Published:Updated:

''எங்க பாசம் பிள்ளைகளுக்குத் தெரியல... பிள்ளைங்க பாசம் எங்களுக்குத் தெரியல..!'' - கலங்க வைக்கும் நாடோடித் தாய்

''எங்க பாசம் பிள்ளைகளுக்குத் தெரியல... பிள்ளைங்க பாசம் எங்களுக்குத் தெரியல..!'' - கலங்க வைக்கும் நாடோடித் தாய்
''எங்க பாசம் பிள்ளைகளுக்குத் தெரியல... பிள்ளைங்க பாசம் எங்களுக்குத் தெரியல..!'' - கலங்க வைக்கும் நாடோடித் தாய்

''அஞ்சு வயசுக்கு மேலதான் தன்னைச் சுத்தி இருக்கிறவங்க பத்தின விவரமே குழந்தைகளுக்குத் தெரிய ஆரம்பிக்கும். பாசமும் அன்பும் புரிஞ்சு நெருங்கும் வயசு அது. ஆனால், அஞ்சு வயசு முடிஞ்சதுமே பிள்ளைங்களை ஹாஸ்டல்ல கொண்டுபோய் விடவேண்டிய அவலமான வாழ்க்கை எங்களோடது. காசு பணம் இல்லைன்னுகூட நாங்க கவலைப்படறதே இல்லை. ஆனால், பெத்த பாசம் அத்துப்போகுமோனு கவலையா இருக்கு. நீங்களா இருந்தா அதை ஏத்துப்பீங்களா?'' என ஒரே கேள்வியில் நெஞ்சை அறுக்கிறார் பரமேஸ்வரி. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்துக்கு வந்த ஒரு தாயின் கேள்வி இது. சாலையில் சாட்டையடித்துப் பிழைப்பு நடத்தும் குழுவில் ஒருவர்தான் இந்த பரமேஸ்வரி. நாம் வேடிக்கை பார்த்துவிட்டு, பாவப்பட்டுக் கொடுக்கும் ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் சாட்டையால் தங்கள் உடலில் அடித்துக்கொள்ளும் இவர்களுடைய வாழ்க்கைதான் எவ்வளவு துயரமானது? தடதடக்கும் ரயில் பெட்டிகளுக்குள் குட்டிக்கரணம் போட்டு பிச்சை எடுக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நாம் என்றைக்காவது சிந்தித்ததுண்டா? 

கடந்த மாதம் சென்னைக்குச் சென்றிருந்தபோது ரயிலில் கண்ட காட்சி இது. அழகினும் அழகான குழந்தை அவள். ஆறு வயதிருக்கும். பால்வடியும் முகம். வட மாநிலப் பெண்ணைப்போல ஒரு சின்னஞ்சிறிய வளையத்தை மூக்கில் அணிந்திருந்தாள். அந்த வளையமும் அவள் அணிந்திருந்த மஞ்சள் வண்ண உடையும் அவளை மேலும் மெருகேற்றிக் காட்டியது. கண்களை மறைத்த முடியை இடது கையால் ஒதுக்கிவிட்டபடி ஏதேதோ வித்தைகளைச் செய்துக்காட்டினாள். அந்தப் பெட்டியில் இருந்த அனைவரும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

வித்தைகளை முடித்துவிட்டு ஒரு தகர டப்பாவை எடுத்துவந்தவள், ஒவ்வொருவர் முன்பும் நீட்டியபடி, அவர்களின் முகங்களைச் சந்தித்தாள். யாரும் எதுவும் பேசவில்லை. அந்த இடத்தில் மொழிக்கு வேலையே இல்லை. மனிதர்களின் மெளனத்தால் ரயில் போடும் சத்தம் அதிகமாகக் கேட்டது. எனக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு குடும்பம் ஐந்து ரூபாயை அவளது டப்பாவில் போட்டார்கள். அந்தக் குடும்பத்திலும் ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தாள். அவள் கையில் ஏதோ ஒரு விளையாட்டு பொருள் இருந்தது. ஒரே வயதுடைய இரு குழந்தைகள். ஒருவர் கையில் விளையாட்டுப் பொருள்; இன்னொருவர் கையில் பிச்சைப் பாத்திரம். இந்த வாழ்க்கையின் விசித்திரத்தை, ஏற்றத்தாழ்வை என்னவென்று சொல்வது? பலநாள் தூக்கத்தைக் கெடுத்த இந்தச் சம்பவம், பரமேஸ்வரியைச் சந்திக்கும்போது இரு மடங்கானது. இனி, மீண்டும் பரமேஸ்வரி. 

''நாங்க முப்பது வருஷமா காந்தி பார்க் பிளாட்பாரத்துலதான் குடியிருக்கோம். அதுக்கு முன்னாடி எங்க முன்னோருங்க ஊர் ஊரா சுத்திட்டே இருந்தாங்க. நாங்க மொத்தமா 32 குடும்பம் இருக்கோம். பொம்பளைங்களுக்குக் கொட்டு அடிக்கிறதும், ஆம்பளைங்களுக்குச் சாட்டை அடிக்கிறதும்தான் தொழில். இந்தத் தொழிலைவிட்டால், எங்களுக்கு வேற கதி இல்லை. நாங்க யாரும் படிக்கலை. இப்பத்தான் எங்க புள்ளைங்களில் கொஞ்சம் பேர் படிச்சிருக்காங்க. ஆனால், அவுங்களுக்கும் வேலை கேட்டுப் போனா சாதி சான்றிதழ் கேட்கிறாங்க. எங்க யாருக்கும் சாதி சான்றிதழ் இல்லை. வீடும் இல்லை. நாங்க இந்த நாட்டின் மக்கள்தான். ஆனா, அதுக்கான எந்த ஆதாரமும் இல்லை. மழையானாலும் வெயிலானாலும் ரோட்டோரமா கெடக்க வேண்டியதுதான். எங்களுக்கு இந்த வாழ்க்கைப் பிடிக்கலை. அரசாங்கம் எங்களுக்குக் கொஞ்சமா இடம் கொடுத்தால் போதும். சின்னதா ஓலைக் குடிசைப் போட்டு ஒண்டிக்குவோம். எங்களை மாதிரி இல்லாமல், எங்க புள்ளைங்களாவது நல்லாப் படிச்சி ஒரு வேலைக்குப் போகணும் அதுதான் எங்க ஆசை. அதுக்குத்தான் நாங்க கலெக்டர் ஆபீஸுக்கு நடையாய் நடக்குறோம். பல தடவை மனுகொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை'' என்ற பரமேஸ்வரி, சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார். 

“எங்களுக்குன்னு வீடு இல்லாததால, குழந்தைகளைப் படிக்கவைக்கணும்னு அஞ்சு வயசானதும் ஹாஸ்டல்ல சேர்க்கறோம். அதுங்க விவரம் தெரிஞ்சு அம்மா அப்பாகிட்ட பாசமா வெளையாடும்போது பிரியறோம். எங்க பாசம் பிள்ளைங்களுக்குத் தெரியலை. பிள்ளைங்க பாசம் எங்களுக்குத் தெரியலை. குழந்தைங்களை ஹாஸ்டல்ல சேர்க்காம தொழிலுக்குத் தூக்கிட்டுப் போனால், குழந்தையைச் சித்ரவதை பண்றோம்னு போலீஸ்ல பிடிச்சுட்டு போயிடுறாங்க. நாங்க எப்படித்தான் வாழ்றது? எங்களுக்கு என்னதான் வழி? எங்களுக்கு எதையுமே செஞ்சுக்கொடுக்காத இந்த அரசாங்கம், ரூல்ஸ் மட்டும் போட்டு மிரட்டுது. பிளாட்பாரத்துல தங்காதேனு அடிச்சி வெரட்டுது. வழியே இல்லாத ஒரு முட்டுச்சந்துல விட்டு ஓடு ஓடுனு துரத்தினா நாங்க எங்கே போறது?" என வெடிக்கும் அழுகையுடன் கேட்கிறார் அந்த நாடோடித் தாய். 

விடை சொல்லப்போவது யார்?

அடுத்த கட்டுரைக்கு