Published:Updated:

நீர் பிடிப்புப் பகுதியில் கார் பார்க்கிங் கட்டும் கேரளா!

முல்லை பெரியாறில் புதிய முட்டுக்கட்டை

பிரீமியம் ஸ்டோரி

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு செய்துவரும் அத்துமீறல்கள் நீதிமன்ற உத்தரவை மீறுவதாக உள்ளது!

கடந்த மே 5-ம் தேதி முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இறுதித் தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம். அந்தத் தீர்ப்பில் முக்கியமாக, 'அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம். அணையில் புதிய பணிகள் என்றாலும், பழைய மராமத்து பணிகள் என்றாலும் மத்திய நீர்வளத் துறை அலுவலர் ஒருவர், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்கள் சார்பாக தலா ஒருவர் என மூவர் அடங்கிய குழுதான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். இவர்களுக்கு தனி அலுவலகம் வைத்து இயங்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.

நீர் பிடிப்புப் பகுதியில் கார் பார்க்கிங் கட்டும் கேரளா!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், அணையில் தண்ணீர் தேங்கும் நீர்பிடிப்புப் பகுதியில் சுற்றுலா வாகனங்களை நிறுத்தும் கார் பார்க்கிங் கட்டத் தொடங்கியுள்ளது கேரள வனத்துறை. இது நீதிமன்றத் தீர்ப்பை மீறுவது ஆகும்.

இதுபற்றி முல்லை பெரியாறு மீட்புக்குழுவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் நம்மிடம் பேசினார். ''உச்ச நீதிமன்றம் இதுவரை இரண்டு தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. முதல் முறை 2006-ல் தீர்ப்பு வழங்கியபோதும் கேரள அரசு முரண்டுபிடித்தது. மறுபடியும் இப்போது வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் தான்தோன்றித்தனமாகச் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. அதன் ஆரம்பம்தான் இந்த கார் பார்க்கிங் கட்டும் திட்டம்.

நீர் பிடிப்புப் பகுதியில் கார் பார்க்கிங் கட்டும் கேரளா!

'அணையில் 142 அடி தண்ணீர் தேக்கினால், சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை மரங்கள் தண்ணீரில் மூழ்கிவிடும். வனவிலங்குகள் இடம் பெயர்ந்துவிடும்’ என்று சொல்லிவருகின்றனர். இந்த சமயம், சுற்றுலா வரும் மக்களுக்கான கார் பார்க்கிங் கட்ட ஆரம்பித்துவிட்டனர். இனிமேல் நமது பொதுப்பணித் துறை அதிகாரிகள் அணைக்குச் செல்வதாக இருந்தாலும்  பேட்டரி காரில்தான் செல்ல வேண்டுமாம். அதற்காக நமது அரசு சார்பாக புதிய பேட்டரி கார் வாங்கவும்  கூடாதாம். இப்படி எல்லாம் திட்டம் போட்டு தடுப்பு வேலையைத் தீயாகப் பார்ப்பவர்கள் அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் கட்டடத்தைக் கட்டிவிட்டு, 'கட்டடம் நீரில் மூழ்குகிறது... சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல முடியவில்லை’ என்று மீண்டும் அணையின் அடியைக் குறைக்க வேண்டும் என்று வழக்குத் தொடருவார்கள். நமது பயன்பாட்டில் உள்ள 8,142 ஏக்கர் நிலங்களை உடனடியாக நாம் மீட்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். ஏன் என்றால் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் ஆக்கிரமித்துக் கட்டிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், மசாஜ் பார்லர்களின் முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகள் சேர்ந்து அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முட்டுக்கட்டை போடுகின்றனர்.

கேரள சட்டசபையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி முல்லை பெரியாறு பிரச்னை குறித்து முடிவுசெய்ய உள்ளனர். ஆனால், தமிழக அரசியல் கட்சிகள் வெறும் அறிக்கையோடு நின்றுவிடுகின்றனர்'' என்று கொந்தளித்தார்.

இதுபற்றி பேசும் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ், ''999 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டுவிட்டு அதற்குப் பணமும் வாங்கிகொண்டு கேரள அரசு இப்படி நடந்துகொள்கிறது. மீண்டும் நீதிமன்றம், வழக்கு என்று இழுக்கவே, நீர் தேங்கும் பகுதியில் கார் பார்க்கிங் கட்டுகிறார்கள். கேரள அரசின் வரைபடத்தில் முல்லை பெரியாறு நீர் வடிந்துபோகும் இடங்களாக இப்படி குறிப்பிடுகிறார்கள்... புல்மேடு, வல்லகடவு,  வண்டி பெரியாறு, பசுமலை, உப்புத்துறை, சப்பாத்து, ஆலடி, இடுக்கி வழியாக 48 கிலோ மீட்டர் ஒரே மாவட்டத்தில்  பயணப்பட்டு, கடைசியில் அரபிக் கடலில் கலக்கிறது. ஆனால் அவர்களே, அணை உடைந்து ஐந்து மாவட்டங்கள் அழிந்துவிடும் என்று மக்களை அச்சுறுத்தி, பொய் பிரசாரம் செய்துவருகின்றனர். தமிழக அரசு உடனடியாக 142 அடிக்கு நீர்மட் டத்தை உயர்த்தி நமது பகுதிகளை மீட்க ஆவனசெய்ய வேண்டும்'' என்றார்.              

இதுபற்றி கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் கேட்டோம். ''இன்று சட்டசபையில் இதுபற்றி விவாதம் நடைபெறுவதால், இப்போது பேச முடியாது'' என்று மறுத்தார். கார் பார்க்கிங் கட்டுவதில் கேரள அரசியல் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும், தமிழக மக்களுக்கு விடிவு பிறக்காதது வேதனைதான்!

- சண்.சரவணக்குமார்

படங்கள்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு