Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்

ந்திய வரலாற்றில் காங்கிரஸ் அல்லாத இன்னொரு கட்சி இவ்வளவு பிரமாண்ட வெற்றியுடன் ஆட்சி அதிகாரத்தில் அமர்வது இதுவே முதல்முறை. இந்த வெற்றியில், பாரதிய ஜனதா கட்சியின் பிரசாரமும், நரேந்திர மோடி என்கிற தனிநபரை முன்னிறுத்திய அணுகுமுறையும் முக்கியப் பங்கு வகித்தன என்பது வெளிப்படை. ஆனால், அவை மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் அல்ல. கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி, மக்களின் மனதில் தோற்றுவித்திருந்த வெறுப்பு உணர்வின் வெளிப்பாடுதான் பா.ஜ.க. ஈட்டிய இந்த வெற்றிக்குக் காரணம். காங்கிரஸை என்ன காரணத்துக்காக மக்கள் நிராகரித்திருக்கிறார்கள் என்பதை ஆய்வுசெய்வதில் இருந்து பாரதிய ஜனதா தனது ஆட்சியைத் தொடங்கலாம்!

பெரும் ஊழல்களை அன்றாடச் செய்திகளாக மாற்றி, மக்களின் வாழ்வாதாரங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து, அத்தியாவசியப் பொருள்களின் விலையைத் தாறுமாறாக உயர்த்திய காங்கிரஸ் அரசுக்கு, பாரதிய ஜனதா ஒரு மாற்றாக இருக்கும் என்று நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதுதான் இன்று பாரதிய ஜனதாவின் முன் உள்ள பெரும் சவால். ஏனெனில், 'குஜராத் மாதிரி’ என்பதை முன்வைத்துதான் மோடி பிரசாரம் செய்தார். ஆனால், அந்த 'குஜராத் மாதிரி’, ஒரு சில பெரும் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே பயன்படுகிறது என்பது ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க. முன்மொழியும் வளர்ச்சி யாருக்கானது என்பதில் அந்தக் கட்சி தெளிவு தர வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலையங்கம்

மக்கள்தொகையில் கணிசமாக இருக்கக்கூடிய சிறுபான்மையினர், 2002-ம் ஆண்டில் நடந்த  குஜராத் கலவரங்களை இன்னும் மறக்கவில்லை; மறக்கப்போவதும் இல்லை. அந்தக் கலவர வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்கள் மோடியை விடுவித்திருக்கலாம். ஆனால், இஸ்லாமிய மக்களைப் பொறுத்த வரை, அது மறக்க முடியாத கொடுங்கனவு. அந்தக் கனவின் பதற்றத்தைத் தணிப்பதற்குத் தனது இந்துத்துவ இறுக்கத்தை பாரதிய ஜனதாவும் மோடியும் தளர்த்திக்கொள்ள வேண்டும். '2002-க்குப் பிறகு குஜராத்தில் கலவரங்களே நடக்கவில்லை’ என்பதை மோடி அரசின் பெருமையாகத் திரும்பத் திரும்பச் சொல்பவர்கள், 'இனியும் அப்படி நடக்காது’ என்பதைத் தங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகள் வழியே உத்தரவாதப்படுத்த வேண்டும்.

அப்படி அனைத்துத் தரப்பினருக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய; அனைத்து மக்கள் நலனையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய; அனைத்து மதத்தினரின் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தக்கூடிய ஆட்சியளிப்பதற்கு... இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடிக்கு வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism