Published:Updated:

ஓஎன்ஜிசி பார்வையில் கதிராமங்கலமும் சென்னை எண்ணெய் கசிவும்!

ஓஎன்ஜிசி பார்வையில் கதிராமங்கலமும் சென்னை எண்ணெய் கசிவும்!
ஓஎன்ஜிசி பார்வையில் கதிராமங்கலமும் சென்னை எண்ணெய் கசிவும்!

ஓஎன்ஜிசி பார்வையில் கதிராமங்கலமும் சென்னை எண்ணெய் கசிவும்!

கதிராமங்கலம் கிராம மக்கள், முழுவதுமாக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆயில் எடுக்கும் பணியால் கொதித்துக் காணப்படுகிறார்கள். அதிலும் பாதுகாப்பான குழாய்களையே பதிக்கிறோம் என்ற நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி, ஆயில் குழாய்களை பதிக்க ஆரம்பித்தது அந்நிறுவனம். ஆனால், பதித்த தரமற்ற குழாய்கள் ஆயிலைக் கொப்பளித்து மண்ணுக்கு வெளியே கொட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே பீதியில் இருந்த மக்களுக்கு இதுவேறு மாதிரியான பயத்தை கொடுத்தது. அதனால் கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். மக்கள் மறியல், போராட்டம் என ஆரம்பித்தால் இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும்தான் பிடிக்காதே. அதனால் வழக்கம் போல தனது காவல் படையை வைத்து மக்கள் மீது தடியடி நடத்தியது. தடியடி என்றால் மட்டும் தனது வேலையில் 100 சதவிகிதம் தனது வேலையைப் பூர்த்தி செய்யும் காவல்துறை, பெண்கள் என்றும் பாராமல் தனது தடியடியை நடத்திக் கூட்டத்தைக் கலைத்தது. கதிராமங்கலம் மக்கள், ஆயில் கலந்து வரும் குடிநீரை குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குழாயிலிருந்து வெளியேறிய எண்ணெய்ப் படலம் இன்னும் அப்படியே காட்சியளிக்கிறது. விவசாய நிலங்களும் வற்றிப் போய்த்தான் காட்சியளிக்கின்றன. மக்களின் குரலை எந்த அரசும் செவி கொடுத்துக் கேட்க தயாராக இல்லை. எண்ணெய் எடுக்கும் ஓஎன்ஜிசி நிறுவனமும் எண்ணெய் எடுப்பதை மட்டுமே தனது குறிக்கோளாக வைத்துக் கொண்டு செயல்படுகிறது. ஒரு இடத்தில் ஒரு தொழிற்சாலையோ ஒரு நிறுவனமோ அமைந்தால் அது தனது வருமானத்தில் குறிப்பிட்ட தொகையைச் சுற்றியுள்ள மக்களின் நலனுக்காக ஏதாவது திட்டங்கள் செய்ய வேண்டும் என்பது அரசு விதி... என்னதான் மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும், முதலில் இயற்கை எரிவாயு என்று சொல்லித்தான் ஓஎன்ஜிசி நிறுவனம் கால்பதித்தது. ஆனால் இந்த மத்திய அரசு நிறுவனத்தின் குறிக்கோள் தமிழ்நாட்டில் கிடைக்கும் எரிபொருள் மட்டும்தான். ஆனால், இதே ஓஎன்ஜிசி நிறுவனம்தான், தமிழக கடல் பேராபத்தில் இருக்கும்போது தனது நிறுவனம் இருக்கும் பெயரே வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டது. ஆம், சமீபத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றும் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் பகிர்ந்து கொண்டது ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கோர முகத்தையும், தமிழகம் மீதான மத்திய அரசின் அலட்சியப் போக்கையும், தமிழக அரசின் கையாலாகாதத் தனத்தையும் வெட்ட வெளிச்சமாகக் காட்டியது.

இன்ஜினியர் ஒருவர் சொன்ன தகவல் இதுதான்... "சில நாட்களுக்கு முன்னர், எண்ணூர் துறைமுகத்தில் இரு கப்பல்கள் மோதி எண்ணெய் கழிவு கடலில் கொட்டியது. இந்த எண்ணெய்க் கழிவானது எண்ணூர் முதல் புதுச்சேரி வரை பரவியது. இதனால் ஆயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து ஆயிலில் செத்து மிதந்தன. இந்தக் கழிவு எண்ணெய்கள் தண்ணீரில் கொட்டினால், ஆயிலைப் பிரித்தெடுக்கும் நவீன தொழில்நுட்பம் ஓஎன்ஜிசியிடம் இருக்கிறது. ஆனால் தமிழக அரசும், மத்திய அரசும் ஓஎன்ஜிசியை அழைக்கவில்லை. ஓஎன்ஜிசியும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றத் தானாக முன்வரவில்லை. எண்ணெய் வளத்தை எடுப்பதற்கு மட்டும் முனைப்பு காட்டும் அரசுகளும், ஆயில் நிறுவனமும் பேரிடர் காலங்களில் மட்டும் தமிழகத்தை கைவிட்டு விடுகின்றன. ஒரு கைமாறுக்காவது ஓஎன்ஜிசி நிறுவனம் கடலில் கொட்டிய எண்ணெயை அள்ளியிருக்கலாம். ஒருவேளை கழிவு எண்ணெய் என்பதால் ஓஎன்ஜிசியும் ஆர்வம் காட்டாமல் இருந்திருக்கலாம். இந்த நிறுவனத்தில் இருக்கும் பெரும்பாலோனோர் வட நாட்டைச் சேர்ந்தவர்கள், அதனால் தமிழ்நாட்டை பற்றிய கவலை அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம்" என்றார்.

அப்போதைய ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு உடனடி நடவடிக்கை என்ற பெயரில் கடலில் கொட்டிய எண்ணெயை வாளியால் அள்ளி கடலை தூய்மையாக மாற்றும் முயற்சியில் இறங்கியது. போதாத குறைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீன்சாப்பிட்டுவிட்டு பேட்டி கொடுத்தார். அவருக்கு மாநில, மத்திய பேரிடர் மீட்புக்குழுக்கள் இருப்பது தெரியாதா... எண்ணெயை கடலிலிருந்து பிரித்தெடுக்கும் நவீன தொழில்நுட்பங்கள் எண்ணெய் நிறுவனங்களிடம் இருக்கும் என்பது தெரியாதா... கடலில் எண்ணெய் கொட்டினால் அது பேரிடர் இல்லையா... கடைசி வரை கப்பல் மற்றும் எண்ணெயைப் பற்றிய முழு தகவலும் வெளிவராமல் தகவல் கடல் தண்ணீரிலேயே கரைக்கப்பட்டு விட்டது. சென்னையில் கொட்டிய எண்ணெய் புதுச்சேரி வரைக்கும் பரவியது. இந்த எண்ணெய் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கண்ணில் படவில்லையா... பூமிக்கு அடியில் இருக்கும் எண்ணெய் வளம் இருக்கும் டெல்டாக்கள் மட்டும்தான் அந்நிறுவனத்தின் கண்ணுக்கு தெரிகிறது. என்னதான் மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும், ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு எண்ணெய் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தையும் கையில் வைத்துக் கொண்டு கடலின் அழிவையும், இயற்கை வள அழிவையும் வேடிக்கை மட்டுமே பார்த்தது. எண்ணெய் கொட்டப்பட்டது, இன்று வரை மிகப்பெரிய மர்மமாகவே இருக்கிறது. ஏதாவது பிரச்னை என்றால் 'மூடி' மறைக்கத்தான் பார்க்கிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் அறிவுப்பூர்வமாக எதையும் சிந்தித்து செய்வதில்லை என்பதே நிஜம்... இப்போதைய எடப்பாடியும் மக்கள் மீது தடியடியைத்தான் நடத்துகிறார். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மட்டும் மாறுவதில்லை இந்தத் தமிழ்நாட்டில்... இப்போதைக்கு கதிராமங்கலம்தான் ரியல் 'தன்னூத்து' கிராமமாக திகழ்கிறது. எண்ணூரில் தன்னுடைய அலட்சியப் போக்கை காட்டிய ஓஎன்ஜிசி நிறுவனம், கதிராமங்கலத்தில் மட்டும் தனது ஆர்வத்தை அதிகமாக காட்டுகிறது.

அடுத்த கட்டுரைக்கு