Published:Updated:

மோடி இதனால்தான் அப்போது ஜிஎஸ்டி-யை எதிர்த்தார் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மோடி இதனால்தான் அப்போது ஜிஎஸ்டி-யை எதிர்த்தார் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
மோடி இதனால்தான் அப்போது ஜிஎஸ்டி-யை எதிர்த்தார் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

மோடி இதனால்தான் அப்போது ஜிஎஸ்டி-யை எதிர்த்தார் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

 ஜிஎஸ்டி வரி விதிப்புமுறை பற்றி வணிகர்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த மத்திய வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 


இன்று காலை அவர் 7.30 மணியளவில் மதுரை 35-வது வார்டில் மக்களை வீடுதோறும் போய் சந்தித்து கட்சியின் உறுப்பினர் சேர்ப்பு பணி மேற்கொள்வதாகவும், பின்பு அந்தப் பகுதியில் உள்ள இல்லத்தில், இல்லத்தாருடன் இணைந்து உணவு உட்கொள்ள இருப்பதாக முதல் நாள் அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்பகுதி மக்கள் பா.ஜ.க-வுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டவுள்ளனர் என்ற செய்தி வெளியானவுடன் அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, 10 மணியளவில் மதுரை மடீட்சியா அரங்கத்தில் ஜிஎஸ்டி பற்றிய பரப்புரை கூட்டத்தில் மட்டும் கலந்துகொண்டார்.

கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மடீட்சியாவின் முன்னாள் தலைவர் ஞானசம்பந்தம், "மத்திய அரசு அறிவித்துள்ள ஹச்எஸ்என்(HSN) குறியீட்டு வரிசையில் பெரும்பாலான பொருள்கள் பற்றிய போதுமான தகவல்கள் இல்லாதது சற்று குழப்பத்தை வணிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. சில பொருள்கள் இந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன, அதற்கு நிகரான தமிழ் அல்லது ஆங்கில வார்த்தைகள் இல்லாமல் தடுமாற வேண்டியுள்ளது. உதாரணத்துக்கு ஹச்எஸ்என் குறியீட்டில் 'முக்ரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முக்ரி என்றால் பொரி உருண்டை. ஹச்எஸ்என் குறியீட்டைப் பார்க்கும் நம் ஊர் வியாபாரிக்கு இது எப்படி புரியும். இதுபோன்ற தடைகளைத்  தவிர்க்க  ஹச்எஸ்என் குறியீடு கூடிய விரைவில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார். மேலும், ஜி.எஸ்.டி வலைதளத்தில் பெயர் பதிவிடும்பொழுது முதல் பெயர், நடுப்பெயர் மற்றும் சர்ப்பெயர்  பதிவிட வேண்டியுள்ளது. பெரும்பாலும் தமிழர்களுக்கு நடுப்பெயர் போடும் வழக்கம் இல்லை. அவ்வாறு நடுப்பெயர் பதிவிடாமல் விட்டால் நம் பதிவை ஜிஎஸ்டி வலைதளத்தில் பதிவேற்ற முடியவில்லை. இதுபோன்ற  நடைமுறை சிக்கல்களைத் தவிர்க்க ஜிஎஸ்டி கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இந்திய பேக்கரி சங்கத்தின் செயலாளர் அன்புராஜன் பேசுகையில், "பன்னாட்டு பிஸ்கட் நிறுவங்களுக்கு விதிக்கும் வரியையே எங்களுக்கும் விதித்துள்ளது. சிறு பிஸ்கட் உற்பத்தியாளர்களை நலிவடையச்செய்யும், நாங்கள் உற்பத்திக்காக வாங்கும் மூலப்பொருள்களுக்கும் 5 முதல் 28 % வரி கட்டி ஜிஎஸ்டி வரியாக 18% கட்டுவது எங்களுக்கு பெரும் சுமை" என்றார்.

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சார்பாக பேசிய பரமசிவம், " தீப்பெட்டி தொழிற்சாலைகள், முழுவதும் இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலை மற்றும் பகுதியாக இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலை என்று இரண்டு வகையில் உள்ளன. ஜிஎஸ்டி இந்த இரண்டு வகையான உற்பத்தியாளர்களுக்கு 18% வரி விதித்துள்ளது. முழுவதும் இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலையில் 500 தீப்பெட்டி செய்ய 17 பேர் இருந்தால்போதும், ஆனால், மனித சக்தியை நம்பி இயங்கும் தொழிற்சாலையில் 500 தீப்பெட்டி செய்ய 400 நபர்கள் வேண்டும். அவர்களுக்கு கூலி கொடுத்து, 18% வரியும் செலுத்தச் சொன்னால் நாங்கள் எங்கே போவது. பன்னாட்டு நிறுவனங்களையும் சாமானிய வணிகர்களையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தும் முறையை மாற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை ஆணையர் ஆர்.சரவண குமார், "பீட்சாவுக்கு 5 % வரி, கடலை மிட்டாய்க்கு 18% வரி என்பதே தற்சமயம் சமூக வலைதளங்களில் ஜிஎஸ்டி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. கடலை மிட்டாய் ஹச்எஸ்என் குறியீட்டில் உண்ணும் பதார்த்தங்கள் பட்டியலில் இருவேறு இடங்களில் வருவதால் ஏற்பட்ட குழப்பம் இது. உண்மையில் கடலைமிட்டாய்க்கு 5% தான் வரி" என்றார்.

அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதிலிருந்து மத்திய அமைச்சர்கள் அனைவரும் மக்களைச் சந்தித்து  ஜிஎஸ்டி பற்றி எடுத்துக்கூற ஆரம்பித்துள்ளோம். ஜிஎஸ்டி என்பது மத்திய அரசாங்கம் மட்டும் தன்னிச்சையாகச் செயல்படுத்தும் திட்டம் என்று ஒரு தவறான பிம்பம் உருவாகியுள்ளது. இந்தியாவில் உள்ள 29 மாநில நிதி அமைச்சர்கள், 7 யூனியன் அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கூடி உருவாக்கப்பட்டதே ஜிஎஸ்டி கவுன்சில். மாநில அமைச்சர்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள உற்பத்தியாளர்கள், வணிகர்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்து அதனை ஜிஎஸ்டி கவுன்சிலில் அறிவித்து அவர்களுக்கு வேண்டிய சலுகைகளைப் பெற்ற பின்பே ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்திலும் அப்படிதான் நடந்திருக்கும் என்று நம்புகிறேன். குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது மட்டும் ஏன் ஜிஎஸ்டி வரியை எதிர்த்தார் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றனர். ஜிஎஸ்டி வரி விதிப்புமுறை நுகர்வோர் சார்ந்தது. குஜராத், தமிழ்நாடு, ஹரியானா போன்ற மாநிலங்கள் உற்பத்தியைப் பெருமளவில் ஆதாரமாகக் கொண்டுள்ள மாநிலங்கள். அதனால் இந்த மாநிலங்கள் நஷ்டமடையக்கூடும். இதற்கு இழப்பீடு வழங்கப்படும் என்று இதற்கு முன்பு இருந்த அரசு நம்பிக்கை அளிக்கவில்லை. ஆனால், இப்போது உற்பத்தி மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்பது உறுதிபட அறிவிக்கப்பட்டுள்ளது. நான் முன்பே பல இடங்களில் கூறியதுபோல ஜிஎஸ்டி நாட்டின் நன்மைக்கே, 20 லட்சம் கீழ் தொழில் செய்யும் சிறு வணிகர்கள் ஜிஎஸ்டி பற்றி கவலைப் பட வேண்டியதில்லை. மேலும், பீட்சா பற்றிய தவறான கருத்து நிலவி வருகிறது பீட்சா தயாரிக்கப் பயன்படுத்தும் ரொட்டித்துண்டின் வரிதான் 5%. அதாவது, பீட்சாவின் மூலப்பொருளுக்கு மட்டுமே 5% வரி. சமைத்து கடைகளில் விற்கப்படும் பீட்சாவுக்கு 18% வரி என்பதை சமூக ஊடக நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்று வணிகர்கள், உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கைகளை நான் ஜிஎஸ்டி கவுன்சிலில் பேசி உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்வேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு