தடவை அலைந்தாலும், வெற்றி என்பது அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அதைச் சறுக்கல் இல்லாதது மாதிரி சமாளித்தார். மார்க்சிஸ்ட் கட்சி யின் அரூர் டில்லிபாபு பேசிக்கொண்டு இருந்தபோது, சமச்சீர்க் கல்விபற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகிக் கொண்டு இருந்தது. அப்போது சபைக்குள் அமர்ந்து டில்லிபாபுவின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தார் ஜெயலலிதா. டபேதார் ஒருவரிடம் அதிகாரிகள் தீர்ப்புத் தகவலைத் துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து அனுப்பினார்கள். இருக்கையை விட்டு எழுந்து சென்ற ஜெ. செயலாளர் களுடன் சில நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு, தனது இருக்கைக்கு வந்தார். பேசிக்கொண்டு இருந்த டில்லிபாபுவும் சமச்சீர் தீர்ப்புபற்றிப் பேச, உடனே எழுந்த ஜெயலலிதா, 'சமச்சீர் பாடத் திட்டம் இந்தக் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப் படுத்தப்படும்’ என்று நான்கு வாக்கியங்களில் தனது முடிவை அறிவித்தார். இது கட்சி பார பட்சம் இல்லாமல் சபையின் அனைத்து உறுப்பினர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது!  

ஜெ.சபை!

வெறுப்பு!

முடிந்த மட்டும் மத்திய அரசு மீதான வெறுப்பைத் தனது பேச்சில் பதிவு செய்ய முதல்வர் தவறவில்லை. தமிழக அரசின் நிதிநிலை குறித்து சில விமர்சனங்களை அரூர் டில்லிபாபு சொன்னார். 'பட்ஜெட்டுக்கு முன்பு சுமார் 9,000  கோடிக்குப் புதிய வரிகள் விதிக்கப்பட்டதைத் தவிர்த்து இருக்கலாம்!’ என்றார். குறுக்கிட்ட ஜெ, 'ஏராளமான திட்டங்கள் வேண்டும் என்று உறுப்பினர் சொல்கிறார்... அவற்றைச் செயல்படுத்த நிதி வேண்டுமே. அந்த நிதி எங்கே இருக்கிறது?’ என்று யதார்த்தமாகப் பதில் சொன்னதும்  டில்லிபாபுவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

விளவங்கோடு உறுப்பினரான விஜயதரணி, 'தமிழக அரசு கேட்டதைவிடக் கூடுதலாக மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளதே!’ என்றதும், சீறி எழுந்த ஜெ., 'இங்கே என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல், உறுப்பினர் பேசுகிறார். மத்திய அரசிடம் பல இனங்களில் நாம் நிதி கேட்டு இருக்கிறோம். எந்தச் சிறப்பு உதவியையும் மத்திய அரசு செய்யவில்லை. இதுவரை தமிழக அரசின் கோரிக்கை களுக்குப் பதில்கூட அளிக்கவில்லை!’ என்று கூற, விஜயதரணியால் மேற்கொண்டு ஒரு வார்த்தை பதில் பேச முடியவில்லை!

ஜெ.சபை!

அதிரடி

தே.மு.தி.க-வின் ஈரோடு சந்திரகுமார் பேசுகையில், 'கடவுள் பக்தி இல்லாதவர்கள் எல்லாம் கடந்த ஆட்சியில் கோயில் அறங்காவலர் குழுவில் இருந்தார்கள். இந்தக் குழுவை மாற்றியமைக்குமா புது அரசு?’ என்று கேட்க, அதற்கு தானே முன்வந்து பதில் அளித்த ஜெயலலிதா, 'இந்த அரசு கேட்டுக்கொண்ட பிறகும் பழைய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சிலர் இன்னும் விலகவில்லை. அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் படும்’ என்று  பகிரங்கமாக அறிவித்தார்!

கறார்!

ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர் நான்ஸி பேசத் தொடங்கியதில் இருந்தே, 'அம்மா, அம்மா, அம்மா’ என அடிக்கடி குறிப்பிட்டபடி இருந்தார். ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவே பொறுக்க முடியாமல் எழுந்து, 'உறுப்பினர்கள், பேரவைத் தலைவரே என்றுதான் பேசத் தொடங்க வேண்டும். பிறகு, தாங்கள் பேச விரும்பி யதைப் பேசலாம். யாருக்கு வேண்டுமானா லும் பாராட்டு தெரிவிக்கலாம். அதிக அளவில் புதிய உறுப்பினர்கள் இருக்கிறார் கள். அவர்களுக்கு பேரவை விதிகள் புத்தகம் தரப்பட்டதா என்று தெரியவில்லை. அவைத் தலைவர்தான் இதைச் செய்திருக்க வேண்டும். அவர் செய்யாததால், நான் இதைக் குறிப்பிட வேண்டி இருக்கிறது!’ என்றார்.

சாஸ்திரம்

நாள், நட்சத்திரம், நேரம், சாஸ்திரம், சம்பிரதாயம் பார்ப்பதில் ஜெ-வை யாரும் மிஞ்ச முடியாது. திருத்துறைப்பூண்டி உலகநாதனின் கேள்விக்கு வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம், 'கிடையாது’ எனப் பதில் அளித்ததைக் கேட்டதும் முதல்வர் அதிர்ச்சி அடைந்துவிட்டார். 'இந்த சட்டப் பேரவையில் அமைச்சர் அளிக்கும் முதல் பதிலே இல்லை என வருவதா?’  என்று கேட்ட ஜெ., 'அனைத்துத் துறை செயலாளர்களிடம் இருந்து வரும் பதில்களை அவைத் தலைவர் பார்த்த பிறகுதான், அவையில் எழுப்பப்படுகிறது. அப்படி வரும்போது, முதல் பதில் அளிக்கும் அமைச்சர், 'இருக்கிறது’ எனச் சொல்லும்படி முன்கூட்டியே செய்திருக்கலாமே...’ என்று சபாநாயகருக்கு ஆலோசனை சொன்னார்!  

கனிவு

அம்மா கேட்பார் என்பதற்காகவே அனைத்து உறுப்பினர்களும் ஆர்வமுடன் பேச்சுக்களைத் தயார் செய்து வருகிறார்கள். அவர்களை ஏமாற்றாமல் அத்தனை பேர் பேச்சுக்களையும் கவனத்துடன் ஜெய லலிதா கேட்கிறார். தே.மு.தி.க-வின் கும்மிடிப்பூண்டி சேகர் பேசும்போது, தொகுதிப் பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போக, அதை முதல்வரிடம் கொடுத்துவிடுங்கள் என்றார் சபாநாயகர்.  உடனே எழுந்த முதல்வர் ஜெ., ''உறுப்பினர்கள் தொகுதிபற்றிப் பேச நினைக்கிறார்கள். முழுமையாக அதைப் பேச முடியாவிட்டாலும், அவர்களின் பேச்சு முழுவதையும் அவைக் குறிப்பில் இடம்பெறச் செய்ய வேண்டும்!'' என்றார்.

கர்ஜித்த ஜெ!

கடந்த 11-ம் தேதி அன்று ஜெயலலிதா மிகக் கடுமையான முகத்துடன் சபைக்கு வந்தார். இலங்கைப் பிரச்னை குறித்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து கோத்தபய ராஜபக்ஷே அடித்த கமென்ட்டைக் கேட்டதால் ஏற்பட்ட கோபம் அது.

'மனிதாபிமானம் அற்ற முறையில் தாக்குதல் நடத்தி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறந்தார்கள். அதைக் கண்டித்து நாம் தீர்மானம் போட்டோம். இதற்குக் களங்கம் கற்பிக்கும் வகையில், கோத்தபய ராஜபக்ஷே பேட்டி கொடுத்தது தனது தவறை நியாயப்படுத்துவதுபோல உள்ளது. இது வன்மையாகக்

ஜெ.சபை!

கண்டிக்கத்தக்கது. தமிழக அரசுக்கு அவர் ஆலோசனை சொல்வது சாத்தான் வேதம் ஓதுவதுபோல உள்ளது.

இவருடைய பேட்டியில் இருந்தே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் புரிந்துள்ளது என்பது மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது!’ என்று கர்ஜித்தவர், 'நாம் நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்தவிதமான நடவடிக் கையும் எடுக்காததுதான் இது போன்ற ஒரு பேட்டியை அளிப்பதற்கான துணிச் சலை கோத்தபயவுக்கு அளித்து இருக்கிறது. இலங்கைத் தமிழருக்கு மறு வாழ்வு அளிக்கப்படும் வரை, எனது அரசு ஒயாது!’ என்று சொல்லும்போது, ஜெயலலிதாவின் முகம் அளவுக்கு மீறிச் சிவந்து இருந்தது. குரலிலும் வழக்கத்தைக் காட்டிலும் அதிக அனல்!