Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்

ந்தச் செய்தி, பட்டாசு பற்றியதுதான். ஆனால், அதைப் படித்தால் வெடிகுண்டு வெடித்ததைப் போன்றிருக்கிறது!

தடை செய்யப்பட்ட சீனப் பட்டாசுகள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவது தொடர்பான வழக்கு, மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தடை செய்யப்பட்ட பட்டாசுகள் தமிழ்நாட்டுக்குள் வந்தது எப்படி? சோதனையில் இருந்து தப்பித்து பட்டாசுகள் ஊர் வந்து சேர்ந்தது எப்படி? அதுவும் ஆபத்தான வெடிமருந்துகள் மிகப் பெரிய கொள்கலன்களில் வந்து இறங்கியிருக்கின்றன என்றால், அது நாட்டின் பாதுகாப்புடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டது இல்லையா?

இது தொடர்பாக நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, சுங்கத்துறை, 'துறைமுகத்தில் தற்போது உள்ள ஸ்கேனர் கருவியைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு 20 கன்டெய்னர்களை மட்டுமே சோதனை செய்ய முடியும். 'எக்ஸ்ரே ஸ்கேனர்’ என்ற கருவி விரைவில் வர உள்ளது. அது வந்தால், இன்னும் அதிக கன்டெய்னர்களை ஸ்கேன் செய்ய முடியும்’ என்று பதில் அளித்துள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு வெறும் 20 கொள்கலன்களை மட்டுமே இவர்கள் ஊடுகதிர் சோதனைக்கு உட்படுத்துகின்றனர். எனில், மற்ற கொள்கலன்கள் சோதனையிடப்படாமல் கரை வந்து சேர்கின்றன என்று பொருள். எவ்வளவு அலட்சியமான போக்கு இது? இத்தனைக்கும் அது ஒன்றும் கையடக்கப் பொருள் அல்ல. மிகப் பெரிய கொள்கலன். அதில் வெடிமருந்தைவிட அதிக ஆபத்தான ஆயுதங்களும் இருக்கலாம்.

ஏற்கெனவே விளையாட்டு பொம்மை முதல் மின்னணு சாதனங்கள் வரை இந்திய சந்தையின் சரிபாதியை தரமற்ற சீனப் பொருள்கள் கைப்பற்றிவிட்ட ஆபத்து ஒரு பக்கம் இருக்க, நேரடியாக வெடிமருந்தையே எந்தவித சோதனையும் இல்லாமல் நாட்டுக்குள் அனுமதிப்பது கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.

பல்லடுக்கு மாளிகைகளும், வணிக வளாகங்களும், மக்கள் ஒன்றுகூடும் இடங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தருவதில் முன் எப்போதையும்விட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்பு என்பது, ஓர் அசம்பாவிதம் நடைபெற்ற பின்பு காட்சிப்பதிவை ஓடவிட்டு யார் செய்தது என்று கண்டுபிடிப்பது அல்ல; சதிவேலைகளை முன்கூட்டியே முறியடிப்பதே. அதற்குத்தான் உங்களுக்குச் சம்பளம்!