Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்

மிழ்நாடு எதில் முன்னணியில் இருக்கிறது என்பது குறித்து, கடந்த வாரம் நமது அரசியல் தலைவர்கள் அனல் பறக்கப் பேசியதைக் கேட்டோம். அவர்கள் சொல்ல மறந்த ஒரு முன்னணித் தகவல், இந்தியாவிலேயே அதிக விபத்துகள் நடப்பதும், அதிக உயிரிழப்பும் தமிழ்நாட்டில்தான்.

பறக்கும் சாலைகளும், தங்க நாற்கர சாலைகளும் பளபளப்புடன் நம் முன்னே நீண்டிருக்கின்றன. ஆனால், பதறவைக்கும் செய்தி... 2013-ம் ஆண்டில் மட்டும் 14,504 விபத்துகள் நடந்து, அதில் 15,563 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பொருள் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்நாள் நிம்மதியை இழந்துள்ளன.

விபத்துகளின் எண்ணிக்கை விபரீத வேகத்தில் வளர்வது ஏன்? இந்த விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதுதான். மது குடித்து தாங்களும் தவணைமுறையில் செத்து, மற்றவர்களையும் விபத்துகளில் கொலை செய்கிறார்கள். இந்தக் 'குடி’மக்கள் தரும் வருமானத்தில்தான் குடிமக்களைக் காப்பாற்றுகிறதாம் அரசு.

அதேநேரம் இது குடிகாரர்களின் தனி பிரச்னை அல்ல. அதிகமான வேலை, அதிகரிக்கும் வாழ்வியல் நெருக்கடிகள், நிரந்தரமற்ற பணிச்சூழல்... எல்லாம் சேர்ந்து தொழிலாளர்களைக் கடும் மன அழுத்தத்தில் தள்ளுகின்றன. தண்ணீர் லாரி, சரக்கு லாரி, பேருந்து, வாடகை வாகனம் போன்றவற்றை தொழில்முறையில் இயக்கும் ஓட்டுநர்கள், தொடர்ந்து 20 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற சூழல். விளைவு... உடலும் மனமும் சோர்வுற்றுத் தடுமாறும் கணத்தில், அது விபத்தாக மாறிவிடுகிறது.

இந்தியாவைத் தவிர, உலகின் வேறு நாடுகளில் ஓட்டுநர் உரிமம் வாங்குவது, மிகக் கடினமான பணி. ஆனால் இங்கு, நாம் நேரில் செல்லாமலேயே சில நூறு ரூபாய்கள் செலவில் ஓட்டுநர் உரிமம் வாங்கிவிடலாம். எனில், அந்த உரிமங்களால் என்ன பயன்?

வாகனம் என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கம் என்றாகிவிட்ட நிலையில், கல்லூரி நிலையிலேயே சாலைவிதிகளைக் கற்றுத்தர வேண்டும். அதிகாரபூர்வமாக அனைவருக்கும் வாகன ஓட்டுநருக்கான பயிற்சி வழங்க வேண்டும். உயிரின் முக்கியத்துவத்தையும், சாலையில் சகபயணியின் மீது கொள்ளவேண்டிய கரிசனத்தையும் கற்றுத்தர வேண்டும். இவற்றை நெறிப்படுத்தி, செயல்படுத்த அரசு நேர்மையாக, கறாராக வினையாற்ற வேண்டும்!