பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

அர்ஜுனன்.ஜி., திருப்பூர்-7.

கழுகார் பதில்கள்!

'உயிரோடு இருப்பவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பாடப்புத்தகங்களில் சேர்க்கக் கூடாது’ என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளாரே?

இது வரவேற்கத்தக்க கருத்து. தன்னைப் பற்றிய வரலாறு பாடப்புத்தகங்களில் இடம்பெறக் கூடாது என்கிற தடையைப் போட்டுவிட்டுத்தான் மோடி இப்படிச் சொல்லியிருக்கிறார். இது அனைத்துக் கட்சித் தலைவர்களும், மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டியதே!

 ஆர்.நாராயணசாமி, ஒரத்தநாடு.

கழுகார் பதில்கள்!

மத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கு கேபினெட் அமைச்சர் பதவி கிடைக்கவில்லையே?

இது வருந்தத்தக்கதே! மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து கேபினெட் அந்தஸ்து தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது. சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சி சார்பில், ராஜாஜி, கோபால்சாமி அய்யங்கார், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, பி.சுப்பராயன், ஆர்.கே.சண்முகம் செட்டியார், மோகன் குமாரமங்கலம், ஆர்.வெங்கட்ராமன், சி.சுப்பிரமணியம், ப.சிதம்பரம், எம்.அருணாசலம், மணிசங்கர் அய்யர், ஜி.கே.வாசன் ஆகியோர் கேபினெட் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.

தி.மு.க சார்பில் முரசொலி மாறன், டி.ஜி.வெங்கட்ராமன், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், மு.க.அழகிரி, ஆ.ராசா ஆகியோர் இருந்துள்ளனர். அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை, சேடப்பட்டி முத்தையா ஆகியோரும் பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாஸும் இருந்துள்ளனர். தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, பி.ஜே.பி அமைச்சரவையில் ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோரும் கேபினெட் அமைச்சர்களே... இந்த வரிசையில் பள்ளம் விழுந்துவிட்டது!

 காந்திலெனின், திருச்சி.

கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

பண்டிதர் அயோத்திதாசர் பற்றி?

பண்டிதர் க.அயோத்திதாசர் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழகச் சிந்தனை மரபில் பல்வேறு களங்களுக்கும் தொடக்கம் என்று அவரையே சொல்ல முடியும். தாழ்த்தப்பட்ட மக்களை பூர்வத் தமிழர், ஆதிதிராவிடர் என்று அடையாளச் சொல்லால் சுட்டிக்காட்டியவர். ஆதிதிராவிட மகாசன சபை என்பதை 1890-ல் உருவாக்கியவர். 1907-ல் 'ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழைத் தொடங்கினார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளில் புலமை பெற்று இருந்தார். மூடநம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு பிரசாரம் செய்தார். பெண் கல்வியை வலியுறுத்தினார். விதவையர் மணத்தை ஊக்குவித்தார். புத்தரையும் திருவள்ளுவரையும் தமிழகத்துக்கு அதிகமாக அறிமுகப்படுத்திவர் அவர்தான்.

'சீர்திருத்தம் என்னும் பூமியை ஒற்றுமை என்னும் கலப்பையால் உழுது, சாதிகள் என்னும் கல்லு கரடுகளையும், சமயம் என்னும் களைகளையும் பிடுங்கிச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டு சகோதர ஐக்கியம் என்னும் நீரைப் பாய்ச்சி ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கை என்னும் வரப்பை உயர்த்தி, ஊக்கம், விடாமுயற்சி என்னும் எருவிட்டு, சர்வ சாதி சமரசம் என்னும் பரம்படித்து, தாய்மொழிக் கல்வி, சப்பான் கைத்தொழில், அமெரிக்கன் அபிவிருத்தி என்னும் விதைகளை ஊன்றி, அவன் சின்ன சாதி இவன் பெரிய சாதி எனக் குரோதம் ஊட்டும் சத்ருக்களாகிய பட்சிகள் நாடாவண்ணம், சகலரும் சுகம் அடைய வேண்டும் என்னும் கருணை என்போனைக் காவல் வைத்து, கல்வி, கைத்தொழில், யூகம் என்னும் கதிர்களை ஓங்கச் செய்தால் அதன் பலனால் நாமும் நமது குடும்பமும் நமது கிராமவாசிகளும் நமது தேசத்தாரும் சீர் பெறுவதுடன் தேசமும் சிறப்படையும்’ - என்று அயோத்திதாசர் எழுதி 107 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழகத்தில் உருவான இத்தகைய சிந்தனைகளின் ஆரம்பம் அவர்தான்!  

 குணசேகரன், புவனகிரி.

கழுகார் பதில்கள்!

விஜயகாந்த், ராமதாஸ் இருவரில் இந்தத் தேர்தல் முடிவு யாருக்கு அதிக அடியைக் கொடுத்துள்ளது?

இந்த தேர்தல் முடிவில் அதிக அடியை வாங்கியிருப்பவர் விஜயகாந்த்தான். இதுவரை அவருக்கு 8 முதல் 10 சதவிகித வாக்கு இருந்தது. ஆனால், அது 5.5 சதவிகிதமாகச் சரிந்துவிட்டது. தேர்தல் பிரசாரத்தின்போது விஜயகாந்துக்கு கூட்டம் அதிகமாகக் கூடியது. ஆனால் அது ஓட்டுகளாக மாறவில்லை என்பதை இது காட்டுகிறது.

14 தொகுதிகளில் போட்டியிட்டு 19 லட்சம் வாக்குகளை விஜயகாந்த் வாங்கியுள்ளார். ஆனால் எட்டு தொகுதிகளில் போட்டியிட்டு 22 லட்சம் வாக்குகளை பி.ஜே.பி-யும், எட்டு தொகுதிகளில் போட்டியிட்டு பா.ம.க 18 லட்சம் வாக்குகளையும் வாங்கியுள்ளன. தே.மு.தி.க-வைவிட பாதி இடங்களில் அதாவது 7 தொகுதிகளில் போட்டியிட்டு 15 லட்சம் வாக்குகளை ம.தி.மு.க வாங்கியுள்ளது. கூட்டணியைக் காலதாமதப்படுத்தி இழுத்தது அவர்மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படுத்தி உள்ளதை இது காட்டுகிறது.

 என்.வி.சீனிவாசன், புதுபெருங்களத்தூர்.

கழுகார் பதில்கள்!

ராகுல் காந்தியை விமர்சித்த கேரள முன்னாள் அமைச்சரை காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளாரே?

இன்னுமா திருந்தவில்லை ராகுல்? விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவம்தான் அவரைத் தலைவர் ஆக்கும்.

 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்!

தமிழக பி.ஜே.பி கூட்டணிக்கு இனி மங்களம்தானா?

ஒரு கூட்டணி என்றால் அந்தக் கூட்டணியின் தலைவர்கள் சந்தித்துப் பேச வேண்டும். ஒரே மேடையில் பங்கேற்க வேண்டும். கூட்டணிக் கட்சிகள் இணைந்து செயல்வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும். தேர்தல் சம்பந்தமான பிரச்னைகளை இணைந்து எதிர்கொள்ள வேண்டும். இவை எதுவுமே தமிழக பி.ஜே.பி கூட்டணியில் நடக்கவில்லை.

கூட்டணித் தலைவர்களான விஜயகாந்த்தும் ராமதாஸும் சந்திக்கவே இல்லை. ராமதாஸை வைகோ ரகசியமாக தர்மபுரி ஹோட்டலில் சந்தித்தார். ராமதாஸ் பேசிய எந்தக் கூட்டத்திலும் கூட்டணிக் கட்சியைப்பற்றி பேசவே இல்லை. மோடியை பிரதமர் ஆக்குங்கள் என்றும் கேட்கவில்லை.

தேர்தலுக்குப் பிறகாவது, தோல்விக்கான காரணத்தை இவர்கள் ஒன்றுசேர்ந்து யோசிக்க வில்லை. அப்புறம் எப்படி இதனைக் கூட்டணி என்று சொல்ல முடியும். ஏதோ ஷேர் ஆட்டோ பயணம் போலத்தான் இருந்தது இந்தக் கூட்டணி. சென்ட்ரலில் புறப்படும் ரயிலைப் பிடிக்க யாரென்றே தெரியாத, தெரிய விரும்பாத, பார்க்க விரும்பாத ஆட்களுடன் பயணம் போகும் ஷேர் ஆட்டோ பயணத்துக்கும் இந்தக் கூட்டணிக்கும் என்ன வித்தியாசம்?

 ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.

கழுகார் பதில்கள்!

'தி.மு.க, தே.மு.தி.க ஆகிய இரண்டு கட்சிகளுமே மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன’ என்கிறாரே சரத்குமார்?

அ.தி.மு.க-வை திருப்திப்படுத்துவதற்கு இப்படிச் சொல்லித்தானே ஆக வேண்டும். ச.ம.க மக்கள் நம்பிக்கையை பெற்றுவிட்டது என்று சொன்னால் பதில் சொல்லலாம்!

 பி.சாந்தா, மதுரை-14.

கழுகார் பதில்கள்!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் வேட்பு மனுவில் அவரது கல்வித் தகுதி பற்றி முரண்பட்ட தகவல்கள் உள்ளதே?

இதில் இரண்டு கருத்துக்களைச் சொல்ல வேண்டும். தன்னுடைய கல்வித் தகுதி பற்றி அமைச்சர் வேறு வேறு தகவல்களைத் தந்துள்ளது விசாரணைக்கு உட்பட்டதே. வேட்புமனுவில் தரும் தவறான தகவல்கள் அவரது பதவியைப் பறித்துவிடும். இதனை மத்திய அரசே விசாரணை செய்து, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை தர வேண்டும். இறுதி முடிவை தேர்தல் ஆணையம் விரைவில் வழங்க வேண்டும். இது ஒன்று.

மற்றொன்று... இரானியின் கல்வித் தகுதியை வைத்து அவர் அமைச்சர் பதவிக்குத் தகுதியானவர் அல்ல என்று சொல்வது தவறானது. கல்வி வேறு, அறிவு வேறு. பட்டம் பெறாதவர்கள் பட்டறிவு இல்லாதவர்கள் என்று சொல்ல முடியாது. அதனால்தான், 'என்னுடைய செயல்பாடுகளை வைத்து என்னை விமர்சியுங்கள்’ என்று இரானி சொல்லியிருக்கிறார்.

 செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

கழுகார் பதில்கள்!

பதவி நீக்கப்பட்ட தமிழக அமைச்சர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

'மீண்டும் நாம் அமைச்சர் ஆவோம், அம்மா, நமக்கு ஆறு மாதங்கள் ஓய்வு கொடுத்துள்ளார்’ என்ற தன்னம்பிக்கைதான் அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு