Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

ஒரு புதிய பயணத்துக்கான முதல் அடியை எடுத்துவைத்திருக்கிறது இந்தியா. அந்த வலிமையின் சக்திமிக்க அங்கமாக, ஆற்றலுடன் இணைந்து நிற்கிறது தமிழகம். மத்தியில் நரேந்திர மோடி அரசும், மாநிலத்தில் ஜெயலலிதா அரசும் ஒரு புதிய நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளன.

மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான நல்லுறவு, பெரும்பாலான நேரங்களில் பெருமைப்படத் தக்கதாக இருப்பது இல்லை என்பது நமது வருத்தமான வரலாறு. அதிகாரப் படிநிலையில் மேல்-கீழ் இருப்பதால் மாநிலங்களின் நலன்கள் நசுக்கப்படுவது பல காலமாக நடந்துவருகிறது. பல கட்சி ஆட்சிமுறையும், பிரதேசப் பிரதிநிதித்துவக் குரல்களும் ஒலிப்பதாக உள்ள நமது ஜனநாயகத்தில், இத்தகைய முரண்பாடுகள் இயல்பானவை. அதைக் கடந்து வருவதும், ஆக்கபூர்வமான அணுகுமுறைக்கு அச்சாரமிடும் சந்தர்ப்பங்களைத் தவறவிடாததும்தான் பொறுப்புள்ள ஆட்சியாளர்களின் கடமை.

இதைத் தெளிவாக உணர்ந்துள்ள பிரதமர் மோடி, 'மாநிலங்களின் தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் முன்னுரிமை கொடுப்பதே என் முதல் பணி’ என்று கூறியிருக்கிறார். தனிப் பெரும்பான்மை பெற்றபோதிலும் மாநிலங்களின் குரல்களை மதிக்கும் தன்மை பாராட்டத்தக்கது. அதேபோல தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், 'மத்திய அரசுடன் மாநில அரசு நல்லுறவைக் கடைப்பிடிக்கும்’ என்று கூறியிருக்கிறார். தனது பொறுப்பை உணர்ந்து முதல்வர் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு, நம்பிக்கை தரும் அம்சம். இந்தத் தருணத்தில் தமிழகத்துக்குச் சாதகமாக்கும் சாதுர்ய செயல்பாடுகளை முதல்வரிடம் எதிர்பார்ப்போம்.

மோடியும் ஜெயலலிதாவும் நீண்ட கால நண்பர்களாக இருப்பது தமிழகத்துக்குக் கூடுதல் நன்மைகளைப் பெற்றுத்தரும் என்று நம்பலாம். மத்திய அரசின் திட்டங்களை, தமிழகத்துக்குப் பெற்றுத்தருவது, ஏற்கெனவே தொடங்கி பாதியில் நிற்கும் திட்டங்களை முழுமை அடையச் செய்வது, குறிப்பாக இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுவரும் இன்னல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது... என நமக்கு வேண்டியவை ஏராளம் இருக்கின்றன. தான் முதல்வராக இருந்த குஜராத் மாநிலத்தின் மின்சாரச் சிக்கலுக்கு நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தீர்வு கண்ட ஒருவர் பிரதமராக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் மின் சிக்கலைச் சரிசெய்வதற்கு இதுதான் பொருத்தமான தருணம்.

இந்த இனிய தொடக்கம், இமாலய சாதனைகளைக்கு வழிகாட்டட்டும்!