Published:Updated:

“வைகோவை நினைத்து அனுதாபப்படுகிறேன்!”

“வைகோவை நினைத்து அனுதாபப்படுகிறேன்!”

தோல்வி வந்தபோதும் துவளாமல் இருக்கிறார் துரைமுருகன். தி.மு.க-வின் சோதனைக் காலமான இந்த நேரத்தில் துரைமுருகனிடம் பேசினேன்.

''இப்படித் தேர்தல் முடிவுகள் அமையும் என்று எதிர்பார்த்தீர்களா?''

''நிச்சயம் எதிர்பார்க்காத தோல்விதான். அதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எங்களைப் பிடிக்காத பத்திரிகைகள்கூட சில இடங்களில் நாங்கள் வெல்வோம் என்றே எழுதினார்கள். ஒன்றில்கூட வெல்ல முடியாதது ஏமாற்றமே.''

“வைகோவை நினைத்து அனுதாபப்படுகிறேன்!”

''இந்தத் தோல்விக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?''

''ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். பணம் ஏராளமாகப் பாய்ந்தது என்றும் தோற்றால் பதவி இல்லாமல் போய்விடும் என்று மந்திரிகள்  மிரட்டப்பட்டதாகவும் அதனால் அவர்கள் செலவழித்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. சில இடங்களில் 500 ரூபாயும் சில இடங்களில் 1,000 ரூபாயும்  கொடுத்து அ.தி.மு.க. ஏற்படுத்திய பண அலையில்தான் வென்றுள்ளார்கள்.''  

''உங்களின் நண்பர் வைகோ தொடர்ந்து தோல்வியடைந்தே வருகிறாரே?''

''அவர் என்னுடன் படித்த நண்பர். தி.மு.க-வில் இருக்கும்போது, மிக நெருக்கமாக இருந்தார். என்னைப் பொறுத்தவரை தேர்தல் கூட்டணி அமைப்பதிலோ, கட்சியை நடத்துவதிலோ இன்னும் சாதுர்யம் வேண்டும். ஓடாத குதிரையின் மீது பணம் கட்டுவதிலேயே குறியாக இருக்கிறார். எங்கிருந்தாலும் என் பழைய நண்பர் என்பதால், அவரின் தோல்விக்காக அனுதாபப்படுகிறேன்.''

''பா.ஜ.க. ஆட்சி எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?''

''என்னைப் பொறுத்தவரை மத்தியிலோ, மாநிலத்திலோ ஆட்சிக்கு வரும் கட்சி பெரும்பான்மையுடன்தான் வர வேண்டும் என்று எண்ணுகிறேன். அப்படி இருந்தால்தான் சில காரியங்களை நினைத்தபடி செய்ய முடியும். மீண்டும் ஒரு பொதுத் தேர்தல் வந்து நாட்டிற்கு இழப்பு ஏற்படாமல், அவர்கள் ஆட்சிக்கு வந்தது நல்லதுதான். அவர்களின் போக்கு எப்படி இருக்கும் என்று போகப்போகத்தான் பார்க்க வேண்டும். பிரசாரக் கூட்டங்களில் இந்துத்துவாவை வலியுறுத்தவில்லை. இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள உத்தரப்பிரதேசத்தில் வென்றுள்ளார்கள். இது இஸ்லாமியர்களும் அவர்களுக்கு ஓட்டு அளித்துள்ளதைக் காட்டுகிறது. இதையெல்லாம் கணக்கிட்டு ஒரு மதச்சார்பற்ற ஆட்சியை மோடி நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன். மோடியின் அரசில் தலையிட மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ்-ஸும் தெரிவித்துள்ளது. அது உண்மையாக இருக்க வேண்டும்.''

''மீண்டும் தே.மு.தி.க. உங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று முயற்சி செய்தீர்கள். ஆனால் தே.மு.தி.க. ஓர் இடத்தில்கூட வெல்லவில்லையே?''

''அவரும் தோற்றுப்போய் உள்ளார். நாங்களும் தோற்றுப்போய்தான் உள்ளோம். அவரவர் அரசியலை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.''

''அழகிரி குறித்துக் கடுமையான கருத்துகள் தெரிவிக்காமல் இருந்த நீங்கள், ஸ்டாலின் ராஜினாமாவை ஒட்டி 'அழகிரி நாடகமாடுகிறார்’ என்று விமர்சித்துள்ளீர்களே?''

''நடப்பது நாடகம் என்று அவர் சொன்னார். அப்படியானால் அந்த நாடகத்தில் அவரும் ஒரு பாத்திரம் என்றுதான் சொன்னேன். அவரை விமர்சனமெல்லாம் செய்யவில்லை.''

''நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் மகனுக்கு சீட் கொடுக்காததால், நீங்கள் தலைமை மீது வருத்தத்தில் உள்ளதாகப் பேசப்படுகிறதே?''

''சீட் கேட்டது உண்மை, ஆனால் அந்தத் தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டது. எனவே தி.மு.க-வில் சீட் கேட்ட யாருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய்விட்டது. மேலும் தலைமைப் பொறுப்பில் இருப்பதால், தி.மு.க. எப்போதும் கூட்டணிக் கட்சிகளுக்குத்தான் முன்னுரிமை அளிக்கும் என்பது எனக்குத் தெரியும். எனவே வருந்துவதற்கு எந்தச் சூழலும் இல்லை.''

''ஈழப் பிரச்னைக்கு பாரதிய ஜனதா அரசில் தீர்வு கிடைக்கும் என்று சொல்லி ஓட்டு கேட்டார்கள்.

“வைகோவை நினைத்து அனுதாபப்படுகிறேன்!”

ஆனால் அதற்கு நேர்மாறாக நிலைமை இருக்கிறதே?''

''இடிஅமீன் உகாண்டாவில் ஆட்சிக்கு வந்தவுடன் 'எனது நாட்டைச் சுரண்டும் இந்தியர்கள் அனைவரும் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்’ என்றான். அவர்கள் அனைவரும் குஜராத்தியினரும்கூட. உடனே தனி விமானங்களை அனுப்பி அத்தனை பேரையும் அழைத்து தண்டகாரண்யத்தில் குடியேற்றினார் மொரார்ஜி தேசாய். குஜராத்திகள் எங்கு இருந்தாலும் அவர்களுக்காக குஜராத்தியான தேசாயின் தசை துடித்ததைப்போல ஈழத் தமிழனுக்காக எங்கள் தசை துடிக்கிறது என்கிற நியாயத்தை மோடி உணர வேண்டும். தி.மு.க-வை விமர்சித்து பா.ஜ.க-விற்கு ஓட்டு கேட்டவர்களுக்குப் பரிசாக, ராஜபக்ஷேவை வரவழைத்துக் கரியைப் பூசியிருக்கிறது பாரதிய ஜனதா!''

- செந்தில்குமார், படங்கள் : ஆ.முத்துக்குமார்

அடுத்த கட்டுரைக்கு