Published:Updated:

அப்துல் கலாம் ஆவணப்படத்தை லட்சக்கணக்கான மாணவர்களிடம் கொண்டு சேர்த்த அரசுப் பள்ளி ஆசிரியர்!

அப்துல் கலாம் ஆவணப்படத்தை லட்சக்கணக்கான மாணவர்களிடம் கொண்டு சேர்த்த அரசுப் பள்ளி ஆசிரியர்!
அப்துல் கலாம் ஆவணப்படத்தை லட்சக்கணக்கான மாணவர்களிடம் கொண்டு சேர்த்த அரசுப் பள்ளி ஆசிரியர்!

அப்துல் கலாம் ஆவணப்படத்தை லட்சக்கணக்கான மாணவர்களிடம் கொண்டு சேர்த்த அரசுப் பள்ளி ஆசிரியர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மாணவர்களையும் இளைஞர்களையும் கனவு காணச் சொல்லி, 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக்க நினைத்தவர், மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். அவரின் ஊக்கமூட்டும் வார்த்தைகளால், பொது விஷயங்களில் அக்கறையுடன் களமாடி வருகிறவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான், தனபால். அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றையே ஆவணப்படமாக்கி, இரண்டரை லட்சம் மாணவர்களிடம் கொண்டுசேர்த்திருக்கிறார். அந்தப் படத்தில் நடித்த எல்லோருமே மாணவர்கள் என்பது மற்றொரு சிறப்பு.

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணையில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர், தனபால். தனது ஆவணப்படத்தில், அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் பிறந்தது, படிக்கும்போதே பேப்பர் போடும் வேலைக்குச் சென்றது, கல்லூரி படிப்பு, பைலைட் முயற்சி, விஞ்ஞானி, நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தது, இறுதி உரை என எல்லா விஷயங்களையும் உணர்ச்சிபூர்வமாக படமாக்கி இருக்கிறார். இடையிடையே அப்துல் கலாம் உரைகள், பொன்மொழிகள் ஆகியவற்றையும் பயன்படுத்தியிருக்கிறார். இந்த ஆவணப்படத்தை எடுக்க ஒரு லட்சம் ஆகியிருக்கிறது. எல்லாமே இவரது சொந்தச் செலவு என்பது குறிப்பிடத்தக்கது.

 "அறிவியல் ரீதியாக, ஆற்றல் ரீதியாக, அக்கறை ரீதியாக என எப்படிப் பார்த்தாலும் இந்திய மாணவர்களுக்குக் கிடைத்த அற்புத பொக்கிஷம், அப்துல் கலாம். அவரின் கனவுகள், லட்சியங்களைச் செயல்படுத்தினால் நாட்டை முன்னேற்ற முடியும். அவர் வழியே மாணவர்களிடம் ஓர் உந்துதல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது தோன்றியதுதான் ஆவணப்படம் எண்ணம். அதை எடுத்து, எல்லாப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இலவசமா கொடுக்க முடிவுசெய்தேன். அவரின் வாழ்க்கைக் குறிப்புகள், உரைகள், பொன்மொழிகளைச் சேகரித்தேன். என் பள்ளி மாணவர்கள் 250 பேரை நடிக்கவைத்து, இரண்டாயிரம் சி.டி-க்கள் எடுத்தேன். தமிழ்நாட்டில் மட்டும் பத்தாயிரம் அரசுப் பள்ளிகளுக்கு கொடுத்திருக்கிறேன். டெல்லியில் நடந்த நேஷனல் சயின்ஸ் கான்பிரன்ஸ் மற்றும் பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களின் சில இடங்களுக்கும் அனுப்பினேன். இதுவரை இரண்டரை லட்சம் மாணவர்கள் இந்த ஆவணப்படத்தைப் பார்த்திருக்கிறார்கள். அதில், இரண்டு லட்சம் பேர் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்'' என்று பூரிப்புடன் தொடர்கிறார் தனபால்.

''தங்கள் பள்ளி மாணவர்களை ஆவணப்படத்தைப் பார்க்கவைக்கும் ஆசிரியர்கள், அதுகுறித்து மாணவர்களிடம் கருத்து கேட்டு, கடிதமாக அனுப்புகிறார்கள். மாணவர்களில் பலரும் நேரடியாக, 'இந்தப் படத்தைப் பார்த்ததும் எங்களுக்குள் புத்துணர்ச்சி ஏற்பட்டிருக்கு. அப்துல் கலாம் அய்யா கனவை நனவாக்கும் முயற்சியில் எங்களால் முடிந்ததைச் செய்வோம்' எனச் சொல்லியிருக்கிறார்கள். சமீபத்தில், ஈரோடு செங்குந்தர் கல்லூரியில் நடந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியில் இந்த ஆவணப்பட சி.டியைக் கொடுத்தேன். அப்போது, அங்கே வந்த பள்ளி கல்வித்துறை இயக்குநர் உதயச்சந்திரன், 'இது நல்ல முயற்சி. இதில் உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், என்னைத் தொடர்புகொள்ளுங்கள்' எனச் சொல்லி, படத்தின் பிரதியை வாங்கிச் சென்றார். இந்தப் படத்தை குறைந்தது ஒரு கோடி மாணவர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பது என் லட்சியம்'' என்கிறார் தனபால்.

ஆசிரியர் பயிலரங்கம், தனிப்பட்ட பயணங்கள் எனச் செல்லும் இடங்களில் எல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று இந்த ஆவணப்படத்தைக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்தியா முழுவதும் இந்த ஆவணப்படத்தைப் பரவலாக்க இது தமிழில் இருப்பது தடையா இருக்கிறது என நினைக்கும் தனபால், அடுத்த முயற்சியிலும் இறங்குகிறார்.

''இன்னும் ஒரு ஐயாயிரம் சி.டிக்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடலாம்ன்னு இருக்கேன். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுபோவதற்கான அத்தனை திட்டங்களையும் அப்துல் கலாம் சொல்லியிருக்கிறார். அவற்றைப் பின்பற்றினாலே போதும். அதற்கு மாணவர்களிடம் விழிப்புஉணர்வு ஏற்பட வேண்டும். அதற்கான சிறு தூண்டுதலாக இந்த ஆவணப்படம் இருக்கும்ன்னு நம்புகிறேன்" என்கிறவர் வார்த்தையில் நம்பிக்கை ஒளிர்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு