Published:Updated:

திமுகவில் சலசலப்பு ஏற்படுத்திய காமராஜர் பிறந்தநாள் விழா ...! ஒரு வரலாற்றுப் பதிவு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திமுகவில் சலசலப்பு ஏற்படுத்திய காமராஜர் பிறந்தநாள் விழா ...! ஒரு வரலாற்றுப் பதிவு
திமுகவில் சலசலப்பு ஏற்படுத்திய காமராஜர் பிறந்தநாள் விழா ...! ஒரு வரலாற்றுப் பதிவு

திமுகவில் சலசலப்பு ஏற்படுத்திய காமராஜர் பிறந்தநாள் விழா ...! ஒரு வரலாற்றுப் பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ர்ம வீரர் காமராஜரின் 115 வது பிறந்தநாள் இன்று. காமராஜரின் இதே பிறந்தநாள் சுமார் 52 வருடங்களுக்கு முன் கொண்டாடப்பட்டபோது திமுகவில் பெரும் சலசலப்பு உருவானது. ஒருவிதத்தில் அன்றைக்கு திமுகவில் எம்.ஜி.ஆர் - கருணாநிதி இடையே நீறு புத்த நெருப்பாக இருந்த கருத்து வேறுபாட்டை வெளிக்கொண்டுவந்தது எனலாம். கருணாநிதி - எம்.ஜி.ஆர் இருவருக்கும் இடையே பனிப்போர் உருவான ஆரம்பகாலத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் பின்னாளில் வெளிப்படையாக உருவானபோதுதான் அதிமுக பிறக்க காரணமானது.

ஆளும் கட்சியான காங்கிரஸ்க்கு எதிராக கடும் எதிர்ப்பு நிலை எடுத்து அன்று மக்கள் மத்தியில் பெரும்போராட்டங்களை நடத்தி காங்கிரஸ் கட்சிக்கு குடைச்சல் தந்துவந்தது அண்ணா தலைமையிலான திமுக. காங்கிரசும் திமுகவை பரமஎதிரியாக வரித்துக்கொண்டு மேடைகளில் தாளித்துக்கொண்டிருந்தனர். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே எம்.ஜி.ஆருக்கு திமுகவின் சில தலைவர்களால் பிரச்னை உருவாகியிருந்தது. இது எம்.ஜி.ஆர் தன் எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார். இதனால் அண்ணாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே ஏதோ பிரச்னை என்பதாக பேசப்பட்டது. இந்த நிலையில்தான் 1965 ம் ஆண்டு காமராஜரின் 63 வது பிறந்தநாள் விழா வந்தது. சென்னை எழும்பூர் பெரியார் திடலில் நடந்த காமராஜருக்கு பிறந்தநாள் விழாவில் ஆச்சர்யமாக எம்.ஜி.ஆர் கலந்துகொண்டதோடு காமராஜரைப் புகழ்ந்து பேசி காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி தந்தார். 

“காமராஜரின் பிறந்த தின விழாவில் நாம் கலந்துக் கொண்டு அவரை வாழ்த்தி அவர் நீடூழி வாழவேண்டும் என்று வாழ்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்குப் பெருமைப்படுகிறேன். தலைவர் காமராஜர், தோழர் காமராஜர், அய்யா காமராஜர் என்று பலர் அழைக்கும் நிலையை காமராஜர் அடைந்திருக்கிறார். எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியவர்; பாராட்டப்பட வேண்டும். நல்ல உள்ளம் கொண்டவர்களை எல்லோரும் பாராட்டித்தான் தீரவேண்டும். மனிதனை மனிதன் பாராட்ட வேண்டும். நல்லவனை நல்லவன் பாராட்ட வேண்டும்.

கொள்கைக்காக வாழ்கிறவனை, கொள்கைக்காக வாழ்கிறவர்கள் பாராட்டியாக வேண்டும். யார் யாரை மதிக்கிறார்களோ அவர்களைப் பாராட்ட வேண்டும். யாரால் மதிக்கப்படுகிறார்களோ அவர்களைப் பாராட்டியாக வேண்டும். இந்தநிலை மாறும்போது அருவறுப்பான சூழ்நிலை ஏற்படுகிறது.

நண்பர் சிவாஜி கணேசன் ஒரு கட்சியில் (தி.மு.க.) இருந்து விட்டுப்போனவர். அவருடைய ‘கட்டபொம்மன்’ நாடகத்திற்கு எங்கள் தலைவர் அண்ணா போய் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார். சிவாஜி நம்மை விட்டுப்போய்விட்டாரே என்ற எண்ணத்திற்கே அங்கு இடமில்லை. அதுதான் நல்ல பண்பு.

காமராஜர் என்னை விட்டுப்போகவில்லை. நான் அவரைவிட்டு வந்தவன் (எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தவர்) நான் காமராஜரைப் பாராட்டிப் பேச வந்ததற்கு வேறு உள் காரணங்கள் தேடினாலும் கிடைக்காது. காமராஜர் வாழ்ந்தால் யாருக்கு லாபம்? வாழாமல் இருந்தால் யாருக்கு லாபம்? காமராஜர் ஒரு ஏழையாக வளர்ந்திருக்கிறார். யாரும் மேடையில் ஏறி அவர் சொத்து சேர்த்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. தன்னை ஈன்றெடுத்த தாய் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் அவரை 10 நிமிடம், 5 நிமிடத்திற்கு மேல் இருந்து பார்ப்பதில்லை. தன் தாயை ஈன்ற இந்த நாட்டின் கடமைகளை விடாமல் செய்து வருகிறார். காமராஜரைப் புகழ்வதில் யாருக்கு நஷ்டம்? நான் ஒரு கலைஞன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர். அண்ணா வழியில் நடப்பவன். அவர் கொள்கை எனது உயிர். அப்படிப்பட்ட நான் காமராஜரையும், அய்யாவையும் (பெரியார்) பாராட்டாமல் வேறுயாரைப் பாராட்ட முடியும்?

இதே மேடையில் தான் பெரியாரைப் பாராட்டிப் பேசினேன். நமது தலைவர் காமராஜரைப் பாராட்டிப் பேசுகிறேன். நமது தலைவர் என்று நான் சொல்வது மக்கள் ஏற்ற தலைவர் அவர். அதனால் நமது தலைவர் என்று சொல்கிறேன். காமராஜர் இரவு-பகல் பாராமல் பாடுபடுகிறார். அவரை ஏன் பாராட்டக் கூடாது? என் கொள்கையை நான் கடைப்பிடிப்பதிலும் ஏன் இந்த இலக்கணத்தை பின்பற்றக்கூடாது? எங்கெங்கு நல்லது இருந்தாலும் அதனை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஏழைகளுக்கும், பின்தங்கிய மக்களுக்கும் உயர்ந்த நிலையை உருவாக்கித்தந்தவர் காமராஜர். ஏழைகளை வாழவைக்க வேண்டும் என்று காமராஜர் சொல்கிறார். நாம் அதைத்தான் சொல்கிறேன். என் கட்சியும் அதைத்தான் சொல்கிறது. அதனால் அவருக்கு மாலையிடுகிறேன்.

பண்புள்ளவன், பகுத்தறிவுள்ளவன் அண்ணா வழியில் நடப்பவன் மாலை இடுகிறான். காமராஜர் நேரில் இருந்திருந்தால் மாலைகளைக் குவித்திருப்பேன். (காமராஜர் வருவார் என்று சால்வை வாங்கி வைந்திருந்தார்) ஏழைகளின் நல்வாழ்வுக்காக காமராஜர் தன்னையே தியாகம் செய்து கொண்டவர், அவருடைய லட்சியத்தில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. அவர் மேற்கொண்டுள்ள லட்சியம்தான் நம்முடைய வழி. நான் ‘நாடோடி மன்னன்’ படத்தில் சொன்ன கருத்துக்கள், போட்ட சட்டங்கள் அனைத்தையும் காமராஜர் அமல்படுத்தி வருகிறார். எல்லோருக்கும் இலவச கல்வி என்றேன். அது நடந்து வருகிறது. உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் எல்லா வசதியும் என்று இருந்த நிலைமையை மாற்றி தாழ்ந்த வகுப்பினருக்கும் எல்லாவற்றிலும் எங்கும் முதலிடம் என்று அமைத்தவர் காமராஜர்.

இங்கு காமராஜரை சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசினார்கள். நான் இதை ஏற்க விரும்பவில்லை. ஏனென்றால், சந்தனக் கட்டையை அரைக்க அரைக்க மணம் வீசுவது உண்மை. ஆனால் அது தேய்ந்து மறைந்து விடுகிறது. ஆகவே சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசுவது முறையல்ல \ சரியல்ல.

என்னைப் பொருத்தவரை காமராஜரை நான் உதயசூரியனுக்கு ஒப்பிடுகிறேன். சூரியன் கிழக்கிலிருந்து உதிர்த்து மேற்கில் மறைவதுபோல் தோன்றுகிறது. உண்மையில் அது மறையவில்லை. இருந்த இடத்தில்தான் இருக்கிறது. அதுபோல காமராஜரின் புகழ், தொண்டு உதயசூரியனைப்போல் பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது. நான் இதுவரை எந்தவித தியாகமும் செய்யவில்லை. அப்படிப்பட்ட சந்தர்ப்பமும் ஏற்படவில்லை. ஆனால் தியாகிகளின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு தியாகிகளால் பாராட்டுவதை கேட்கும்போது எனக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

காமராஜர் அவர்கள் நூறு ஆண்டுகள் வாழ்ந்து நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும். மக்களின் கவலைகளைப் போக்கி நல்வாழ்வைக் கொடுக்கவேண்டும். கல்யாண வீடு போல நாம் இங்கே சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறோம். அதோடு நாம் சிந்திக்கவேண்டும். அதற்கு நாம் காமராஜரை வணங்கித்தான் ஆகவேண்டும். மக்களை ஒற்றுமைப்படுத்தும் காமராஜர் நீடூழி வாழவேண்டும். ஜனநாயக சோஷலிசம் என்று காமராஜர் சொல்கிறார். இது சரியா? என்று சிலர் கேட்கிறார்கள். சர்வாதிகார ஆட்சி வேறு, பரம்பரையாக நாட்டை ஆள்வது வேறு, ஜனநாயகத்தில் மக்கள் விருப்பத்துடன் அமல்படுத்தப்படுவது சோஷலிசம், பேதமற்ற சமுதாயம் காண்பதுதான் அதன் அடிப்படை. ராஜாஜி இங்கே முதல் அமைச்சராக இருந்தபோது குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அதனை தி.மு.க.கழகம் எதிர்த்தது. காமராஜர் முதல் அமைச்சராக வந்தவுடனேயே மாற்றப்பட்டது. காங்கிரசின் திட்டத்தை அதே காங்கிரஸ்காரர் மாற்றினார். எப்படி மாறியது? ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் கட்சிக் கொள்கையும் மாறுகிறது. அதற்கு எடுத்துக் காட்டு காமராஜர்.

இப்படிப்பட்டவரைப் போற்றாமல் தி.மு.க.கழகத்தில் எனக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும். தி.மு.க.வின் லட்சியங்களைக் காமராஜர் நிறைவேற்ற விரும்புகிறார். அதற்குக் காலதாமதம் ஆகலாம். காமராஜர் என் தலைவர். அண்ணா என் வழிகாட்டி. என்னைவிடச் சிறந்தவர்களை என் தலைவர்களாக ஏற்கிறேன். 

ஒருசமயம் காமராஜரை நேரில் சந்தித்து எங்கள் குறைகளை அவரிடம் ஒரு மணி நேரம் விளக்கிப் பேசினேன். அப்போது அவரது நல்ல குணத்தைக் கண்டேன். எண்ணி எண்ணிப் பூரித்தேன். என்னை அவர் தன்பக்கம் இழுக்கவோ, அவமானப்படுத்தவோ இல்லை. மாநகராட்சித் தேர்தலின்போது அவர் ‘வேட்டைக்காரன்’ வருகிறான் ஏமாந்து விடாதீர்கள் என்று ஏதேதோ பேசினார். நாம் பதிலுக்கு ஏதேதோ பேசினேன். அது அரசியல், தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர், பெரிய முதலமைச்சர் பதவியையே தூக்கி எறிந்தவர். தொண்டராய், தோழனாய் இருந்து மக்கள் சேவை செய்யமுடியும் என்று கருதி பதவியைத் துறந்தார். சாதாரண கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் இதைப் பின்பற்ற வேண்டும். எம்.ஜி.ஆர். சிகப்பு, நான் கறுப்பு என்று (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) முகவை ராஜமாணிக்கம் குறிப்பிட்டார். மனிதனுக்கு இந்த இரண்டு ரத்தமும் தேவை. ஏதாவது ஒன்று அதிகமாகி விட்டால் வியாதிதான். கறுப்பு என்றால் களங்கம் அல்ல. இரண்டும் சேர்ந்தால்தான் ஜனநாயக சோஷலிசம் மலரும்” -எம்.ஜி.ஆர் இப்படிப்பேசிய அடுத்த சில நாட்களில் அரசியல் சூழல்பரபரப்பானது. 

திமுகவின் பரமஎதிரியான காங்கிரஸ் தலைவரை புகழ்ந்துபேசியதோடு, அவரை எப்படி தலைவர் என்று சொல்லலாம். அண்ணாவை வழிகாட்டி என சிறுமைப்படுத்திவிட்டார் என திமுகவில் ஒரு குழு பிரச்னை கிளப்பியது. அண்ணாவிடமும் இதைச் சொல்லி அவர் மனதை மாற்ற முயன்றனர். எம்.ஜி.ஆரால் கட்சி அடைந்த பயனை அவர்களிடம் எடுத்துக்கூறிய அண்ணா அதை அப்படியே விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் எம்.ஜி.ஆருக்கு எதிராக பல காலமாக கட்சியில் செயல்பட்டுவந்த அந்தக்குழு எம்.ஜி.ஆரால் அண்ணா மனமுடைந்துவிட்டார்; எம்.ஜி.ஆர் மீது பொதுக்குழுவில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளார் என தங்களின் ஆதரவுப் பத்திரிகைகளில் எழுதவைத்தன. அந்தக்குழுவின் இன்னொரு ஆதரவு நாளேட்டில், 'எம்.ஜி.ஆருக்கு திமுக தொண்டர்கள், கறுப்புக்கொடி காட்ட உள்ளார்கள் என்று எழுதியதோடு பொதுச்செயலாளர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கட்சியில் எம்.ஜி.ஆர் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறார் எனவும் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு திமுக பிரமுகரின் அறிக்கை வெளியானது. இது எம்.ஜி.ஆரைக் கோபப்படுத்தியது.

இந்த நிலையில் சென்னையில் நடந்த தீவிபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதற்காக எம்.ஜி.ஆருக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. இதில் காமராஜர் விவகாரம் பகிரங்கமாக எதிரொலித்தது. 'இத்தனை வருடம் கட்சிக்காக உழைத்த எனக்கு கழகம் தரும் பரிசு இதுதானா? என பொங்கிப்பேசிய எம்.ஜி.ஆர், தொடர்ந்து அவர் பேசும்போது, ' காமராஜர் விழாவில் நான் கலந்துகொண்டதற்காக அறிக்கை விட்ட கழகப்பிரமுகர் யார்... கட்சியில் ஐந்தாம்படைகள் உருவாகியுள்ளன. இவர்கள் யாரென்று எனக்கு நன்கு தெரியும். கழகம் வெற்றிகளைக் குவிக்கவேண்டும் என்றால் முதலில் இந்த ஐந்தாம்படைகளை ஒழிக்கவேண்டும்.

இந்தக் கூட்டத்தால் நான் உண்மையில் பெருமைப்படவில்லை; பல ஆண்டுகாலம் இந்தக் கட்சிக்காக உழைத்த என்னை ஏதோ நேற்றுவந்தவன் போலவும், இவர் நல்லவர் என்பதுபோலவும் மக்களுக்கு என்னை அறிமுகப்படுத்திவைப்பது எனக்கு பெருத்த அவமானத்தை தருகிறது. அண்ணாவை வழிகாட்டி என்றும் காமராஜரை தலைவர் என்றும் சொல்லிவிட்டேனாம். உடனே 'எம்.ஜி.ஆர் காங்கிரசுக்கு போகப்போகிறார். அவருக்கு இனி திமுகவில் என்னவேலை' என பிரசாரத்தில் இறங்கிவிட்டார்கள். ஒருவரைப்பாராட்டினால் இன்னொருவரை இகழ்வதாக ஆகிவிடுமா... அப்படியானால் அண்ணா சிறையில் இருந்தபோது காமராஜரை எதிர்த்து கடுமையாக தேர்தல் பிரசாரம் செய்தேனே..அப்போது சிறையில் இருந்த அண்ணாவின் விருப்பத்திற்கு விரோதமாக செயல்பட்டது நானா அவர்களா...?

தனிப்பட்ட ஒருவரின் குணத்தைப் பாரட்டுவது எப்படி ஒரு கட்சியை பாராட்டுவதாக ஆகும்...இந்த வித்தியாசத்தைக் கூட தெரியாத தொண்டர்கள் நிறைந்ததுதான் திமுக கழகமா...? யாருடைய பாராட்டுக்களை எதிர்பார்த்தும் நான் திமுகவில் இல்லை. யாராவது பாராட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பவனும் இல்லை. எதையாவது சொல்லி தினம்தினம் பத்திரிகைளில் பெயர் வரச் செய்யும் திறமை எனக்கும் உண்டு. இன்னொருவரின் வற்புறுத்தலுக்காக நான் இந்தகட்சியில் இல்லை. எனக்கு விருப்பம் உள்ள கொள்கைகளுக்காக நான் இங்கு இருக்கிறேன். விருப்பமில்லாமல் போனால் ஒரு நிமிடமும் இதில் நீடிக்கமாட்டேன். 

மதுரையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது அண்ணா என் மீது முழு அன்பு கொண்டவர் என்றேன். பேசிமுடித்தபின் கருணாநிதி, நாங்கள் உங்கள் மீது குறைவான அன்பு கொண்டவர்களா என்றார். மனிதர் அளவில் நீங்கள் ஒருசமயம் என்னை பாராட்டுவீர்கள். மறுசமயம் என் மீது ஆத்திரப்படுவீர்கள். ஆனால் அண்ணா, நான் தவறுசெய்தாலும் என்னை மன்னித்து ஏற்கும் தெய்வீக குணம் கொண்டவர்" என்றேன். அது உண்மையும் கூட. ஆண்டுக்கொரு முறை நான் கழகத்தில் கலகம் விளைவிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையை வெளியிட்ட பிரமுகர் யார் என நான் மதியை கேட்டேன். நாவலரை கேட்டேன். அவர் யார் என அவர்களுக்கும் தெரியவில்லை. இப்படி கட்சிப்பிரமுகர்கள் ஒவ்வொருவரையும் கேட்டதாக குறிப்பிட்ட  எம்.ஜி.ஆர், கருணாநிதியிடம் கேட்டதாக குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) எப்படிக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். எப்படி துாண்டிவிடலாம்” என வேலைபார்க்கிற இந்த ஐந்தாம்படைகளை கட்சியில் இருந்து அப்புறப்படுத்தவில்லையென்றால் கழகத்தின் வெற்றி பாதிக்கப்படும் என்பதை கூறிக்கொள்கிறேன். 

காமராஜரை புகழ்வதன்மூலம் நான் கோழை என்றும் வாய்ப்பும் வசதியையும் தேடிக்கொள்ள இப்படி பேசியதாக மதுரை முத்து கூறியிருக்கிறார். சினிமாவில் உச்ச செல்வாக்கில் உள்ள நான் இனி புதியதாக வசதி வாய்ப்பை காணவேண்டிய தேவையில்லை. சேர்த்த பணத்தை எல்லாம் இல்லாதவர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிற நான் இன்னமும் பணம் சேர்க்கவேண்டிய அவசியமில்லை. இங்கே உள்ள வேலைகளை செய்யவே நேரம் இல்லாதபோது நான் இன்னொரு கட்சியில் போய் என்ன செய்யப்போகிறேன். எதையும் எப்படியும்பேசிவிடலாம் என்றால் இங்கே நாணயம் இருக்காது என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்.” - இப்படி பொங்கித்தீர்த்தார் எம்.ஜி.ஆர். 

காமராஜரை எம்.ஜி.ஆர் புகழ்ந்த இந்த சம்பவத்தை அண்ணா அதன்பிறகு பெரிதாகாமல் சம்பந்தப்பட்ட இருதரப்பினரையும் அழைத்துப்பேசி சமாதானம் செய்துவைத்தார். கட்சி எம்.ஜி.ஆர் என்ற பொன்முட்டை இடும் வாத்தை இழப்பது நல்லதல்ல என்பதில் அண்ணா கொண்டிருந்த தீர்க்கதரிசனம் எம்.ஜி.ஆரை கட்சியில் தொடரவைத்தது. ஆனால் அண்ணாவுக்குப்பின் எம்.ஜி.ஆருக்கு எதிரான எதிர்ப்பு நிலை வலுவடைந்து திராவிட இயக்கத்தில் இன்னுமொரு கட்சி (அதிமுக) உருவாகும் நிலையை ஏற்படுத்தியது. அந்த வகையில் காமராஜரின் இந்த பிறந்தநாள்விழா பேச்சு அதில் முக்கியப்பங்கு வகித்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு