Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

முல்லைப் பெரியாறு அணையை உயர்த்துவதற்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்ற உத்தரவு, அணையின் உயரத்தை மட்டும் உயர்த்தவில்லை, நீதியின்பால் உள்ள மக்களின் நம்பிக்கையையும் உயர்த்தியிருக்கிறது. தமிழர்களின் உரிமையை அடியோடு மறுத்த கேரள அரசியல்வாதிகளுக்கு இந்தத் தீர்ப்பு கசப்பு மருந்தாக இருக்கலாம். ஆனால், தென் தமிழக விவசாயிகளுக்கோ, இந்தத் தீர்ப்பு தங்கள் வாழ்வாதார ஆணிவேரில் ஊற்றப்பட்ட உயிர் நீர்!

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்... ஆகிய ஐந்து மாவட்டங்களின் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு முல்லைப் பெரியாறு அணையின் நீர்தான் தாய்ப்பால். அணையில் வழிந்தோடி வைகையில் பாய்ந்து, வறண்ட நிலங்களைப் பசுமையாக்குகிறது இந்த நீர். வைகைக்கு மட்டுமா..? முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீர்தான் வைரானாறு மற்றும் சுருளி ஆறுகளுக்கான நீர் ஆதாரம். சுமார் 92 லட்சம் மக்களின் தாகத்தைத் தீர்க்கும் பொறுப்பும் இந்த அணைத் தண்ணீருக்கு உண்டு.

மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் சேகரமாகி, தமிழ்நாடு நோக்கி ஓடிவரும் தண்ணீரில் தமிழ் விவசாயிகள் விவசாயம் செய்தபோதிலும், இதில் உற்பத்தியாகும் காய்கறிகளும் உணவுத் தானியங்களும் பெரும்பகுதி கேரளாவுக்குத்தான் ஏற்றுமதியாகின்றன. அதனாலேயே இரு திசை மக்களிடையே நன்றியுடன்கூடிய நட்பு உணர்வு காலங்காலமாக நீடித்து வருகிறது. அதை நீர்த்துப்போகச் செய்து, பொய்ச் செய்திகளால் இனவாத அரசியலை முன்வைத் தனர் கேரள அரசியல்வாதிகள். முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகச் சொல்லி, அணையில் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைத்தார்கள். இதற்குப் பதிலாகப் புதிய அணை கட்டும் சட்டத்தையும் நிறைவேற்றினார்கள். இவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் 'முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம்’ என்று தீர்ப்பு வழங்கியதுடன், கேரள அரசின் புதிய அணை சட்டத்தையும் ரத்து செய்திருக்கிறது. சுமார் 35 ஆண்டு கால நீதிப் போராட்டத்தின் இறுதியில் பெற்ற தீர்ப்பு இது.

தலையங்கம்

தீர்ப்பு வந்த உடனேயே கடை அடைப்பு நடத்தி ஒருமித்த குரலில் எதிர்ப்பை வெளிப்படுத்தின கேரளக் கட்சிகள். ஆனால், தமிழ்நாட்டில் 'இந்த வெற்றி யாரால் கிடைத்தது?’ என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் அறிக்கை யுத்தம் நடத்தத் தொடங்கினர். தன் சொத்துகளை விற்று அணை கட்டிய பென்னி குக்கூட இத்தனை பெருமிதமாக உரிமை கோரியிருக்க மாட்டார். வெற்றியின் பலனை ருசிக்க நினைக்கும் இவர்களுக்கு, முல்லைப் பெரியாற்றின் தண்ணீர் பாய்ந்தோட வேண்டிய வைகையில் கழிவுகளும் ஆக்கிரமிப்புகளும் நிரம்பியுள்ளது குறித்து கவலை இல்லை. ஏனென்றால், அந்த அநீதியைச் செய்ததில் இரு தரப்புக்கும் சம பங்கு உண்டு.

உடலில் புது ரத்தம் பாய்ச்சியது மகிழ்ச்சிதான். அந்த ரத்தம், உடல் எங்கும் பாய ரத்த நாளங்களும் நலமுடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்!