Published:Updated:

மதம் பிடித்த நாற்காலி!

ப.திருமாவேலன்

நாட்டை நாசமாக்கியது நாக்கு தான் என்பதை மற்றவர்களைவிட தமிழ் மாநிலம் நன்கு அறியும். இன்று, ஐந்து ஆண்டு கால நாற்காலிக்காக மதவாத நாக்கு சுழன்றடிப்பதைப் பார்த்தால், சகிப்புத்தன்மை விரைவில் சுருண்டு விழுந்துவிடும் போல இருக்கிறது.

மதத்தையே முதலீடாக வைத்து பா.ஜ.க. அரசியல் நடத்துவதும், மதத்தை மட்டுமே சொல்லி பா.ஜ.க-வை காங்கிரஸ் குறிவைத்துத் தாக்குவதுமாக 'மதம் இந்த நாட்டில் இருக்க வேண்டுமா... கூடாதா?’ என்பதற்காகவே இந்தத் தேர்தல் என்பது போல ஆக்கிவிட்டார்கள்.

மதம் பிடித்த நாற்காலி!

மதவாதத்தை தேர்தலின் மையப்புள்ளியாக மாற்றிக்கொள்வது எல்லாக் கட்சிகளுக்கும் வசதியாகப் போய்விட்டது. அரசியலில் இற்று நொறுங்கிக் கொண்டுஇருக்கும் ஜனநாயகத்தன்மையை, ஊழலை, பெரும் நிறுவனங்களுக்குச் சாதகமான விதிமுறை மீறல்களை, நாடாளுமன்ற நெறிமுறைகளின் கேலிக்கூத்தை, விவசாயிகளின் தற்கொலைகளை, விலைவாசி விஷத்தைப் பற்றி பேசாமல்... மதத்தைப் பற்றி பேசுவது காங்கிரஸுக்கும் நல்லது; பா.ஜ.க-வுக்கும் வசதியானது; இடதுசாரிகளுக்கும் எளிமையானது. மரத்தை மறைக்கும் மாமத யானை!

'மதம் ஒரு சொந்தப் பிரச்னை. அதற்கு அரசியலில் இடம் இல்லை. நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால், மதமும் அரசியலும் தனித்தனியாக இருக்கும். மதம் ஒரு சொந்த விஷயமாகவே ஆரம்பத்தில் இருந்தது. அதைச் சொந்த விவகாரம் என்ற மட்டத்திலேயே கட்டுப்படுத்திவைப்பதில் நாம் வெற்றி பெறுவோமானால், நமது அரசியல் வாழ்வில் எல்லாம் நல்லபடியாக அமையும்’ என்று நாடு சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் மாதத்தில் மகாத்மா காந்தி எழுதினார். ஆனால், அது நல்லபடியாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே, இந்தத் தேர்தலில் காங்கிரஸும் பா.ஜ.க-வும் நரம்பில்லா நாக்கால் நச்சு விதைகளை விதைத்து வருகின்றன.

வளர்ச்சி, மாற்றம் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை பேசிக்கொண்டு இருந்த பா.ஜ.க., தேர்தல் தொடங்கும் ஏப்ரல் 7-ம் தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மூன்று குண்டுகளைப் புதைத்துவைத்திருந்தது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோயில், பொது சிவில் சட்டம், காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது சட்டப்பிரிவு நீக்கம்... ஆகிய சர்ச்சைக்குரிய விவகாரங்கள் அதில் இருந்தன. இந்தத் தத்துவங்களை முன்னெடுத்தால் வெற்றிபெற முடியாது என்பது எல்லோரையும்விட நரேந்திர மோடிக்கு நன்கு தெரியும். அதனால்தான், இதன் வெளியீட்டு விழாவில்கூட இவை பற்றி அவர் எந்தக் கருத்தும் சொல்லவில்லை. 60 நாள்களில் 400 கூட்டங்கள் பேசும் அவர், எங்கும் அவை பற்றி வாயைத் திறக்கவில்லை. இந்த மூன்றும் தன்னை மூழ்கடித்துவிடும் என்பதை அவர் அறிவார். அதனால்தான், 'அரசியல் அமைப்புச் சட்டம் மட்டும்தான் என் வழிகாட்டி’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி வந்தார்.

மறைக்கப்பட்ட மத உணர்வு அவருள் இறுதியில் பீறிட்டு அடித்தது. மே-5ம் தேதி ஃபைஸாபாத் கூட்டத்தில், ஸ்ரீராமனைத் துணைக்கு அழைத்துவந்தார் மோடி. மேடையில் ராமன் உருவம் பிரமாண்டமாக இருந்தது. 'ஸ்ரீராமன் அவதரித்த இடத்தில் தாமரை மலர வேண்டும்’ என்றார். அப்படியானால், மற்ற இடங்களில் மலர வேண்டாமா? என்ன லாஜிக் இது? இந்துக் கடவுள் படத்தை கட்சிப் பிரசாரக் கூட்டத்துக்குப் பயன்படுத்திவிட்டு, பொதுவான கட்சி என்று எப்படிப் பேச முடியும்?

அகமதாபாத்தில் இன்னும் ஒரு படி மேலே போய், சாதியைக் கையில் எடுத்திருக்கிறார் மோடி. 'பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால், என் மீது பழி சுமத்துகிறார்கள்’ என்பது மோடியின் புலம்பல். பா.ஜ.க. யாரை பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருந்தாலும் பிரியங்கா எதிர்ப்பார்; இடதுசாரிகள் எதிர்ப்பார்கள். அத்வானி என்ன சாதி, மோடி என்ன சாதி என்பதல்ல இங்கு பிரச்னை. எந்தத் தத்துவத்தின் பிரதிநிதி என்பதுதானே முக்கியம். மாற்றம் என்ற மோடி மதவாதி ஆனதும், வளர்ச்சி என்ற மோடி சாதி பேசுவதும் ஆபத்தான அஸ்திரங்கள்.

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா, 'நரேந்திர மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும்’ என்று வழிகாட்டுகிறார். பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் கிரிராஜ் சிங் பேச்சும் இதை வழிமொழிவதாக இருந்தது. 'பசு மாடு வளர்ப்பவர்கள் மீது மத்திய அரசு வரி விதிக்கிறது. ஆனால், மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்பவர்களுக்கு மானியம் அளித்துள்ளது’ என்று ஜார்கண்ட் மாநிலத்தில் பேச, மோகன்பூர் காவல் துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

குஜராத்தில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட அமித்ஷாவுக்கு சொல்லவேண்டியது இல்லை. 'முஸாஃபர் நகரில் கடந்த ஆண்டு நடந்த மோதலுக்கு தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் பழிவாங்குங்கள்’ என்ற இவரது பேச்சு, பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்களில் இவர் கலந்துகொள்ள தடை விதிக்கும் அளவுக்கு விபரீதமாக இருந்தது.

மதம் பிடித்த நாற்காலி!

'சாதி, மதம், இனம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கெனவே உள்ள வேறுபாடுகளைத் தீவிரப்படுத்தும் வகையிலோ, அவர்களுக்கு மத்தியில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலோ தேர்தல் பிரசாரத்தில் பேசக் கூடாது’ என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. இதனை மிதிப்பதுதான் அரசியல் கட்சிகளின் வேலையாக மாறிப்போனது.

சாமியார் ராம்தேவின் உளறல்கள் இவற்றின் உச்சம். 'ராகுல் காந்தி, தலித்துகளின் வீடுகளுக்கு 'ஹனிமூன்’ மற்றும் 'பிக்னிக்’ போல செல்கிறார். அவர் ஒரு தலித் பெண்ணைத் திருமணம் செய்திருந்தால், அந்த அதிர்ஷ்டம் அவரை நாட்டின் பிரதமர் ஆக்கி இருக்கும்’ என்பது ராம்தேவின் பிதற்றல். தலித் பெண்ணைத் திருமணம் செய்வதற்கும் பிரதமர் பதவிக்கும் என்ன சம்பந்தம்? ஒரு சாமியார் வாயில் ஹனிமூன் என்ற வார்த்தை வரலாமா? ராகுல், தலித் கிராமங்களுக்கு மட்டும் போகவில்லை. குஜ்ஜார் இன மக்களின் வீடுகளுக்கும்தான் சென்றார். குஜ்ஜார் இனப் பெண்கள் பற்றி சொல்ல ராம்தேவுக்கு ஏன் துணிச்சல் இல்லை? வேல்கம்புகளோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆக்ரோஷமாக நடந்துவரும் காட்சி நினைவுக்கு வந்திருக்கும். அதனால், தலித் பெண்களை வார்த்தைகளில் சுடுகிறார். பின்பு ராம்தேவ் இதற்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார். என்ன பேச வேண்டும் என்ற அடக்கமே இல்லாதவர்கள் தன்னை ஆன்மிகவாதிகளாக அடையாளம் காட்டிக்கொள்ளும் கொடுமை இது.

பதவியைப் பிடிப்பதற்கு பா.ஜ.க. இவ்வளவு செய்தால், அதைத் தக்கவைப்பதற்கு காங்கிரஸும் மற்ற கட்சிகளும் தன் பங்குக்கு செய்யாதா? அவர்களின் மதச்சார்பின்மைதான் சந்தி சிரிப்பதாயிற்றே!

தில் ஜமா மசூதியின் தலைவர் இமாம் சையது அகமது புகாரியை நேரில் சந்தித்து சோனியா ஆதரவு கேட்க, அவரும் 'முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டார். இதனை மற்றவர்கள் எதிர்ப்பது இருக்கட்டும். இமாம் ஷாகி புகாரியின் சகோதரர் சையத் யாகியா புகாரியே கடுமையாக எதிர்த்தார்.

''குஜராத்தில் மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று. இதே போல் காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்கள் 10 மடங்கு அளவுக்குப் படுகொலை செய்யப்பட்டார்கள். மற்ற கட்சிகளைவிட காங்கிரஸ் ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகம். எப்போதும் பா.ஜ.க. முஸ்லிம்களை முன்னால் நின்று தாக்கினால், காங்கிரஸ் முதுகில் குத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதைத்தான் என் தந்தை சொல்வார்...'' என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டார்.

மதம் பிடித்த நாற்காலி!

காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, 'மதவாதியான மோடியை ஆதரிப்பவர்களை கடலில் மூழ்கடிக்க வேண்டும். மதவாத பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், காஷ்மீர் இந்தியாவில் இருந்து பிரிந்துவிடும்’ என்று பீதி கிளப்புகிறார். சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த உ.பி. மாநில அமைச்சர் ஆஸம் கானும் இந்தத் தேர்தல் வில்லன்களில் ஒருவர்.

''1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற கார்கில் யுத்தத்தின்போது வெற்றிக்காகப் போராடியது யார்? இந்து ராணுவ வீரர்கள் அல்ல. உண்மையில் அது முஸ்லிம் ராணுவ வீரர்கள் மூலம் கிடைத்த வெற்றி'' என்பது இவரது கண்டுபிடிப்பு. இந்தப் பொறுப்பற்றப் பேச்சுக்காக, தேர்தல் ஆணையம் இவருக்குத் தடை விதித்தது. ''முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று ஆஸம் கான் அலறி இருக்கிறார். எல்லா இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் மீதுமா தேர்தல் ஆணையம் தடை விதித்தது? இதற்கும் அவர் முஸ்லிமாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம்? வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவித்த வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டபோது முத்துராமலிங்கத் தேவர் படத்தையும் சசிகலா படத்தையும் போட்டு நீதி கேட்டதற்கும், 'தலித் என்பதற்காக ஆ.ராசாவைக் கைதுசெய்தார்கள்’ என்று வாதாடுவதற்கும் என்ன ஏழாம் பொருத்தமோ அதுதானே ஆஸம்கான் பேச்சும்?

''சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களிக்காதவரும் அந்தக் கட்சிக்கு எதிராகப் பேசுபவரும் உண்மையான முஸ்லிம் இல்லை. அப்படிச் செயல்படுபவர்களின் குரோமோசோம்கள் கட்டாயம் சிகிச்சை செய்யப்பட வேண்டும்'' என்று சமாஜ்வாடி கட்சியின் மகாராஷ்டிரா மாநிலத் தலைவர் அபு ஆஸிம் ஆஜ்மி பேசி இருக்கிறார். இஸ்லாமிய மக்களின் நலன் குறித்துப் பேசுவது வேறு. இஸ்லாமிய மக்களை அச்சுறுத்தி தன் பக்கம் திருப்புவது வேறு. இப்போது நாட்டில் நடப்பது இரண்டாவது வகை.

செயல் வன்முறையைவிட ஆபத்தானது, இந்த வார்த்தை வன்முறை. வகுப்புவாத வன்முறையை நடத்திக்காட்டுபவர்களைவிட, சொல்லித் தூண்டுபவர்கள்தான் பெரிய குற்றவாளிகள். குற்றச் சம்பவங்களில் செயலைச் செய்தவர்களுக்கு இணையாகச் செய்யத் தூண்டியவர்களும் விதைத்தவர்களும் தண்டனை பெறவேண்டியவர்கள். இந்த வகுப்புவாதக் கருத்தியலை வேரறுக்க வேண்டும்.

மதம் பிடித்த நாற்காலி!

இந்தக் கருத்தியல் சுயநல அரசியலுக்கு சுகமானதாக மாறிவிட்டதால், அனைத்துக் கட்சிகளுமே அதை அரிதாரமாகப் பூசிக்கொண்டு அலைகின்றன. ''என்னைப் பொறுத்தவரையில், இந்தியாவில் ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வியைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், வகுப்புவாதத்துக்கோ, சாதியத்துக்கோ மட்டும் இடம் தர மாட்டேன்'' என்று முதல் தேர்தல் முடிந்ததும் அப்போதைய பிரதமர் நேரு சொன்னார். பேருக்குக்கூட இப்படிச் சொல்லும் தலைவர் எவரும் இப்போது இல்லை.

யார் செத்தால் என்ன... நமக்கு நாற்காலி கிடைத்தால் போதும்; தனது பதவி நிலைத்தால் போதும் என்று எண்ணும் அரசியல் தலைவர்கள் பெருத்துவிட்ட காலத்தில் நேருவை உதாரணம் காட்டுவதே உண்மைக்கு இழுக்கு!

நாட்டில் நடப்பது காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்குமான போர். இந்து - முஸ்லிம் போர் அல்ல. நாட்டில் நடப்பது ராகுலுக்கும் நரேந்திர மோடிக்குமான சண்டை. ராமருக்கும் பாபருக்குமான சண்டை அல்ல. இதனை வேதனையோடு வேடிக்கை பார்ப்பதோடு, மக்கள் கடமை முடிந்துவிடுவது இல்லை. கட்சி வேறு, கடவுள் வேறு... அரசியல் வேறு, ஆன்மிகம் வேறு என்பதை ஒவ்வொரு மக்களும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்!