Published:Updated:

பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கண்டனம்!

Vikatan Correspondent
பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கண்டனம்!
பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கண்டனம்!
பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கண்டனம்!

சென்னை:  பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியிருப்பதற்கு கண்டனம்  தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்த விலை உயர்வை மத்திய அரசு  உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின்  தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக, விலைவாசி உயர்ந்து வருவதும்,  ரூபாயின் மதிப்பு அதிக ஏற்ற இறக்கத்துடன் இருப்பதும் வாடிக்கையாகவே இருந்து  வருகிறது. விலைவாசி உயர்வுக்கு வித்திடும் வகையில் மத்திய அரசு அவ்வப்போது  பெட்ரோல் விலையை உயர்த்தி வருகிறது.

 பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 வரை வரலாறு காணாத வகையில் மத்திய  அரசு கடந்த மே 23-ம் தேதி உயர்த்தியது. அதன் பிறகு, மக்களின் எதிர்ப்பு காரணமாக  லிட்டருக்கு ரூ.2-ஐ குறைத்தது.

 உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக அதிக அளவுக்கு குறைந்த நிலையில்  ஜூன் 29-ம் தேதி லிட்டருக்கு மேலும் ரூ.3 வரை குறைக்கப்பட்டது. ஆனால்,  பெட்ரோல் விலையை மே 22-ம் தேதி இருந்த நிலைக்காவது குறைக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்தேன்.

 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையேற்றம் என்றும், ரூபாயின் மதிப்பு  வீழ்ச்சி என்றும் காரணம் காட்டி, மத்திய அரசு பெட்ரோல் விலையை திங்கள்கிழமை  (ஜூலை 23) நள்ளிரவு முதல் லிட்டர் ஒன்றுக்கு 70 காசு என்ற அளவுக்கு  உயர்த்தியுள்ளது.

விண்ணை முட்டும் விலைவாசியையும், வீழ்ச்சியடைந்து கொண்டே செல்லும் இந்திய  ரூபாயின் மதிப்பையும் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், இதற்கு நேர்மாறான போக்கை மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருவது  மிகுந்த வேதனை அளிக்கும் செயல் ஆகும்.

இந்த விலை உயர்வு முற்றிலும் நியாயமற்ற செயல் ஆகும். ஏழை, எளிய, நடுத்தர  மக்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்றுகின்ற செயல் ஆகும். உலகச் சந்தையில் கச்சா  எண்ணெய் விலை ஏற்றம் என்ற வாதத்தை அடிக்கடி கூறி, பெட்ரோல் விலையேற்றத்தை  நியாயப்படுத்த முனைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மத்திய அரசின் தவறான பெட்ரோல் விலை நிர்ணயக் கொள்கையே இவ்வாறான  பெட்ரோல் விலை ஏற்றத்துக்குக் காரணமாகும்.

இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதோடு,  மே 22-க்கு முன்பாக இருந்த அளவுக்கு பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும்  என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.