Published:Updated:

செய்த ஊழல்களை மறைத்திருந்தால் வெற்றிபெற்று இருப்போம்

காங்கிரஸ் தலைவர் சொல்லும் காரணம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து கட்சி அலுவலகங்களும் ஏதோ ஒரு வகையில் தொண்டர்கள் சூழ பரபரப்புடன் இருந்தன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் முடிவு வரை பரபரப்பே இல்லாமல் இருந்தது சத்யமூர்த்தி பவன் மட்டும்தான். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனைச் சந்திக்க சத்யமூர்த்தி பவன் சென்றோம். 'காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஏன் படுதோல்வி அடைந்தது என்றுதானே கேட்கப் போகிறீர்கள்? தனி நபர் ஊழல்கள் தவிர்க்க முடியாதவை. அதற்கு காங்கிரஸ் பலியாகிவிட்டது''- என்றபடி கேள்விக்குகாகக் காத்திருக்காமல் பேசத் தொடங்குகிறார் ஞானதேசிகன்.

செய்த ஊழல்களை மறைத்திருந்தால் வெற்றிபெற்று இருப்போம்

''தனிநபர் ஊழல் என்றால் தி.மு.க-வில் இருக்கும் ஆ.ராசாவினால் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது எனச் சொல்ல வருகிறீர்களா?''

''தனிநபர் ஊழல் என்று சொன்னால் கல்மாடி, ஆ.ராசா, அசோக் சவான் எல்லோரும்தான். தனிநபர் தவறுகள் தவிர்க்க முடியாவை. அந்தத் தவறுகளுக்குக் காலதாமதமாக சில நடவடிக்கைகளை  எடுத்தார்கள். அந்த நடவடிக்கைகளை நாங்கள் மக்கள் மத்தியில் உரக்கச் சொல்லத் தவறிவிட்டோம். இன்னொருவிதத்தில் குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால்தானே, இந்த ஊழல்களைப் பெரிதுபடுத்தினார்கள். ஒருவேளை நாங்கள் இந்த ஊழல்களை மறைத்து, நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், காங்கிரஸ் வெற்றிபெற்று இருக்கும் அல்லவா?''

''வெற்றிபெற வேண்டும் என்றால் குற்றம் செய்ததை, ஊழல்களை மறைக்க வேண்டும்; குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்கிறீர்களா?''

''இந்திய ஜனநாயகம் என்னை அப்படித்தான் யோசிக்க வைத்தது. அசோக் சவான், ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டில் முறைகேடுதான் செய்தார். இது ஊழல் அல்ல. நிர்வாகத் தவறு. ஆனால், இதற்கு ஆதர்ஷ் ஊழல் என்று பெயர் வைத்தனர். இதைக் கையில் எடுத்துகொண்டு மீடியாவும் எதிர்க்கட்சிகளும் கொஞ்ச நாட்கள் காங்கிரஸைக் காய்ச்சினார்கள். குற்றத்தைக் கண்டுபிடித்து, அதற்கு நடவடிக்கையும் நாங்கள் எடுத்தோம். தவற்றை சரிசெய்ததற்காகத் தண்டனை கிடைத்திருப்பதைத்தான் சொல்கிறேன்.''

''தமிழகத்தில் எத்தனைத் தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள் என்று நினைத்தீர்கள்?''

''தமிழகத்தில் கன்னியாகுமரியில் மட்டும்தான் வெற்றிபெறுவோம் என்று நினைத்தோம். இறுதியில் கன்னியாகுமரியும் எங்களை 'கை’ விட்டுவிட்டது. மற்றபடி ஒன்பது சதவிகித வாக்குகள் காங்கிரஸுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எங்களுக்கு ஐந்து சதவிகித வாக்குகள்தான் கிடைத்தன. 1998-ல் தனியாகத்தான் தேர்தலைச் சந்தித்தோம். நாங்கள் தனியாக தமிழகத்தில் களம் இறங்கப்போகும் முடிவை மார்ச் மாதம் இரண்டாவது வாரம்தான் எடுத்தோம். ஒரே மாதத்தில் வேட்பாளர்களைத் தேர்வுசெய்து தேர்தலை எதிர்கொண்டோம். தோல்வி என்பது தமிழ்நாட்டில் மட்டும் இல்லை; காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் தோல்வியைத் தழுவியுள்ளது. ஆனால், இந்தத் தேர்தல் முடிவு எதிர்கால காங்கிரஸ் வளர்ச்சியைப் பாதிக்காது. 1991-ல் காங்கிரஸ் 404 இடங்களைக் கைப்பற்றியது. அப்போது பி.ஜே.பி இரண்டு தொகுதிகளில்தான் வெற்றிபெற்றது. நம் நாட்டில் மாறி மாறித்தான் கட்சிகள் ஆட்சிக்கு வரும். இது நிரந்தரம் இல்லை. மாற்றம் வரும்.''

''பி.ஜே.பி அரியணையில் அமரப்போகிறது. 10 ஆண்டுகளாக ஆட்சிசெய்த காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாகக்கூட ஆகவில்லையே?''

'மோடி பதவியை ஏற்று ஆட்சி நடத்தட்டும். அதன் பிறகுதான் மக்களுக்கு மன்மோகன் ஆட்சியின் மகிமை புரியும். காங்கிரஸ் இல்லாததை மக்கள் இனி உணர ஆரம்பிப்பார்கள்.'

- நா.சிபிச்சக்கரவர்த்தி

படம்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு