Published:Updated:

மோடி கிராஃப்

வத்நகர் முதல் செங்கோட்டை வரை...பி.ஆரோக்கியவேல், படங்கள்: கே.கார்த்திகேயன்

மோடி கிராஃப்

வத்நகர் முதல் செங்கோட்டை வரை...பி.ஆரோக்கியவேல், படங்கள்: கே.கார்த்திகேயன்

Published:Updated:

தேர்தலுக்கு முன், பலர் அவரை 'ஹீரோ’ என்றார்கள். பலர் அவரை 'வில்லன்’ என்றார்கள். ஒரு வருட காலத்தில் இந்தியா முழுக்கப் பிரபலமாகி, ஒரே நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியப் பிரதமர் பதவியை எட்டிப் பிடித்த நரேந்திர மோடியின் பூர்வீகம், பால்யம், குடும்பப் பின்னணிகள் என்ன?

குஜராத்தில் மோடி பிறந்த வத்நகருக்கு புராணப் பெருமைகள் உண்டு. 'ஆயிரம் புத்தர்கள் நிறைந்த ஊர்’ என்று போற்றப்பட்ட புண்ணிய ஸ்தலம் வத்நகர். ஆனால், இப்போது புராணப் பெருமைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, 'மோடி நகர்’ என்பதே அடையாளம்.

மோடி கிராஃப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குஜராத்தின் வர்த்தகத் தலைநகரான அகமதாபாத்தில் இருந்து 120 கி.மீ. தூரத்தில் மேஸானா மாவட்டத்தில் அமைந்திருக்கும் வத்நகரில்தான் தன் 17 வயது வரை வாழ்ந்தார் மோடி. தற்போது 25 ஆயிரம் பேர் வசிக்கும் ஊராக இது இருந்தாலும், சுமார் 63 வருடங்களுக்கு முன்பு மோடி பிறந்த சமயம் சற்றே பெரிய கிராமமாகத்தான் இருந்திருக்கும் வத்நகர். இப்போது மோடியின் தயவால் எட்டு கிலோமீட்டர் தூரத்துக்கு அகலமான வெளிவட்டச் சாலை அமைக்கப்பட்டிருந்தாலும், வத்நகரின் வீதிகள் பலவும் மிகக் குறுகலான சந்துகளாகவே இருக்கின்றன.

மோடி பிறந்த வீடு இருக்கும் சந்துக்குள் ஆட்டோ மட்டும் செல்ல முடியும். 12 அடி அகலத்துக்கு 40 அடி நீளம் மட்டுமே இருந்த இந்த வீட்டில் மோடியின் அப்பா தாமோதர்தாஸ் மூல்சந்த், அம்மா ஹீரா பென், மோடி உள்ளிட்ட ஐந்து சகோதர சகோதரிகள்... என்று அத்தனை பேரும் இருந்திருக்கிறார்கள். அந்த வீட்டை வேறு யாரோ வாங்கி, இரண்டு மாடி வீடாக மாற்றிக் கட்டிவிட்டார்கள்.

''மோடி தன் 18-வது வயதில் அகமதாபாத்துக்குச் சென்றுவிட்டார். இப்போது வத்நகரில் இருப்பது, மோடியின் மூத்த சகோதரன் சோம்பாய் மட்டுமே!'' என்கிறார்கள் அருகில் வசிப்பவர்கள்.

வத்நகரிலேயே முதியோர் இல்லம் நடத்தும் சோம்பாய், அந்த வளாகத்துக்குள்ளேயே, சிறிய கோயில் ஒன்றும் கட்டியிருக்கிறார். ''சிறுவனாக இருந்தபோது அவனுக்கு (மோடிக்கு) சுவாமி விவேகானந்தர் மீது அதிகப் பற்று. சுவாமியைப் பற்றியே படித்துக்கொண்டு இருப்பான். மற்றபடி நீச்சல் அடிப்பது அதிகம் பிடிக்கும். இந்த இரண்டு விஷயங்கள் மீதுதான் அவனுக்கு அதீத ஆர்வம் இருந்தது. ஒருமுறை அவன் ஏரியில் நீச்சலடித்துவிட்டுத் திரும்பியபோது, கையோடு ஒரு முதலைக் குட்டியையும் கொண்டு வந்துவிட்டான். தெருவாசிகள் அனைவரும் பதறிவிட்டார்கள். அப்போதே அவனுக்குப் பயம் என்பதே கிடையாது!'' என்று பழைய நினைவுகளில் மூழ்கினார் சோம்பாய்.

இவரைப் போலவே மோடியின் மற்ற சகோதரர்களும் சாதாரண வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சற்றே மத்திய தர அந்தஸ்தில் வாழ்பவர், மோடியின் கடைசித் தம்பியான பங்கஜ். இவர் குஜராத் அரசின் செய்தித் துறை உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

மோடி படித்த பள்ளியின் பெயர், பி.என்.உயர்நிலைப் பள்ளி. இது, அவரது அப்பா வைத்திருந்த டீக்கடைக்கு அருகிலேயே இருந்தது. ''சிறுவனாக இருந்தபோது தன்னுடைய உழைப்பில் வாழ வேண்டும் என்ற தன்மானம் கொண்டவனாக மோடி இருந்தான். அதனால் பள்ளி நேரத்துக்கு முன்பும் பின்பும், அவன் தன் அப்பாவின் டீக்கடையில் வேலைக்குச் சென்றுவிடுவான். அப்பா போட்டுக் கொடுக்கும் டீயைச் சுடச்சுட ஒரு பாத்திரத்தில் ஊற்றி எடுத்துக்கொண்டு, ரயில் பெட்டிகளில் ஏறி இறங்கி விற்பனை செய்வான்!'' என்கிறார் மோடியோடு பள்ளியில் படித்த அவருடைய வகுப்புத் தோழன் சுதிர் ஜோஷி.

மோடி கிராஃப்

''மோடி இப்போது பெரிய இடத்துக்கு போய்விட்டதால், அவன் படிப்பில் புலி, சிங்கம் என்றெல்லாம் பொய்ச் சொல்ல மாட்டேன். மோடி ஒரு சராசரி மாணவன்தான். ஆனால், யாருக்காவது ஏதாவது பிரச்னை என்றால், முதல் ஆளாக நிற்பான். பாதிக்கப்பட்ட மாணவனே பயந்து ஒதுங்கினாலும், அந்தப் பிரச்னையை தலைமை ஆசிரியர் வரை அவன் கொண்டு சென்றிருக்கிறான். அதனால் அவன் அப்போது பள்ளியில் நன்கு அறிமுகமானவனாக இருந்தான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது வகுப்பின் மானிட்டராக யாரை நியமிப்பது என்ற கேள்வி வந்தது. அப்போது, நான்கு பேர் முன்வந்தார்கள். அந்த நான்கு பேரில் மற்ற மூவரைக் காட்டிலும் மோடிக்கு ஆதரவாக வகுப்பில் பல கரங்கள் உயர்ந்தன!'' என்று மோடி வெற்றி பெற்ற 'முதல் தேர்தல்’ பற்றிச் சொல்கிறார் ஜோஷி.

மோடி கிராஃப்
மோடி கிராஃப்

''பேருந்துகூட எட்டிப் பார்க்காத ஒரு குக்கிராமமாக எங்கள் ஊர் இருந்த அந்தக் காலகட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மூலம்தான் மோடி நிறையக் கற்றுக்கொண்டான். வெளியுலகத் தொடர்பும் சித்தாந்தங்களின் மீதான பற்றும் ஏற்பட ஆர்.எஸ்.எஸ். அவனுக்கு நல்ல சூழலை அமைத்துக் கொடுத்தது. அங்கு அவன் பெற்ற அறிவாலும் தைரியத்தாலும் பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு கைத்தட்டல்களைக் குவித்தான். மேடை நாடகங்களில் மோடிக்கு அலாதியான ஆர்வம் உண்டு. நாடகங்களை அவனே எழுதி பிரதான பாத்திரத்தில் நடிக்கவும் செய்தான். அன்றிலிருந்து இன்று வரை அவனிடம் நான் கண்டு வியக்கும் ஒரு குணம்... விரைந்து முடிவெடுக்கும் திறன்!'' - ஜோஷி தன்னை மறந்து பேசிக்கொண்டிருந்தார்.

ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகளில் முக்கியமானது குடும்ப பந்தங்களைத் துறந்து பணியாற்றுவது. அதுதான் திருமண பந்தம், பெற்றோர், உடன்பிறந்தவர்கள் என அனைவரிடம் இருந்து மோடியை ஒதுங்கி வாழச் செய்துள்ளது. இரண்டு ஆண்டு காலம் எங்கே இருந்தார் என்று தெரியாத அளவுக்கு, இமயமலைப் பகுதிகளில் சுற்றியிருக்கிறார் மோடி. மீண்டும் வந்து அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பி.ஏ., பட்டம் பெற்றார். அப்போது அகமதாபாத் பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தங்கி வேலை பார்த்துக்கொண்டே படித்திருக்கிறார்.

மோடி கிராஃப்

இந்தியாவில் எமர்ஜென்சி அமலானபோது, அதற்கு எதிராக ஒரு புத்தகம் எழுதினார். அதுதான் பா.ஜ.க. முகாமுக்குள் அவரைக் கவனிக்க வைத்தது. 1980-ம் ஆண்டு காலகட்டத்தில் அவருக்கு நண்பரானவர் அமித் ஷா. இருவரும் ஒரே காலகட்டத்தில் பா.ஜ.க-வில் ஐக்கியம் ஆனார்கள். தன் நண்பனுக்காக உத்தரப்பிரதேசத்தையே பா.ஜ.க. கோட்டை ஆக்கப் பெரும்பாடுபட்டவர் அமித் ஷா.

அத்வானி, ஜோஷி ஆகிய இருவரும் நடத்திய யாத்திரைகளை வழிநடத்தும் பொறுப்பு மோடிக்கு வழங்கப்பட்டது. அப்போது துடிப்பான இளைஞராக குஜராத்தில் இருந்து டெல்லி தலைமை அலுவலகத்துக்குச் சென்ற மோடி, மீண்டும் குஜராத் வந்தபோது அந்த மாநில முதல்வரானார். இப்போது மீண்டும் டெல்லிக்குச் செல்லும்போது, அவர் இந்தியப் பிரதமர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism