Published:Updated:

மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்?

மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்?

மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ஊதியத்துடன் விடுமுறை அளித்தது பற்றி தி.மு.க தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். அவருக்கு ம.தி.மு.க அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். இதோ அந்தக் கடிதம்...

மரியாதைக்குரிய தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களுக்கு, வணக்கம்.

நீங்கள் தந்த மே தின வாழ்த்துச் செய்தியை 'முரசொலி’ நாளிதழில் பார்த்தேன். 1969-ம் ஆண்டு முதல் மே தினத்துக்கு நீங்கள்தான் விடுமுறை அளித்ததாகத் தெரிவித்திருக்கிறீர்கள். இதில் ஒரு சதவிகிதம்கூட உண்மை இல்லை.

இந்திய உபகண்டம் 1947-ல் சுதந்திரம் அடைந்த பிறகு முற்போக்கு இயக்கங்களும், தொழிற்சங்கங்களும் மே தினத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்று மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சி நடத்திய காங்கிரஸ் அரசுகளிடம் கோரிக்கைகள் வைத்தும் போராட்டங்கள்

மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்?

நடத்தியும், காங்கிரஸ் கட்சி அதற்கு செவிசாய்க்கவே இல்லை. 1957-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி கேரள மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தது. கேரள முதல்வர் திரு ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் கூட மே முதல் நாளை விடுமுறை நாளாக அறிவிக்கவில்லை.

1967-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக மார்ச் மாதம் பொறுப்பேற்றார். மே தினத்துக்கு விடுமுறை வேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்காத நிலையில், அறிஞர் அண்ணா அவர்கள் ஏப்ரல் மாதத்தில் அன்றைய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்களை அழைத்து, 'மே முதல் நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்’ என்று கூறினார். அதற்கு தலைமைச் செயலாளர், 'இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் மே தினத்துக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. 1957-ல் கேரளத்தில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி அரசுகூட மே தின விடுமுறை அறிவிக்கவில்லை. தமிழக அரசு அறிவித்தால், மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாக நேரும்’ என்று சொல்லியுள்ளார்.

அதற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள், 'மத்திய அரசின் கோபத்தைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. நாம் திட்டமிட்டபடி மே முதல் நாளை அரசு விடுமுறையாக அறிவிப்போம்’ என்று சொல்லியதோடு, அதன்படியே 1967 மே முதல் நாளை விடுமுறை நாளாக தமிழக அரசால் அறிவிக்கச் செய்தார்.

இந்தியாவின் வரலாற்றில் தொழிலாளர்களின் உரிமைப் போருக்கு உயர்வு தந்து, மே தினத்துக்கு விடுமுறை அறிவித்த பெருமை பேரறிஞர் அண்ணா அவர்களுக்கே உரித்தானது.

1967-ம் ஆண்டு மே முதல் நாள், கோவை சிதம்பரம் பூங்காவில் மே தின விழாவை தமிழக அரசு விழாவாக பேரறிஞர் அண்ணா நடத்தினார்கள். அந்த விழாவில் அனைத்துக் கட்சிகளின் தொழிற்சங்கத் தலைவர்களையும் அழைத்து கௌரவப்படுத்தி பேசவைத்தார்கள். அண்ணாவின் இந்தச் சாதனையை மறைத்துவிட்டு, நீங்கள்தான் 1969-ல் மே தினத்துக்கு விடுமுறை அறிவித்ததாகக் கூறியிருப்பது பொய். பித்தலாட்டம்.

1967-ம் ஆண்டு மே 1-ம் தேதி கோவை சிதம்பரம் பூங்காவில் நடைபெற்ற மே தின விழாவில் சட்டமன்ற உறுப்பினர் என்ற தகுதியோடு கலந்துகொண்டவன் நான். அண்ணாவின் புகழையே இருட்டடிப்புச் செய்யும் உங்களின் குணமும் போக்கும் மிகுந்த வேதனை அளிக்கிறது. இதுதான் நீங்கள் அண்ணாவுக்கு தருகின்ற மரியாதையா?

1990-ம் ஆண்டில், அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்களிடம் கோரிக்கை வைத்து, மே தினத்துக்கு மத்திய அரசு விடுமுறை அறிவித்ததாக உங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இதுவும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பொய்.

1990 மே 1-ம் தேதிக்கு முன்பு, மே தினத்துக்கு மத்திய அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று நீங்கள் கூறியதும் இல்லை. தி.மு.க தரப்பில் இது குறித்து எந்தக் கருத்தும் சொல்லப்படவும் இல்லை. ஆனால், 1990 ஏப்ரல் 30-ம் தேதி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் திரு வைகோ மாநிலங்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அவையில் இருக்கும்போதே மே தினத்துக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தபோது, அவரது கோரிக்கையை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தாவும் ஜனதா தள உறுப்பினர் கமல் மொரார்க்காவும் பேசினார்கள். அதற்கு அரை மணி நேரம் கழித்து, பிரதமர் வி.பி.சிங் அவர்களை அவரது அலுவலகத்தில் திரு வைகோ நேரில் சந்தித்தார். மே தின விடுமுறையை அவர் வற்புறுத்த, பிரதமர் அதற்கு இசைவு தந்து, அன்றைய தினம் பிற்பகலில் தொழிலாளர் நல அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், மே தினத்துக்கு மத்திய அரசு விடுமுறையை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

பிறருடைய உழைப்பின் பயனைச் சுரண்டுவது மிகப் பெரிய மோசடி ஆகும்.

இப்படிக்கு

திருப்பூர் சு.துரைசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு