Published:Updated:

கசப்பு மருந்து தயாரிக்கும் 6 பேர்!

கசப்பு மருந்து தயாரிக்கும் 6 பேர்!

பிரீமியம் ஸ்டோரி

கட்சியைக் காப்பாற்றும் கசப்பு மருந்தை தயாரிக்கும் பொறுப்பை ஆறு பேரிடம் கொடுத்திருக்கிறார் கருணாநிதி!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோற்றது தி.மு.க. இந்தத் தோல்வியால் அதிர்ச்சியடைந்த கருணாநிதி, ஜூன் 2-ம் தேதி கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, அதுபற்றி ஆலோசனை நடத்தினார். ''கழக உயர்நிலை செயல்திட்டக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையொட்டி, மாவட்டக் கழக நிர்வாகங்களை எளிமையாக்குவதற்கும் மேலும் வலிமைப்படுத்துவதற்கும் ஏற்ற வகையில், தேவையான சாத்தியக்கூறுகளை ஆய்ந்து முடிவெடுக்கவும் கழகத் தலைமைக்கு பரிந்துரைசெய்யவும் குழு அமைக்கப்படுகிறது'' என்று அறிவித்த கருணாநிதி, அந்தக் குழுவில் ஆறு பேரை நியமித்துள்ளார். கட்சியைக் காப்பாற்ற கருணாநிதி நியமித்துள்ள அந்த ஆறு பேரின் பயோடேட்டா இது.

கசப்பு மருந்து தயாரிக்கும் 6 பேர்!

கலசப்பாக்கம் பெ.சு.திருவேங்கடம்:  

திருவண்ணாமலை மாவட்டம் பெரிய கிளாம்பாடி இவரது சொந்த ஊர். 1977, 1980-ம் ஆண்டுகளில் எம்.ஜி.ஆரிடம் தி.மு.க தோல்வியைச் சந்தித்தபோதும்கூட, கலசப்பாக்கம் தொகுதியில் வென்றார். இவர் மொத்தம் ஏழு முறை கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு நான்கு முறை வெற்றிபெற்றார்.

அரசியலில் பெ.சு.திருவேங்கடத்தை ஆளாக்கியது ப.உ.சண்முகம். அவரே அ.தி.மு.க-வுக்கு சென்றபோது, 'தி.மு.க-தான் உயிர்; கலைஞர் மட்டுமே தனது தலைவர்’ என்று இங்கேயே தங்கியவர் திருவேங்கடம். தி.மு.க சட்டத்திருத்த குழு உறுப்பினராக இருந்துள்ளார். உட்கட்சி பிரச்னை என்றால் கருணாநிதியின் தூதுவராக செல்பவர். சட்டமன்றத்தில் வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை, அதுதொடர்பான விவாதங்களில் தி.மு.க-வின் நிலையை சொல்ல கருணாநிதியின் பிரதிநிதியாக நின்று வாதாடியவர். இன்றும் சொந்த ஊரில் தங்கி விவசாயத்தைதான் கவனித்துவருகிறார். தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். ஆரணி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக இவர்  நியமிக்கப்பட்டு இருந்தார்.

திருத்துறைப்பூண்டி டி.எஸ்.கல்யாணசுந்தரம்:

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கும் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழனுக்கும் நெருக்கமானவர். கோசி.மணி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, கல்யாணசுந்தரத்தின் மகன் சிவக்குமார் உதவியாளராக இருந்தார். இந்த ஆண்டு கருணாநிதி பிறந்தநாள் அன்றுகூட அன்பழகனோடுதான் கோபாலபுரம் வந்து கருணாநிதியை வாழ்த்திவிட்டு சென்றார். இவர், இப்போது தீவிர அரசியலில் இல்லை என்றாலும், தி.மு.க வரலாறு நன்கு தெரிந்த மூத்த உறுப்பினர். தி.மு.க சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினராக இருக்கிறார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கட்சியில் மூத்தவர்.

ஒரத்தநாடு பி.ராஜமாணிக்கம்:

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் தெரிந்தவர் பி.ராஜமாணிக்கம். 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றார். 2001, 2006 தோல்வி. நீடாமங்கலம் முன்னாள் ஒன்றியச் செயலாளர். கடந்த உள்கட்சித் தேர்தலில் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளராக போட்டியிட்டு முன்னாள் மத்திய அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான பழனிமாணிக்கம் ஆதரவாளரிடம் தோற்றார். இந்தத் தேர்தலில் தஞ்சை தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளருக்காக  வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்தார். தி.மு.க சட்டதிட்ட திருத்தக் குழு உறுப்பினர். கருணாநிதிக்கு நெருக்கமானவர். கட்சி அறிவித்த பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்.

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு:

விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் தங்கபாண்டியனின் மகன். பொறியாளரான இவர், ஸ்பிக் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அவரது தந்தை மரணத்துக்குப் பிறகு வேலையை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தார். 1998-ல் அருப்புக்கோட்டை இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டசபைக்குச் சென்றார். கடந்த தி.மு.க ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் பள்ளி கல்வித் துறை அமைச்சராக இருந்தார். கருணாநிதியின் கனவுத் திட்டமான சமச்சீர் கல்வி, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் ஆகியற்றை நிறைவேற்றி தலைவரின் மனத்தில் இடம் பிடித்தவர். இப்போது தி.மு.க. நெசவாளர் அணி தலைவராகவும் திருச்சுழி எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார். படித்தவர், வளைந்து கொடுக்காதவர் என்ற தகுதிகளின் அடிப்படையில் இவர் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஆறு பேர் குழுவில் மிகவும் இளம்வயதுக்காரர்.

வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்:

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னையை நிரந்தர வசிப்பிடமாக  மாற்றிக்கொண்டவர். இவரிடம் ஜூனியராக வேலைபார்த்த ஏழு பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக உயர்ந்துவிட்டனர். ஐ.நா. சபை மனித உரிமைப் பிரிவில் வேலை கிடைத்தும், அரசியல் பணியே போதும் என்று 40 ஆண்டுகளாக தமிழகத்தைச் சுற்றிச் சுற்றி வருபவர். கங்கை, காவிரி, தாமிரபரணி, வைப்பாறு என்று இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர். பழ.நெடுமாறன், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஆகியோரோடு நெருங்கிப் பழகியவர். அரசியல் கட்சிகளில் முதல் செய்தி தொடர்பாளர். 1989, 1996-ம் ஆண்டுகளில் கோவில்பட்டி சட்டமன்றத் தேர்தல்களில் சொற்ப வாக்குகளில் தோல்வியைத் தழுவியவர். விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி என்று தென் மாவட்டங்களில் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் தி.மு.க-வினரிடையே நன்கு அறிமுகமானவர். அரசியல் கட்சிகளின் வரலாறு, வளர்ச்சி, தேர்தல் சட்டதிட்டங்களை நன்கு அறிந்தவர்.

ஈரோடு எஸ்.எல்.டி.சச்சிதானந்தம்:

நெசவாளர் அணிச் செயலாளர். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதி தேர்தல் பொறுப்பாளராக இருந்தார். கடந்த முறை தி.மு.க ஆட்சியில் அப்போதைய அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியில் இருந்து நீக்கியபோது, முன்னாள் அமைச்சரும் அவரது தந்தையுமான என்.கே.கே.பெரியசாமியை மாவட்டப் பொறுப்பாளராக தி.மு.க நியமித்தது. அப்போது, சச்சிதானந்தம் அவருக்கு உதவியாக இருப்பார் என்று கருணாநிதி அறிவித்தார்.  

- எஸ்.முத்துகிருஷ்ணன்

படங்கள்: கே.குணசீலன், ரமேஷ் கந்தசாமி, கா.முரளி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு