Published:Updated:

நாட்டையும் கட்சியையும் கெடுத்தவர் சிதம்பரம்தான்!

காங்கிரஸ் கூட்டத்தில் காட்டம்

தமிழகத்தில் காங்கிரஸ் படுதோல்விக்குப் பொறுப்பேற்று மாநில தலைவர் ஞானதேசிகன் பதவி விலக வேண்டும் என்று ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் அறிக்கைவிட... பதிலுக்கு, ''காங்கிரஸையே ஒட்டுமொத்தமாகத் தோற்கடித்த சிதம்பரத்துக்கும் அவரது கோஷ்டிகளுக்கும் ஞானதேசிகனை விமர்சிக்க அருகதை இல்லை'' என்று ஞானதேசிகன் ஆதரவாளர்கள் அறிக்கை வெளியிட... தமிழக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு.

 இந்த நிலையில்தான், 7-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை ப.சிதம்பரம் கோஷ்டியினர் புறக்கணித்தாலும் கூட்டத்தில் சூடான விவாதங்களுக்குப் பஞ்சமில்லை.

நாட்டையும் கட்சியையும் கெடுத்தவர் சிதம்பரம்தான்!

கூட்டத்தைத் தொடங்கி வைத்த ஞானதேசிகன், ''நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவிலும் தமிழகத்திலும் தோல்வியைத் தழுவியது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. தமிழகத்தில் நம்முடைய வாக்கு 4.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. வெறும் 30 நாள் அவகாசத்தில் தேர்தலைச் சந்தித்தோம். என்னை நீக்க வேண்டும் என்று சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். பதவி நிரந்தரம் இல்லை என்பது எனக்குத் தெரியும். அறிக்கை மூலம் கட்சியை பலவீனப்படுத்த வேண்டாம். ஒன்று சேர்ந்து உழைப்போம்'' என்றார்.

சாருபாலா தொண்டைமான் (துணைத் தலைவர்), ''திருச்சியில் தேர்தல் பிரசாரத்தில் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்றார்கள். காங்கிரஸ் நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஆனால், எதிர்பார்த்த ஓட்டுகள் விழவில்லை. திருச்சி தொகுதியில் பல கிராமங்களில் குடி தண்ணீர் இல்லை. அ.தி.மு.க வேட்பாளர் குமாரை பல இடங்களுக்குள் பிரசாரத்துக்கே விடவில்லை என்று செய்திகள் வந்தன. அவர், எப்படி ஜெயித்தார் என்பதே தெரியவில்லை. ஓட்டுகள் ஜம்ப்பிங் ஆகும் சூழ்ச்சி ஏதேனும் செய்யப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது'' என்றார்.  

போட்டியிட்ட 39 பேரில் டெபாசிட் வாங்கிய கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் கூட்டத்துக்கு வரும்போது அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். அவர் பேசுகையில், ''கன்னியாகுமரியில் எனது தோல்வி எதிர்பாராதது. மூன்று சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் வேலையை குறைசொல்ல முடியாது. பணத்தை செலவு செய்ததிலும் நான் குறை வைக்கவில்லை. ஓட்டுப் பதிவுக்கு நான்கு நாட்கள் முன்பு வரை நான்தான் முன்னிலையில் இருந்தேன். ஆனால், தோல்வி ஏன் என்று புரியவில்லை. இனி வருங்காலங்களிலாவது ஒற்றுமையோடு உழைத்து காங்கிரஸ் கட்சியை வளர்ப்போம். ஜெயிப்போம்'' என்றார்.

தொட்டியம் ராஜசேகரன், ''பணம் பெற்றுக்கொண்டு அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டுவிட்டார்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது. ஓட்டுப் பதிவு எந்திரத்தில் குளறுபடி செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரம் இருக்கிறது. அமெரிக்காவே ஓட்டுப் பதிவு எந்திரத்தை நம்பாமல் பேப்பர் பேலட் முறைக்கு சென்றுவிட்டது. எனவே, எந்திர ஓட்டுப் பதிவுமுறையைக் கண்டித்து வழக்குப் போட வேண்டும்'' என்றார்.

ராயபுரம் மனோ (வட சென்னை தலைவர்), ''தோல்விக்கு இன்னார்தான் காரணம் என்று குறை சொல்வதைவிட்டு வரும் சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களை எதிர்கொள்ள இப்போதே தயாராக வேண்டும். கட்சி நிர்வாகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் மட்டுமே போடப்பட்டுள்ளனர். ஆனால், மற்ற நிர்வாகிகள் நியமிக்கப்படவே இல்லை. வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளும் 33 வட்டங்களும் வருகின்றன. குறைந்தபட்சம் இந்த இடங்களுக்காவது நிர்வாகிகளைப் போட அனுமதி தர வேண்டும். மாவட்ட கமிட்டியில் நிர்வாகிகளையே போடாமல் கட்சியை எப்படி வளர்ப்பது?'' என்று கேள்வி எழுப்பினார்.

புரட்சி மணி (கடலூர் மாவட்டத் தலைவர்), ''சிதம்பரம் ஆதரவாளரான வள்ளல்பெருமானும் கே.எஸ்.அழகிரியும் படுகேவலமாக 4-வது இடத்துக்கு போனது ஏன்? பொருளாதார புலி என்று சொல்லப்படும் சிதம்பரம்தான் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து கட்சியையும் தோற்கடித்தார். ஞானதேசிகன் தலைமையின் கீழ்தான் கட்சி வலுப்பெற்று வருகிறது. 'கட்சியில் சண்டை இல்லை; சட்டைகள் கிழியவில்லை’ என்று பத்திரிகைகளே பாராட்டுகின்றன'' என்று ஆவேசமாகப் பேசினார்.

கோஷ்டி சேர்ப்பதைத் தவிர்த்துவிட்டு ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டிய தருணம் இது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

படம்: ஆ.முத்துக்குமார்

39 பேரையும்  அழைத்திருக்க வேண்டும்!

அருள் அன்பரசு (ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர்), ''தேர்தல் தோல்வியை ஆராயவும் கட்சி வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்லவும் கூட்டப்பட்ட கூட்டத்தில் தேர்தலில் நின்ற வேட்பாளர்களுக்கு அழைப்பு இல்லை. மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களை மட்டுமே அழைத்து கூட்டம் போட்டுள்ளனர். தேர்தலில் நின்ற 39 பேரையும் அழைத்து, நிர்வாகிகள் ஒத்துழைப்பு எப்படி இருந்தது; குறைகள் என்னென்ன என்றெல்லாம் கேட்டிருக்க வேண்டும். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தேர்தல் அன்று ஒரு சில வாக்குச்சாவடிகளுக்குச் சென்றேன். அங்கு காங்கிரஸ் பூத் ஏஜென்ட்களாக இருந்தவர்களுக்கு வேட்பாளராகிய என்னையே அடையாளம் தெரியவில்லை. கான்ட்ராக்ட் அடிப்படையில் பணத்தைக் கொடுத்து பூத் ஏஜென்ட் போட்டு மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றிவிட்டனர். எனவே, இனியாவது காலம் கடத்தாமல் கட்சியை வளர்க்கும் வேலையை செய்ய வேண்டும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு