Published:Updated:

''நோயாளி என்பவர் பொருளல்ல. அவர் ஓர் உயிர்!'' - கொதிக்கும் தங்கர்பச்சான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
''நோயாளி என்பவர் பொருளல்ல. அவர் ஓர் உயிர்!'' - கொதிக்கும்   தங்கர்பச்சான்
''நோயாளி என்பவர் பொருளல்ல. அவர் ஓர் உயிர்!'' - கொதிக்கும் தங்கர்பச்சான்

''நோயாளி என்பவர் பொருளல்ல. அவர் ஓர் உயிர்!'' - கொதிக்கும் தங்கர்பச்சான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அது ஒரு வித்தியாசமான விழா. வழக்கமான குத்துவிளக்கேற்றுதல், கேக் வெட்டுதல் கடந்து சில 'ஹைக்கூ'க்களும் அங்கே அரங்கேறின. முதிய பெண்மணி ஒருவரும், சிறுவன் ஒருவனும் இணைந்து மரக்கன்று ஒன்றினை நட்டுவைத்து விழாவைத் தொடங்கினர்.  வந்திருந்தவர்களுக்கு இனிப்புகளோடு, இயற்கை விவசாய பானங்களும் கொடுத்து விருந்தோம்பல் செய்தனர். "பழைய தலைமுறையின் கைப்பிடித்தலோடு, புதிய தலைமுறைகள் நடை பழகினால், எதிர்காலச் சமூகம் நற்பண்புகளுடன் கூடிய, சிறந்த சமூகமாக மிளிரும். ஒரு சிறந்த சமூகத்தில், மருத்துவம் என்பது வணிகமாகச் சுரண்டாது, அது சேவையாக மிளிரும். அந்த சேவையை நோக்கமாகக் கருதியே இயற்கையோடு இணைந்த இந்தக் க்ளினிக்கைத் தொடங்கியுள்ளோம்" என்றார் மருத்துவர் நிவேதிதா. ஆம், மதுரவாயலில் 'சிவானி நிசர்கா' எனும் இயற்கை மற்றும் ஹோமியோ கிளினிக் திறப்பு விழாதான் அந்த நிகழ்வு. இயக்குநர் தங்கர்பச்சான் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.மணி ஆகியோர் இந்தக் கிளினிக்கினை திறந்து வைத்தனர். மருத்துவம் சார்ந்த விழா என்றாலும், அரசியலுக்கும் பஞ்சமில்லை. வழக்கம் போலவே உற்சாகமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் உரை நிகழ்த்திய தங்கர்பச்சான்,

"விவசாயத்தைக் கண்டுகொள்ளாத நாட்டில், நோய்கள் சூழ்ந்து, அழிவை உண்டாக்கும். என்னடா மருத்துவமனை திறப்புவிழாவில் விவசாயம் பற்றிப் பேசுகிறானே என யோசிக்கிறீர்களா? இன்று அரசியல் இல்லாத இடமே இல்லை. நாம பேசுற மைக்கில இருந்து சாப்பிடுற கடலை மிட்டாய் வரை அரசியல் இருக்கு. ஏழைகள் சாப்பிடும் பொருளுக்கு அதிக வரியும்,பெரும்பாலான  கார்ப்பரேட் வர்க்கம் சாப்பிடும் பீசா, பர்கர் போன்ற  உணவுப் பொருள்களுக்குக் குறைந்த வரியும் விதிக்கப்படுகிறதல்லவா (ஜி.எஸ்.டி )! இப்படி அரசியல் எங்கும் நிறைந்திருக்க, மருத்துவத்துக்கும், விவசாயத்துக்கும் தொடர்பிருப்பதில் ஆச்சர்யமில்லை. இயற்கைப் பிரச்னைகள் தொட்டு அரசாங்கங்களின் தவறான கொள்கைகளாலும் விவசாயத்தை இழக்கும் விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார். இதில் கவனம் எடுத்து தடுக்க வேண்டிய அரசோ, பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பல லட்சம் கோடிகளில் கடன் வரி சலுகையும், விவசாயிகளுக்குப் பாராமுகமும் காட்டுகிறது. இன்று நமக்கான உணவு முறைகள் மாற்றப்பட்டு வருகின்றன. பன்னாட்டு வணிகத்துக்கான உணவு முறைகள் திணிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான உற்பத்திகள் ஊக்கப்படுத்தப்படும்போது மண் சார்ந்த உற்பத்திகள் வளம் குறைகிறது. ஒரு தேசத்தின் இயற்கை இயல்புக்கு ஏற்பவே உணவுப் பழக்கம் அமையும். ஆனால், இன்று மாற்றப்பட்டு வரும் பன்னாட்டு உணவுப் பழக்கம் மற்றும் இயந்திரமயமான கார்ப்பரேட் உலக மயமாக்கம் ஆகியவை புதுப்புது நோய்கள் உருவாவதற்கு காரணமாக அமைகின்றன. இந்த நோய்களைத் தீர்ப்பதாகக் கூறியே புற்றீசல் போல பல மருந்து நிறுவனங்களும், பகாசுர மருத்துவமனைகளும் தோன்றுகின்றன. நோயாளி என்பவர் பொருளல்ல, அவர் ஓர் உயிர். ஆனால், இன்றைய மருத்துவ உலகின் நிலையென்ன? லாப நோக்கில் இயங்கும் பல பகாசுர மருத்துவமனைகள், ஒவ்வொரு நோயாளியையும் ஒரு சந்தையாகவே பார்க்கத் தொடங்குகிறது.  அதனால் அங்கே மருத்துவம் என்பது சேவை என்ற தன்மையில் இருந்து தடம் புரண்டு வணிகம் என்ற கொடூரத்துக்குள் செல்கிறது.  இது பெரிய வணிகம் என்பதை உணர்ந்து கிடைத்தவரை லாபம் என்ற நோக்கில் பல கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. மருத்துவம் படிக்க வேண்டுமென்றால், கோடிகளில் பணம் இறைக்க வேண்டும். இப்படிக் கோடிகளைக் கொட்டி மருத்துவக் கல்லூரி செல்பவர், வெளியே வந்த பின் எப்படி சேவைக்காக செயல்படுவார்? போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்றல்லவா நினைப்பார். அப்படியென்றால் நோயாளிகளின் தலையில்தான் மிளகாய் அரைப்பார். இந்தச் சுரண்டலைத் தடுக்க, மாற்று மருத்துவத்தின் பக்கம் கவனம் செலுத்த வேண்டும். மாற்று மருத்துவம் பக்கம் மக்கள் கவனம் திருப்பினால், இந்தச் சுரண்டல் பின்னடைவைச் சந்திக்கும். அப்படியான ஒரு மாற்று மருத்துவமாகவே ஹோமியோ மருத்துவம் உள்ளது. இது என் தனிப்பட்ட அனுபவமும் கூட. ஒரு மருந்தில் ஒரு நோய் குணமாவதும் ஆனால், அதன் பக்க விளைவுகளால் புதுப்புது நோய்கள் உருவாகி, அதற்கு லட்சம் லட்சமாய் நாம் அழ வேண்டிய அவசியமும் இதில் இல்லை. 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்றார் கார்ல் மார்க்ஸ். அனைத்துத் தளத்திலும் மாற்றங்களை நோக்கி மக்கள் நடைபோடவேண்டிய நேரமிது" என்றார் முத்தாய்ப்பாக.

"மன அமைதியின்மையே இன்று பல்வேறு நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன. இதனால், பெண்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகின்றனர். மனம் விட்டுப் பேசினாலே பாதி நோய்கள் கரைந்துவிடும். ஆனால், இன்று பெரும்பாலான மருத்துவர்கள், நோயாளிகளிடம் பேசுவதே இல்லை. நோய் குறித்து சொல்வதற்குள் மருந்து தீட்டத் தொடங்கிவிடுகின்றனர். மன அமைதிக்கு யோகா மற்றும் இயற்கை உணவுகளைப் பின்பற்றினால் நிச்சயம் மன நிம்மதி ஏற்படும். இதற்கான வழிகளை வகுக்கும் மருத்துவமனைகள் வளர வேண்டும்" என்றார் ஒளிப்பதிவாளர் கே.வி மணி.

மருத்துவம் என்பது மருந்துகளை எழுதிக்கொடுத்து கல்லாவை நிரப்புவதல்ல, மனம் விட்டுப் பேசி, இதயங்களை நிரப்புவது. திரும்பிய நமக்கு இன்முகத்துடன் இளநீர் கொடுத்து வழியனுப்பினர் மருத்துவர்கள் சசிகுமார் மற்றும் அரவிந்த். 

இளநீர் இனித்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு