Published:Updated:

இந்திய மக்கழே!

Vikatan Correspondent

கூட்டணிக் குழப்பத்திலும் எலெக்ஷன் ரிசல்ட் இழுபறியிலும் எல்லோரும் சேர்ந்து 'பல மனதாக’ கேப்டனை இந்தியப் பிரதமராக்கினால்...?

இந்திய மக்கழே!

இதுவரை எந்தப் பாரதப் பிரதமரும் பண்ணாத முதல் வேலையாக தனி ஆளாகத் தலையில் டார்ச்லைட்டைக் கட்டிக்கொண்டு பாகிஸ்தான் பார்டரைத் தாண்டுவார். அங்கே இருக்கும் தீவிரவாதிகளை அடித்து நொறுக்குவதோடு அரைகுயர் நோட் அளவுக்கு பன்ச் டயலாக்குகள் பேசி அவர்களைத் திருத்தியும் விடுவார். 'இனிமே இந்தியா ஹமாரா நாடு. நம்மள் பொட்டிக்கடை வெச்சுப் பொழைக்கிறான்’ எனத் தீவிரவாதிகள் தலைவனையே மனம் திருந்த வைப்பார்.

இந்திய மக்கழே!

 பம்பர விளையாட்டைத் தேசிய விளையாட்டாக அங்கீகாரம் செய்வார். நாக்கைக் கடித்து விளையாடும் ஒரு வீர விளையாட்டையும் சுவற்றில் ஏறி மிதிக்கும் கிக் பாக்ஸிங்கையும் ஒலிம்பிக்ஸுக்கு அறிமுகப்படுத்த இந்தியா சார்பில் பரிந்துரை செய்வார்.

இந்திய மக்கழே!

 மதுரையை இந்தியாவின் தலைநகராக மாற்றிவிடுவார். அப்படியே கங்கை, வைகை இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவார்.

இந்திய மக்கழே!

 மழைக்கோட்டும் ஜெர்கினு டனும் முட்டி உயர ஷூக்களோடு மாநாடு நடத்துவார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் யாராவது வாசித்தால், நாக்கைத் துருத்தி 'ஆங்ரி’ பேர்டாகி எல்லோரையும் டயர்டாக்குவார்.

இந்திய மக்கழே!

 மின்பற்றாக்குறை சமயங்களில் அவர் உடம்பிலிருந்தே மின்சாரம் எடுத்துக்கொள்ள உத்தரவிடுவார்.

இந்திய மக்கழே!

 'கேப்டன்னா ஒருத்தனா, அதுவும் நானாதான் இருக்கணும்’ என்று சொல்லி அனைத்து கிரிக்கெட், ஃபுட்பால் மற்றும் கபடி போன்ற விளையாட்டுக்களில் ஒன்லி வைஸ் கேப்டன் மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவிடுவார்.

இந்திய மக்கழே!

 இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்திலும் இருந்து 'மன்னிப்பு’ என்ற அர்த்தம் தொனிக்கும் வார்த்தையை மட்டும் அகராதியிலிருந்தே அகற்ற உத்தரவிடுவார்.  

இந்திய மக்கழே!

 ஒப்பந்தம் போட வெளிநாட்டு மந்திரிகள் வந்தால், மச்சான் சுதீஷை அனுப்பி வைத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். மறக்காமல் அவர்களுக்கு போன் செய்து, 'ஐ வில் சென்டு மை மச்சான். யூ வில் சைன். ஓகே’ என அதிரிபுதிரியாகப் பேசுவார்.

இந்திய மக்கழே!

 'நீயாடா சம்பளம் கொடுக்குறே..?’ என நிருபரில் ஆரம்பித்து ரிசர்வ் பேங்க் கவர்னர் வரை கேள்வி கேட்பார்.

இந்திய மக்கழே!

 வெளிநாட்டுப் பயணங்களில் எல்லாம் விதவிதமான கோட், ஷூட் போட்டு துப்பாக்கியோடு போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் ஷேர் செய்திருப்பார்.

இந்திய மக்கழே!

 டெல்லி ஜந்தர் மந்தர் மேடையில் பேசும்போது, 'ஏக் காவுன் மே மக்கழே... ஏக் கிஸான் மக்கழே..!’ என ரணகள இந்தியில் பந்தி வைத்திருப்பார்!

- ஆர்.சரண்