Published:Updated:

யாருக்கு என்ன ரேங்க்?

ப.திருமாவேலன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

யாருக்கு என்ன ரேங்க்?

ப.திருமாவேலன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:

பொட்டி திறக்கப்படுவதற்கு முன்னதாகவே தெரிய வந்த முடிவுகளைப் பேசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்!

மே-16, எந்தக் கட்சி எந்தத் தொகுதியைக் கைப்பற்றியது என்பதை அறிவிக்கும். ஆனால், ஏப்ரல்-24 தமிழ்நாடு எத்தகைய மனநிலையில் இருக்கிறது என்பதைத் தெரிவித்துவிட்டது.

யாருக்கு என்ன ரேங்க்?

யாருக்கு என்ன ரேங்க் என்பதைப் பார்ப்போமா?

ஜனநாயகத்தில் மக்களின் பங்கேற்பு என்பது, ஓட்டு போடுவது மட்டுமே என்று சுருங்கிப்போன நிலையில், அந்த ஓட்டு போடும் சம்பிரதாயச் சடங்கையே ஜனநாயகக் கடமையாக மக்கள் நினைக்கிறார்கள். வாக்குச் சாவடியில் வரிசையில் நிற்பதையே வாழ்க்கைச் சாதனையாக மக்கள் நினைக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு நாள் நடக்கும் இந்தத் திருவிழா என்ன சொல்லி இருக்கிறது?

ஜனநாயக ஆர்வம்:

47 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேர்தலில்தான் வாக்குப்பதிவு அதிகம். 1967-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 76.59 சதவிகித வாக்குப்பதிவு நடந்தது. அதற்குப் பிறகு அப்படியே தேய்ந்து... தேய்ந்து 57 சதவிகிதமாக கட்டெறும்பு ஆனது. கடந்த தேர்தலில் (2009) 72.98 சதவிகிதமாக எகிறியது. இந்தத் தேர்தலில் அது இன்னும் அதிகரித்து 73.67 சதவிகிதம் ஆனது. 26.33 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை என்றாலும், இவ்வளவு பேராவது வந்தார்களே என்று பெருமைப்படத்தான் வேண்டும்!

தேர்தல் ஆணையத்தின் தெளிவு:

73.67 சதவிகிதம் பேரை வாக்குச்சாவடிக்கு வரவழைக்க, தேர்தல் ஆணையத்தின் துல்லியச் செயல்பாடுகள் முதல் காரணம். சுத்தமான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதில் கடந்த 10 ஆண்டுகளாகவே தேர்தல் ஆணையம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர்களுக்கு ஓர் அங்கீகாரத்தைக் கொடுத்தது. கடந்த தேர்தலில் இருந்தே பூத் சிலிப் கொடுக்கவும் ஆரம்பித்தார்கள்.

வாக்களிப்பின் அவசியத்தை உணர்த்தி, தேர்தல் ஆணையம் நடத்திய விழிப்பு உணர்வுப் பிரசாரம் பலரையும் வீட்டைவிட்டு வெளியே வரவைத்தது. பிரபலங்கள் முதல் பிராய்லர் கடை வரைக்கும், 'வாக்களிப்பது நமது கடமை’ என்று வாய் வலிக்கச் சொன்னார்கள். வாக்களித்த மையைக் காட்டினால் 50 ரூபாய்க்கு சிக்கன் இலவசம் என்பதில் இருந்து, ஜீன்ஸ் எடுத்தால் 20 சதவிகிதம் கழிவு என்பது வரைக்கும் வர்த்தகர்கள் உள்ளே புகுந்து மார்க்கெட்டிங் செய்தார்கள். ஓட்டு போடாவிட்டால் சாமிக் குத்தம் ஆகிவிடும் என்று குற்றவுணர்வை விதைத்தார்கள்!

ஆனாலும் அசமந்தம்!

ஆனாலும் அசைந்துகொடுக்காதவர்கள் தமிழ்நாட்டில் உண்டு என்பதையும் இந்தத் தேர்தல் காட்டியது. மொத்த வாக்காளர்களில் 1 கோடியே 45 லட்சத்து 11 ஆயிரத்து 744 பேர் வாக்களிக்கவில்லை. அதாவது 26.33 சதவிகிதம் பேர். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களாகவோ, தேர்தல் பாதை திருடர் பாதை என்று சொல்பவர்களாகவோ இவர்கள் இருந்தால், அந்தக் கொள்கைக் கோமான்களைப் பாராட்டலாம். 'உடல் நலம் இல்லை’, 'வெளியூரில் இருந்தேன்’, 'இந்தத் தேர்தல்களில் எனக்கு நம்பிக்கை இல்லை’, 'யாருக்கு வாக்களித்தும் எந்தப் பயனும் இல்லை’... என்பன போன்ற பொருத்தமான காரணம் சொல்பவர்கள் குறிப்பிட்ட சதவிகிதம்தான் இருப்பார்கள். அலட்சியம், 'வெயில் ஓவரா இருக்கு’, 'கூட்டமா இருக்கு’, 'வரிசையில் ரொம்ப நேரம் நிக்கணும்’, 'நோ பாலிடிக்ஸ்யா’, 'நோ இன்ட்ரஸ்ட்யா’ என்ற விட்டேத்தியான மனோபாவம் கொண்டவர்கள்தான் இவர்களில் அதிகம். தொழிலதிபர்கள், பெரும் பணக்காரக் குடும்பத்தினர், அதிகார லகானை வைத்திருப்பவர்களும் வாக்களிக்க வருவது இல்லை. ஓர் ஆட்சியை வைத்து அதிகப்படியான லாபம் அடையும் இந்தச் சமூகம், வாக்களிப்பதை அவமானமாக நினைக்கிறது; வரிசையில் நிற்பதற்கு வருத்தப்படுகிறது.

மெத்தப்படித்த மேதாவிகள் இருக்கும் தலைநகர் சென்னையின் மூன்று தொகுதிகளின் வாக்குப்பதிவு 60, 61, 63 சதவிகிதம்தான். படித்தவர்கள் பொங்கி வழியும் கன்னியாகுமரியிலும் 67 சதவிகிதம்தான். கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகள் வாக்குப்பதிவு மந்தப் பட்டியலில் இருக்கின்றன. நகர்மயமாதல், சோம்பேறிமயமாதலாகவும் உருமாறிக்கொண்டு இருக்கிறது!

யாருக்கு என்ன ரேங்க்?

200 ரூபாய்!

இறுதியில் எல்லாக் கொள்கை முழக்கங்களும் 200 ரூபாயில் அடங்கிவிட்டது. ஓட்டுக்கு 2,000 ரூபாய் தரப்போகிறார்கள் என்று தண்டோரா போடாத குதூகலத்துடன் சொல்லி, கடைசியில் கவருக்குள் இருந்தது வெறும் 200 ரூபாய்தான். அதிலும் பலர் ஆட்டையைப் போட்டு 100 ரூபாய் மட்டும் வைத்துவிட்டார்கள். ஒரே தெருவில் சிலருக்கு மட்டும் கொடுத்து பலருக்கும் தரவில்லை. ஓட்டுக்கு 200 ரூபாய் என்று சொல்லிவிட்டு, வீட்டுக்கு 200 ரூபாய் என்று சில இடங்களில் விதியைத் திருத்திவிட்டார்கள். சில 'அதிர்ஷ்டசாலி’களுக்கு 500 ரூபாய் கிடைத்துள்ளது. பலருக்கு எதுவுமே கிடைக்கவில்லை.

கல்யாண வீட்டில் கவர் முக்கியம் என்பதைப் போல, தேர்தல் நேரத்திலும் கவர் கட்டாயம் ஆகிவிட்டது. திருமங்கலத்தில் தி.மு.க. தொடங்கி வைத்ததை, மாநிலம் முழுக்க அமல்படுத்தியதில் அ.தி.மு.க. விஞ்சிவிட்டது. இனி எப்போது தேர்தல் நடந்தாலும், சொந்தக் கட்சிக்கு வாக்களிப்பதற்குக்கூட கவர் எதிர்பார்க்கும் ஆசையை இரண்டு கட்சிகளுமே விதைத்துவிட்டன. ஆனால், மக்களும் நேர்மையானவர்கள்தான். அவர்களும் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களிடம்தான் பணத்தை எதிர்பார்க்கிறார்கள். யாரிடம் கேட்க வேண்டும் என்பதைத் தெரிந்திருப்பவர்களின் 'நேர்மை’யைப் பாராட்டத்தானே வேண்டும்!

அதிகாரம் இல்லாத ஆணையம்!

தொகுதிக்கு 20 கோடியை அனுப்பி, பட்டுவாடா செய்யும் அளவுக்குப் பகிரங்கமாகப் பணப்பரிவர்த்தனை நடந்தபோது தடுக்கத் தவறியது தேர்தல் ஆணையத்தின் குற்றம். நித்தமும் நிருபர்களைச் சந்தித்தாலே தேர்தல் நியாயமாக நடந்துவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ?

வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுத்து, கொடுத்த வேட்பாளர் யாரோ அவரைப் பகிரங்கப்படுத்தி... அந்தத் தேர்தலையே நிறுத்தும் வல்லமை தேர்தல் ஆணையத்துக்கு இருப்பதாகவே தெரியவில்லை. 'வாக்களிப்பது நமது கடமை’ என்று பொதுமக்களுக்குப் பிரசாரம் செய்வதோடு ஆணையத்தின் கடமை முடிந்துவிட்டதா? நேர்மையான தேர்தல் நடத்துவது ஆணையத்தின் கடமை அல்லவா?

தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு போட்டதன் ரகசியம் என்ன? எப்போதும் குண்டுச் சத்தம் கேட்டும் காஷ்மீருக்கு இல்லாத தடை உத்தரவு தமிழகத்துக்கு ஏன்? 'அமைதிப்பூங்காவான தமிழகத்தில் 144 எதற்கு?’ என்று காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சருக்குத்தான் கோபம் வந்திருக்க வேண்டும். ஒரு டி.ஜி.பி. போதாது என்று, இரண்டு டி.ஜி.பி-க்கள் இருக்கும்போது எதற்கு 144? 15 நாட்களாகத் தேர்தல் ஆணையத்தைத் திட்டிப் பேசிக்கொண்டு இருந்த ஜெயலலிதா, 'அனைவரும் தேர்தல் ஆணையத்துடன் ஒத்துழைக்க வேண்டும்’ என்று அமைதியின் திருஉருவாகப் பேசியதும், கருணாநிதி சந்தேகப்படுவதும் சரியாகத்தானே இருக்கிறது?

யாருக்கு என்ன ரேங்க்?

கட்சிகளின் கவனத்துக்கு!

பண பலம், அதிகார பலம், போலீஸ் பலம் இருக்கிறதே தவிர, ஆளும் கட்சியினருக்கு ஆர்வ பலம் இல்லை. ஜெயலலிதாவின் பார்வை பட்டதும் முன்னால் நிற்கும் 30 பேருக்கு மூச்சு அடைக்கிறது உண்மைதான். ஆனால், கடைசிக்கட்டப் பொறுப்பாளர்கள் விடலைகளாகவே திரிகிறார்கள். மந்திரி சம்பாதித்துவிட்டார், மாவட்டச் செயலாளர் சம்பாதித்துவிட்டார்.நாமும் சம்பாதிப்பதற்காகத் தான் இந்தத் தேர்தல் என்று நினைத்தார்களே தவிர, அம்மாவை டெல்லியில் அதிகாரம் பொருந்தியவராக மாற்ற எவரும் மெனக்கெடவில்லை. கூட்டம் பேசுவதும், கும்பிடுகளை எண்ணுவதும், வளைந்து குனிவதை ரசிப்பதும், ஹெலிகாப்டரில் வலம் வருவதும் போதுமானது அல்ல. கார்டனுக்கும் கடைசித் தொண்டனுக்குமான இணைப்புக் கண்ணி அறுந்துவிட்டதை அம்மா உணராவிட்டால், சட்டமன்றத் தேர்தலும் சங்கடம் ஆகிவிடும்!

எவ்வளவு பலவீனமான சூழ்நிலை இருந்தாலும் கட்சியின் உள்கட்டமைப்பும் அடித்தளமும் வலுவாக இருந்தால் அதுவே முக்கிய பலம் என்பதை தி.மு.க. இந்தத் தேர்தலில் நிரூபித்தது. நகராத நந்திகளாக பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் இருந்தாலும் சுறுசுறுப்புக் குறையாத தொண்டர்களை இன்னமும் அந்தக் கட்சி கொண்டுள்ளது.

10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதையும் பார்க்க முடிந்தது. நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் எனப் பிரசாரம் செய்து, மோடிக்கு எதிரான வாக்குகளை மொத்தமாக காங்கிரஸ் பக்கம் திருப்பும் பலம் தமிழ்நாடு காங்கிரஸுக்கு இல்லை. ஜி.கே.வாசன் மட்டும் ஊர் ஊராக அலைந்தார். சோனியாவும் ராகுலும் தலா ஒரு கூட்டம் மட்டுமே பேசினார்கள். டெல்லி காங்கிரஸ் தலைவர்களை தமிழகத்தில் குவித்து ஒரு புயல் கிளப்பியிருக்க வேண்டாமா காங்கிரஸ்? ஆனால், அந்தக் கவலை எந்தத் தலைவர்களுக்கும் இல்லை. தாங்கள் வென்றால் போதும் என்று தங்கள் தொகுதிகளுக்குள் முடங்கிவிட்டார்கள்.

தமிழக பா.ஜ.க-வைப் பொறுத்தவரை அவர்கள் எதிர்கொண்ட முதல் தேர்தல் சவால் இது. திடீர் கூட்டத்தைச் சமாளிக்க முடியாத புதுக் கடைக்காரர் போல திணறியது அந்தக் கட்சி. அதே நேரத்தில், கவிழ்க்கவேண்டிய கட்சிப் பிரமுகர்களையும் கவிழ்த்தார்கள்.

யாருக்கு என்ன ரேங்க்?

விஜயகாந்த் மட்டும்தான் கூட்டணிக்கு முக்கிய டானிக். 'ரூம்பாய்க்குக்கூட தெரியாத வாஜ்பாயை எங்கள் அம்மாதான் ஃபேமஸ் ஆக்கினார்’ என்று எஸ்.எஸ்.சந்திரன் சொன்னது போல, நகரத்தில் இருந்த நரேந்திர மோடியை கிராமச் சாலைகளுக்குக் கொண்டுபோனவர் விஜயகாந்த் மட்டும்தான். அவருமே 14 சீட் வாங்குவதில் காட்டிய வைராக்கியத்தை, தேர்தல் வேலைகளில் காட்டவில்லை.

வைகோ, பெரும்பாலும் விருதுநகரில் முடங்கிவிட்டார். ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதிக்கும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் தொகுதிகளுக்கு மட்டுமே போனார். ராமதாஸ், தன் மகன் தொகுதிக்குள்ளேயே மல்லுக்கட்டினார். எப்போதாவது மாம்பழச் சின்னத்துக்கு மற்ற இடங்களில் வாக்குக் கேட்டார். மகன் வருத்தம், மருத்துவரைச் சுணக்கியது. மொத்தத்தில் கூட்டுக் குடும்பமாகக் காட்டிக்கொண்டு குழப்ப சீரியல் குடும்பமாக அமைந்திருந்தது பா.ஜ.க. கூட்டணி.

கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக உழைத்தார்கள். 1952-ல் சென்னை ராஜதானியில் ஆட்சியைப் பிடிக்கப்போகிறார்கள் என்று கருதப்பட்ட கம்யூனிஸ்ட்கள், இரண்டுக்கும் பத்துக்கும் அலைந்து, களைத்து, தனித்து நிற்பதற்கு 16 தேர்தல் தாண்ட நேர்ந்தது. கடைசி நேரத்தில் புத்தி வந்தாலும் புழுதி பறக்க வேலை பார்த்தார்கள். இனியாவது சுயம் இழக்காமல் இருந்தால், இந்த உழைப்புக்கும் பலன் இருக்கும்!

இது கோடீஸ்வரர்களுக்கான தேர்தல். சீட் வாங்க மட்டுமல்ல, பிரசாரம் செய்யவும் இனி பணக்காரர்களால் மட்டுமே முடியும். அப்பாவிகள் அனைவரும் இனி பார்வையாளர்கள் மட்டும்தான் என்பதை இந்தத் தேர்தல் நெத்தியில் அடித்து சொல்லிவிட்டது.

அதே சமயம் எந்தப் பிரசாரமும் இல்லாமல் ஆம் ஆத்மிக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. நோட்டு தராமலேயே 'நோட்டா’வுக்கு ஓட்டு போட்டதாகவும் இளைஞர்கள் குரல் அதிகம் கேட்கிறது.

'மேலே குறிப்பிடப்பட்ட இவர்களில் எவரும் இல்லை’ என்று பெரும்பாலானவர்கள் சொல்வதற்கு முன்... திருந்துங்கள் தலைவர்களே!